Sunday, December 27, 2009

உழைப்புக்கு மரியாதை

வரலாற்றில் முதல் தடவையாக தோட்டத் தொழிலாளருக்கு சிலை

உயர்ந்த எண்ணங்களும் சிந்தனைகளும் எப்போதும் உயர்ந்த இடங்களில் இருந்து தோன்றுவதில்லை. எப்போதும் சாதாரண மக்களிடத்திலிருந்தே ஆச்சரியப்படத்தக்க சிந்தனைகள் தோன்றும் என்பார்கள்.

ஊண்மைதான் பலரும் நினைத்துப் பார்க்காத, ஆனால் வரவேற்கத்தக்க சிந்தனை சாதாரண தோட்ட மக்கள் மனதில் உதித்திருக்கிறது.

நாட்டின் முதுகெலும்புகள், தேசிய பொருளாதாரத்தின் ஆணி வேர்கள், ஆட்சியைத் தீர்மானிக்கும் கிங் மேக்கர்கள் என தோட்டத் தொழிலாளர்கள் பற்றி பல வார்த்தை ஜாலங்களுண்டு.

வர்ணனைகள் மட்டும் வாழ்க்கையாகி விடுமா? தோட்டத் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பான உழைப்புக்கு சமமான வருமானம் கிடைக்கிறதா? வாழ்க்கை வசதிகள் கிடைக்கிறதா? உழைப்புக்கேற்ற கௌரவம்தான் கிடைக்கிறதா? என்பது கேள்விக்குரியது.

தோட்டத் தொழிலாளர்கள் ஏணிகளாக இருந்து பலரை ஏற்றிவிட்டிருக்கிறார்கள். பலரை ஆட்சி பீடம் ஏற்றி அழகு பார்த்திருக்கிறார்கள். பலருக்கு சிலை வைத்திருக்கிறார்கள். முதல் தடவையாக தேயிலைத் தோட்டத் தொழிலாளரின் உழைப்புக்கு கௌரவம் வழங்கும் வகையில் தொழிலாளருக்கு சிலை அமைக்கும் எண்ணம் கெலிவத்தை தோட்டத் தொழிலாளர்கள் மனதில் உதித்திருக்கிறது.

தேயிலை உற்பத்தித் தொழிலை மேற்கொள்கின்றவர்களை வருடாந்தம் நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 15ம் திகதி சர்வதேச தேயிலை தினம் கடந்த ஐந்து வருடங்களாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. எனினும் இந்த தேயிலை தினம் தோட்டத் தொழிலாளர்களை முழுமையாக உள்ளடக்கி உள்ளது எனக் கூறுவதற்கில்லை. பரவலாகத் தேயிலைத் தொழிலாளர்கள் இத் தினம் பற்றி போதிய விளக்கமின்றியே உள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில் இவ்வருட தேயிலை தினம் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த தகவல்களை அறிந்த பத்தனை கெலிவத்தை தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் ஓர் உன்னத உணர்வு ஏற்பட்டது. இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக கடந்த 150 வருடங்களுக்கும் மேலாக பாடுபடுகின்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் முன்னோர்கள் உரிய முறையில் நினைவு கூரப்பட வேண்டும். இந்த மண்ணுக்கு உயிரையும் உடலையும் நீத்த எமது முன்னோர்களின் நினைவாக எமது தோட்டத்தில் தொழிலாளர் சிலைகளை ஏற்படுத்தினால் என்ன? என்பதுதான் அந்த எண்ணம்.

உடனடியாக இவ்விடயம் தொடர்பாக தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடினர். கேலிவத்தைத் தோட்ட தேயிலைத் தொழிற்சாலை முன்றலில் தொழிலாளர் சிலைகள் அமைக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். இவ்விடயம் தொடர்பாக தோட்ட அதிகாரியான மஹிந்த ரணவீரவின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். தொழிலாளர்களின் இந்தக் கோரிக்கை தொடர்பாகத் தோட்ட அதிகாரி தோட்டக் கம்பனியின் கவனத்துக்கு கொண்டு வந்தார். இதன் பின்பு கம்பனியின் சிலைகள் ஏற்படுத்துவதற்கான அனுமதியும் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து சர்வதேச தேயிலைத் தினத்தன்று தோட்ட அதிகாரியின் தலைமையில் தோட்டத் தொழிற்சாலையின் முன்றலில் சிலைகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆண், பெண் தொழிலாளர் உருவங்களைக் கொண்ட சிலையை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தன்று இந்தச் சிலையைத் திறந்து வைக்கவுள்ளதாகவும் இந்த உயரிய பணிக்கும் ஏனைய தோட்டத் தொழிலாளர்களும் உதவுவதற்கு முன்வரலாமென்று கெலிவத்தைத் தோட்டத் தொழிலாளியான மாரிமுத்து தெரிவித்தார். தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இத்தகைய சிந்தனைகள் போற்றுதற்குரியதாகும்.

சோ. ஸ்ரீதரன்

மலையகப்பார்வை

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் வறிய மாணவர்களுக்கு தனவந்தர்கள் உதவ வேண்டும்


இன்று மலையகப் பிரதேசங்களிலிருந்து க. பொ. த உயர்தரப் பரீட்சைகளில் கலை, வர்த்தகம், விஞ்ஞானம், கணிதம் ஆகிய பிரிவுகளிலிருந்து குறிப்பிடத்தக்களவு மாணவர்கள் வருடா வருடம் இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படுகின்றார்கள் என்பது மகிழ்ச்சியானதும் வரவேற்கத்தக்கதுமான விடயமாகும்.

உயர்தரப் பரீட்சைகளில் கலை, வர்த்தகம் ஆகிய துறைகளிலிருந்து ஓரளவு மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையானோர் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டாலும், சட்ட பீடத்திற்கும் முகாமைத்துவ பீடத்திற்கும் தெரிவாகும் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கப்படவில்லை. அதிகரிக்கின்ற எண்ணிக்கை உயர்தரப் பாடசாலைகளிலிருந்து ஒரு சில பாடசாலைகளைத் தவிர போதாதாக இருக்கின்றது. அதேவேளை விஞ்ஞானம், கணிதம் துறையிலும் பெருந்தோட்டப் பாடசாலைகளில் இருந்து மருத்துவம், பொறியியல் பீடங்களுக்கு தெரிவு செய்யப்படும் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கின்றது. இதுவரையும் எமது இலக்கை அடைய முடியாமல் உள்ளதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. ஆனால் இன்று பல்கலைக்கழகங்களில் மேற்கூறிய துறைகளுக்கு செல்ல முடியாத மாணவர்களுக்கு எத்தனையோ புதிய புதிய கற்கை நெறிகள் சகல பாடப் பிரிவுகளுக்கும் இருக்கின்றது என்பது வரவேற்கத் தக்க விடயமாகும்.

க. பொ. த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களில் ஒரு சிலர் குடும்ப வறுமை காரணமாக பல்கலைக்கழகத்திற்கு செல்ல முடியாமல் இருக்கின்றனர். இதில் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள், தோட்ட உத்தியோகத்தர்களின் பிள்ளைகள், குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளுமே மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறான குடும்பங்களிலுள்ள பிள்ளைகளினால் தொடர்ந்து பல்கலைக்கழக கல்வியை தொடர்வதற்கும், பல்கலைக்கழகங்களில் காணப்படும் செலவுகளை (உணவு, விடுதி, போக்குவரத்து, இதர செலவுகள், போன்றவற்றை சமாளிக்க முடியாமல் எத்தனையோ ஏழை மாணவர்கள் கஷ்டப்படுவதோடு, இதில் ஒரு சில மாணவர்கள் பல்கலைக்கழக கல்வி வாய்ப்பு கிடைத்தும் கூட வசதி இல்லாததற்கு தொடர்ந்து படிக்காமல் இடை நடுவே பல்கலைக்கழக கல்வியை விட்டு விலகி விடுவதோடு, ஏதாவது ஒரு வேலைக்கு செல்வதையும் காணக்கூடியதாக உள்ளது. சிலருக்கு பல்கலைக்கழக வாய்ப்பு கிடைத்தும் கூட செல்லாமல் இருப்பதை சாதாரணமாகஎ அவதானிக்கலாம்.

ஒரு பக்கத்தில் பல்கலைக்கழக அனுமதியை மலையகம் அதிகரிக்க வேண்டும் என கோசம் போடுகின்றோம் அது வரவேற்கத்தக்க விடயமாகும். நிச்சயமாக மலையகத்திலிருந்து ஒரு வருடத்திற்கு 500 இற்கு மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குச் சென்றும் படிக்க வேண்டும். இதற்கு யாரும் தடைபோட மாட்டார்கள். ஆனால் இதற்கான வேலைத் திட்டங்கள் எந்தளவிற்கு வெற்றிகரமாக செயற்படுத்தப்படுகிறது? என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

இப்பிரச்சினைகள் இருந்தபோதும் கூட வறுமையில் இருக்கும் மாணவர்கள் சித்தி பெற்றாலும் அவர்களுக்கு தொடர்ந்து படிக்கின்ற, படிக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது யாருடைய பொறுப்பும் கடமையும் ஆகும்.

இவ்வாறு சித்திப் பெற்ற மாணவர்களின் தகவல்களைத் திரட்டுவதற்கு முயற்சிக்க வேண்டும். இதன் பின் இவர்களுடைய பல்கலைக்கழக செலவிற்காக ஒரு தொகைப் பணத்தை எமது சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும், அரசியல்வாதிகள், தொழிற்சங்க வாதிகள், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பிரதேச சபை, மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், தனவந்தர்கள், செல்வந்தர்கள், வர்த்தகர்கள், நலன் விரும்பிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் பழைய மாணவர்கள், கல்வி மன்றங்கள், சமூக நிறுவனங்கள், விளையாட்டுக் கழகங்கள், லயன்ஸ்கழகங்கள், ரோட்டரி கழகங்கள், பொதுமக்கள், தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள், அரச தனியார் வங்கிகள், கோயில்கள், ஆலயங்கள், பள்ளிவாசல்கள், போன்ற பல்வேறு தனிநபர்களும், அமைப்புக் களும், நிறுவனங்களும் ஏதோ ஒரு வகையில் இச்சமூகத்தில் படிக்க வசதியில்லாத மாணவர்களுக்கு உதவி செய்ய முன்வரவேண்டும். குறிப்பாக கூடுதலான புலமைப் பரிசில்களை இவர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதோடு தனவந்தர்கள், இவ்வாறான மாணவர்களைத் தத்தெடுக்க வேண்டும். இவ்வாறு ஏனைய மாணவர்களுக்கு உதவிச் செய்வதன் மூலம் எமது மலையகச் சமூகத்தில் இருந்து இன்று இருப்பவர்களை விட மேலும் பல பட்டதாரிகள், வழக்கறிஞர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், இன்னும் பலதுறைப் சார்ந்தவர்களையும் உருவாக்க முடியும். இவ்வாறானவர்கள் எமது சமூகத்தில் உருவாகும்போதே ஒரு சமூகம் விழிப்படையும்.

ஒரு சமுகத்தின் விடியலுக்கு கல்விதான் அடித்தளம் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே பெருந்தோட்டச் சமூகத்திலிருந்து சென்று நல்லத் தொழில், வசதி வாய்ப்புக்களோடு இருக்கின்ற நபர்கள், 10 பேர் ஒரு குழுவாகச் சேர்ந்து ஒரு பல்கலைக்கழக மாணவனை தத்தெடுத்து அவரை தொடர்ச்சியாகப் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு உதவி செய்வதன் மூலம் எத்தனையோ வசதி குறைந்த மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்க முடியும்.

இன்று இலங்கையிலுள்ள பல பல்கலைக்கழகங்களில் மலையகச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஏதோ ஒரு கற்கை நெறியில் படிக்கின்றார்கள்.

இவர்களில் சிலர் தொடர்ந்து படிப்பதற்கு வசதியில்லாத சந்தர்ப்பத்தில் இடை நடுவில் பல்கலைக்கழக கல்வியை விட்டுவிட்டு தொழிலுக்கு சென்றுவிடுகின்றார்கள். இதனால் குறிப்பிட்டக் காலத்தில் படித்து பட்டம் பெறுவதும் தடைப்படுவதோடு வாழ்க்கையில் எதிர்பார்த்த எத்தனையோ கனவுகளும் உடைந்து சுக்கு நூறாகிப் போகின்றது. எனவே இவ்வாறு பல்கலைக்கழகங்களிலும் பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்து இருக்கும் வறிய மாணவர்களையும் இனம் கண்டு உதவி செய்ய முன்வர வேண்டும்.

இரா. சிவலிங்கம்... -