Wednesday, August 5, 2009

சேவையாற்றக் கூடியவர்களுக்கே வாக்களிக்க வேண்டும்

தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கப் பேதங்களை மறந்து தொழிலாளர்களுக்கு சேவையாற்றக் கூடியவர்களுக்கு வாக்களிப்பதன் மூலமே அவர்களது அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமென இலங்கைத் தோட்டத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் செயலாளர் எஸ்.சிவசுந்தரம் ரி.வி.சென்னனை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார். அரசுடன் இணைந்து தொழிலாளர்களிடம் வாக்கு கேட்கும் தொழிற்சங்கங்கள் அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடம் கலந்துரையாடி தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பள உயர்வினைப் பெற்றுக் கொடுத்து விட்டு வாக்குக் கேட்டிருக்க வேண்டும். ஒப்பந்த காலம் காலாவதியாகிப் பல மாதங்கள் ஆகியும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்திக் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறுபவர்கள் ஒன்றை நினைக்க வேண்டும். தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை, சம்பளம் 13 வீதத்தால் உயர்கின்ற போது வாழ்க்கைச் செலவும் உயர்கின்றது. அன்று பருப்பு 45 ரூபாவாக இருந்தபோது இன்று விலை 220 ரூபாவாக உயர்ந்துள்ளது. 12 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட அரிசி 70 ரூபாவாக உயர்ந்துள்ளது. அதேபோல் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளது. கூட்டு ஒப்பந்தப்படி தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. தொழிலாளர்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.