Friday, January 8, 2010

அமரர் பெ. சந்திரசேகரனின் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு எஸ்.அருள்சாமி

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் மறைவைத்தொடர்ந்து ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு மத்திய மாகாணத்தின் முன்னாள் தமிழ்க் கல்வியமைச்சர் சந்தனம் அருள்சாமி நியமிக்கப்பட்டுள்ளதாக 08-01-2010 ம் திகதி வெளியிடப்பட்டுள்ள அதி விசேஷ அரசாங்க வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனநாயக சோஷலிஷக் குடியரசின் அரசியலமைப்பின் 99 ஆம் உறுப்புரையின் 13(ஆ)பிரிவின் கீழ், மறைந்த சந்திரசேகரன் பெரியசாமி வெற்றிடத்தை நிரப்புவதற்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியா தேர்தல் மாவட்டத்திற்கான ஆறாவது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவராக சந்தனம் அருள்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க அரசாங்க வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணி தனித்துப்போட்டியிட்ட போது அதன் தலைவர் அமரர் பெ.சந்திரசேகரன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

மலையக மக்கள் முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் சந்திரசேகரனுக்கு அடுத்தபடியாக அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர் அருள்சாமி.

அருள்சாமி ம.ம.முன்னணியின் நிர்வாகச் செயலாளராகவும் மத்திய மாகாணசபை உறுப்பினராகவும் செயற்பட்டவர். 2004 ஆம் ஆண்டு முன்னணியிலிருந்து விலகி தனித்துச் செயற்பட்டு, மத்திய மாகாணத்தின் தமிழ்க் கல்வியமைச்சராகப் பதவியேற்றவர்.

தற்போது தொழிலாளர் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளராகவும் ஜனாதிபதி ஆலோசகர்களில் ஒருவராகவும் செயற்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

மலையகத்தில் 40,000 வீடுகள் - முத்துசிவலிங்கம்

மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் மலையகத்தில் வருடாந்தம் ஐயாயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், தேச நிர்மாண, தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

2006 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை 12,230 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு வீட்டைத்தானும் நிர்மாணிக்கவில்லையென்று சில அரசியல்வாதிகள் கூறுகிறார்கள் இதில் எவ்வித உண்மையுமில்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் 3,179 ஆசிரிய நியமனங்கள்; வழங்கப்பட்டுள்ளன. 500 தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வரலாற்றில் முதற் தடவையாக 300 தபால் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் 100 பேருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இணைந்து செயற்படுவதன் மூலமே இந்த நன்மை கிடைத்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக எமது கட்சியே மலையகத்தில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டுள்ளது. எனவே, இந்தத் தேர்தலில் இ. தொ. கா.வின் முடிவின்படி மலையக மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.