வளர்ச்சி கண்டுவரும் மலையக கல்விமலையகம் கல்வித் துறையில் வளர்ச்சியடைந்து வருகிறது. இலங்கையின் கல்வி வரலாறு பல தசாப்தங்களை கடந்துள்ளது. குருகுலக் கல்வி முதல் போர்த்துகேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் போன்ற வெளிநாட்டவர்கள்
இலங்கையின் கல்வி வளர்ச்சிக்கு வழிகோலினார்கள். இலங்கையில் சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரவால் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. 1945 ஆம் ஆண்டு இக் கல்வி முறைமையில் ஆரம்ப வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி முறையை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டன. 1946 ஜூன் மாதத்தில் ‘இலவச கல்வி சட்டம்’ அமுல்படுத்தப்பட்டது. 1951 இல் கட்டாயக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டதுடன் 6 வயது முதல் 16 வயது வரையான எல்லா பிள்ளைகளும் கட்டாயக் கல்வியைப் பெற வேண்டும் என்ற சட்டமும் அமுலுக்கு வந்தது.
இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச கல்வியானது மலையக மக்களுக்கு கிடைப்பதற்கு 30 வருடங்கள் சென்றன. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் 03 தசாப்தங்களுக்கு பின்னரே தோட்டப் பாடசாலைகள் அரசுடைமைகளாக்கப்பட்டன.
ஏனைய சமூகங்களுக்கு கிடைத்த கல்வி வாய்ப்புக்களை 30 வருடங்களின் பின்னரே நோக்கவேண்டும். இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்ட மலையகச் சமூகம் பல வழிகளாலும் பல துறைகளாலும், தொழில் துறை ரீதியாகவும், கலை, கலாசார, பண்பாட்டு அம்சங்களாலும் சமூக, பொருளாதார, அரசியல் காரணிகளாலும் மாற்றங்களை காணக்கூடியதாக உள்ளது.
பாடசாலைக்கு மாணவர் அனுமதி, பெற்றோரின் பங்களிப்பு, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த நிலை போன்றவற்றை சுட்டிக் காட்டலாம். இன்னும் 2ம் தர கல்வியை உயர்த்த வேண்டும். அத்தோடு உயர்தர கல்வி பெறுபேற்றையும், பல்கலைக்கழக அனுமதியையும் அதிகரிக்க கூடிய வகையில் வேலைத்திட்டங்களை அமைச்சு மட்டங்களில் முன்னெடுக்க வேண்டும்.
இன்று மலையகத்தில் பிறந்து வளர்ந்தவர்களில் ஆசிரியர்களாக, விரிவுரையாளராக, எஞ்சினியர்களாக, வக்கீல்களாக, நிர்வாக உத்தியோகத்தர்களாக, அதிபர்களாக, கல்வி சேவை உத்தியோகத்தர்களாக, கல்வி அதிகாரிகளாக, அரசியல்வாதிகளாக (அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்களாக உள்ளார்கள்) வெளிநாட்டு தூதுவர்களாக, உலக வங்கி நிறுவனங்களில் வேலை செய்பவர்களை, அரச சார்பற்ற நிறுவனங்களை கொண்டு நடத்துபவர்களாக, உயர் அதிகாரிகளை, பொலிஸ் உத்தியோகஸ்தர்களாக, வர்த்தகர்களாக, உழைப்பாளர்களாக (தோட்ட தொழிலாளர்கள்) இன்று காணப்படுகின்றனர்.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் கூட வருடா வருடம் தேசிய மட்ட புள்ளிகளோடு போட்டி போடுகின்றார்கள். மாவட்ட, மாகாண, தேசிய மட்டத்தில் 2ம், 10ம் இடங்களையும் கூட பெற்றுக் கொள்கின்றார்கள்.
மலையகப் பிரதேசத்தில் இருந்து இன்று பெரும்பாலான மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைந்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது. இம்முறையும் நுவரெலியா மாவட்டத்தில் 185, 181 புள்ளிகளை பெற்றுக்கொண்ட மாணவர்கள் இருக்கின்றார்கள்.
இவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். நாங்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றோம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும். க. பொ. த. சாதாரண பரீட்சையில் கூட 9 ‘ஏ’ சித்திகளை அதிகமான மாணவர்கள் பெற்றுக் கொள்வதைக் காணலாம். தற்போது உயர் தரத்திற்கு வரும் மாணவர்கள் கலை, வர்த்தகத்தை தெரிவு செய்வதை விட விஞ்ஞான, கணித பிரிவுகளுக்கு செல்வதே அதிகமாக உள்ளது.
உயர்தரப் பரீட்சையில் கூட கலை, வர்த்தகம், விஞ்ஞானம், கணிதம் போன்ற துறைகளில் 3 ‘ஏ’ சித்திகளை பெற்றுக்கொள்ளும் மாணவர்கள் மிக அதிகமாக உள்ளார்கள். மலையகத்தில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் விகிதம் கூடியுள்ளது.
அண்மையில் ஒலிம்பியாட் கணிதப் போட்டியில் உலக ரீதியில் 5 ம் இடத்தைப் பெற்ற மாணவர்கள் கூட மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு காலகட்டத்தில் மலையக பிரதேசத்தில் ஆசிரியர்கள் கூட வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கின்றார்கள். ஆனால் இன்று மலையகத்தில் பிறந்து வளர்ந்து இப்பிரதேச பாடசாலைகளில் கல்வி கற்றவர்களே ஆசிரியர்களாக அதிபர்களாக, விரிவுரையாளர்களாக, ஆசிரிய ஆலோசகர்களாக, பட்டதாரி ஆசிரியர்களாக () உத்தியோகத்தர்களாக கல்விப் பணிப்பாளர்களாக, ஆலோசகர்களாக உருவாகியிருப்பது மலையகத்தின் கல்வி வளர்ச்சியை ஒரு படி மேல் உயர்த்தி காட்டுகிறது.
எமக்கு கிடைத்த மனித பௌதிக வளங்களை பயன்படுத்திக் கொண்டு இச்சமூகம் இப்போது ஓரளவு கல்வித் துறையில் வளர்ந்து வருகின்றது என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
யார் எந்த வகையில் விமர்சனங்களை முன்வைத்தாலும் பல அமைச்சர்களின் அயராத உழைப்பினால் பாடசாலை கட்டடங்களில், ஆசிரியர் நியமனங்களும் பௌதிக வளங்களும் கிடைத்திருக்கின்றன. இவற்றை நாம் போராடியே பெற்றுள்ளோம். பிரதிக் கல்வி அமைசச்ர், மாகாணக் கல்வி அமைச்சர் பதவிகளைப் பெற்றதும் கல்வி மறுமலர்ச்சியின் வெளிபாடே ஆகும்.
எனவே கல்வி வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் இருக்கின்ற மலையகம் இன்று பூரணமாக வளர்ச்சி அடைய நீண்டகாலம் காத்திருக்க தேவையில்லை. மலையகம் கல்வியில் முன்னேற முடியும்.
முன்னேறும் இன்றைய ஆசிரியர்களின் அயராத உழைப்பின் மூலம் எமது சமூகத்தின் கல்வி வளர்ச்சியை துரிதப்படுத்த முடியும்.மலையக அமைச்சர்கள், உறுப்பினர்கள் தொழிற் சங்கங்கள் மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்கான வேலைத் திட்டங்களை கட்சி, இனம், மதம், சாதி பார்க்காமல் மலையகத்தின் கல்வி வளர்ச்சியே எமது சமூகத்தின் வளர்ச்சி என்ற தொனிப் பொருளில் சேவையாற்ற வேண்டும். தற்போது பல அமைச்சர்கள் இவ் விடயத்தில் அதிக கவனம் செலுத்துவது வரவேற்கத்தக்கது.
மலையகப் பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திசெய்வதன் மூலம் மலையகத்தின் கல்வி அபிவிருத்தியை பிரசித்தப்படுத்தலாம். இதற்கு உயர் மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை ஒரே நோக்கோடு செயற்பட வேண்டும்.
இன்று இருப்பதை விட பல மகா வித்தியாலயங்கள், மத்திய மகா வித்தியாலயங்கள், தேசியப் பாடசாலைகள், கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்கள் மலையகத்தில் உருவாக்கப்பட வேண்டும். அத்துடன் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கல்வியியல் கல்லூரிகளை மேலும் மலையகத்திற்கு நன்மை தரக்கூடியவாறு பல பயிற்சி நெறிகளையும் ஆரம்பிக்க வேண்டும். மலையகத்திற்கென வாசிகசாலை, அருங்காட்சியகம், கணனி வளநிலையம், ஆய்வு கூடங்கள், தகவல் மையங்கள் என்பன கல்வித் துறையை மையப்படுத்தி உருவாக்க வேண்டும். குறிப்பாக மலையகத்தில் இருந்து கற்று இன்று உயர் ஸ்தாபனங்களில் இருப்பவர்களின் சேவையை மலையகம் முழுமையாக பெறும் போது எமது கல்வி வளர்ச்சி வெகு தூரத்தில் இல்லை என்பது உறுதி.
எமது, மக்களையும், ஆசிரியர்களையும், அதிபரையும் குறைகூறுவதை விட்டுவிட்டு செயற்பாட்டில் இறங்குவோம். அதற்காக சிறப்பாக சேவை செய்பவர்களையும், சிறந்த பெறுபேற்றை எடுத்த மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்க வேண்டும். ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் உச்சாகப்படுத்த வேண்டும்.
வருடா வருடம் இவர்களை உற்சாகப்படுத்தல் செயற்திட்டங்களை உருவாக்க கல்வித் திணைக்களங்கள் கல்வி அமைச்சு உட்பட கல்வித் துறையுடன் தொடர்புடைய அனைத்து தரப்பும் முன்வர வேண்டும்.
பரீட்சை பெறுபேறுகளை அதிகரிப்பதற்கு பாடசாலை மட்டத்திலும், மாவட்ட, மாகாண மட்டத்திலும் (6 – 9) தேசிய மட்டத்திலும் பரீட்சைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். குறிப்பாக கணிதம், விஞ்ஞானம், ஆங்கில பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கு செயலமர்வுகளை செய்வதோடு மாணவருக்கும் வழிகாட்டல் கருத்தரங்குகளையும் பரீட்சைகளையும் நடத்தி பரீட்சை பெறுபேறுகளை பாடசாலை மட்டத்தில் மீள் பரிசீலனை செய்யப்பட்டு குறைபாடுகள், பிரச்சினைகள் காணப்படின் நிவர்த்தி செய்யவேண்டும். பாடசாலை சமூகத்தோடு தொடர்புடைய (SDS) பழைய மாணவர் சங்கம், நலன்விரும்பிகள், அரசியல்வாதிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றின் சேவைகளையும் பெற்றுக் கொள்வதோடு JSA SUBJECT AD வளவாளர்கள், கற்றோர்கள் நிபுணர்களின் சேவைகளை கூடுமானவரை பெற்றுக்கொள்ள வேண்டும். சாதாரண தரத்திற்கு ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர்கள், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர்கள், சிரேஷ்ட ஆசிரியர்கள் போன்றோரை பாடசாலைகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இரா. சிவலிங்கம்
நன்றி- தினகரன் வாரமஞ்சரி