Saturday, December 12, 2009

கொழுந்தின் அளவு அதிகரி;க்கப்பட்டுள்ளதால் முழுமையான சம்பளத்தை பெற முடியாத நிலை

முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே அண்மையில் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக அண்மைக்காலமாக பல்வேறுபட்ட சர்ச்சைகளும் பிரச்சினைகளும் எழுந்த வண்ணமாகவே உள்ளன. புல துறையினரும் பல்வேறு கருத்துக் கணிப்புக்களையும் வெளியிடுகின்றனர்.

தங்களது துறைகளையும் தங்களது சுய இலாபங்களையும் கருத்திற்கொண்டு பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை வெளியிடும்போது அவை பல விதத்திலும் திரிபடைந்து தொழிலாளர்களை சென்றடைகின்றன. இவ்வாறான நிலை தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை காட்டிக் கொடுப்புச் செய்துள்ளன என்ற கருத்து ஆணித்தரமாக வேரூண்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அவர்களது நடவடிக்கைகள் மூலம் காணக்கூடியதாக உள்ளது.

இன்று இக் கூட்டு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதும், இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுவதும் தொழிற்சங்கங்களினாலேயே ஆகும். மேலும் தொழிலாளர்கள் வென்றெடுத்துள்ள தொழில்சார் உரிமைகளும் தொழிற்சங்கங்களினாலேயே பெறப்பட்டன என்பதையும் நாம் இங்கு மறக்கக்கூடாது.

அண்மையில் செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விதிகளுக்கமைய தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை என்று பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அது மாத்திரமன்றி ஒரு நாளுக்குரிய 30 ரூபாவை இழக்கும் போது நாட் சம்பளத்தை முழுமையாக பெற முடியாத நிலை ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பெரும்பாலும் பெண் தொழிலாளர்களே பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகி;ன்றது. இது தொடர்பாக சற்று விரிவாக நோக்குவோமாயின்

கூட்டு ஒப்பந்தத்தின் பின் அநேகமான தோட்டங்களில் தொழிலாளர்கள் எடுக்கும் கொழுந்தின் அளவை நிர்வாகங்கள் தங்களுக்கேற்ற வகையில் மாற்றியுள்ளன. ஊதாரணமாக கூட்டு ஒப்பந்தத்தின்று முன்னர் 16 கிலோ கொழுந்து எடுக்கப்பட்டு வந்த தோட்டங்களில் தற்கோது 18 முதல் 20 கிலோ வரை கொழுந்து எடுக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

(உதாரணமாக பதுளை, நிவ்பர்க், குயின்ஸ்டவுன், மஸ்கெலியா, தலவாக்கொல்லை, ஆகிய தோட்டப்பகுதிகளில் 18 கிலோ கொழுந்து எடுக்க வேண்டும். அதேநேரம் தெனியாய போன்ற பகுதிகளில் 23 கிலோ வரையில் ஒரு நாளைக்கு கொழுந்து எடுக்க சொல்கின்றார்கள். ஏன்பதை அறிய முடிகின்றது) அவ்வாறு அவர்கள் கூறும் அளவை எடுக்காவிட்டால் சம்பளத்தில் 30 ரூபா குறைக்கப்படும் எனத் தொழிலாளர்களுக்கு கூறப்பட்டுள்ளது.

எனவே தொழிலாளர்கள் குறிப்பிட்ட நிர்வாகம் கூறும் அளவில் கொழுந்தை எடுக்கின்றார்கள். எதிர்த்துப் பேசும் தொழிலாளர்களிடம் உங்கள் சங்கத்தினர் கூட் ஒப்பந்தத்தில் இந்த நிபந்தனைகளுக்கு இணங்கியே கையொப்பம் இட்டுள்ளனர் என்று கூறுகின்றார்கள். இவ்வாறான நிலையால் தொழிலாளர்கள் விரக்தியடைந்துள்ளனர். இன்னும் சில தோட்டங்களில் ஒரு நாள் சம்பளமான 405 ரூபாவிற்கு வேலை செய்துள்ள தொழிலாளர்களிடம் நிர்வாகம் சற்று பின் தங்கி இருக்கின்றது. முழு சம்பளத்தையும் கொடுக்கக்கூடிய அளவில் தோட்டம் இயங்கவில்லை. எனவே உங்களது சம்பளத்திலிருந்து ஒரு பகுதி குறைக்கப்பட்டு பின்னர் அச்சம்பளம் எதிர்வரும் காலங்களில் சம்பளத்தோடு இணைக்கப்படும் எனக் கூறுவதாகத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஊதாரணமாக பதுளையில் பல தோட்டங்களில் தொழிலாளாகள் 405 ரூபாவிற்கு வேலை செய்கின்ற போதும் 385 ரூபாவையே வழங்குவதாகவும் மீதிச் சம்பளத்தைக் கேட்கும் போது அடுத்த மாதச் சம்பளத்துடன் சேர்த்துத் தருகிறோம் முற்கொடுப்பனவுடன் தருகின்றோம் என்று கூறுகின்றனர்.

இவ்வாறான பிரச்சினைகளை தொழிற்சங்கத்திடம் யாரும் தெரிவிப்பதில்லை. இது நிர்வாகத்திற்கு சாதகமாக இருக்கிறது. தொழிலாளர்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது என்பதை கண்டும் காணாதது போல அவர்கள் இருக்கின்றார்கள். இவ்வாறான நிலைக்கு தொழிற்சங்கமே காரணம் என்று தொழிலாளர்கள் எண்ணுகின்றார்கள்.

எனவே தொழிலாளர்களின் இந் நிலைப்பாட்டை மாற்றும் வகையிவல் தொழிலாளர்களுக் சிறந்ததொரு தெளிவுப்படுத்துதல் அவசியமாகும். தொழிலாளர்கள் இவ்வாறு தனித்துப் போகும் தன்மையும் தொழிற்சங்கங்களுடன் முரண்பட்டிருக்கும் நிலையும் மாற்றமடைய வேண்டும். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். ஆனால் இன்று மூன்று நான்கு பிரிவுகளாக தொழிலாளர் சமூகம் பிரிந்துள்ளது. இந் நிலையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டியது அவசியமாகும்.

ஆனந்தி