Wednesday, April 27, 2011

மலையகப் பெண்களின் வாழ்வாதாரப் பிரச்சினை உணர்த்தும் உண்மைகள்

இலங்கையில் பெண்களுள் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மலையகப் பெருந்தோட்ட பெண்களின் பெண்ணியம் சார்ந்த நிலைப்பாடு எவ்வாறு உள்ளது என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். அதற்காக அவர்களது சமூக அரசியல் பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கை முறையினை நாம் சற்று நோக்கி பார்ப்பது அவசியமானதாகும்.

இலங்கையின் பொருளாதாரத்தில் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும்; பெருந்தோட்டத் துறை உற்பத்தியான தேயிலையினை பெற்றுத் தரும் தொழிளாளர்களுள் 65 சதவீதமானவர்கள் மலையகப் பெண்களே. 1960ன் பிறகு 1990 வரை இலங்கையின் வருமானத்தில் 63 சதவீதமான வருமானத்தை ஈற்றித் தந்தவர்கள் இந்தப் மலையகப் பெண்கள எனக் கூறலாம். அந்த வகையில் மாறிவரும் உலகில் இந்த வருமானத்துறை வீழ்ச்சியடைந்தாலும் பெருந்தோட்டத் துறைப் பொருளாதாரம் இன்று வரை நிலைத்திருப்பதன் காரண கர்த்தாக்களாக மலையகப் பெண்கள் உள்ளனர் என்றால் அது மிகையில்லை. ஆனால் இவர்களது வாழ்க்கையோ முற்கள் நிறைந்த காடுகளாய் காணப்படுகின்றது.

சர்வதேச ரீதியில் காணப்படும் பெண்களின் கல்வி, சமூக, அரசியல் சமய நிலையுடன் ஒப்பிடும் போது சகல துறையிலும் பின் தங்கிய நிலையில் இருப்பவர்கள் மலையக பெண்கள் என்று அடித்து கூறலாம். ஆரம்ப காலங்களை விட சமகால சூழ்நிலை ஓரளவு மாற்றமடைந்து இவர்களது வாழ்க்கையில் முன்னேற்றமான ஒரு போக்கு காணப்பட்டாலும் ஏனைய சமூக பெண்ணின் அடிப்படையான வளர்ச்சி வேகத்துடன் ஒப்பிடும் போது இவர்களது இந்த முன்னேற்றப் பாதை திருப்திகரமானதாக இல்லை. என்பதை ஏற்றுக் கொண்டு தான் வேண்டும்.

போதியளவு கல்வியறிவு இல்லாத இப்பெண்கள் தனக்கான சுதந்திரம் உரிமைகளைக் கூட தெரியாமலேயே வாழ்ந்து வந்துள்ளனர். பிறக்கும் குழந்தைகளுக்கு கூட பிறப்புச் சான்றிதழ் எடுப்பதந்கு தவறி விடுகின்றனர் என்றால் அதுவும் பொய் அல்ல என்பதற்கு சான்றாக அண்மையில் மலையகத்தின் நடமாடும் சேவையின்போது பிறப்புச்சான்றிதழ்; தேசிய அடையாள அட்டை இல்லாதோரே அதிக அளவில்; காணக்கூடியதாக இருந்தது. ஆதனால் சிலர் தனது ஓய்வூதியத்தைக்கூட பெறமுடியாமல தவிக்கின்றார்கள் அல்லது எடுக்காமலேயே மறணித்தும் போகின்றார்கள் என்றால் அதையும் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும். இது ஆண்களையும் சார்ந்த ஓர் நிகழ்வும் கூட.

தனக்கென மரபு ரீதியான மூட நம்பிக்கையூடான ஒரு சமூதாய கட்டுப்பாட்டினை கொண்டு வாழ்கின்ற இப்பெண்களில் நூற்றுக்கு 20 சத வீதமானவர்களே தனது உரிமை தொடர்பான அக்கறை கொள்பவர்களாக இருக்கின்றனர். இதற்கான காரணம் வறுமை. விழிப்புணர்வான கல்வி, அறிவு, வலிமை என்பவற்றை ஆண் சமூகத்திடம் அடகு வைத்தவர்களாகவே இப் பெண்கள் காணப் பட்டாலும் அண்மைக் காலமாக இந்த பெண்களின் வாழ்வாதாரம், வாழ்க்கை முறை சற்று மாற்றமடைந்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் பெருந்தோட்டத்துறை பெண்கள் தேயிலை பறிக்கும் வேலை விட்டு கல்வியில் ஆர்வம் காட்டுவதும் சுய தொழிலினை செய்வதற்கு வெளிப்பிரதேசங்களுக்கு செல்வதும் ஆகும்.

எனவே அரசின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்திட்டங்களைப் பாராட்டியே ஆக வேண்டும். இருந்த போதும் இந்த பெண்களின் சமூக கட்டமைப்பு சார்ந்த வாழ்க்கையில் குறிப்பிடுமளவில்; முன்னேற்றமடையவில்லை என்பதே எனது கருத்து.

இந்த பெண்களுக்கு, பெண்ணியம் பேசும் சர்வதேச அமைப்புக்கள்; வழங்கிவரும் சேவைகள் பூரணமாக சேர்வதை எதிர்காலத்தில் உறுதிப்படுத்த வேண்டிய தேவைப்பாடு உள்ளது. இல்லையேல் மாறி வரும் நவீன யுக உலகில் ஒரு அடிமைப்பட்ட பெண் சமூகம் இருப்பதனை மாற்ற முடியாமல் போய் விடும். மலையக பெண்களின் மகிமையை உழைப்பால் மட்டுமல்லாது பண்பாடுஇ கல்விஇ கலாசாரத்திலும் பேசப்பட வேண்டும் அதுவே இலங்கைக்கும் வெற்றி. –
ரேணுகாதாஸ்

நன்றி- வீரகேசரி

கினிகத்தேனை லொறி விபத்தில் ஒருவர் பலி, இருவர் படுகாயம்

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அட்டன் - கினிகத்தேனை பிரதான பாதையில் கடவத்தை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு அருகில் 27-04-2011 அதிகாலை 1.10 மணியளவில் சுமார் 150 அடி பள்ளத்தில் லொறி ஒன்று விழுந்ததில் ஒருவர் பலியானதுடன் இருவர் படுகாயத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

அக்கரப்பத்தனை பகுதியிலிருந்து மரக்கறி வகைகளை ஏற்றி வந்த இந்த லொறி பாதையை விட்டு விலகி பள்ளத்தில் புரண்டுள்ளது. இதன் பின்பு அயலவர்கள் கினிகத்தேனை பொலிஸாருடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்ட போது படுகாயமடைந்த நிலையிலிருந்த மூவரை மீட்டு கினிகத்தேனை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். அக்கரப்பத்தனையைச் சேர்ந்த 31 வயதுடைய முருகையா ஜெயரத்னம் என்பவரே உயிரிழந்தவராவார். படுகாயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் கினிகத்தேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Monday, April 11, 2011

புதிய கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளரின் அடிப்படைச் சம்பளத்தை 500 ரூபாவாக உயர்த்தவும்


புதிதாக செய்து கொள்ளப்படவுள்ள கூட்டு ஒப்பந்தத்தில் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 500 ரூபாவாக உயர்த்துவது உட்பட பல கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்று தமது தொழிற்சங்கத்தால் அண்மையில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்
அவற்றை சாதகமாக பரிசீலிப்பதாக ஜனாதிபதியின் தொழில் உறவுகள் செயலாளர் ஹேமசிறி ஜயலத் கடிதம் மூலம் தமக்கு அறிவித்திருப்பதாகவும் விவசாய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்தற்போது தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 285 ரூபாவும் மாதத்தில் 75 சதவீதத்திற்கு அதிகமாக வேலை செய்தால் மேலதிகமாக வழங்கப்படும் 90 ரூபா மற்றும் 16 கிலோவுக்கு அதிகமாக பறிக்கப்படும் கொழுந்துக்காக வழங்கப்படும் 30 ரூபா என்பன போதுமானவையாக இல்லை.அத்துடன் 405 ரூபா சம்பளத்தை பெரும்பாலான தொழிலாளர்கள் முழுமையாக பெறுவதில்லை.தற்போது ஊ.சே.நி.,ஊ.ந.நி என்பன 285 ரூபா சம்பளத்திற்கே கணிக்கப்படுகின்றது.

அத்துடன் தொழிலாளர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மானிய முறையில் பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.சம்பள நிர்ணய சபையால் நிறுத்தப்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும்.அவர்களின் அடிப்படைச் சம்பளம் 500 ரூபாவாக நிர்ணயிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை எமது சங்கம் முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதியின் தொழிற்சங்க தொழிலுறவுகள் செயலாளர் ஊடாக தோட்டக் கைத்தொழில் அமைச்சருக்கும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் தொழிலமைச்சருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒடுக்குமுறைச் சட்டங்களும் மலையக மக்களின் அவலநிலையும்



பல வருடங்களாக மாறி மாறிவரும் சிங்கள ஆட்சியாளர்களினால் அதிகாரம் செலுத்துவதற்கானஊன்றுகோலாக இச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது.வெள்ள அனர்த்தத்தினால் கிழக்கு மாகாண மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டாலும் அவர்களின் இயல்பு வாழ்வு திரும்பாத நிலையில் தேடுதல் வேட்டை என்கிற போர்வையில் அவல வாழ்க்கையே அங்கும் தொடர்கின்றது.

ஒரு தேசத்தின் இறைமை, அதன் உரித்துடைமை, Popular Sovereignty அங்கு வாழும் மக்களிடமே உள்ளது என்கிற கோட்பாட்டின் அடிப்படையை மறுக்கும் வகையில் அவசரகாலச் சட்டம் ஊடாக ஆட்சியதிகாரத்தை தக்க வைக்கிறது அரசு.
இதனைக் கருத்தில் கொள்ளாத உலக நாடுகள், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 8 வீதத்தை தாண்டும் அடுத்த வருடம் 10 வீதத்தை அடையும் என்கிற வகையில் பொருளாதாரப் புள்ளி விபரங்களை வெளியிட்டு அனைத்துலக நாணயச் சபை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியூடாக அவசரகாலச் சட்ட ஆட்சிக்கு முண்டு கொடுக்கின்றன.

பண வீக்கத்தை குறைத்து வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (Foriegn Direct Investment) வரவழைத்தால் நாட்டின் தலைக்குரிய வருமானம் (Income per Capital) அதிகரித்து நாட்டில் வளம் கொழிக்குமென அறிவுரை வழங்குகிறது ஆசிய அபிவிருத்தி வங்கி.

Stand by Arrangement (SBA என்கிற திட்டத்தின் கீழ் இலங்கையில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுவதால் 2188.3 மில்லியன் டொலர் மேலதிக கடனுதவியை வழங்கவிருப்பதாக அனைத்துலக நாணய நிதியம் கடந்த 4 ஆம் திகதி அறிவித்துள்ளது.
ஆகவே உடன்பாடு காணப்பட்ட 2.6 பில்லியன் கடனளிப்பில் ஏறத்தாழ 1.75 பில்லியன் டொலர்களை அந் நிதி நிறுவனம் வழங்கியுள்ளதெனலாம்.

இந்நிலையில் 2010 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் பொருளாதார செயற்பாடுகள் குறித்து பல தரவுகளை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.அண்ணளவாக இலங்கையின் உள்ளூர் மொத்த உற்பத்தி (Gross Domestic Product) $49.55 பில்லியன் டொலராக இருக்கும் அதேவேளை, வருடாந்த பொருண்மிய வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கலாமெனக் கூறுகின்றது.

இதில் விவசாயத் துறையானது உள்ளூர் மொத்த உற்பத்தியில் 11 சதவீதமாகவும் (அரிசி, தேயிலை, இறப்பர், தெங்குப் பொருள் என்பன முக்கியமானவை) சேவைத் துறை 59 சதவீதமாகவும் (உல்லாசப் பயணத்துறை, போக்குவரத்து, தொலைத்தொடர்புத்துறை, நிதி நிர்வாகச் சேவை உட்பட) கைத்தொழில் துறை 29 சதவீதமாகவும் (முக்கியமாக ஆடை உற்பத்தி, பதனிடப்பட்ட தோல் பொருட்கள் இறப்பர்) இருப்பதாக அந்தப் புள்ளி விபரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.8.3 பில்லியன் டொலராக இருக்கும் வர்த்தக ஏற்றுமதியில் தேயிலை, ஆடை, இறப்பர், இரத்தினக் கற்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலியப் பொருட்கள் உள்ளடங்குகின்றன.

இதில் இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்தில் முக்கிய சந்தைகளாக அமெரிக்கா (1.77 பில்லியன் டொலர்) பிரித்தானியா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் விளங்குவதோடு 13.5 பில்லியன் பெறுமதியான இறக்குமதியில் இந்தியா, சிங்கப்பூர், ஹொங்கொங், சீனா, ஈரான், மலேசியா, ஜப்பான், பிரித்தானியா, தென் கொரியா மற்றும் அமெரிக்கா (178 மில்லியன் டொலர்) போன்றவை முக்கிய நாடுகளாக குறிப்பிடப்படுகின்றன.ஆகவே வர்த்தகப் பற்றாக்குறை, ஐரோப்பிய நாடுகள் போன்று இலங்கையையும் வாட்டுவதை இப்புள்ளி விபரங்கள் புலப்படுத்துகின்றன.

உள்ளூர் மொத்த உற்பத்தியில் 29 விழுக்காட்டினுள் அடங்கும். ஆடை உற்பத்தியானது, ஐரோப்பிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஜீ.எஸ்.பி. வரிச் சலுகைத் தடையால் பாதிப்புறும் அதேவேளை, பெருந்தோட்ட பயிர் செய்கையினால் பெறப்படும் தேயிலை, இறப்பர் போன்றவற்றிற்கான சந்தைப் போட்டியினால் 11 விழுக்காட்டினைக் கொண்டிருக்கும் இத் துறையும் பாதிப்படைகிறது.

உல்லாசப் பயணத்துறையில் மற்றும் பெருந்தோட்ட உற்பத்தித் துறையில் தற்போது பெருமளவில் தங்கியுள்ள இலங்கைப் பொருளாதாரம், வெளிநாட்டு முதலீடுகளைத் தேடி அலைகிறது.மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சிகள், எண்ணெய் வளத்தை பங்கு போட அணு ஆயுத வல்லரசுகளின் ஊடாக பன்னாட்டுக் கம்பனிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் எரிவாயுச் சிலிண்டர்களின் விலையை மட்டுமல்லாது, இறக்குமதியாகும். உணவு பண்டங்களின் விலையையும் உயர்த்திவிடும்.

ஆகவே பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறும் ஆட்சியாளர்கள், மேற்கு நாடுகளின் நேரடி முதலீடுகளையே அதிகம் எதிர்பார்க்கின்றார்கள்.

இந்நிலையில் தோட்டத் தொழிலாளர் தரப்பிலிருந்து சம்பள உயர்வு கோரி, இலங்கை அரசிற்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுவதை கவனிக்க வேண்டும்.

2009 மார்ச் 31 ஆம் திகதியன்று முதலாளிமாருக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையே தினச் சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவாக 405 ரூபாய் வழங்கப்படுமென்ற கூட்டு ஒப்பந்தம் (ஊழடடநஉவiஎந யுபசநநஅநவெ) உருவாக்கப்பட்டது.

அதேவேளை, தற்போது நடைபெறும் சம்பள உயர்விற்கான பேச்சுவார்த்தைகள் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பித்து செப்டம்பர் வரை இழுத்தடிக்கப்பட்டு தீபாவளிக்கு “போனஸ்’ வழங்கும் நிகழ்வோடு இனிதே முற்றுப் பெறும் என்கிற கடந்த கால கசப்பான அனுபவங்களை ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் விளக்கமாக எடுத்துக் கூறுகின்றார். 6 மாதங்களாக நடைபெறும் சம்பள உயர்வுப் போராட்டங்களும் தீபாவளிக் கொடுப்பனவோடு மறைந்து விடுமென்பதே உண்மை.

தோட்ட முதலாளிமார் தொழிற்சங்கங்களுக்கிடையே நிகழ்ந்த இந்த வார சந்திப்பு, வருகிற 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை ஆர்.யோகராஜன், பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் செயலாளர் லலித் ஒபயசேகரா ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதேவேளை நிபந்தனையற்ற அடிப்படைச் சம்பளம் ரூ 500 ஆகவும் ஊக்குவிப்பு கொடுப்பனவு ரூ. 250 ஆக மொத்த நாட் சம்பளம் ரூ. 750 வை ஏன் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க முடியாதென மனோ கணேசன் முன்வைக்கும் கருத்தில் நியாயம் இருப்பதாகவே தென்படுகிறது.

சம்பள உயர்வினைக் கேட்டால், கம்பனிகள் நட்டத்தில் இயங்குவதாக வியாக்கியானம் செய்யும் தோட்ட முதலாளிமார், தொழிலாளர் மத்தியில் வறுமை அகன்று வாழ்வில் வளம் ஏற்பட்டுள்ளதாக பொய் உரைக்க ஆரம்பித்து விடுவார்கள்.
உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், மிகக் குறைந்த இலாபத்தில் ஏற்றுமதி நிறுவனத்திற்கு தேயிலையை விற்பனை செய்து, தொழிற்சங்கங்களுக்கு நட்டக் கணக்கைக் காட்டுவது முதலாளித்துவ உற்பத்தி உறவு முறையில் வழமையான விடயமே.
அந்த உற்பத்திப் பண்டம், தரகு முதலாளிகள் ஊடாக பன்னாட்டு ஏற்றுமதி நிறுவனத்திற்கு விற்கப்பட்டு இதே தேயிலை பெரும் இலாபத்தில் ஏற்றுமதி நிறுவனத்தினால் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த முதலாளிமார் பேச்சுவார்த்தைகளின் போது எத்தனை மில்லியன் டொலர் வருமானம், இத் தேயிலை ஏற்றுமதியால் அரசிற்கு அந்நியச் செலவாணியாகக் கிடைக்கிறது என்பதனை தோட்டத் தொழிற்சங்கங்களுக்கு எடுத்துக் கூற மறந்து விடுவார்கள்.
அதேவேளை, தொழிலாளர் சங்கங்களும் முதலாளிமாரோடு சமரசப் போக்கில் நகர்ந்து கடும் குளிரிலும் வெய்யிலிலும் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளை தட்டி விட்டு கடுமையான உழைக்கும் அந்த அற்புதமான மனிதர்களுக்கு உண்மை நிலைவரத்தைச் சொல்வதில்லை என்பதுதான் வேதனையான விடயம்.

உழைக்கும் வர்க்கம், அவர்களுக்கான நியாயமான ஊதியத்தை பெறும் உரிமையுடையவர்கள் என்கிற அடிப்படை ஜனநாயகத்தைப் புரிய வைக்க வேண்டிய அவசியம் மக்கள் அமைப்புகளுக்கும் ஊடகங்களுக்கும் உண்டு.
வட, கிழக்கில் மட்டுமல்லாது, மலையகத்திலும் தமிழ் பேசும் இனமானது பல்வேறு பரிமாணங்களில் அரச ஒடுக்கு முறைக்கு உள்ளாகி வருவதைத் தமிழர் தலைமைகள் புரிந்து கொள்வது நன்று.

உழைப்புச் சுரண்டலாலும் திட்டமிட்ட குடியேற்றங்களாலும் அதிகாரமற்ற பொம்மைச் சபைகளாலும் பாதுகாப்பற்ற சூழலாலும் தமிழ் பேசும் மக்கள் அடக்கப்படுவதை இனியாவது உலகிற்கு எடுத்துக் கூற ஜனநாயக விரும்பிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் முன்வர வேண்டும்.

-இதயச்சந்திரன்