கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில், முதலாளிமார் சம்மேளனம் அடிப்படைச் சம்பளத்தை 100 ரூபாவாக உயர்த்த இணக்கம் தெரிவித்துள்ளப்போதிலும், அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பதில் இம்முறை உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ள இ.தொ.காவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், நூறு ரூபாய் அதிகரிப்பைத் தாம் நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்தார்.
ராஜகிரியவில் நேற்று (15) நடைபெற்ற முதலாளிமார் சம்மேளனத்துடனான கலந்துரயைாடலின் பின்னர், அதில் கலந்து கொண்ட அனைத்துத் தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஆயிரம் ரூபாய் பெற்றுத் தருவதற்குத் தேவையான தொழிற்சங்க நடவடிக்கைகளையும் அரசாங்கத்தின் தரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்” எனத் தெரிவித்தார்.
சம்பள உயர்வு விடயத்தில் அழுத்தம் கொடுத்தால் மாத்திரமே, முதலாளிமார் சம்மேளனம் இறங்கி வருவார்கள் எனத் தெரிவித்த அவர், முதலாவது பேச்சுவார்த்தையில் 10 சதவீத அதிகரிப்பிலிருந்து தற்போது மூன்றாவது பேச்சுவார்த்தையின்போது 20 சதவீத அதிகரிப்புக்கு முதலாளிமார் சம்மேளனம் வந்திருக்கிறார்கள் என்றும் அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பதுபோல தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் மாத்திரமே, ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில்,கொழுந்து பறிக்கும் அளவுக்கேற்ப சம்பளம் வழங்கப்படும் எனும் கோரிக்கையையும் தாம் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த அவர், எனினும் அடிப்படைச் சம்பளத்தை ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலதிக கொடுப்பனவுகள் எமக்கு வேண்டாம், அடிப்படைச் சம்பளத்தை ஆயிரமாக்கிவிட்டு பிறகு ஏனையவற்றைப் பேசிக் கொள்ளலாம். ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றோடு சேர்த்து, நாள்சம்பளத்தை 940 ரூபாயாக கம்பனிகள் கணக்குக் காட்டுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொடுப்பதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார். இதன்போது அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை எப்போது என வினவப்பட்டமைக்கு, அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்களோடு கலந்துரையாடித் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதன்போது கூட்டு ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை செய்துகொள்ளப்பட வேண்டும் என்றோ, நிலுவைச் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றோ தேவைப்பாடுகள் இ.தொ.கவுக்கு இல்லை என நீங்கள் நீதிமன்றில் தெரிவித்திருக்கிறீர்களே என வினப்பட்டமைக்கு, நீதிமன்ற விடயத்தை நீதிமன்றில் பேசுவோம் என அக்கட்சியின் உப தலைவர் சட்டத்தரணி மாரிமுத்து பதிலளித்தார்.