பாடசாலைகள், வணக்கஸ்தலங்கள் அருகில் அமைந்துள்ள மதுபான நிலையங்கள் அகற்றப்படும் - ஆறுமுகன் தொண்டமான்
மலையகத்தில் வணக்கஸ்தலங்கள், பாடசாலைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையங்கள் தொடர்பில் தமக்கு இரண்டு வார காலத்திற்குள் அறிக்கை சமர்பிக்குமாறு நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழு கூட்டத்தில் ஆறுமுகன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான விடுத்த கோரிக்கைக்கு கருத்து தெரிவித்துள்ள ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் வணக்கஸ்தலங்கள், பாடசாலைகளுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் அகற்றும் நடவடிக்கையை அமைச்சர் முன்னெடுப்பாரானால் அதை வரவேற்பதுடன் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தாம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
அவர் மேலும் அங்கு தெரிவிக்கையில் 32 வீதம் இலங்கையின் வறுமை நிலையியில் நுவரெலியா மாவட்டம் முதலிடத்தை வகிப்பது போலவே மதுபாவனையிலும் நுவரெலியா மாவட்டம் முதலிடத்தை வகிக்கிறது. இந்த இரண்டு விடயத்திற்கும் நேரடி சம்பந்தம் இருக்கிறது.
வணக்கஸ்தலங்களுக்கும், பாடசாலைகளுக்கும் அருகாமையில் மதுச்சாலைகளும், மது விற்பனை நிலையங்களும் அமைக்கப்படக்கூடாது என சட்டம் கூறுகின்றது. ஆனால் இச்சட்டம் நுவரெலியா மாட்டத்திலே மீறப்பட்டுள்ளது.
பெருந்தொகையான மதுபான விற்பனை நிலையங்கள், மதுபானசாலைகள் மலையகத்தின் தொழிற்சங்கவாதிகளாலும், அரசியல்வாதிகளாலும் ஊக்குவிக்கப்படுகின்றன என்ற பொதுவான குற்றச்சாட்டும் இருக்கின்றன. உழைக்கும் தொழிலாளியின் உடல் நலத்தையும், உழைப்பையும் இந்த மதுபானம் மலையகத்தில் அட்டையாய் உறிஞ்சுகின்றது.
இதேபோல் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழும் பதுளை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, ஆகிய ஏனைய மாவட்டங்களிலும் அதீத மதுபாவனை ஒழிக்கப்படுவதற்கு இது வழிகாட்டும் என்றார்