Wednesday, July 23, 2014

பெருந்தோட்ட சிறுவர் பராமரிப்பகங்களின் புனரமைப்புக்கு இந்தியா ரூ. 50 மில். உதவி

பெருந்தோட்ட துறையிலுள்ள 70 சிறுவர் பராமரிப்பு நிலையங்களை தரமுயர்த்துவதற்காக இந்திய அரசாங்கம் 58 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது.
 
இதற்கமைய ஹற்றன். காலி, கண்டி, இரத்தினபுரி. பதுளை, கேகாலை ஆகிய பிராந்தியங்களில் புதிதாக சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ள அதேநேரம், இதே பிராந்தியங் களில் மேலும் பத்து நிலையங்கள் புனரமைப்பு செய்வதற்கென இனங்காணப்பட்டுள்ளன.
 
இதற்கான ஒப்பந்தம் கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. ஒப்பந்தத்தில் ஆர்.எ.கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மற்றும் சர்வோடெக் (பிவிடி) லிமிட்டட் சார்பில் பிரதிநிதிகள் கைச்சாத்திட்டனர்.
 
கட்டடங்களின் கட்டுமானம் மற்றும் புனர்நிர்மாணத்திற்கு மேலதிகமாக சிறுவர்களின் பாதுகாப்பான வளர்ச்சி, சுகதாரம், கற்கும் சூழலை பெற்றுக் கொடுக்கும் வகையிலான தளபாடங்களையும் இந்திய அரசாங்கம் வழங்கவுள்ளது.
 
தமது குழந்தைகள் மேற்படி நிலையங்களில் பாதுகாப்பாக உள்ளார்கள் என்ற நம்பிக்கையில் தாய்மார் பெருந்தோட்டத்துறைக்கு வேலைக்குச் செல்ல வேண்டுமென்பதுடன் மலையத்தில் வாழும் பெண்கள் பெருளாதார ரீதியாக வலுப்பெற வேண்டுமென்பதே இந்த செயற்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Tuesday, July 22, 2014

சிரேஷ்ட ஊடகவியலாளர் பீ.இராஜரட்ணம் காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளரும் தொழிலுறவு அதிகாரியும் சமூக சேவையாளருமான பீ.இராஜரட்ணம் தனது 78 ஆவது வயதில் ஞாயிற்றுக்கிழமை (20) நுவரெலியாவில் காலமானார்.

இவர் 1936ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் திகதி பிறந்தார். ஊடகத்துறையில் கடந்த 50 வருடங்களாக லேக் ஹவுஸ் நிறுவனத்தின் டெய்லி நியூஸ், தினகரன் ஆகிய பத்திரிகைகளின் பிராந்திய செய்தியாளராக கடமையாற்றினார். சிறந்த சமூக சேவையாளரும், பிரபல நிறுவனங்கள் பலவற்றின் ஆலோசகராகவும், சட்ட ஆலோசகராகவும் இவர் இருந்துள்ளார்.

1970ஆம் ஆண்டுகளில் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஸீஸின் காலத்தில் நுவரெலியா காரியாலயத்தின் பிரதிநிதியாகவும் செயற்பட்டார்.

மறைந்த தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச உட்பட பல முக்கிய தலைவர்களுடன் இவர் நெருங்கிய உறவையும் கொண்டிருந்தார்.

நுவரெலியா கொல்ஃப் கழகத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவராவார்.

ஊடகவியலாளர் பீ.இராஜரட்ணத்தின் இழப்பு நுவரெலியாவிற்கும், குறிப்பாக ஊடகத்துறைக்கும் பாரிய ஒரு இழப்பாகும் என நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் எஸ்.தியாகு தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

'வீட்டுக்கு வீடு' - 'கிராமத்துக்கு கிராமம்' அபிவிருத்தித் திட்டத்துக்கு ரூ.2657 மில்லியன்

ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்தில் வீட்டுக்கு வீடு மற்றும் கிராமத்துக்குக் கிராமம் தேசிய அபிவிருத்தித் திட்டங்களுக்காக பதுளை மாவட்டத்திலுள்ள 567 கிராம சேவகர் பிரிவில் உள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 2,657 மில்லியன் ரூபாவை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஒதுக்கியுள்ளது.
 
இந்த அபிவிருத்தித் திட்டத்தினூடாக பதுளை மாவட்டத்தில் 239,463 குடும்பங்களைச் சேர்ந்த 811,758 பேர் நன்மையடையவுள்ளனர். மேலும் திவிநெகும அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக 59,273 பேர் நன்மையடையவுள்ளனா இந்த அபிவிருத்தித் திட்டங்களை கண்காணிக்க பதுளை மாவட்ட அரசாங்க  பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் உவா மாகாண முதலமைச்சர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
புவுது வெல்லச அபிவிருத்தித் திட்டம்- 824 மில்லியன் ருபா, கிராமிய பாடசாலைகளின். சுகாதாரத் திட்டம்.- 54 மில்லியன் ரூபா,  கிராமத்தை கட்டியெழுப்புவோம் வேலைத்திட்டம்- 840 மில்லியன் ரூபா, வனஜீவராசிகள் மற்றும் தேசிய வளங்கள் பாதுகாப்புத் திட்டம் - 70 மில்லியன் ரூபா,  திவி நெகும அபிவிருத்தித் திட்டம் - 180 மில்லியன் ரூபா, விவசாய அபிவிருத்தித் திட்டம்- 139 மில்லியன் ரூபா உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக் கப்படவுள்ளன.
பதுளை பிராந்திய மக்கள் பிரதிநிதிகளால் முன்மொழியப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 175 மில்லியன் ரூபாவும். பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
 
இதற்கு மேலதிகமாக பதுளை மாவட்டத்தில் உள்ள 10 கிராமிய பாலங்கள் ஏற்கனவே புனரமைக் கப்பட்டுள்ளன.
 
2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் மேலும் 1000 பாலங்களைப் புனரமைப்பதற்கான வேலைத்திட்டத்தை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு முன்னெடுத்துள்ளது.

பாதிக்கப்படுகின்ற மலையக தொழிலாளர்களுக்கு கொடுப்பனவு வழங்க சட்டத்தில் இடமில்லை

கடந்த சில நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் நிலவி வரும் மோசமான காலநிலை காரணமாக பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக தரவுகள் பெறப்படுகின்ற பொழுதிலும் பெருந்தோட்டப்புறங்களின் பாதிப்புகள் தொடர்பாக எந்தவிதமான தரவுகள் பெற்றுக்கொள்ளப்படவில்லை. இது தொடர்பாக நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ அதிகாரியிடம் மலையக மக்கள் முன்னணியின் இராதாகிருஷ்ணன் அதிகாரியிடம் கேட்டபொழுது பெருந்தோட்ட மக்களுக்கு உலர்உணவு பொருட்களை மாத்திரமே வழங்க முடியும். வேறு எந்த உதவிகளையும் தங்களால் செய்ய முடியாது எனவும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான கொடுப்பனவையும் வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
 
அனர்த்த முகாமைத்துவ அதிகாரி தெரிவித்த கருத்துக்கள் அதிருப்திகுரியவை என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் சட்டம் என்பது தோட்டத் தொழிலாளர் என்ற பாகுபாடில்லாது சகலருக்கும் சமமாக செயற்படுத்தப்பட வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்து பெருந்தோட்ட மக்களுக்கும் பயன் உள்ளதாக மாற்றுமாறு பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டேன். ஆனால் இதுவரையில் அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என நான் அறிந்து கொண்டேன்.
அப்படியானால் அரசாங்கம் பெருந்தோட்ட மக்கள் தொடர்பாக உரிய அக்கறை செலுத்தவில்லை என கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது. இதன் காரணமாகவே நாம் தோட்ட தொழிலாளர்களுக்கு தனி வீடுகளை அமைத்து அவர்களுக்கான வீட்டு உரிமை பத்திரத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கைகளை விடுத்துள்ளோம்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பெருந்தோட்ட மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற உதவிகள் கிடைக்கா விட்டால் அது ஒரு புறத்தில் மனித உரிமை மீறல் செயலாகவும் கருத வேண்டியுள்ளது. ஒரு நாட்டில் சட்டம் ஒரு சாராருக்கு ஒரு மாதிரியும் இன்னொரு சாராருக்கு வேறு மாதிரியாகவும் நடைமுறைப்படுத்தப்படுமானால் அது எந்தவிதத்தில் நியாயமானது என எனக்கு புரியவில்லை.
 
அப்படியானால் அந்த சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்து அனைவருக்கும் பயனுள்ளதாக அமைய அதனை மாற்றியமைக்க வேண்டும். இது மட்டுமல்ல இன்று பிரதேச சபைகளில் பெருந்தோட்டங்களுக்கு வேலை செய்ய முடியாமல் உள்ளது. இதற்கும் சட்டம் ஒரு பிரச்சினையாக இருக்கின்றது. பெருந்தோட்ட தொழிலாளர்கள் எந்த நாளும் வாக்களிக்கும் இயந்திரங்களாக மாத்திரம் இருக்க வேண்டும் என அரசாங்கம் நினைத்தால் அது பிழையான ஒரு செயல்பாடாகவே கருத வேண்டியுள்ளது.
 
எனவே, இவ்வாறான விடயங்களை கருத்தில்கொண்டு அரசாங்கம் உடனடியாக இதற்கான நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். நாம் பாராளுமன்றத்தில் பேசுகின்ற விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படா விட்டால் நாம் அங்கு பேசுவதில் எந்தவிதமான பலனும் இல்லை. அது மட்டுமல்லாமல் எதற்காக இந்த மக்கள் எங்களை தெரிவு செய்து இங்கு அனுப்பியுள்ளார்களோ அந்த நோக்கமும் நிறைவேறாமல் போய்விடும்.

தொடரும் சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் - மக்கள் ஆர்ப்பாட்டம்

 பொகவந்தலாவ பிரதேசத்தில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வறுமை காரணமாக குறித்த நபரின் வீட்டில் வேலை செய்து வந்த சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்
 
மேலும், இவ்விடயத்தை வெளியில் சொன்னால், தன்னையும், குடும்பத்தையும் கொன்று விடுவதாக பயமுறுத்தியதாக பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்ததாக பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
பொலிஸ் விசாரணை இடம்பெற்று வருவதுடன், தலைமறைவாகியுள்ள சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு குறித்த பிரதேசத்தில் உள்ள அனைத்து தோட்ட மக்களும் வேலைக்கு செல்லாது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, மலையகத்தில் தொடர்ந்து இடம்பெறுகின்ற சிறுவர் துஷ்பிரயோகங்களை நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனகோரிக்கை விடுத்தனர்.
 
இதேவேளை 20.07.2014 அன்று இறக்குவானை டெல்வின் தோட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியொருவர் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வீட்டின் வெளிப்புற பிரதேசமொன்றில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.
 
சந்தேகநபரை பொதுமக்கள் பொலிஸாருக்கு அடையாளம் காட்டியும் அவரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லையென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் சட்டத்தரணி ஒருவர் ஊடாக 22.07.2014 அன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாகவும் அவரை பெல்மடுல்ல நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
 
இந்தச் சம்பவங்களை கண்டித்து ஹட்டன், நுவரெலியா, மஸ்கெலியா, பொகவந்தலாவ, கொட்டகலை, அக்கரப்பத்தனை, தலவாக்கலை, டிக்கோயா, நோர்வூட், ஆகிய பிரதேசங்களிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அங்கத்தவர்களும் பொது மக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.