வாக்குகள் சிதறாதிருக்க வழிசமைப்போம்
எந்தவொரு நாட்டிலும் பொது நிர்வாக கட்டமைப்பு மிக முக்கியமானது. இந்த நிர்வாகத்தை நாம் அரசு என்று அழைக்கின்றோம். இந்த அரசை முன்பு நடத்தியவர்களை அரசர்கள் என்று அழைக்கின்றனர். அரசர்கள் நாட்டை ஆண்ட காலத்தை முடியாட்சி எனவும், ஆங்கிலேயர் ஆண்ட காலத்தை காலனித்துவ ஆட்சி என்றும் மக்கள் தங்களுக்கான தலைவர்களை தேர்ந்தெடுத்து தம்மை ஆளச் செய்யும் முறைமை மக்களாட்சி என்றும் கூறுகின்றோம்.
இந்த மக்களாட்சியில் மிக பிரதானமான ஆட்சியே உள்ளுராட்சி என்பது இது மக்கள் தாம் வாழ்கின்ற பிரதேசத்தை அபிவிருத்தி செய்து கொள்வதற்காக தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யும் ஒரு முறை என்பதோடு எப்போதும் தம்மோடு வாழும் ஒரு நபரை குறிப்பாகத் தமது பிரதேசத்தில் தமக்காக சேவை செய்யக்கூடிய ஒருவரை தெரிவு செய்வதே ஆகும். இலங்கையை பொறுத்தவரை உள்ள ஆட்சி மட்டங்களை நாம் பார்ப்போமேயானால் அரசியல் நிர்வாகத்தினை இலகுபடுத்தி மக்களுக்கு சிறந்த சேவையை ஆற்றுவதற்கு மத்தி;ய அரசாங்கத்தில் உள்ள ஜனாதிபதி, அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தைத் தவிர இரு அரசியல் சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவையாவன. மாகாணசபைகள் உள்ளுராட்சி மன்றங்கள். ஆகவே மாகாண சபையானது நடைமுறையில் உள்ள யாப்பிற்கு 1987ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தின் விளைவாகத் தோற்றம் பெற்ற ஒன்றாகும். உள்ளுர் ஆட்சி மன்றங்கள் 1930களின் பின்னர் படிப்படியாக வளர்ந்த நிறுவன கட்டமைப்பாகவும் பேசப்படுகின்றது.
இலங்கையில் 09 மாகாணசபைகள் மாவட்டங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மத்திய மாகாணசபை கண்டி, மாத்தளை நுவரெலியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றங்களை எடுத்துக் கொண்டால் அதில் மூன்று அமைப்புக்களாக நாம் பார்க்கலாம். 01. மாநகரசபை, 02. நகரசபை, 03 பிரதேசசபை. இதில் மாநகரசபை என்பது பெரிய நகரங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அமைப்பாகும்.
இவைகள் நகரம் சார்ந்த கிராம சேவகர் பிரிவுகள் பலவற்றை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டதாகும். நகரசபை என்பது சிறு நகரங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். எனவே பிரதேச சபைகளும் கிராம சேவகர் பிரிவுகள் பலவற்றினை ஒன்றாக்கி உருவாக்கப்பட்ட பிரதேசசபைகளை எடுத்துக் கொண்டால் அம்பகமுவ, லிந்துல, நுவரெலியா, கொத்மலை, உடபலாத்த, போன்ற பிரதேச சபைகளை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
பிரதேச சபைகள் பற்றியும் அதன் சேவைகள் பற்றியும் ஆராய்வோமானால் முன்பு குறிப்பிட்டது போலவே இலங்கையில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களில் ஒன்றான இம் மன்றம் 1987ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 15ம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டதாகும். ஏனைய எல்லா உள்ளுராட்சி மன்றங்களையும் விட இச் சபை மக்களுக்கு மிகவும் அண்மையில் உள்ள அரசியல் நிறுவனமாகும்.
பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டதன் நோக்கங்களில் பிரதானமானது யாதெனில் பிரதேசததில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்வதோடு அவ்வகையில் பிரசே சபையானது பிரசே சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு உட்பட்ட பிரஜைகளின் தேவைகளையும், பெற்றுக்கொடுக்க கடமைப்பட்டுள்ளது என்பதேயாகும்.
அத்துடன் பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பிரதேசசபைகளுக்கிடையில் வேறுபடலாம். அது தேர்தல்கள் ஆணையகத்தினால் பிரதேச சபைக்கு உட்பட்ட மக்களின் எண்ணிக்கை மற்றும் நிலப்பரப்பு என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றது.
பாராளுமன்றம் அல்லது மாகாண சபையில் இருப்பது போன்ற பிரதேச சபைகளில எதிர்க்டசி என்று ஒன்று இருப்பதில்லை. மாறாக எல்லோரும் இணைந்து தமது பிரதேச மக்களுக்கு சேவைகளை செய்ய வேண்டும் என்பதே பிரதேச சபையினூடாக எதிர்பார்க்கப்பட்டதாகும். மக்கள் இச்சபைக்காக வாக்களித்த போதிலும் வெற்றி பெற்ற கட்சியின் அதிக விருப்பு வாக்குகளை பெற்றவர் தலைவராக வருவதோடு சில சமயங்களில் தலைவர் யார் என்பதை வெற்றி பெற்ற அரசியல் கட்சியே தீர்மானிக்கின்ற நிலையும் ஏற்படுகின்றது.
இம்முறை 06-01-2011 அன்று வெளிவந்த 1687 இலக்க வர்த்தமானி அறிவித்தலின்படி 4 மாநகர சபைகள், 39 நகரசபைகள், 258 பிரதேச சபைகளுக்கான 301 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் மார்ச் மாதம் 17ம் திகதி 2009ம் ஆண்டு தேர்தல் சட்ட விதிகளுக்கமைவாகவே தேர்தல்கள் நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் அமோகமாக நடைபெற்றுக்கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது. பல்வேறு சுயேட்சைக் குழுக்களும் அரசியல் கட்சிகளும் கணிசமான அளவு தேர்தலில் போட்டியிட களம் இறங்கிய போதிலும் மலையக தமிழர் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களும் எவ்வித ஒற்றுமையும் இன்றி மக்களிடம் தங்களுக்கு வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் செயற்பட்டு வருகின்றனர். சிலர் தங்களுது குடும்பங்களை மையமாகவும், சொந்தங்கள் மட்டும் தமக்கு வாக்களித்தால் போதும் என்ற அடிப்படையில் இயங்குகனிறனர். இதனால் வாக்குகள் சிதறடிக்கப்படுமே தவிர இறுதியில் யாருமே வெற்றிபெற முடியாமல் போகும் அபாய நிலையே அதிகம் காணப்படுகிறது.
ஏலவே பிரதேச சபையின் 33வது சரத்திற்கமைய தோட்டக் குடியிருப்புக்கள் மற்றும் நிலப்பிரதேசம் பிரதேச சபைக்கு உள்வாங்கப்படாமையினால் பிரதேச சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தோட்ட மக்களுக்கு சென்றடைவதில் தடை எற்பட்டிருக்கின்றது. தொடர்ந்தும் தோட்ட மக்கள் வாக்களிக்கும் இயந்திரங்களாக மட்டுமே வாழும் நிலையில் எதிர்வரும் தேர்தலில் பிரதிநிதிகளை தெரிவு செய்வதில் ஏதும் நம்மை உண்டா என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தடுமாற்றத்துடன் இருக்கின்றனர்.
சில தோட்டங்களில் வேட்பாளர்கள் சென்று தங்களுக்கு வாக்களிக்கும்படி கேட்டபோது இம் முறை தேர்தலை பகிஷ்கரிக்கப்ப போவதாகவும் கூறியுள்ளனர். காரணம் இத் தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் தமக்கு எந்த நன்மையும் கிட்ட போவதில்லை என்பதனால். எனவே இவ்விடயத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேரடியாக தனது கவனத்தை செலுத்தி 33வது பிரதேச சபை சரத்தை பற்றி பரிசீலித்து மலையக மக்களையும் அவர் தம் அபிவிருத்தயின் பங்காளர்களாக மாற்ற வேண்டும் என்பது மக்களின எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இந்த 33வது சட்டத் திருத்தம் தொடர்பாக மலையகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளும் இதற்கான ஆதரவை வழங்குவதன் மூலம் மலையக மக்களையும் தேசிய நீரோட்டத்தில் கலக்கச் செய்ய முடியும் என்பது உறுதி
சந்தனம் சத்தியானந்தன்
நன்றி - வீரகேசரி
No comments:
Post a Comment