Sunday, June 3, 2018

மண்சரிவு அபாயத்திலுள்ள குடும்பங்களுக்கு முன்னுரிமை

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை தற்போது ஆரம்பித்துவிட்டது. இலங்கையில் இயற்கை அனர்த்தமென்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது மலையகமாகவே இருக்கும். குறிப்பாக மே, ஜுன், ஜுலை, ஓகஸ்ட், டிசம்பர் மாதங்களில் அதிக மழை வீழ்ச்சியை எதிர்கொள்ளுகிறது மலையகம். இக்காலங்களில்தான் இயற்கை அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை மலையக மக்களுக்கு ஏற்படுகிறது.

எனவே பெருந்தோட்டப் பகுதிகளுக்கு அனர்த்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நூற்றுக்கு எழுபத்தைந்து சதவீதமான பெருந்தோட்டக் குடியிருப்புகள் நிலச்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியிருப்பதால் மலையகம் இவ்விடயம் குறித்துப் பெரிதும் அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி மாவட்டங்களே பெரிதும் அச்சுறுத்தலுக்குட்பட்டுள்ளன.

பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட லயன் காம்பிராக்கள் ஒன்று மலையுச்சியில் அமைந்திருக்கும். அல்லது மலையடிவாரத்தில் அமைந்திருக்கும். இவ்வாறான மலைப் பாங்கு பகுதிகளிலும் சரிவான பகுதிகளிலும் தான் தற்போது மண்சரிவு ஏற்படுகிறது. மண்ணரிப்பு, முறையான நீர் வழிந்தோடக்கூடிய கான் வசதிகள் இன்மை, மரங்கள் தரிப்பு என இயற்கையும் செயற்கையும் கலந்ததான பௌதீகவியல் குளறுபடிகளினால் சிறு மழையென்றாலே உரு கொண்டு ஊற்றெடுக்கும் நிலத்தடி நீர் வெகு சுலபமாகவே இடப்பெயர்ச்சி செய்கிறது.

இதனால் இப்பகுதிகளில் வாழ்விடங்களைக் கொண்டிருக்கும் மலையக மக்கள் பயத்தோடும் பீதியோடும் எந்த நேரமும் லயக்காம்பிராவை விட்டு வெளியேறத் தயாராயிருப்பது வழமையான ஒன்று. இம்மக்கள் ஏறக்குறைய 200 வருடங்களாக குடியிருந்துவரும் லயக் காம்பிராக்கள் மனித வாழ்வுக்கு அருகதையற்ற நிலைக்குப் போய்விட்டது. கூரைகள், சுவர்கள் பலவீனமடைந்துபோய் காணப்படுகின்றன. நிலத்தடி நீர் கசிவினால் அடித்தளமே ஆட்டம் கண்டு போயுள்ளது. நிலச்சரிவு என்றாலும் மின்சார ஒழுக்கு என்றாலும் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியாத அளவுக்கு அமைவிடம் சிதிலமடைந்து போய்விட்டது. இதனைச் சீர்செய்வதென்பது பயனற்ற முயற்சி. இதனாலேயே இவர்களுக்குத் தனித்தனி வீடுகள் தேவை என்ற கோஷம் எழுப்பப்பட்டு வருகின்றது.

ஆனால் இதற்கான நடவடிக்கைகள் மந்த கதியிலேயே இடம் பெறுகின்றன. பல இடங்களில் வீடமைப்புக்காக நாட்டப்பட்ட அடிக்கற்கள் அடையாளம் தெரியாமல் போய்விட்டிருக்கின்றன. இன்னும் சில இடங்களில் கட்டப்பட்ட வீடுகள் கையளிக்கப்படாமல் காடு மண்டிக்கிடக்கின்றன. வேறு சில பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கையை எதிர்நோக்கியிருக்கும் (தற்போது லயன் காம்பராக்கள் அமைந்துள்ள பகுதி) பிரதேசங்களுக்கு அருகிலேயே புதிய வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். உண்மையில் தோட்ட மக்களின் வீடமைப்புக்காக பாதுக்காப்பான காணிகளை வழங்குவதில் தோட்ட நிர்வாகங்கள் பொறுப்பற்ற நிலையிலேயே நடந்து கொள்கின்றன. அவை ஒதுக்கும் இடங்கள் குறித்து அவதானிகள் மத்தியில் திருப்தியில்லை.

இதே நேரம் தனிவீட்டுத் திட்டம் ஆமைவேககத்தில் நடைபெற்று வருவதால் இன்னும் பல வருடங்களுக்கு இம்மக்கள் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியே வாழ வேண்டிய துர்ப்பாக்கியம். இவ்வாறான காரணங்களினால் லயக்காம்பிராக்கள் முற்று முழுதாகவே மக்கள் வாழக்கூடிய அந்தஸ்தை இழந்துவிட்டன. ஆனால் இதிலிருந்து மக்களை பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.
தனி வீட்டுதிட்டங்களில் மண்சரிவு அனர்த்தங்களை எதிர்நோக்கியவர்களுக்கும் மின் கசிவு விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை என்கிறார் அமைச்சர் திகாம்பரம். ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்னால் இவ்வாறு பாதிக்கப்பட்ட மலையக மக்களில் பலர் இன்னும் தற்காலிக கூடாரங்களிலும் கைவிடப்பட்ட தொழிற்சாலைகளிலும் அவஸ்தைபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அண்மைய மழையால் தற்காலிக கூடாரங்களிலும் கூட நீர் பாய்ந்து சேதமுற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிவாரணப் பொருட்கள் உரிய முறையில் விநியோகிக்கப்படுவது பற்றி அவதானமேதும் செலுத்தப்படவில்லை என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் மனக்குறையாக இருக்கிறது. மீரியபெத்தை மண்சரிவு அனர்த்தத்தின் பின் மலையக அரசியல்வாதிகளின் செயற்பாடு குறித்து விமர்சனங்கள் எழவே செய்தன. நுவரெலியா மாவட்டத்தில் உயிரிழப்புகள் இல்லாவிட்டாலும் பாதிப்புகள் ஏற்படவே செய்தன. தவிர, வருடாவருடம் நிகழும் இவ்வாறான காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அனர்த்தங்களுக்கு நிரந்தரத் தீர்வுக்கான ஏற்பாடுகள் எதுவுமே மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவில்லை.

ஒவ்வொரு வருடமும் இயற்கை அனர்த்த அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க வேண்டிய அபாய நிலையில் இருக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் மாற்று குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டியது முக்கியமான பிரச்சினையாக உள்ளது. அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் தற்காலிக உதவிகளேயாகும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்தியடைய முடியாது. அரசின் நிவாரணங்களே அவசியமானவை. இந்நாட்டின் குடிமக்கள் என்ற ரீதியில் நியாயமாக கிடைக்க வேண்டியவை. ஆனால் அந்த நிவாரணங்கள் மலையக மக்களை சென்றடைவதில் உரிய அக்கறை காட்டத்தான் யாருமே இல்லை.

அனர்த்தம் பற்றிய விபரங்களை ஆளுக்காள் சேகரித்தாலும் அதற்கான நிவாரணங்கள் வழங்கப்படுவதில் நியாயமாக நடந்து கொள்வதைத்தான் காணமுடியவில்லை. எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று பொதுவாக கூறிவிட்டு நழுவிக்கொள்ளும் நிலையிலேயே அரச அதிகாரிகளின் போக்கு காணப்படுகின்றது. காலி, களுத்துறை, மாத்தறை, பதுளை, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி போன்ற மாவட்டங்கள் வருடாவருடம் இயற்கை அனர்தங்களுக்குட்படும் நிலையில் இதனால் அதிக இழப்புகளை மலையக மக்களே சந்திக்க வேண்டி நேரிடுகிறது. இவர்களின் வாழ்விடம் அமைந்துள்ள பகுதிகள் மேட்டு நிலங்களாகவும் சரிவுகளாகவும் இருப்பதால் மண்சரிவு, மரம் சரிந்து முறிந்து விழல், இடி, மின்னல் தாக்கம் போன்றவற்றின் தாக்கங்களால் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகின்றன. இதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியாதபடி பெருந்தோட்டக் கட்டமைப்பு முகாமைத்துவம் உள்ளது.

இவர்களை அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கும் இடங்களிலிருந்து அகற்றி பாதுகாப்பான இடங்களில் குடியேற்ற எந்தத்திட்டமும் தோட்டக் கம்பனிகளிடம் இல்லை. அரசாங்கம் வீடமைப்பு திட்டங்களை ஏற்படுத்த முன்வந்தாலும் தேவையான, பாதுகாப்பான இடங்களை ஒதுக்கித் தருவதில் தோட்டக் கம்பனிகள் போதுமான ஒத்துழைப்பு வழங்குவதில்லை. மீரியபெத்தை மக்களுக்கு பாதுகாப்பான இட ஒதுக்கீடு செய்வதில் தோட்ட நிர்வாகம் காட்டியிருந்த அலட்சியம் பற்றி அரசு அதிகாரிகள் கூட விசனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவேதான் அனர்த்தம் என்று வந்துவிட்டால் அனைத்தையும் இழந்து அம்போவாகி விடுவோமோ என்று மக்கள் அச்சப்படும் நிலை தோன்றியுள்ளது. இந்த நிலையைப் போக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்படுவதோடு மீண்டும் இவ்வாறன அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்காதபடி பாதுகாப்பான இடங்களில் குடியிருப்புகளை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
இந்திய அரசாங்கம் வழங்கியுள்ள 4000 வீடுகள், வழங்க உறுதியளித்துள்ள 10,000 வீடுகள் இந்த அரசாங்கத்தின் 25,000 தனித்தனி வீட்டுத் திட்டங்கள் மலையகத்துக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. இதற்கான முன்னகர்வுகளும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான வீட்டுத் திட்டங்களில் அனர்த்த அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்போர், ஆளாகலாமென எச்சரிக்கப்பட்டிருப்போருக்கு முன்னுரிமை வழங்கப்படுவது அவசியமே. ஏனெனில் அதிக மழை வீழ்ச்சி ஆரம்பமானதும் குடியிருப்புகளை விட்டு வெறியேற அறிவுறுத்துவதும் மழை குறைந்ததும் மீண்டும் பழைய இடங்களுக்கே திருப்ப பணிக்கப்படுவதுமே வழமையாக நடக்கும் விடயமாக இருக்கிறது. இடைக்கால தங்குமிடங்களாக பாடசாலை, கோவில், சனசமூக நிலையங்களே பயன்படுத்தப்படுகின்றன.
அதிகாரிகள் மட்டத்தில் எச்சரிக்கை விடுவதோடு அவர்கள் பணி முடிந்துபோய் விடுகின்றது. ஆனால் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுப்பவர்களுக்கு நிரந்தரமான மாற்று ஏற்பாடுகள் பற்றி எவருமே கவனமெடுப்பதில்லை. இதனால் மக்கள் மழை ஆரம்பித்துவிட்டால் பயத்துடனும் பதட்டத்துடனும் நாட்களை கழிக்க வேண்டியேற்படுகின்றது. இது குறித்து நியாயமாகவும் நேர்மையாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

அனர்த்த அபாயங்களை எதிர்நோக்கியிருக்கும் குடும்பங்களுக்கு பாதுகாப்பான இடங்களில் வீடுகள் அமைத்துத் தரப்படும் என்று கூறப்படுகின்றது. இது துரிதப்படுத்தப்படுவது முக்கியம். கடந்த வாரம் புதிதாக அமைக்கப்பட்ட ஒரு தொகுதி வீடுகள் மண்சரிவு, மின்கசிவு விபத்துகளினால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வழங்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. எதிர்வரும் காலங்களில் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டங்களில் மண்சரிவு அபாயங்கள் நிலவும் பகுதிகளில் குடியிருப்புகளைக் கொண்டிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதே உசிதமானது. இல்லாவிடில் மழைக்காலம் ஆரம்பித்துவிட்டால் அகதி கோலம்பூண்டு அலைகழிப்புக்குள்ளாகும் அவலம் மட்டும் அகலப்போவதே இல்லை!

நன்றி- தினகரன்