குறிப்பாக தேயிலை உற்பத்தித் துறையைச் சேர்ந்த அப்பாவித்
தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் இன்னுமின்னும்
பரிதாபத்துக்குரியவர்களாகவே இருக்கின்றனர்.
தமிழ் அரசியல் வாதிகளைப் பொறுத்தவரையில் அவர்கள்
மேடைகளில் தோன்றும் போது கும்பிடுபோடுவதற்கும், வீர வசனங்கள்,
பசப்பு வார்த்தைகளைக் கூறும் போது கைதட்டி மகிழ்விப்பதற்கும்
மாத்திரமே இது வரையில் தமிழ் சமூகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அதிலும் மலையக அரசியல் பற்றி சொல்லித் தெரிய வேண்டியது கிடையாது.
பந்தா காட்டுவதற்கே சிலர் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
சிங்கள அரசியல் வாதிகள் மற்றும் முஸ்லிம் அரசியல்
வாதிகளைப் பொறுத்தவரையில் போட்டி போட்டுக் கொண்டு தமது
சமூகங்களுக்கு சேவை செய்து வருகின்றனர்.
பாராளுமன்றத்திலும் இது தொடர்பான கருத்து வாதங்களை முன் வைத்து வருகின்றனர். அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றனர்.
எனினும் மலையக மக்கள் தொடர்பிலும் அவர்களது சம்பள
விடயத்துக்கு நிலையான தீர்வொன்றை முன்வைப்பதற்கும்
பாராளுமன்றத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் மலையகத் தலைமைகள்
தொடர்ச்சியாகவே தவறி வருகின்றன.
புதிய அரசாங்கம் அமைத்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டன.
செப்டெம்பர் முதலாம் திகதி பாராளுமன்றம் கூடியதன் பின்னர் பல
அமர்வுகள் இடம்பெற்று விட்டன. ஆனாலும் நீண்டு வரும் மலையக தேயிலை
உற்பத்தியாளர்களின் சம்பள விவகாரம் 7 மாதங்கள் கடந்தும் தீர்வின்றி
காணப்படுவது தொடர்பில் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும்
தலைவர்கள் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியுள்ளனர்.
பாராட்டுக்களையும் பொன்னாடைகளையும் மாலைகளையும்
கைதட்டல்களையும் வாங்கிக் கொள்ள முண்டியடிக்கும் மலையகத் தலைமைகள்
தமது மக்களின் விடயங்களிலும் அவர்களது வாழ்வாதார விடயங்களிலும்
கூட குருடர்களாக இருந்து வருகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்,
தமிழ் முற்போக்கு முன்னணி என்ற பெயர்களில் பாராளுமன்றம் சென்றோர் தமது
கடமைகளையும் பொறுப்புக்களையும் உணர்ந்து செயற்பட்டுள்ளனரா?
என்பதை மனசாட்சியைத் தொட்டு கேட்டுப் பார்க்க வேண்டும். இந்த இரண்டு மாத
காலப்பகுதியில் இடம்பெற்ற விவாதங்கள் மலையகத்தைச் சார்ந்த
உறுப்பினர்கள் எவ்வளவு பாராளுமன்றத்தில் செலவிட்டுள்ளனர்
என்பதும் விவாதங்களில் நேரத்தை ஒதுக்கி தமது மக்களின் பிரச்சினைகளை
முன்வைப்பதற்கு எந்தளவில் பிரயத்தனப்பட்டுள்ளனர் என்பதும்
கேள்விக் குறிதான்.
தேர்தல் காலங்களில் இவர்கள் காட்டிய ஆர்வம் இப்போது
கிடையாது. இன்னும் ஐந்து வருடங்களுக்கு இவர்கள் தான் சீமான்கள்
என்பதால் வாக்களித்த மக்கள் கைகட்டியே நிற்க வேண்டியது தான்
இறுதியாக இருக்கிறது.
கேட்பதற்கு வேம்பாகவே இருந்தாலும் மலையக மக்கள்
அவர்களது தலைமைகளால் அப்பட்டமாக ஏமாற்றப்படுகின்றனர்.
பாராளுமன்ற சிறப்புரிமைக்கும் சுகபோகத்துக்கும் மக்களின் முன்னால்
தாங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என்பதைக்
காட்டிக்கொள்வதே இவர்களின் சிறப்பம்சமாக இருக்கிறது.
“ஐயா பெரியவர்களே உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா?
எங்களை ஏன் இப்படி ஏமாற்றுகிறீர்கள்? இன்னும் எத்தனை
காலத்திற்குத்தான் எங்களை ஏமாற்றி எங்களது முதுகில் ஏறி சவாரி
செய்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள்?.
ஏ.சி.காம்பிராக்களிலும் ஏசி வாகனங்களிலும் காலத்தைக் கழித்து வரும்
நீங்கள் ஏழுமாத காலமாக எமக்கான ஆக்கபூர்வ செயற்பாடுகளை
மேற்கொள்ளாதிருக்கிறீர்களே! ஆறு முறைகளும் சம்பளப்
பேச்சுவார்த்தை தோல்விகண்டுள்ள நிலையிலும் அரசாங்கத்துக்கும் எமது
வேதனை புரியவில்லையே! உங்களுக்கெல்லாம் மனச்சாட்சி என்று ஒன்று
இருக்கிறதா” என்ற நிலையில்தான் இன்று மலையகத்தில் பெருந்தோட்டத்
தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் அங்கலாய்த்துக்
கொண்டிருக்கின்றனர்.
பெருந்தோட்டங்களை நிர்வகித்து வரும்
கம்பனிக்காரர்களும் மலையக அரசியல் வாதிகளும் இணைந்து
தொழிலாளர்களுக்கான ஊதியத்தை மறுத்து வருகின்ற ஏமாற்றுத் தன்மையை,
அரசாங்கமும் வாய்மூடி மெளனமாக பார்த்துக் கொண்டிருப்பது
கவலைக்குரிய விடயமாகவே பார்க்கப்பட வேண்டும்.
மலையகத்தில் தேயிலை உற்பத்தி என்பது இன்று நாட்டின்
தேசிய வருமானத்தின் மூன்றாவது பங்காளித்துவத்தைக்
கொண்டிருக்கின்றது. ஆடைத் தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
ஆகியவற்றுக்கு அடுத்ததாக தேயிலை உற்பத்தியே காணப்படுகிறது.
குண்டூசி கூட சீனாவில் இருந்து இறக்குமதி செய்கின்ற
இலங்கைத் திருநாடு, தேயிலை என்ற பொருளை இறக்குமதி செய்கின்றதா?
என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். மழையில் நனைந்தும் வெயிலில்
காய்ந்தும் குளவிகளிடம் கொட்டுக்கள் வாங்கியும் இன்னும் இன்னோரன்ன
துன்ப துயரங்களை சுமந்தவர்களாகவும் இருக்கின்ற தேயிலை
உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படுகின்ற தேயிலையை
ஏற்றுமதி செய்வதற்கும் ருசித்து ரசித்து தேநீர் அருந்துவதற்கும்,
ஒரு சமூகம் நிதமும் தன்னை வருத்திக் கொண்டிருக்கிறது என்பதை ஏன்
சிந்திக்கத் தவறுகின்றனர் என்பது தெரியாதுள்ளது.
எதிர்பார்ப்புகள் எதுவுமேயின்றி உழைப்புக்கு ஏற்ற
ஊதியத்தை மாத்திரமே உரிமையாக்கிக் கொள்ள நினைக்கும் மேற்படி
தொழிலாளர்கள் மட்டில் மனசாட்சி இல்லாதவர்களைப் போன்ற
செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தேயிலை உற்பத்தியாளர்கள் அல்லது பெருந்தோட்டத்
தொழிலாளர்கள் என்ற வர்க்கத்தினரைப் பொறுத்த வரையில் அவர்களுக்கான
சம்பளம் நலன் புரிவிடயங்கள் என்பன இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை
நிர்ணயிப்பதாகவே சுமார் 23 வருடங்களாக நீடித்து வருகின்றது.
உண்மையாகவே கூறப்போனால் இதுவும் ஒரு வகையிலான அடிமைச் சாசனம்
போன்றதாகவே அமைந்து விட்டது.
நாட்டின் பொருளாதார நிலையில் எத்தகைய ஏற்றத் தாழ்வுகள்
இடம்பெற்றாலும் கூட தேயிலை உற்பத்தித் தொழிலில் ஈடுபடும்
தொழிலாளர்களுக்கான சம்பளமானது இரண்டு வருடங்களுக்கு
மாறாநிலையிலேயே காத்திருக்கும் நிலை உண்டு.
அரச ஊழியர்கள் மட்டில் பொதுமக்களுக்கு இன்றைய நிலை
வரையிலும் திருப்தியான நிலைப்பாடு காணப்படவில்லை. அதிலும்
பெருந்தோட்ட மக்களைப் பொறுத்த வரையில் அரச நிறுவனங்களில் தமது
கடமைகளை செய்து கொள்வதற்கு நாயாகவும் பேயாகவும் அலையவேண்டிய
நிலையை உருவாக்கித் தருபவர்கள் தான் இந்த அரச ஊழியர்கள் எனும்
அந்தஸ்துக்குரியவர்கள்.
நாளைக் கடத்தி ஊதியம் பெற்று வரும் இவர்களுக்கு வருடா
வருடம் சம்பளத்தையும் ஏனைய கொடுப்பனவுகளையும் அதிகரித்துக்
கொடுப்பதற்கும் ஒவ்வொரு தேர்தல்களின் போதும் சம்பள அதிகரிப்பு
வாக்குறுதி வழங்கி அதனை நிறைவேற்றுவதற்கும் முற்படுகின்ற
அரசாங்கம் நாட்டுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுப்பதற்கும்
அவர்களுக்கான நிலையான சம்பளத் தொகை ஒன்றை நிர்ணயித்துக்
கொடுப்பதற்கும் தயக்கம் காட்டுவது ஏமாற்றுத்தனமாகும்.
மேற்கூறப்பட்டவாறு கூட்டு ஒப்பந்தம் கடந்த மார்ச்
மாதம் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகியுள்ளது. ஒக்டோபர் மாதம்
இன்றைய திகதி வரையான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் சுமார் ஏழு
மாதங்கள் பூர்த்தியாகியுள்ளன. ஏழு மாதங்கள் பூர்த்தியான நிலையிலும்
ஒரு தரப்பினரது சம்பளக் கோரிக்கையை அல்லது அதன் உரிமையை தட்டி
கழித்து வருவது திட்டமிடப்பட்ட செயற்பாடாகவுள்ளது.
அல்லாவிட்டால் தோட்டத் தொழிலாளர்கள் கேட்பார்,
பார்ப்பார் எவருமில்லாதவர்கள் தானே என்ற நினைப்பையும் உருவாக்கி
விட்டிருக்கிறது. ஏழு மாதங்களாக இவ்வாறு ஒரு சமூகம்
ஏமாற்றப்பட்டு அல்லது யாரோ ஒரு தரப்பினரின் தேவைக்காக
பழிவாங்கப்பட்டு வருவது ஏற்கத்தகாத செயற்பாடுகள். மார்ச் மாதம்
கூட்டு ஒப்பந்தம் காலாவதியானதன் பின்னர் அடுத்த பேச்சுவார்த்தை
தொடர்பில் ஆலோசிக்கப்படுகையில் 1000 ரூபா சம்பளம் பெற்றுக்
கொடுக்கப் போவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கூறியது. கோரிக்கை 1000 ஆக இருக்க அந்த தொகையில் திருத்தங்களை ஏனைய தொழிற்சங்கங்கள் மேற்கொண்டன.
பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன. கூட்டு
ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும்
கம்பனிகளின் பிரதானிகளும் இவ்வாறு பல சுற்றுப்
பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட போதிலும் அதில் எந்தவொரு
முடிவுக்கும் வரவில்லை. அனைத்து பேச்சுக்களும் தோல்வியிலேயே
முடிந்துள்ள நிலையில் ஆறாவது பேச்சுவார்த்தையும் தோல்வி கண்டுள்ளது.
தேயிலை உற்பத்தியினூடான நாட்டுக்கான வருமான நிலை
மூன்றாவது இடத்தில் இருக்கின்ற போதிலும் பெருந்தோட்ட உற்பத்தியில்
தனியார் தேயிலை உற்பத்தியே அதிகரித்துக் காணப்படுவதில்
பெருந்தோட்டத்துறை தொடர்பில் அக்கறை செலுத்தப்படாத நிலை
காணப்படுவதாக கூறப்படுகிறது.
பெருந்தோட்டங்களைப் பொறுப்பேற்ற கம்பனிகளைப்
பொறுத்தவரையில் அவை தேயிலைத் தோட்டங்களைப் பராமரிப்பதிலோ
உற்பத்திகளை அதிகரிப்பதற்கான வழிமுறைகளைக் கையாள்வதிலோ
அக்கறை செலுத்துவதில்லை. மாறாக செலவேயில்லாது தேயிலையை உற்பத்தி
செய்ய வேண்டும் என்று கம்பனிகள் நினைத்துச் செயற்பட்டதாலேயே
பெருந்தோட்டத்துறை தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி காணப்பட்டு
வருவதாகவும் கூறப்படுகிறது.
தேயிலை உற்பத்தி அதனூடான வருமானம் இலாபம் என அனைத்து
விடயங்களையும் கம்பனிக்காரர்கள் மட்டுமல்லாது அரசியல்
தலைமைகளும் அறிந்தே வைத்துள்ளனர். ஆனாலும் பெருந்தோட்டத்
தொழிலாளர்களை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கும் ஜாம்பவான்கள்
மக்களைப் பற்றி சிந்திக்கத் தவறுகின்றனர் என்பதைவிட அவர்கள்
மக்களை ஏமாற்றிப் பிழைக்கின்றனர் என்பதே உண்மை.
பொதுத் தேர்தலின் பிரசார காலங்களின்போது மலையகத்தின்
அனைத்து அரசியல் தலைமைகளும் தேயிலை உற்பத்தியாளர்களின் சம்பள
அதிகரிப்பு தொடர்பில் தமக்கே அதிக கரிசனை இருப்பதாகத் தெரிவித்து
பீத்திக் கொண்டனர்.
தேர்தல் முடிந்து வெற்றி தோல்வி கண்டதன் பின்னர் சம்பள
அதிகரிப்பைப் பெற்றுக் கொடுப்பதற்கான உயர்ந்த தொனி பனியாக கறைந்து
போய்விட்டது. மலையகத் தலைமைகள் மட்டுமல்லாது ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும்
அழகான கதை கூறினர். அவை காதுக்கு இனிமையாகிப் போயிருந்தன. எனினும்
தேயிலைத் தொழிலாளர்களுடனான பெருந்தோட்ட சமூகம் கிள்ளுக்கீரை
என்றும் கறிவேப்பிலை என்றும் ஏமாறுவதற்கே கடவுளால்
படைக்கப்பட்டவர்கள் என்றும் அவர்களும் சொல்லாமல் சொல்லி விட்டனர்.
தேர்தல் மேடைகளில் முழக்கமிட்ட ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும்
தேர்தல் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையிலேனும்
வாக்குறுதியளித்தபடி எதனையும் மேற்கொள்ளாது, தமது வெற்றிக்குப்
பங்களித்த மக்கள் தொடர்பில் மௌனிகளாக இருந்து வருகின்றனர்.
ஏழு மாத காலமாக சம்பளப் பிரச்சினை ஒன்று தீர்வில்லாது
இழுத்தடிக்கப்பட்டு வருவது ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ தெரியாத
அறிந்திராத விடயமாக இருக்கப்போவதில்லை. அப்படி அவர்கள்
அறியாதிருப்பதற்கு சிறுபிள்ளைகளும் அல்லர். எல்லாமே
அறிந்திருந்து இது வரையில் ஒரு வார்த்தையேனும் கூறாதிருப்பதானது
மலையக அரசியல்வாதிகளுடன் இணைந்து கொண்ட அவர்களும்
ஏமாற்றுக்காரர்கள் என்பதையே நிரூபிக்கின்றனர்.
இப்படி எல்லா தரப்பினருமே ஏமாற்றிக் கொண்டும் கிள்ளுக்
கீரையாகவும் பயன்படுத்தி வருவதாலேயே உங்களுக்குக்கெல்லாம்
மனச்சாட்சியே இல்லையா என்று மக்கள் அங்கலாய்க்கின்றனர். மலையகத்
தொழிலாளர் வர்க்கத்தினரைப் பொறுத்தவரையில் அவர்களே இந்நாட்டில்
மிகக் குறைவான வருவாயைக் கொண்டிருப்பவர்களாகவும் மிகக் குறைவான
வருவாயில் தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்துபவர்களாகவும்
இருக்கின்றனர். இது ஜனாதிபதிக்கும் புரியும் பிரதமருக்கும்
புரியும். மலையக அமைச்சர்களுக்கும் புரியும். எம்.பி.க்களுக்கும்
புரியும். ஆனாலும் வெறுமனே பத்திரிகைகளில் அறிக்கைகளை விடுத்து
சம்பள அதிகரிப்புக்கு நடவடிக்கை எடுப்போம் என்று கூறிவருவது
மனச்சாட்சியே இல்லாத துரோகத்தனமான கூற்றாகும்.
இங்கு ஒரு உண்மையை உள்ளபடி கூறுவதனால் மலையக
அரசியல்வாதிகள் அனைவருமே மலையக மக்களை வைத்து அநாகரிக அரசியல்
செய்து வருகின்றனர். இவர்களிடம் மக்கள் தொடர்பிலான அக்கறை
கிடையாது.
பாராளுமன்றத்துக்கு தெரிவாகிவிட வேண்டும். பதவி
நிலைகளை அடைந்து விடவேண்டும் என்பது மட்டுமே இவர்களது நோக்கம்.
வாய்கிழிய வாக்குறுதிகள் கொடுக்கும் அரசியல்வாதிகள் அனைவருமே
ஏமாற்றுக்காரர்கள் என்பதை இன்று மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
பாராளுமன்றத்துக்கு தெரிவாகிவிட்ட அனைவருமே
இன்னும் ஐந்து வருடங்களுக்கு அனைத்து சிறப்புரிமைகளையும்
அனுபவித்தே தீருவர். இதற்காகவே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர்
பாடுபட்டனர்.
மலையக மக்களைப் பொறுத்த வரையில் தொடர்ச்சியாக
ஏமாற்றப்படுவார்களேயானால் அது மலையக அரசியலுக்கு ஆரோக்கியமானதாக இருக்காது
என்பதை புரிந்து கொண்டு செயற்பட்டால் அது நலமாக அமையும்.
எனவே மலையகத் தலைமைகளை நம்பியிருக்கும் மக்களின்
நம்பிக்கையை வீணடிக்கும் வகையிலான செயற்பாடுகள் கைவிடப்பட வேண்டும். தேயிலை
உற்பத்தியாளர்களின் உரிமையான சம்பளத்தையும் அதன் அதிகரிப்பினையும்
பெற்றுக் கொடுப்பதற்கு மலையகத் தலைமைகள் கட்சி பேதங்களை மறத்தல் வேண்டும்
என்பது பிரதானமானதாகும்.
அதுமாத்திரமின்றி அனைத்து தரப்பினருமே உண்மையாகவே தமது
மக்களின் மீது இரக்கம் கொண்டவர்களாக இருந்தால், மனச்சாட்சியே இல்லாத
கம்பனிக்காரர்களிடம் இருந்து சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு
அரசாங்கத்தின் தலையீட்டை வலியுறுத்த வேண்டும்.
பெருந்தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக கம்பனிகள்
சாக்குப்போக்குக் கதைகளைக் கூறுமானால், அத்தகைய கம்பனிகளிடம் இருந்து
பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்ற அழுத்தங்களை
மலையகத் தலைமைகள் பிரயோகிப்பது சிறப்பாக அமையலாம்.
இல்லையேல் கம்பனிகளுக்கு நிவாரணங்களை வழங்கியேனும் தேயிலை
உற்பத்தியாளர்களின் வேதனத்தை அதிகரிப்பதற்கும் அவர்களது துன்பங்களையும்
துயரங்களையும் போக்குவதற்கும் உதவிபுரிய வேண்டும்.மலையகத் தலைமைகளும் சரி
மத்திய அரசின் பிரதானிகளான ஜனாதிபதியாகவிருந்தாலும் சரி பிரதமராக
இருந்தாலும் சரி அதேபோன்று தொழிலாளர்களின் உதிரத்தை உறிஞ்சிக் குடித்துக்
கொண்டிருக்கும் கம்பனிக்காரர்களானாலும் சரி எல்லாதரப்பினருமே
மனச்சாட்சியுடன் நடந்துகொள்ளுங்கள். அவர்களது சாபத்துக்கு ஆளாவதை
தவிர்த்துக் கொள்ளுங்கள்.
ஜே.ஜீ.ஸ்டீபன்