Monday, June 26, 2017

பெய்திலி தோட்டத்தில் ஆர்ப்பாட்டம்

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெய்திலி தோட்டத்தில் தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். தோட்ட உத்தியோகஸ்த்தர் ஒருவர் தனக்கு தோட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வீட்டை சொந்தமாக்கி கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தநிலையில் குறித்த தோட்ட உத்தியோகஸ்த்தர் அத்தோட்டத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டது 7 வருடங்களுக்கு மேலாகியுள்ளது.ஆனால் தோட்ட நிர்வாகத்தால் தோட்ட உத்தியோகஸ்த்தருக்கு வழங்கப்பட்ட வீடுகள் திரும்ப பெற வேண்டும் என்பது பெருந்தோட்ட சட்டத்தில் உள்ளது.

இதனை மீறி, வழங்கப்பட்ட வீட்டுக்கு உரிய சட்ட பூர்வமான ஆதாரங்களை தன்னிடத்தில் வைத்துக் கொண்டு இவ்வீட்டை ஆக்கிரமித்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏனைய தோட்ட உத்தியோகஸ்த்தர்களும் பணியாற்றுகின்ற நிலையில் குறித்த உத்தியோகஸ்த்தர் தனது தற்காலிகமான வீட்டை சொந்தமாக்கி கொள்வது எதிர்காலத்தில் பாரிய சிக்கல்களை உருவாக்கும் என்பதை காரணங்காட்டி தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவண்ணம் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

மலையக அரசியல் பிரவேசத்துக்கான இலவச ஓடுபாதை

இலங்கை நாட்டைப் பொறுத்தவரையில் மலையகத் தமிழர்கள் 200 வருடகால வரலாற்றைக் கொண்டவர்கள். எட்டு பிரதான மாவட்டங்களில் செறிந்து வாழும் மலையக மக்கள், அதே லயன் குடிசைகளிலும் முறையற்ற சுகாதார வசதி, கல்வி வசதி, பொருளாதார பிரச்சினை, வரட்சி, வறுமை, வேலைவாய்ப்புத் திண்டாட்டம், மத்திய கிழக்கு நோக்கிய பெண்கள் பயணம், இளைஞர்களின் நகர்ப்புற மோகம் என்ற பல்வேறு சொல்லொணாத் துயரங்களை நாளுக்கு நாள் அனுபவித்து வருகின்றனர்.

மனிதன் மரணித்து, அவனை அடக்கம் செய்வதற்கான நிலம்கூட இல்லாத சமூகமாகவே, மலையகச் சமூகம் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றது.
மலையகத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது இறந்தால், தேயிலைத் தோட்ட நிலத்தில் தேயிலைக் கன்றுகளை அகற்றி, 6 அடி ஆழமான குழியை வெட்டுவதற்கு முகாமையாளரிடம் அதற்குரிய அனுமதி பெறப்பட வேண்டும். சாகும் வரைக்கும் வீடு. ஆனால் அதைச் சொந்தம் கொண்டாட முடியாது. இவ்வாறு   சொல்ல முடியாத வேதனைகள் தொடர்கின்றன. 
தோட்டத் தொழிலாளர்கள் பச்சைக்குத்தப்பட்ட  சமூகம். இன்று நாட்டுக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தரும் தேயிலை, இறப்பர் தோட்டங்களில் வேலை செய்து, தமது குடும்பம், வாழ்க்கையை நகர்த்திச் செல்கின்றனர்.
சம்பளப் பிரச்சினை, சுய காணித் தேவை, மாணவர்களின் கல்வி பின்னடைவு போன்ற பல சிக்கல்கள் இருந்து வருகின்ற நிலையில், மலையக அரசியல் தலைமைகள் வெறும் வாய்ச் சவடால்களால் தமக்குள், பல முரண்பாடுகளை உருவாக்கி, அப்பாவி  மக்களைப்  பகடைக்காய்களாகப் பயன்படுத்தி வருகின்றமை வேதனைக்குரிய விடயமாகும். இதை அறியாத மலையகச் சமூகம், தொடர்ந்து அரசியல் தலைமைகளுக்கு அடிபணிந்து செல்கின்றது. 
நாட்டில், பாரத பிரதமரின் வருகை முக்கியமான தலைப்பாக இருந்தாலும் மலையகத்தில் அரசியல் கட்சிகள், தலைமைகளுக்கு இடையில் யார் வரவேற்பது, யார் உடன்படிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான பல முறுகல் நிலைகள் ஏற்பட்ட வண்ணமே இருந்தது. 
அரசியல்வாதிகளின் பொய்ப் பிரசாரங்கள், மக்களை மேலும் துன்ப நிலைக்கு இட்டுச்செல்கின்றது. பாரதப் பிரதமரின் வருகையையொட்டி, நடைபெற்ற அலங்கோலங்கள், இதுவரை காலமும் மூடப்பட்ட வைத்தியசாலை திறக்கப்படுவதும், பாதைகள் செப்பனிடப்படுவதும், பாடசாலைகள் மூடப்படுவதும் வெறும்  கேலிக்கூத்தாகவும் வெளிவேசம் போடுவதையே காட்டிநின்றது. 
சொந்த மண்ணில் இதுவரை காலம் சுகங்களை அனுபவிக்காத எம்மவர்கள், ஓர் அரசியல்வாதி, கால்தடம் பதிப்பதால்தான் அந்தச் சுகங்களை அனுபவிக்க வேண்டியிருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
 மலையக தோட்டங்களில் வேலைகள் நிறுத்தப்பட்டு, பாடசாலைகள் மூடப்பட்டு, இந்தியப் பிரதமரை பார்க்கும் நோக்கில், சாரை சாரையாக நாட்டின் எல்லா பக்க மலையக உறவுகளும் ஹட்டன் பிரதேசத்தை நோக்கிச் சென்றிருந்தனர். இந்நிலை, மலையக மக்களின் அறியாமையை வெளிக்காட்டுகின்றது. 
இவ்வாறான நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எம் தலைமைகள் ஏன், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை, கல்விப் பிரச்சினை, ஆசிரியர்  பற்றாக்குறை ஆகிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதில் காலதாமதப்படுத்துகின்றனர் என்பது சிந்திக்கவேண்டிய விடயமாகும்.  மலைகத்தின் கல்விசார் சமூகமும் அரசியல்வாதிகளுக்குச் சோரம்போகும் நிலையே காணப்படுகின்றது.  
மோடியின் வருகையில் அக்கறை காட்டிய அரசியல் தலைமைகள், கல்வி நிலையில் பின்தங்கிப் போகும்,  எமது சமூகத்தைத் துளியும் கருத்திற்கொள்வதில்லை. பாதை எங்கும் தோரணம், கட்டவுட்கள், சுவரொட்டிகள், மேளதாளங்கள், தாரைதப்பட்டையென கொண்டாடப்படும் ஒருநாள் விழா, மக்களுக்கு சந்தோசத்தை ஏற்படுத்தினாலும், மனங்களில் ஏற்பட்ட மாறாவடு தொடர்ந்த வண்ணமே இருக்கும். 
அன்று, ‘கள்ளத்தோணிகள்’ என்று பட்டம்சூட்டப்பட்டு நாடுகடத்தப்பட்ட எம் உறவுகள், குடியுரிமை பறிக்கப்பட்ட எம் உறவுகள், இன்று சொந்தக்காணி இல்லாமல் நாட்டுக்காக உழைத்து தம் உயிரைத் தியாகம் செய்கின்றனர்.     இது,  30 வருடகால வடக்கு, கிழக்கு யுத்த நிலையைவிட கொடிய வேதனையாகும். 
அன்று அமரர் பெ.சந்திரசேகரன் கூறிய காணித் திட்டம், இன்றும் சாத்தியப்படாத நிலையிலும் ஒன்பதுக்கும் மேற்பட்ட மலையக அரசியல் தலைமைகள் இருந்து செயற்படுத்த முடியாத நிகழ்வாகவும் காணப்படுகின்றது.
 எனினும், ஒட்டுமொத்த நாட்டின் தமிழ்ச் சமூகமும் அரசியல் தலைமைகளால் ஏமாற்றப்பட்டு, சந்தர்ப்பத்துக்கு மாத்திரமே பயன்படுத்தப்பட்டுவரும் நிலைமையே தொடர்கிறது.  
பெருந்தோட்டத் தொழில் தொடர்பாகக் காணப்படும் பிரதான பிரச்சினை யாதெனில், அத்தொழில் பற்றிய சமூக அங்கிகாரத்தைப் பெறுவதாகும். பெருந்தோட்டங்களில் வேலை நிலைமைகளும் மோசமான சுகாதார மற்றும் கல்வி வசதிகள்  மற்றும் மிக இறுக்கமான மேலிருந்து கீழான முகாமைத்துவ முறைமையும் இத்தகைய மனப்போக்குக்குக் காரணமாகும். 
பெரும்பான்மைச் சமூகத்தைப் பொறுத்துவரை, பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகத்தை இலங்கையின் முக்கியமானதோர் சமூகப் பிரிவாகவோ பொருளாதாரத்துக்குப் பங்களிப்புச் செய்யும் முக்கியமானதோர் பிரிவாகவோ ஏற்றுக்கொண்டு அங்கிகரிக்கும் மனப்பக்குவம் இன்னும் ஏற்படவில்லை.  
1980 களில் மலையகக் கட்சிகள் அரசாங்கத்தை தெரிவு செய்யும் கட்சிகளாக இருந்ததாக உறுத்தலுடன் நோக்கப்பட்டது. தொண்டமான் அவர்களின் தலைமைத்துவத்துடனான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் இதில் முக்கியம் பெற்றன. ஜே. ஆர். ஜயவர்த்தன அறிமுகப்படுத்திய அரசியல் அமைப்பின் காரணமாக, பின்வந்த காலப்பகுதியில் அரசமைக்கும் கட்சிகளுக்கு, சிறுபான்மைக் கட்சிகளின் ஒத்துழைப்பு தேவையானதாக இருந்தது. 
இதைப் பயன்படுத்திக் கொண்ட பிரதான மலையக கட்சிகள், அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலம், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்மைகளை, குடியுரிமை, சம்பளம்,கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்களை பெற்றுக்கொடுத்துள்ளதை எவரும் குறைத்து மதிப்பிடமுடியாது.
எனினும் அரசியல் பலத்தைப் பயன்படுத்தி மலையக மக்களின் நிலைமைகளை மேம்படுத்த இதைவிடக்கூடுதலான பங்களிப்பைச் செய்திருக்கலாம் என விமர்சிக்கப்படுகின்றது. 
எவ்வாறாயினும், இன்றைய சூழ்நிலையில் எவருமில்லை. மாறாக சிறுபான்மைக் கட்சிகள் யாவும் காலைச் சுற்றும் நாய்க்குட்டிகளின் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமையும் தெளிவாகத் தெரிகிறது. 
விடுதலைப் புலிகளின் இராணுவ ரீதியிலான தோல்வி, எதிர்க்கட்சியின் பலவீனம், அரசியல் குத்துவெட்டுகள், கட்சித்தாவல்கள் போன்றவை காரணமாக அறுதிப் பெரும்பான்மையுடன் கூடிய அரசியற்பலம் ஆட்சியாளருக்கு உண்டு.
எனவே, சிறுபான்மைக் கட்சிகளின் தயவில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதுவே 1980-2007 வரையில் தென்னிலங்கை அரசாங்கங்கள் எதிர்நோக்கிய முக்கிய பிரச்சினையாக இருந்தது. சிறுபான்மைக் கட்சிகளின் தயவின்றி ஆட்சியமைப்பதே விரும்பத்தக்க ஒன்றாக அவர்களுக்கு இருந்தது தற்போது நிறைவேறியுள்ளது.
மலையகத் தலைமைகளின் பலவீனம் காரணமாக, இளைஞர் சமூகம் நம்பிக்கை இழந்த நிலையில் காணப்படுகிறது. அண்மையில் நடந்த பொதுத்தேர்தலில் மலையகத்தைச் சாராத ஒரு வேட்பாளர், நுவரெலிய மாவட்டத்தில் வெற்றியீட்டி நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தமையும் இந்த  நம்பிக்கையீனத்தின்  வெளிப்பாடாகவே நோக்கப்படலாம். 
அதேவேளை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் மலையக் கட்சிகள், அம்மக்களின் முன்னோக்கிய சமூக அசைவுக்கு பங்களிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆயினும் கோரிக்கைகளை வலுவாக முன்வைக்கக்கூடிய சூழல் தற்போதில்லை.
எனவே சிவில் சமூக அமைப்புகள் மலையக மக்களின் மேம்பாடு குறித்துக் கவனம் செலுத்த வேண்டிய கட்டாய தேவை உள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகள் கல்வி, சுகாதாரம், தொழிற்பயிற்சி, தொடர்பான தகவல்களைத் திரட்டி திட்டங்களை வகுக்கவேண்டிய தேவையுள்ளது. குறிப்பாக மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர் தொடர்பான புள்ளிவிவரங்கள், ஓரளவுக்குக் கிடைத்திருப்பினும் இற்றைப்படுத்தப்பட்ட புள்ளிவிவரத் தரவுகள் இல்லை. 
குறிப்பாக மலையகப் பிரதேசங்களிலிருந்து உயர்கல்வி கற்றவர்கள் மற்றும் அரச சேவைகள், தனியார் துறை என்பவற்றில் பதவிநிலை தொழில்வாய்ப்புகளில் உள்ளவர்கள் குறித்த விவரங்கள் மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு வெளியில் தொழில் வாய்ப்பில் ஈடுபட்டுள்ளோர் பற்றிய விவரங்கள் உள்ளிட்ட அடிப்படைத் தரவுகளின் பற்றாக்குறை மலையகப் பெருந்தோட்டத்துறைச் சமூகம் பற்றிய ஆய்வுகளைச் செய்வதில் பெருந்தடையாக உள்ளது. 
மறுபுறம் மலையகச் சமூகமானது சமூக அங்கிகாரம் தொடர்பில் ஓரங்கட்டப்பட்ட சமூகமாகவும் அரசியல் மற்றும் இனரீதியான மோதல்களின் போது, அடிவாங்கும் சமூகமாகவும் உள்ளது.
பெரும்பான்மையாகத் தமிழ்பேசும் மக்களைக் கொண்டுள்ள, பெருந்தோட்டத்துறையைக் கையாளும் அமைச்சு, அப்பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் கைகளிலன்றி, பெரும்பான்மையின அரசியல்வாதிகளின் கைகளில் உள்ளமை மலையக மக்களின் சமூக, பொருளாதார, அரசியல்,செல்நெறிகள் எத்திசையில் நகரும் என்பதைப் புரிந்துகொள்ளப் போதுமானதாகும். 
இவ்வாறானதொரு பின்புலத்தில் மலையக அரசியல்வாதிகள், கல்விச் சமூகத்தினர்,  சிவில் அமைப்புகள், இளைஞர் சமுதாயம் என்பன எவ்வாறு இயங்கப் போகின்றன? சமூக முன்னேற்றத்துக்கு எவ்வாறு பங்களிக்கப் போகின்றன என்பதே எமக்கு முன்னுள்ள வினாவாகும். 
கடந்த காலங்களைப் போலவே, இனிமேலும் பெருந்தோட்ட தொழிலாளர்களினால் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள், முரண்பாட்டு அரசியலை மேற்கொள்ள  முடியாது. இன்றைய சூழலில் அது எவ்விதத்திலும் சாத்தியமில்லை. அதனால் மலையக சமூகத்தினருக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படப்போவதில்லை. 
அதேவேளை மலையக அரசியல்வாதிகள் தமது சுயநல அரசியலைக் கைவிட்டு, தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் மேம்பாட்டுக்காகக் கூடுதலான பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும். சாத்தியமான எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கிடைக்கும் வாய்ப்புகளை மலையக மக்களுக்கு நம்மை தரும் வகையில் பயன்படுத்த வேண்டும். 
மலையகப் புத்திஜீவிகள், அதிகார வர்க்கத்தினர், முயற்சியாளர்களை ஒருங்கிணைத்த நிபுணர்கள் சபையொன்று உருவாக்கப்பட வேண்டும். பேரம் பேசுதல்களின்போது, இந்த நிபுணர் குழுவின் பொருத்தமான அங்கத்தவர்களின் பங்குப்பற்றல் இருக்கவேண்டும். நிபுணர்குழு மலையக மக்களின் தேவைகள், முன்னேற்றம் என்பவற்றுக்கான சிந்தனை மற்றும் சாத்தியமான திட்டங்களை வகுக்க  வேண்டும். 
இத்திட்டங்களிடையே ஒருங்கிணைப்பும் தொடர்பாடலும் இருக்கவேண்டும். அரசியல்வாதிகள் இத்திட்டங்களுக்கு அவசியமான நாடாளுமன்ற அங்கிகாரத்தையும் சட்ட வலுவையும் பெற்றுக் கொடுப்பவர்களாகச் செயற்படவேண்டும். 
மலையகப் பெருந்தோட்ட மக்களின் சமூக அபிவிருத்தி, சமூகஅங்கிகாரம், சமூகப்பிரதிநிதித்துவம், சமூகத்துக்காக் குரல் எழுப்பும் தன்மை என்பவற்றை மேம்படுத்துவதே எல்லோரதும் முக்கிய குறிக்கோளாக இருக்கவேண்டும். பெருந்தோட்ட மட்டத்தில் விழிப்புணர்வுக் குழுக்கள், மேம்பாட்டுக் குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட வேண்டும். 

உள்ளூர் பொலிஸாரின்  அனுசரனை இதற்குப் பெறப்பட வேண்டும். ஏற்கெனவே இருக்கின்ற அமைப்புகள் வலுப்படுத்தப்படவேண்டும். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை வாழ்க்கை முதல், அரசியல் அபிலாஷைகள் வரையிலான முறையான திட்டமிடலொன்றும் தாபன ரீதியான கட்டமைப்பொன்றும் உருவாக்கப்பட்டு, அரசியல் அனுசரனையுடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
 இவ்வாறானதொரு கட்டமைப்பு மாற்றம் ஏற்படாவிட்டால் அரசியல், சமூக, பொருளாதார ரீதியான முன்னோக்கிய அசைவு மந்தகதியுடன் சமூகத்துடன் தொடர்பற்ற எவரும், தமது அரசியல் பிரவேசத்துக்கான இலவச ஓடுபாதையாக, மலையக சமூகத்தைப் பயன்படுத்தும் நிலை தவிர்க்க முடியாததாகிவிடும். 
-சி.அருள்நேசன்-
நன்றி- தமிழ் மிரர்

Thursday, June 15, 2017

கனரக வாகனம் மோதியதில் பாடசாலை சிறுமி பலி- நானுஓயா நகரில் பதற்றம்

நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா நகரின் பாதசாரிகள் கடவையில் பாதை கடக்க முற்பட்ட. 06 வயது சிறுமி மீது கனரக வாகனம் மோதுண்டதில் சிறுமி ஸ்தலத்திலே பலியானார். ஊயிரிழந்த சிறுமி ரதல்ல கீழ்பிரிவு பகுதியை சேர்ந்த ஆகாஷா தேவ்மினி (06 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

நானுஓயா ரயில் மேம்பாலத்திற்கருகில்  உள்ள  பாதசாரிகள் கடவையில் இன்று காலை 8 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நானுஓயா நகரத்திலிருந்து பொலிஸ் வழியாக நானுஓயா ஜேம்ஸ் பீரிஸ் சிங்கள வித்தியாலயத்திற்கு செல்வதற்கு பாதசாரி கடவையை கடக்க முயன்ற போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இச்சிறுமியின் உயிரிழப்பினால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொது மக்கள் கனரக வாகனத்து தீ வைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தினால் நானுஓயா பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இதனை கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படையினர், பொலிசார், இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இச்சம்பவத்தையடுத்து நுவரெலியா - ஹட்டன் ஊடான பொது போக்குவரத்து பல மணிநேரம் முற்றாக ஸ்தம்பித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நானுஓயா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்

நானுஓயா பிரதேசத்தில் இடம்பெற்ற அமைதியின்மை நிலமை தொடர்பான விசாரணைகளை இலகுபடுத்தும் நோக்கில் நானுஓயா பொலிஸ் நிலைய அதிபர் நுவரெலியா பொலிஸ் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். 

Tuesday, June 13, 2017

அரசியல்வாதிகளின் கண்களில் தென்படாத பசுமலை தோட்டம்

எத்தனை ஆண்டுகள் கடந்த போதிலும், எத்தனையோ அரசியல் மாற்றங்கள் வந்த போதிலும், குயின்ஸ்பெரி பிரிவு பசுமலை தோட்ட மக்களின் வாழ்க்கை நிலைமையில் இன்னும் மாற்றம் ஏற்படவில்லை.

இரு இனங்கள் வாழும் பிரதேசங்களுக்கிடையில், இரு மாவட்டங்களுக்கிடையில், இரு நிர்வாக பிராந்தியங்களுக்கிடையில் எல்லையாக அமைந்துள்ள இடங்களில் இவ்வாறான குறைகள் காணப்படுவது வழமை. இவ்வாறான பிரதேசங்களில் பெரும்பாலானவை அபிவிருத்தி குன்றியதாகவும் பலரின் கவனத்திற்கு அகப்படாமலும் காணப்படுகின்றன.

மலையகத்தில் நவநாத சித்தர் வாழ்ந்ததாகக் கூறப்படும் குயின்ஸ்பெரி தோட்டத்திலும் இவ்வாறானதொரு நிலைமை காணப்படுகின்றது. குயன்ஸ்பெரி வடக்கு, குயின்ஸபெரி; மேற்கு, குயின்ஸ்பெரி கீழ்ப் பிரிவு ஆகியன காவத்தை பெருந்தோட்டக் கம்பனியின் நிர்வாகத்திற்குக் கீழ் இயங்கி வருகின்றன.

குயின்ஸ்பெரி கீழ்ப் பிரிவானது ஒருபகுதி கொத்மலை செயலகத்திற்கு உட்பட்டதாகவும், மற்றைய பகுதி கடியலென பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்டதாகவும் இயங்கி வருகின்றது. அதேநேரம் தனியார் ஒருவருக்குச் சொந்தமான பசுமலை பிரிவு பலரால் அறியப்படாத ஒரு பிரதேசமாகும். இந்தப் பிரதேசமும் கடியலென கிராம சேவகர் பிரிவுக்குரியதாகவும் பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்திற்குரியதாகவும் உள்ளது. 8 குடும்பங்கள் மட்டுமே இங்கு வாழ்ந்து வருகின்றன.

365 ஏக்கர் பரப்பைக் கொண்ட இந்த பசுமலை பிரிவானது 1970 களில் தோட்டங்கள் அரசு உடமையாக்கப்பட்டு தனியார் மயப்படுத்தப்பட்டபோது தனியொருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தோட்டத்தினைச் செயற்படுத்த முடியாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது. ஏறத்தாள 150 குடும்பங்கள் வாழ்ந்த போதிலும் பலர் தோட்டம் கைவிடப்பட்ட பின்னர் ஆங்காங்கே வெவ்வேறு தோட்டங்களுக்கு இடம்பெயர்ந்து சென்று விட்டனர். 8 குடும்பங்கள் மாத்திரமே தினக்கூலியாக வாழ்ந்து வருகின்றனர்.

சில காலத்திற்குப் பிறகு இத்தோட்டம் சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சிறு உடமையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டளவில் உடமையாளரால்; இந்த எட்டு குடும்பங்களையும் உடனடியாக வெளியேறும்படியும் வெளியேறாவிடின் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவீர்கள் எனவும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மத்திய மாகாண சபை உறுப்பினர் சிங். பொன்னையா அவர்களினூடாக இம்மக்கள் தொழில் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கின் போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரை ஏக்கர் காணி வழங்க இணக்கம் காணப்பட்ட பொழுதும் இதுவரை அக்காணி வழங்கப்படவில்லை.

மிகவும் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளில் வாழ்ந்து வரும் இவர்கள், தற்பொழுது பிரதானமாக பாதைப் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்.

இவர்களது குடியிருப்புக்குச் செல்லும் பிரதான பாதையைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது. அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கு குடிநீரைப் பெற்றுக் கொள்வதிலும் சிக்கல் காணப்படுகின்றது.

இவர்களுக்கான நீர்விநியோகத்திற்கான ஆரம்ப இடம் மற்றொரு உடமையாளர்களுக்கு சொந்தமான இடத்தில் உள்ளதால் இவர்களுக்கான குடிநீர் குழாயினை மாற்றி அவர்களுடைய விவசாயத் தேவைகளுக்கு உபயோகித்து வருகின்றனர். இதற்கெதிராக கேட்கச் சென்றவர்களை பெண் மீது பாலியல் வல்லுறவு கொள்ள முயற்சித்தார்கள் என்று சோடிக்கப்பட்டு நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டுக்கமைய இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த ஆண்களை 5 நாட்கள் வரை விளக்கமறியலில் வைத்திருந்த அவலமும் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் மாணவர்கள் குயின்ஸ்பெரி பாடசாலையிலும், நாவலப்பிட்டி கதிரேசன் பாடசாலையிலும் கல்வி கற்று வருகின்றனர். குறித்த தோட்டம் தொடர்பிலும், நிலவும் பிரச்சினை தொடர்பிலும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இது தொடர்பில் நேரில் சென்று பார்வையிட விஜயம் செய்திருந்தோம். இத்தனை வருட வரலாற்றில் அரசியல் சார்ந்தோ, அரசு சார்ந்தோ, தனியார் துறை சார்ந்த எந்தவொரு அலுவலரும் அங்கு வரவில்லை. அவர்களின் குறைகளைக் கேட்கவில்லை என்பதே அம்மக்களின் அங்கலாய்ப்பாக இருந்தது.

பாதை வசதி, இருப்பிட வசதி, குடிநீர் வசதி, வாழ்வாதார வசதி என எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இன்றி வாழும் இம்மக்கள் விஷேட கவனத்திற்குரியவர்களேயாவர்.

இம்மக்களுக்கான தீர்வாக இவர்களுக்கு வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள அரை ஏக்கர் காணிகளை பெற்றுக் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இக்குடும்பங்களுக்காக வீடமைப்புத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தி அவர்களுக்கு நிரந்தரமான குடியிருப்புகளைப் பெற்று கொடுக்கலாம். தற்காலிகமாக இவர்களுக்கான மாற்றுத் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்தும் வரை குடிநீர், பாதை, கூரைத் தகடுகளை பெற்றுக் கொடுக்கலாம்.

இதனடிப்படையில்; சமுதாய அபிவிருத்தி அமைச்சர்; பணிப்புரைக்கு அமைய குடிநீர்த் திட்டத்திற்கான நிதியொதுக்கீடு இப்போது செய்யப்பட்டுள்ளதோடு, கூரைத் தகடுகளும், வழங்கப்படவிருக்கின்றன. இந்திய வீடமைப்புத் திட்டத்திலும் இந்த 08 குடும்பங்களையும், உள்வாங்குவதற்கான நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ள அரை ஏக்கர் காணியினை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி- தினகரன்

Monday, June 5, 2017

12 வயது சிறுமியை கொடுமைப்படுத்திய தோட்ட அதிகாரியின் மனைவி கைது

சிறுமியை (12 வயது) வீட்டு வேலை க்கு அமர்த்தி அடித்து கொடூரமாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தை யடுத்து தலாத்துஓயா பொலிஸார் சந்தேகத்தின் பேரில் தோட்ட அதிகாரி ஒருவரின் மனைவியை கைது செய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
தலாத்துஓயா கெட்டவல பிரதேசத்தில் இரவு வேளை (8.40 மணியளவில்) சிறுமி ஒருவர் வீதியில் தனிமையில் அழுதுகொண்டு சென்றுக்கொண்டிருப்பதை அவதானித்த பிரதேச வர்த்தக நிலையப் பெண் ஒருவர் இச் சிறுமி குறித்த தகவலை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.
சிறுமியை அழைத்து அப்பெண் விசாரித்தபோது அந்தச் சிறுமி தமிழ் சிறுமி என தெரியவரவே பெண் வேரொருவரை அழைத்து அவரின் உதவியுடன் சிறுமியை விசாரித்துள்ளார்.
சிறுமி தான் வேலை செய்து வந்த வீட்டில் எஜமானியினால் இழைக்கப்படும் கொடுமைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் வீட்டைவிட்டு ஒருவருக்கும் தெரியாமல் தப்பிச் செல்வதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவசர பொலிஸ் பிரிவு 119 இலக்கத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து பொலிஸார் உடனடியாக அங்கு வி்ரைந்து சிறுமியைப் பொறுப்பேற்றனர்.
பொலிஸாரின் விசாரணைகளின்போது அச்சிறுமி தெரிவித்தாவது, எனது பெயர் சுப்பிரமணியம் மல்காந்தி, நான் அம்மாவுடனும் தம்பியுடனும் கலவான குண்டல தோட்டத்தில் வசித்து வருகின்றேன். தந்தை இறந்துபோனார், அம்மா தோட்டத்தில் வேலை செய்து வருகின்றார். தோட்டத்தில் தொழில் செய்யும் நபர் ஒருவர் கெட்டவலயில் உள்ள வீடொன்றிற்கு அழைத்து வந்தார்.
வீட்டிலிருந்த எஜமானியான நோனா கடுப்பானவர். எந்தநேரமும் கோபத்துடனேயே காணப்படுவார். அவர் என்னை அடிக்கடி தும்புத்தடியாலும் தடிகளாலும், கைகளாலும் அடிப்பார். கொடூரமாக சித்திரவதை செய்வார். என்னை படிக்கவைக்கப் போவதாக கூறிய அவர்கள், வீட்டை கூட்டி பெருக்குவது, சமையல் பானைகள், பிங்கான் கோப்பைகளை சுத்தம் செய்வது, அடுப்பு எரிப்பது போன்ற வேலைகளையே செய்ய வைப்பார்கள்.
எனக்கு படுக்க பாய், தலையணை, விரிப்பு போர்வை எதுவுமே கிடையாது.
நான் தரம் ஒன்று மட்டுமே பாடசாலை சென்று கல்விகற்றேன். அவர்கள் பாடசாலைக்கு அனுப்புவதாகத் தெரிவித்தபோதும் அது குறித்து எவ்வித கவனமும் எடுக்கவில்லை. பொடியன் ஒருவனைத் தேடி எனக்கு கட்டிவைப்பதாக எல்லாம் தெரிவித்தார்கள் என அழுத வண்ணம் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்தார். அதேவேளை தோட்ட அதிகாரியின் மனைவியே தனது எஜமானி என்றும் தெரிவித்தார்.
இதனை யடுத்து தலாத்துஓயா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி உபேவங்சவின் ஆலோசனையின் பேரில் பொலிஸார் சந்தேகத்தின்பேரில் தோட்ட அதிகாரியின் மனைவியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Sunday, June 4, 2017

12 வயது சிறுமியை கொடுமைப்படுத்திய தோட்ட அதிகாரியின் மனைவி கைது

சிறுமியை (12 வயது) வீட்டு வேலை க்கு அமர்த்தி அடித்து கொடூரமாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தை யடுத்து தலாத்துஓயா பொலிஸார் சந்தேகத்தின் பேரில் தோட்ட அதிகாரி ஒருவரின் மனைவியை கைது செய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
தலாத்துஓயா கெட்டவல பிரதேசத்தில் இரவு வேளை (8.40 மணியளவில்) சிறுமி ஒருவர் வீதியில் தனிமையில் அழுதுகொண்டு சென்றுக்கொண்டிருப்பதை அவதானித்த பிரதேச வர்த்தக நிலையப் பெண் ஒருவர் இச் சிறுமி குறித்த தகவலை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.
சிறுமியை அழைத்து அப்பெண் விசாரித்தபோது அந்தச் சிறுமி தமிழ் சிறுமி என தெரியவரவே பெண் வேரொருவரை அழைத்து அவரின் உதவியுடன் சிறுமியை விசாரித்துள்ளார்.
சிறுமி தான் வேலை செய்து வந்த வீட்டில் எஜமானியினால் இழைக்கப்படும் கொடுமைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் வீட்டைவிட்டு ஒருவருக்கும் தெரியாமல் தப்பிச் செல்வதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவசர பொலிஸ் பிரிவு 119 இலக்கத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து பொலிஸார் உடனடியாக அங்கு வி்ரைந்து சிறுமியைப் பொறுப்பேற்றனர்.
பொலிஸாரின் விசாரணைகளின்போது அச்சிறுமி தெரிவித்தாவது, எனது பெயர் சுப்பிரமணியம் மல்காந்தி, நான் அம்மாவுடனும் தம்பியுடனும் கலவான குண்டல தோட்டத்தில் வசித்து வருகின்றேன். தந்தை இறந்துபோனார், அம்மா தோட்டத்தில் வேலை செய்து வருகின்றார். தோட்டத்தில் தொழில் செய்யும் நபர் ஒருவர் கெட்டவலயில் உள்ள வீடொன்றிற்கு அழைத்து வந்தார்.
வீட்டிலிருந்த எஜமானியான நோனா கடுப்பானவர். எந்தநேரமும் கோபத்துடனேயே காணப்படுவார். அவர் என்னை அடிக்கடி தும்புத்தடியாலும் தடிகளாலும், கைகளாலும் அடிப்பார். கொடூரமாக சித்திரவதை செய்வார். என்னை படிக்கவைக்கப் போவதாக கூறிய அவர்கள், வீட்டை கூட்டி பெருக்குவது, சமையல் பானைகள், பிங்கான் கோப்பைகளை சுத்தம் செய்வது, அடுப்பு எரிப்பது போன்ற வேலைகளையே செய்ய வைப்பார்கள்.
எனக்கு படுக்க பாய், தலையணை, விரிப்பு போர்வை எதுவுமே கிடையாது.
நான் தரம் ஒன்று மட்டுமே பாடசாலை சென்று கல்விகற்றேன். அவர்கள் பாடசாலைக்கு அனுப்புவதாகத் தெரிவித்தபோதும் அது குறித்து எவ்வித கவனமும் எடுக்கவில்லை. பொடியன் ஒருவனைத் தேடி எனக்கு கட்டிவைப்பதாக எல்லாம் தெரிவித்தார்கள் என அழுத வண்ணம் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்தார். அதேவேளை தோட்ட அதிகாரியின் மனைவியே தனது எஜமானி என்றும் தெரிவித்தார்.
இதனை யடுத்து தலாத்துஓயா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி உபேவங்சவின் ஆலோசனையின் பேரில் பொலிஸார் சந்தேகத்தின்பேரில் தோட்ட அதிகாரியின் மனைவியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-தினகரன் -

Friday, June 2, 2017

மண் சரிவு அபாயமுள்ள 1000 இடங்கள் பரிசோதனை


மண் சரிவு அபாயம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களை தொடர்பான பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு கூறியுள்ளது. 

பல மாவட்டங்களில் மண் சரிவு அபாயமுள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் மண் சரிவு ஆராய்ச்சி மற்றும் அபாய முகாமைத்துவ பணிப்பாளர் ஆர். எம்.எஸ். பண்டார கூறினார். 

பரிசோதனைக் குழு வரவில்லை எனக் கூறி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து வௌியேறாதிருப்பதை தவிர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

எங்கள் மீதுதான் தவறு; கிரகங்களில் இல்லை!

இலங்கை பொருளாதார மற்றும் சமூக ரீதியில் மேலுமொரு துயரத்திற்கு முகம் கொடுத்துள்ளது. வரட்சி, வெள்ளம், மற்றும் மண்சரிவு ஆகிய அனர்த்தங்கள் சாதாரண அனர்த்தங்களாக மாறி வருகின்றன. இற்றைக்கு இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் மண்சரிவு என்பது அபூர்வமாக இடம்பெறும் விடயமாகும்.
தவறு கிரகங்களில் இல்லை. எமது கைகளில்தான் என்று மகாகவி வில்லியம் ஷேக்ஸ்பியர் கூறியுள்ளார். அதேபோல் இந்த அனர்த்தங்களின் போது மனித நடவடிக்கைகளும் இணைந்துள்ளன. இது இலங்கைக்கு மாத்திரம் பொதுவானது அல்ல. ஆபிரிக்கா போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளிலும் வெள்ளம், மண்சரிவு என்பவற்றிற்கு மனித நடவடிக்கைகள் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்று அறிக்கைகள் கூறுகின்றன.
மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் பூமியை சுரண்டும் இந்நடவடிக்கைகளுக்கு அரசியல்வாதிகளும் ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள்.
2010-2011 பாகிஸ்தானில் இட ம்பெற்ற வெள்ளம் தொடர்பாக ஸ்டேன்பேர்ட் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதில் பாகிஸ்தானில் வெள்ள அனர்த்தத்திற்கு அரசியல்வாதிகளின் தொடர்பு இருந்ததென்று வெளியாகியுள்ளது.
அவ்வறிக்கை கூறுவது போல் இயற்கை அழிவு பட்டியலுக்கு எல்லாவற்றையும் உள்ளடக்கி விட்டு அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பதா அல்லது அதற்கெதிரான மனித நடவடிக்கை குறித்து எதிர்ப்பு தெரிவிப்பதற்கு சிவில் சமூகத்தினருக்கு உரிமை உள்ளது. இயற்கை அனர்த்தங்கள் தொடர்பாக சிவில் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அவ்வறிக்கை அபிவிருத்தி அடைந்து வரும் அனைத்து நாடுகளிடமும் கேட்டுள்ளது. அத்துடன் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் சமனான தன்மையையும் தெளிவுபடுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் 2010, 2011 ஆம் ஆண்டுகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை இருபது இலட்சமாகும் இறந்தோரின் எண்ணிக்கை 1800 தொடக்கம் 2000 வரையாகும். 1.7 மில்லியன் வரையான வீடுகள் அழிக்கப்பட்டன. நாட்டின் மலைப் பிரதேசத்துக்கு கிடைத்த அதிக பருவப் பெயர்ச்சி மழையே இவ்வெள்ளத்திற்குக் காரணமானது.
கைப்பர் பிரதேசத்திற்கு ஜுலை 28 தொடக்கம் ஒகஸ்ட் 03 வரையான காலப் பகுதியில் பெறப்பட்ட அதிக மழையுடன் ஆரம்பித்த வெள்ளம் பல பிரதேசங்களின் அடிப்ப​ைட வசதிகளை மாத்திரமல்ல, சாதாரண மக்களின் வாழ்வாதார தொழில் மற்றும் சமூதாய வாழ்க்கையையும் முற்றாக அழித்தது. நிலைமையை சீராக்க பெருமளவு வளங்கள் தேவைப்பட்டன.
ஐக்கிய நாடுகள் சபையினால் ஆரம்பிக்கப்பட்ட நிவாரண நிதிக்கு 1.79 பில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்தது. அதற்கு அமெரிக்க 30 வீத நிதியையும் சவூதி அரேபியாக 1.5 வீதத்தையும் தனியார் மற்றும் அமைப்புகள் 17.5 வீதத்தையும் அந்நிதிக்கு அளித்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.
இலங்கை வெளிநாட்டு அமைச்சும் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள தேசிய அனர்த்த நிலைமைக்கு உதவி செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பல்வேறு நாடுகளிடம் இருந்தும் தற்போது உதவிகள் கிடைத்த வண்ணம் உள்ளன. வெளிநாட்டு உதவிகளை முகாமைத்துவம் செய்வதற்காக வேறான பிரிவொன்றும் அமைக்கப்பட்டு வெளிநாட்டவர்களுடன் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.
அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் என்பன முதலில் உதவி செய்ய முன்வந்த நாடுகளாகும்.
இதுவரை வெள்ளத்தாலும் மண்சரிவாலும் இறந்தோர் எண்ணிக்கை 193 ஆகும். அதேபோல் காயமடைந்தோர் ஏராளம். 114124 குடும்பங்களைச் சேர்ந்த 442299 பேர் அனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளனர். பாதிப்புகள் தொடர்பாக இறுதி மதிப்பீடு மில்லியன் அளவில் அல்ல பில்லியன் அளவில் கணக்கிட வேண்டி வரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அனர்த்த நிவாரண பணிகளுக்காக அரசாங்கம் 45 மில்லியன் ரூபாவை ஒதுக்கி இருந்தது. அதனை தற்போது 150 மில்லியனாக அதிகரித்துள்ளது. இறந்தவர்களின் வாழ்க்கையை பணத்தினால் மதிப்பீடு செய்ய முடியாது. ஆனாலும் இறந்த ஒருவருக்காக பத்து இலட்சம் ரூபாவை நட்டஈடாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அவ்வாறு செய்ய வேண்டும் என்றால் அதிகளவு நிதி தேவை. உடைந்த வீடுகள் அனைத்துக்கும் புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்க அரசாங்கம் உறுதிமொழி அமைத்துள்ளது. மேற்கு, தெற்கு, மத்திய சப்ரகமுவ, கிழக்கு போன்ற மாகாணங்களின் அடிப்படை வசதிகள் அழிந்து போயுள்ளன. மாத்தறை மாவட்டத்தில் மின்விநியோகத்தை புனரமைக்க வேண்டியுள்ளது. கிராமப்புற பாதைகள், பாலங்கள், மதகுகள் மற்றும் சிறிய நீர்ப்பாசன குளங்கள் பாதிப்படைந்துள்ளன.
பொருளாதார பாதிப்பு:
மக்களின் சுகாதார நடவடிக்கைகளுக்கான கிணறு, குளம் கழிப்பறை ஆகியனவும் நீரும் மிகவும் அசுத்தமான நிலமையில் உள்ளன. அப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் நேரத்தில் இடைநடுவில் தடைப்பட்டிருக்கும் தொழில்கள் மற்றும் வருமானத்துக்கான வழிகளை பழைய நிலைமைக்கு கொண்டுவர வேண்டியுள்ளது.
பொருளாதார பயிர்ச்செய்கைக்கான நிலங்கள் மண்சரிவுக்கு உட்பட்டுள்ளது. (09ம் பக்கம் பார்க்க)
கருணாரத்ன அமரதுங்க

Thursday, June 1, 2017

மண்சரிவு அபாயம் - 60 பேர் வெளியேற்றம்


நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளாரண்டன் தோட்டத்தில் 31.05.2017 அன்று ஏற்பட்ட மண்சரிவில் ஒரு வீடு சேதமானதுடன் ஒரு லயன் குடியிருப்பை சேர்ந்த 60 பேர் வரை இடம்பெயர்ந்துள்ளனர். 

12 குடும்பங்கள் வசிக்கின்ற இந்த ஒரு லயன் குடியிருப்பில் மண்மேடு சரிந்து விழும் அபாயம் நிலவுவதனால் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர். 

இந் நிலையில் பாதுகாப்பு நலன் கருதி ஒரு லயன் குடியிருப்பை சேர்ந்த சுமார் 60 பேர் வரை அக்குடியிருப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு தோட்ட வெளிகல உத்தியோகத்தர் வீடுகளிலும், உறவினர்கள் வீடுகளிலும் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர்உணவு பொருட்களை வழங்குவதற்கு தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. 

கடந்த சில தினங்களாக நாடளாவிய ரீதியில் பெய்துவரும் அடைமழையினால் பேரழிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் நுவரெலியா மாவட்டத்திலும் அதிக காற்றுடன் அடை மழை பெய்து வருகின்றமை குறிப்பிடதக்கது.