Friday, October 5, 2018

தொழிற்சங்க வரலாற்றில் அழிக்க முடியாத பெயர் ஏ. அஸீஸ்

சுதந்திரத்துக்கு முன்னரும் அதற்கு பின்னருமான இலங்கையின் அரசியல் மற்றும் தொழிற்சங்க வரலாற்றினை பின்னோக்கிப் பார்க்கின்ற போது அந்த போராட்ட வரலாற்றுப் பதிவில் ஏ. அஸீஸ் என்ற நாமம் தனித்துவம் மிக்கதாகவே காணப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டுத்துக்காக முதலில் தலைமை ஏற்ற ஒரு தலைவராக போற்றப்படுகின்ற அஸீஸ் இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்த வர்த்தக குடும்பத்தில் பிறந்தவராவார்.
இலங்கை தோட்ட தொழிலாளர் போராட்ட வரலாறு வெறுமனே இங்கு வாழ்ந்த இந்திய தோட்ட தொழிலாளரை மட்டும் வைத்துப் பார்க்க முடியாது. ஏனெனில் இந்த வரலாற்றின் ஆரம்பமே ஒரு சிங்கள தோட்டத் தொழிலாளியின் உயிர்த்தியாகத்துடனேயே ஆரம்பமாகின்றது. அக்கரப்பத்தனையில் பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகத்திற்குப் பலியான ஏப்ரகாம் சிஞ்ஞோ என்ற சிங்கள தோட்டத் தொழிலாளியே தொழிற்சங்க வரலாற்றின் ஆரம்பமெனலாம்.
அந்த மரணம் காரணமாக எழுந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கிய ஏ. அஸீஸ் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அணிதிரட்டி ஏப்ரகாம் சிஞ்ஞோவின் உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று உரிமைப்போராட்டுத்துக்கான ஆரம்பப் புள்ளியை இட்டார்.
1943 ஆம் ஆண்டில் ஒரு நாள் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் பிரதிவாதியாக நிறுத்தப்பட்ட அஸீஸ் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மக்களை தூண்டும் விதத்தில் உரையாற்றியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டார். என்றாலும் நீதிமன்றத்தின் ஜுரி சபை அவர் நிரபராதி என்று தீர்ப்பு வழங்கியது. இந்த ஜுரி சபையின் முடிவை பிரிடிஷ் பிரஜையான நீதிபதி ஏற்றுக்கொண்டு கசப்பான மருந்தை அருந்துவது போன்று அந்த தீர்ப்பை விருப்பமின்றியே வழங்கினார்.
1959 இல் பலாங்கொடையிலுள்ள பிடியாகல தோட்டத்துக்குள் அனுமதியின்றி நுழைந்தார் என்ற குற்றச்சாட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது அஸீஸ் உட்பட ஏனையவர்களை இரண்டு மாதங்களுக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அந்தத் தீர்ப்புக்கு எதிராக அஸீஸ் உயர் நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்தார். அந்த மேல் முறையீடு நிராகரிக்கப்பட்டு அதே தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. அஸீஸ் அதிலும் சேர்ந்து போகவில்லை அந்தத் தீர்ப்புக்கு எதிராக இங்கிலாந்தில் பிரிவுக்கவுன்ஸிலுக்கு மேல் முறையீடு செய்தார். அந்த நீதிமன்றம் அஸீஸுக்கு சார்பாக தீர்ப்பளித்தது. அன்று முதல் எந்த ஒரு தோட்டத்திற்குள்ளும் தொழிற்சங்கங்கள் நுழையக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். இது அஸீஸின் போராட்டக் குணத்தின் மேன்மையை பறைசாற்றி நிற்கின்றது.
இந்தியாவின் மகாத்மா காந்தி பிறந்த போர்ப்பந்தரில் 1912 ஒக்டோபர் மாதம் 06ம் திகதி வர்த்தகர் குலாம் ஹுசையின் ரேமுக்கு மகனாகப் பிறந்தார். சொந்த ஊரில் படித்துப் பட்டம் பெற்ற அஸீஸ் இலங்கையில் தனது தந்தையின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இலங்கை வந்தார். ஆனால், இங்கு வந்த அஸீஸ் வந்த நோக்கத்தை கைவிட்டுவிட்டு பாட்டாளி வர்க்கமான தோட்டத் தொழிலாள மக்களின் வாழ் வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தோட்டத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்துக்கு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். அஸீஸின் ஆங்கிலப் புலமையும் உறுதியான மன நிலைப்பாடும் அன்று ஏகாதிபத்திய ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக காணப்பட்டது. எதற்கும் அஞ்சாத அஸீஸ் அதே பயணத்தை முன்னெடுத்துச் சென்றார்.
1939 இல் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை இந்திய தொழிலாளர் சங்க கூட்டத்தில் உரையாற்றும் வாய்ப்பை பெற்றுக்கொண்டார். அது அவரை மலையக மக்களின் மனங்களை ஈர்த்தெடுத்துக்கொண்டது. அஸீஸுடைய பணி இன, மத, மொழி கடந்த மனித நேயமிக்கதாகவே காணப்பட்டது. அவருடைய ஆற்றல் இலங்கையிலும் இந்தியாவிலும் மட்டுமல்ல ஆசிய, ஆபிரிக்க பிராந்திய மெங்கும் வியாபித்துக் காணப்பட்டது. ஒருதடவை மகாத்மா காந்தியை சந்தித்த அஸீஸ் நீண்ட நேரம் நடந்த வண்ணமே பேசிக்கொண்டிருந்தார். அப்போது மகாத்மா காந்தி அஸீஸ் அவர்களிடம் கேட்டார். இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேருவை தேர்ந்தெடுப்பது நல்லதா என்று கேட்டுள்ளார்.
அதற்கு அஸீஸ் இதனை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இந்தியா எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையை புறந்தள்ளி செயற்பட முடியாது. இதனாலேயே இலங்கையினுடைய அபிப்பிராயத்தையும் எதிர்பார்க்கிறோம் என்று கூறியிருக்கிறார். இதற்குப் பதிலளித்த அஸீஸ் பாரத நாட்டை பொறுத்த வரையில் நேருஜியை விட்டால் சிறந்த ஒருவரை தேர்ந்தெடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
இதனை இங்கு சுட்டிக்காட்டுவதற்கு காரணம் அஸீஸின் அறிவாற்றல் குறித்து மகாத்மா காந்தி எந்த அளவிற்கு புரிந்து வைத்திருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவேயாகும்.
ஏ. அஸீஸ் தனது இறுதிக்காலம் வரை முழுக்க முழுக்க தோட்டத் தொழிலாளர் வர்க்கத்திற்கே தன்னை முழுமையாக தியாகம் செய்தார். சுதந்திர போராட்டம் நடந்த காலகட்டத்தில் இலங்கைக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் அஸீஸ் உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருந்தார். சோல்பரி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையில் எமது நாட்டிற்கு சுதந்திரத்தினை தாருங்கள். எங்கள் பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துக்கொள்வோம். சிங்கள மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது. என்று உறுதிபட தெரிவித்திருந்தார்.
இலங்கை உழைக்கும் வர்க்கத்திற்காக மே தினத்தை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்த வேண்டுமென்று உரத்துக் குரல் எழுப்பிய அஸீஸ் அதில் வெற்றி கண்டார். ஆசிய ஆபிரிக்க ஒத்துழைப்பு இயக்கத்தின் உபதலைவராக 1985 இல் தெரிவு செய்யப்பட்ட அஸீஸ் தனது மரணம் வரையில் அந்தப் பதவியில் நீடித்தார். 1947 மஸ்கெலியா தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சர்வகட்சி மாநாட்டில் தொடர்ச்சியாக பங்கேற்று முன்வைத்த யோசனைகள் இனவாதத்திற்கும் அடிப்படை வாதத்திற்கும் சாட்டை அடி கொடுக்கும் விதத்தில் மனிதாபிமானத்தை உயர்த்திப்பிடித்து பேசினார். இதன் காரணமாக ஜே.ஆர். ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாச ஆகிய ஜனாதிபதிகளின் பாராட்டையும் பெற்றுக்கொண்டார்.
தோட்டத் தொழிலாளர் வர்க்கத்தின் சம்பளம் ஏனைய உழைக்கும் வர்க்கத்தின் சம்பளத்திற்கு சமனாக இருக்க வேண்டும் என்று அஸீஸ் வலியுறுத்தி வந்தார். தோட்ட மக்களின் சுகாதாரம், பாதுகாப்பு, வீடு, கல்வி உட்பட அனைத்து விடயங்களும் ஏனைய மக்களுக்கு உள்ளது போன்று சமனாக இருக்க வேண்டும் என்பதை அரசாங்கத்துக்கு வலியுறுத்தி வந்தார். 1970 முதல் 1977 வரை உள்ள காலப்பகுதியின் சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தில் நியமன எம்.பியாக நியமனம் பெற்றார்.
அஸீஸ் தனது 78வது வயதில் 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 29ம் திகதி காலமானார். அவருக்கு 4 பிள்ளைகள். டாக்டர் லைலா ஹஸ்வானி, டாக்டர் செய்பூன் பட்டேல், ஆகிய இரண்டு புத்திரிகளும் அஷ்ரப் அஸீஸ், அன்வர் அஸீஸ் ஆகிய இரண்டு புத்திரர்களும் உள்ளனர். தந்தை வழியில் சமூக தொழிற்சங்க பணிகளில் அஷ்ரப் அஸீஸ் தன்னை ஈடுபடுத்தி வருகின்றார். இந்தியாவில் பிறந்து இலங்கையில் உழைக்கும் வர்க்கத்திற்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்திய ஏ.அஸீஸின் நாமம் சதா காலமும் நீடித்து நிலைக்கும் என்பது உறுதி.
நன்றி- தினகரன்