Saturday, May 10, 2014

ரயில் தடம்புரண்டதால் ரயில் சேவைகள் பாதிப்பு

மலையக ரயில் மார்க்கத்தில் ஹட்டன் ரொசல்ல பகுதியில் ரயில் தடம்புரண்டதில் கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தாமதமாகியுள்ளது.
 
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவுநேர தபால் ரயிலே தாமதமாகியுள்ளதாக ரயில்வே கட்டப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த ரயில் இன்று அதிகாலை ஐந்து மணியளவில்  பயண இலக்கான கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்திருக்க வேண்டும்.

இருப்பினும், ரயில் தடம்புரண்டமை காரணமாக இதுவரையில் பயண இலக்கை வந்தடையவில்லை.

தடம்புரண்ட ரயில் இன்று அதிகாலை நான்கு 4.00 அளவில் மீள பயணத்தை ஆரம்பித்தது.

எவ்வாறாயினும், கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி இன்று காலை பயணத்தை ஆரம்பிக்க இருந்த ரயில் உரிய நேரத்தில் பயணத்தை ஆரம்பித்ததாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம்  சுட்டிக்காட்டியுள்ளது.

குளவி கொட்டியதால் 30 பேர் வைத்தியசாலையில்

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  டிக்கோயா தோட்டத்தில் இன்று காலை 11.30 மணியளவில் குளவி கொட்டியதால் 30 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிக்கோயா கோவில் ஒன்றில் ஆலய பூசை ஒன்றில்; கலந்து கொண்டவர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

ஆலய யாக பூசையின் போது கிளம்பிய புகை ஆலயத்தின் அருகில் உள்ள மரத்தில் இருந்த குளவி கூட்டுக்கு பரவியதால் குளவி கலைந்து பூசையில் ஈடுப்பட்டிருந்தவர்களின் மீது கொட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் சிலருக்கு பெரும் பாதிப்பு இல்லையெனவும் சிலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் ஏனைய 15 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் சிறுகுழந்தையொன்றும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹட்டனில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்ட தொழிலாளிகளின் சேமநல நிதி மற்றும் நம்பிக்கை நிதி ஆகியவற்றில் தரகர்களால் ஏற்படுத்தப்படும் மோசடியை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி ஹட்டன் நகரை அண்மித்த தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த தோட்டத் தலைவர்கள், தொழிலாளர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
 
தொழிலாளர் நலன் திட்டத்தின் அமைப்பு குழுவினர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைப்பின் தலைவர் பெரியசாமி பிரதீபன் தெரிவிக்கையில் 
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சேமநல நிதி மற்றும் நம்பிக்கை நிதி என்பன அவர்களின் உழைப்பிலிருந்து சேமிக்கப்பட்டவை. தொழிலாளர்களுக்கு மிஞ்சியதும் அது மாத்திரமே. எஞ்சிய அவர்களின் பரம்பரை சொத்தை போலி தரகர்கள் தோட்டங்களுக்குள் பிரவேசித்து, அந்த நிதிகளை  இலகுவாகப் பெற்றுத்தருவதாகக் கூறி ஏமாற்றிய சூரையாடிச் செல்கின்றார்கள்.
 
இவற்றை கட்டுப்படுத்தி சூரையாடுபவர்களை உடனடியாக கைது செய்ய உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சேமநல நிதி மற்றும் நம்பிக்கை நிதி இலகுவாக பெற்றுகொள்ள வேண்டிய ஒரு விடயமாகும். இதற்கான அரச திணைக்களத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு பிராந்தியத்திலும் அரச திணைக்களங்கள் இயங்குகின்றன.

அரச முகவர்கள் இயங்குகின்றார்கள். எனினும் இவ்வாறு போலி தரகர்களிடம் சென்று சேமநல நிதி மற்றும் நம்பிக்கை நிதிக்காக உங்கள் பணத்தை வீண்விரயப்படுத்தி உங்கள் சொத்தை இழந்து விட வேண்டாம்.

சட்டவிரோத முகவர்கள் உங்கள் தோட்டப்பகுதியில் இருப்பார்கள். ஆனால் அவர்கள் தொடர்பிலான தகவல்களை அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது தொழிலாளர் நலன் திட்டத்திலோ தெர்pவிக்குமாறு 'ஹட்டன் தொழிலாளர் நலன் திட்டத்தின்” தலைவர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.