தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான கூட்டு ஒப்பந்தம் இதுவரை கைச்சாத்திடப்படாத நிலையில் அந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர். தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான கூட்டு ஒப்பந்தத்தை உருவாக்கும் நோக்கில் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோதும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளன.
இந்நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதாந் தம் 2500 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. எவ்வாறெனினும் அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிட்டு தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கலாம். அரசாங்கம் தலையிட்டிருந்தாலும் ஒன்றும் நடக்கவில்லை. ஏற்கனவே இருந்த கூட்டு ஒப்பந்தம் காலாவதியாக தற்போது ஒரு வருடம் பூர்த்தியாகப்போகின்ற நிலையில் இன்னும் புதிய கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திட முடியவில்லை.
நாட்டின் ஏனைய தொழிற்துறையினர் பெறுகின்ற சம்பளத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்தளவிலான சம்பளத்தையே தோட்டத் தொழிலாளர்கள் பெறுகின்றனர். அவர்கள் தமக்கு அதிகரித்துக்கொடுக்குமாறு கோரியிருக்கும் சம்பளத் தொகையும் நியாயமானதாகவே உள்ளது. அந்த தொகைக்கூட நாட்டின் ஏனைய துறையினர் பெறும் சம்பளத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாகும்.
இந்நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு வழி வகுக்கும் கூட்டு ஒப்பந்தத்தை இதுவரை கைச்சாத்திடாமல் இருப்பதானது ஒரு வகையில் அந்த மக்களின் உரிமைகளை மீறுவதாகவே அமைந்துள்ளது.
குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள் இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கின்றனர். ஆனால் அவ்வாறு நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக இருக்கும் மக்களுக்கு ஒருவருட காலமாக சம்பள உயர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாவிடின் இது எந்தளவு தூரம் வேதனைக்குரிய விடயமாகும் என்பது புரிகின்றது.
எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் அலட்சியப்போக்கில் இருக்கவேண்டாம். குறிப்பாக தொழிற்சங்கங்களும் முதலாளி மார் சம்மேளனமும் இதனை பார்த்துக்கொள்ளட்டும் என்று அரசாங்கம் இருந்துவிடக்கூடாது.
விசேடமாக புதிய அரசாங்கத்துக்கு தோட்டத் தொழிலாளர்கள் பாரிய நம்பிக்கையுடன் வாக்களித்திருந்தனர். எனினும் இந்த அரசாங்கமும் அந்த மக்களின் இந்த பிரச்சினை தொடர்பில் அலட்சியப்போக்குடன் இருந்துவிடக்கூடாது. உடனடியாக இந்த விடயத்தில் தலையிட்டு அவர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்பை வழங்கவேண்டும்.
மேலும் மலையக அரசியல் தலைமைத்துவங்களும் இந்த விடயம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்தவேண்டும். வரலாறு முழுவதும் தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு விடயங்களில் ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர்.
குறிப்பாக சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படவில்லை. அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலேயே அந்த மக்கள் வாழ்ந்துவருகின்றனர். ஆனால் தற்போது உரிய முறையில் சம்பள உயர்வுக்கூட வழங்கப்படாமல் உள்ளனர்.
எனவே இந்த விடயத்தில் தொடர்ச்சியாக அலட்சியப்போக்குடன் இருக்கவேண்டாம். இது வேதனையளிக்கும் விடயமாகும். வேதனை தொடர்வதற்கு இடமளிக்கவேண்டாம்.