Tuesday, September 23, 2008

மலையக மக்களின் பிரச்சினை பிரஜாவுரிமை பிரச்சினையாவே பார்க்கப்பட்டது அல்லது மட்டுப்படுத்தப்பட்டது.

1948ம் ஆண்டு மலையக மக்களின் நாட்டுரிமை பறிக்கப்பட்டதன் விளைவாக 1977ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் 30 ஆண்டுகள், எமது பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாதொழிக்கப்பட்டது. அதன் பின் எமது மக்களினதும், தலைவர்களினதும் முழு சக்தியும் பிரஜாவுரிமையை மீளப் பெறுவதிலேயே கழிந்தது. இதய சுத்தியோடு சில போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் அதன் பிறகு மலையக மக்களின் பிரச்சினையை 2003ம் ஆண்டு பராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரஜாவுரிமை சட்டம் வரை எமது பிரச்சினை பிரஜாவுரிமை பிரச்சினை போன்றே பார்க்கப்பட்டது. எமது தேசிய இன அடையாளத்தையும், தேசிய இன உரிமையையும் நிலை நாட்டுவதன் மூலம் எமது பிரஜாவுரிமை உட்பட எமது சகல உரிமைகளையும் இந்த நாட்டின் ஏனைய இனங்களுக்கும் உள்ளது போல் நிலை நாட்டப்பட வேண்டுமென்ற தொலை நோக்குப் பார்வையில் எமது பிரச்சினை பார்க்கப்படவில்லை.

தேசிய கட்சிகளான ஐ.தே.க வாக இருந்தாலும் ஸ்ரீ.ல.சு.க ஆக இருந்தாலும் இந்த மக்களின் வாக்கு வங்கியை எப்படி தமது ஆட்சியதிகாரத்திற்கும், இருப்பிற்கும் பயன்படுத்திக் கொள்வது என்றே பார்க்கப்பட்டது. திமபு பேச்சுவார்த்தையில் தமிழ் இயக்கங்களின் பிரஜாவுரிமை தொடர்பான வலியுறுத்தல் மிக காத்திரமான பங்களிப்பைச் செய்தது. பௌத்த பிக்குகளும், சிங்கள இனவாத அமைப்புக்களும் இந்தியா போன்ற வல்லரசொன்று எமது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதற்காக இந்த பிரஜாவுரிமை விடயத்தில் ஆதரவு நல்கின.

ஆகவே மலையகத் தமிழ் மக்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினை ஒவ்வொரு கட்சியினதும் நலம் சார்ந்த பிரச்சினையாகவும், அவர்களது வாக்கு வங்கியை குறிக்கோளாக கொண்டதாகவும் அமைந்ததே அல்லாமல் மலையக தமிழ் மக்களின் பிரச்சினையை நீண்டகால நோக்கில், முழுமையாக தீர்க்க வேண்டுமென்ற அடிப்படையில் பார்க்கப்படவில்லை. எனவே எமது தலைவர்கள் உட்பட தேசிய கட்சிகள் வரை எமது மக்களின் பிரச்சினையை ஒரு பிரஜாவுரிமை பிரச்சினையோடு சகல உரிமைகளும் வழங்கப்பட்டு மற்ற இனங்களைப் போல தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்பட வேண்டுமென்ற அபிலாசையோடு பார்க்கப்படவில்லை

-சமகால அரசியல் - தீர்வு – அ. லோறன்ஸ் -

உள்ளுராட்சி மன்றங்களின் சேவைகள் தோட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும்

உள்ளுராட்சி மன்றங்களின் சேவைகளை பெருந்தோட்டப் புறங்களுக்கும் முன்னெடுக்கப்பட கூடியதாக சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரின் பாரியார் புசல்லாவ நியூபீகொக் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்புக்களை பார்வையிடும் போது மக்கள் மத்தியில் தெரிவித்தார். மேலும் வடக்கு கிழக்குடன் ஒப்பிடும் போது அச்சமற்ற சூழலில் வாழக்கூடிய நிலையில் நாம் இருக்கின்றோம். உள்ளுராட்சி மன்றங்களின் சேவைகள் தோட்டப்புறங்களுக்கு சென்றடைவதில்லை. இதனால் பிரதிநிதிகளை தெரிவு செய்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அறிவூட்டல் நிகழ்வில் 500 பேர் பங்கேற்பு

தோட்டத் தொழிலாளர்களின் அடையாள அட்டையை பெறுவதற்கு பிறப்புச் சான்றிதழ் இல்லாத தடையை நிவர்த்தி செய்யும் பொருட்டு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தினால் கண்டியிலும், மாத்தளையிலும் நடத்தப்பட்ட அறிவூட்டல் நிகழ்ச்சியில் ஐநூறுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந் நிகழ்வு மாத்தளை பிரதேச செயலகம், ரொக்சைட் தோட்ட மண்டபம், கண்டி குருதெனிய கல்வி வள நிலையம், லொவர் கொத்மலை கிளப் ஆகிய இடங்களில் இடம் பெற்ற இந் நிகழ்வில் தோட்ட முகாமையாளர்கள், தோட்ட சமூக நல அதிகாரிகள், தோட்ட மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். பிறப்பு சான்றிதழ் பிரச்சினை சம்பந்தமாக ஜனாதிபதிக்கும் சமூக அபிவிருத்தி, இளைஞர் வலுவூட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோருக்குமிடையில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கமைய மனித வள அபிவிருத்தி நிதியம் இதனை முன்னெடுத்துள்ளது.
பெருந்தோட்டத்துறைச் சிறுவர் உரிமை மீறல்கள்

தொடர்ச்சி......

-ஷோபனாதேவி இராஜேந்திரன்-

ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் சமூக ரீதியான அங்கீகாரம் கிடைக்கக்கூடிய வகையிலான இலக்கினை அடைந்து கொள்வதற்கான ஒரு பயிற்சியினை கல்வி வழங்கி தயார்ப் படுத்துகின்றது. ஆனால், இத்தகைய அடிப்படை கல்வியைக்கூட பெருந்தோட்டத்துறையில் சுமார் 16 வீதமான சிறார்கள் எய்த முடியாத நிலை (தொழிலில் ஈடுபட்டுள்ள) காணப்படுகின்றது.

தொழிற் சந்தையில் நுழைவதற்கான வழிமுறைகள்

தோட்டத்துறையைச் சேர்ந்த சிறுவர்கள் தொழிலில் நுழைவதற்கான பல்வேறு விதமான வழிமுறைகள் காணப்படுகின்றன. இவர்கள் முறைசாராத தொழிற் சந்தைகளிலேயே தொழிலைப் பெறுகின்றனர். கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி 60 வீதமான சிறுவர்கள் தரகர்கள் மூலமே தோட்டத்திற்கு வெளியே தொழிலைப் பெற்றுக்கொள்கின்றனர். ஒவ்வொரு தோட்டத்திலும் குறிப்பாக வீட்டுப் பணியாட்களாக சிறுவர்களை அனுப்புவதற்கான தரகர்கள் அத்தோட்டத்திற்குள்ளேயே இருக்கின்றனர்.

இவ்வாறு சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தும் தரகர்கள் அவர்களது பெற்றோரை ஏமாற்றி சிறுவர்களைத் தொழிலுக்கு சேர்த்து விடுகின்றனர். இதற்கான சன்மானத்தை தொழிலுக்கு அமர்த்தும் இடத்திலிருந்து பெற்றுக்கொள்கின்றனர். அதுமட்டுமன்றி சிறுவர்களை ஏமாற்றி அவர்களை வீட்டுக்கு வீடு மாற்றுவதன் மூலம் தொழிலுக்கு அமர்த்தும் ஒவ்வொரு இடத்திலிருந்தும் தரகுப் பணத்தைப் பெற்றுக்கொள்கின்றனர். சிறுவர்களை மூலதனமாக வைத்து அவர்கள் உழைப்பை சுரண்டுகின்ற இந்த தரகர்கள் எத்தகைய குற்றவாளிகள் என்பது சிந்திக்கப்பட வேண்டிய விடயம் அல்லவா?

அட்டவணை-04
தரகர்கள் - 60 வீதம்

பெற்றோர் - 20.5 வீதம்
ஏனைய உறவினர்கள் - 6.5 வீதம்
தொழில் வழங்குநர் – 8.3 வீதம்
சிறுவர்கள் - (தாமாகவே சேருதல்) – 3.2 வீதம்
ஏனையவை – 1.4 வீதம்

மொத்தம் - 100 வீதம்

அட்டவணை 4 இன் படி 20.5 வீதமான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நேரடியாகவே தொழிலில் சேர்த்து விடுகின்றனர். இவ்வாறு நேரடியாக தொழிலில் சேர்க்கின்றபோது தொழில் வழங்குநர்களால் தரகர்களுக்கு சன்மானம் கொடுப்பதைப் போலவே பெற்றோர்களும் சன்மானத்தைக் கொடுக்கின்றனர். இது பெற்றோர்கள் தம் சொந்தப் பிள்ளைகளை பணத்திற்காக விற்பனை செய்வதாக கருதும் நிலையை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான பெற்றோர்கள் இவ்வாறு பெற்றுக்கொள்ளும் பணத்தில் அதிகமான பகுதியை தமது மதுபாவனைக்காக பயன்படுத்துவது ஆய்வின் போது அறியக்கூடியதாக இருந்தது. இவர்கள் சிறிதேனும் பிள்ளையின் எதிர்காலம் பற்றி சிந்திக்காமல் செயற்படுகின்றனர். பிள்ளைகளை தொழிலுக்கு அமர்த்தி அப்பிள்ளைகளின் அறிவு, ஆற்றல், ஆளுமை ஆகிய அனைத்தையும் அரும்பிலேயே கிள்ளி எறிந்து விடுகின்றனர். இந்நிலையில் பிள்ளைகளின் சுதந்திரத்திற்கு முழுமையாக பங்கம் விளைவிக்கப்படுவதன் மூலம் அவர்களது சகல உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. இவ்வகையில் நோக்கும்போது பிள்ளைகளை தொழிலில் அமர்த்துவதற்கு வழி செய்கின்ற பெற்றோர்களே முதல் குற்றவாளிகள். எனவே, பொறுப்பற்று பிள்ளைகளின் எதிர்காலத்தை வீணடிக்கும் பெற்றோர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள்.

சிறுவர் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டல்

இலங்கையில் சிறுவர்களை பாதுகாப்பதற்கான சிறந்த சட்ட ஏற்பாடுகள் காணப்படுகின்றன. இங்கு 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் தொடர்பாக முழுமையாக கவனம் செலுத்தப்படுகின்றது. குறிப்பாக சிறுவர்களின் கல்விக்கான உரிமையை பாதுகாக்கும் வகையில் கட்டாயக் கல்வி அமுலாக்கம் நடைமுறையில் உள்ளது. இதன்படி 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் முழு நேரத் தொழிலில் ஈடுபடுவது முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது. எனினும், சட்டத்திற்கு முரணான வகையில் சிறுவர்கள் தொழிலில் அமர்த்தப்படுவது தொடர்பாக ஏலவே இங்கு நோக்கப்பட்டுள்ளது.

இவர்கள் பொதுவாக முறைசாராத துறைகளில் தொழில்களை பெற்றுக்கொள்கின்றனர். பிள்ளைகளின் அபிவிருத்தித் தேவை, குடும்பத்தின் பொருளாதாரத் தேவை இவை இரண்டிற்குமிடையில் ஒரு சமத்துவத்தன்மை இல்லை என்றே குறிப்பிடலாம். இங்கு குடும்பத்தின் பொருளாதார தேவையை முன்னுரிமைப்படுத்தி அதனடிப்படையில் சிறுவர்களை தொழிலில் அமர்த்துவது ஒரு பொதுவான விடயமாக காணப்படுகின்றது. இவ்வாறு முறைசாரா துறைகளில் தொழில்புரியும் சிறுவர்களின் ஊழியச் சுரண்டல் மிக உயர்வான நிலையில் இருப்பதை அறியக்கூடியதாக உள்ளது. சிறுவர்கள் தமது குறைந்தபட்ச கூலியை பெற்றுக்கொள்ள மிகக்கூடிய மணித்தியாலங்கள் உழைக்க வேண்டியுள்ளது. எனவே, தொழில்புரியும் பிள்ளைகள் மிக குறைந்தளவு நேரமே ஓய்வினை அனுபவிக்கின்றனர். தொழில் வழங்குநர்கள் சிறுவர்களிடமிருந்து மிக நீண்ட நேர உழைப்பினை பெற்றுக்கொண்டு மாறாக, அவர்களுக்கு குறைந்தபட்ச கூலியையும் விட மிகக்குறைவான கூலியையே வழங்குகின்றனர். இதிலும், 90 வீதமான சிறுவர்களுக்கு வழங்கப்படும் கூலியை பெற்றோர்களோ அல்லது உறவினர்களோ பெற்றுக்கொள்கின்றனர்.

மேலும், தொழில்புரியும் சிறுவர்களுக்கு தொழில் செய்யும் இடத்தில் ஓர் ஆரோக்கியமான சூழல் இருப்பதில்லை. மாறாக, மிக மோசமான சூழ்நிலைகளின் கீழே இவர்கள் தொழில்புரிய வேண்டிய கட்டாயச் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இது அவர்களது முறையான உடல், உள ரீதியான வளர்ச்சிக்கு பாதகமாகவே உள்ளது. அத்துடன், முழுநேர சிறுவர் தொழிலாளர்களின் தொழிலில் ஈடுபடும் நிலைமையானது அவர்களது உடல் நலத்தினையும் தனியாள் அபிவிருத்தியையும் பாதிக்கின்றது.

சிறுவர்கள் தொழிலில் அமர்த்தப்படுவதற்கான காரணங்கள் வறுமையும் வேலையின்மையும்
சமூக, பொருளாதார சமத்துவமின்மையினாலும் போதியளவு கல்வி வசதியின்மையினாலும் உருவாக்கப்பட்ட வறுமை நிலையே சிறுவர்களை தொழிலில் அமர்த்துவதற்கு மூல காரணமாக இருக்கின்றது (சர்வதேச தொழிலாளர் தாபனம், 2002). பேரின மட்டத்தில் நோக்குகையில் ஒரு நாடு செல்வந்த நாடாக மாறுகின்ற போது அந்நாட்டின் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துகின்ற நிலை குறைவடைந்து செல்லும்.

சீனாவில் உன்னதமான உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பினையடுத்து 1970 களிலிருந்து அந்நாட்டில் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தலானது மிகத் துரித நிலையில் வீழ்ச்சி கண்டுள்ளது. (Basuand Tzannators, 2003). ஒரு நாட்டின் வறுமை நிலையும் தொழிற்படையில் சேர்ந்தவர்களில் அதிகமானோர் தொழிலற்று இருப்பதும் அந்நாட்டின் சிறுவர்களை தொழிலாளர்களாய் ஊக்குவிக்கும் பிரதான காரணியாக அமைந்துவிடுவதாக பல நாடுகளில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

வீட்டுத்துறையினரது வருமானம் மற்றும் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தலுக்குமிடையே எதிர்க்கணிய தொடர்பு காணப்படுகின்றது எனலாம். பெருந்தோட்டத்துறையில் குடும்பப் பருமன் உயர்வாக இருத்தல், குறைந்த கூலி வீதம் என்பன வறுமையை தோற்றுவிக்க, அது சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தும் நிலையினை உயர்த்தியுள்ளது.

கல்வி

இலங்கையின் தேசிய ரீதியிலான கல்வி மட்டத்துடன் ஒப்பிடுகின்ற போது பெருந்தோட்டத் துறையின் கல்வி மட்டமானது மிகக் குறைவாக இருப்பதனை பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. இவ்வகையில் தோட்டத்துறையிலேயே பாடசாலை இடைவிலகல் வீதம் உயர்வாக காணப்படுகிறது. குறைவான கல்வி மட்டமும் சிறுவர் தொழிலாளர்கள் அதிகரிப்பிற்கு பங்களிப்பு செலுத்தும் காரணியாகவுள்ளது. அத்துடன் பெண்களின் கல்வியில் ஏற்படும் அதிகரிப்பானது அவர்களின் பிள்ளைகளின் சுகாதாரம் மற்றும் போஷாக்கு நிலை, கல்வி என்பவற்றுடன் நேரான தொடர்பினை கொண்டுள்ளது.

சிறந்த கல்வியை பெற்ற தாய்மார்கள் சிறந்த வகையில் பிள்ளைகளை வழிநடத்துவார்கள் (Wolpin, 1994 ) இலங்கையில் பெண்களின் எழுத்தறிவு வீதமும் பாடசாலை சேரும் வீதமும் ஏனைய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளை விட மிக உயர்வான நிலையல் காணப்படுவதாக 2005 ஆம் ஆண்டின் மனித அபிவிருத்தி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் இங்கு தோட்டத் துறையில் பெண் கல்வி வீதம் ஏனைய துறைகளுடன் ஒப்பிடும் போது மிக குறைந்த நிலையில் காணப்படுகின்றது (சுயதநனெசயn, 2007). எனவே பெண் கல்வியறிவும் சிறுவர் தொழிலாளர்களை குறைப்பதில் பாரிய பங்களிப்பினை செலுத்தும் காரணியாகவுள்ளது.

குடும்பப் பிளவும் தாய் அல்லது தந்தை மட்டும் உள்ள குடும்பங்களும்

பெருந்தோட்டத்துறையில் சிறுவர்களைத் தொழிலுக்கு தூண்டும், தீர்மானிக்கும் காரணிகளுள் ஒன்றாக குடும்பப் பிளவு என்ற அம்சம் முக்கியத்துவம் பெறுகின்றது. ஆய்வுத் தகவல்களின்படி 14 வயதிற்குக் கீழ் சிறுவர் தொழிலாளராக உள்ள பிள்ளைகளில் 20 வீதமான பிள்ளைகளின் தகப்பன்மார்களும் 05 வீதமான பிள்ளைகளின் தாய்மார்களும் குடும்ப பிரச்சினைகளால் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுள்ளனர். மேலும் 07 வீதமான பிள்ளைகள் தாய், தகப்பன் இருவரும் இல்லாதவர்களாகக் காணப்படுகின்றனர். ஒரு பெற்றோரை மட்டும் கொண்டுள்ள பிள்ளைகள் தொழிற் சந்தையில் பலவந்தமாக தள்ளப்படுகின்றனர். பெற்றோரின் அன்பையும் அரவணைப்பையும் எந்த விதத்திலும் அனுபவிக்க முடியாத இப்பிள்ளைகளின் நிலை பற்றி அக்கறை கொள்ளாது தொழிலுக்கு தள்ளப்படுவது எவ்விதத்திலும் நியாயமாகாது.
இதனை விடவும் பெற்றோரின் மத்தியில் காணப்படும் மதுபாவனைப் பழக்கமும் பெரிதும் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தப்படுவதற்கான காரணமாக உள்ளதை ஆய்வின் போது காணக்கூடியதாக இருந்தது. பெரும்பாலான பெற்றோர் தமது வருமானத்தில் 50 வீதத்திற்கும் அதிகமான பகுதியினை மதுபாவனைக்கு செலவழித்து விட்டு தம் சிறார்களை எஜமான்களின் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்குவது மன்னிக்க முடியாத குற்றமல்லவா?

சிறுவர்களை தொழிலில் அமர்த்துவதால் ஏற்படும் விளைவுகள்

சிறுவர்கள் பெரும்பாலும் அவர்களது குடும்பத்தை காப்பாற்றுவதற்காகவே தொழிலில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு தொழிலில் ஈடுபடும் சிறுவர்களினது தொழில் நிலைமைகள் மிக மோசமாக காணப்படுகின்றது. இதன் விளைவாக அச்சிறுவர்கள் இளம் பராயத்தை அடையும் போது அவர்கள் தரம் குறைந்த சுகாதாரத்தினைக் கொண்டவர்களாகவும், குறைந்த கல்வித் தரத்தினைக் கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர். இத்தகைய போக்கு அடுத்த தலைமுறையிலும் சிறுவர் தொழிலாளர்கள் உருவாகுவதற்கு வழி வகுக்கிறது.

பெருந்தோட்டத்துறையைப் பொறுத்த வரை தொழிலில் ஈடுபட்டுள்ள சிறவர்கள் குறைவான கல்வித் தரத்தினைக் கொண்டமையினால் அவர்களது வாழ்க்கையில் பல சிறந்த சந்தர்ப்பங்களை இழக்கின்றனர். அதனால் அவர்கள் பல பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. அவையாவன்

  • இளம் பருவத்தில் தொழில்வாய்ப்பு குறைவாக காணப்படும்.
  • அவர்களது குறைந்த முதலீட்டால் தொழிற் சந்தையில் குறைந்த வருமானத்தையே உழைக்க முடியும்.
  • குறைந்த கல்வித் தரம் அவர்களது தொழில் சார் திறனை வளர்க்கும் இயலளவிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
  • சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகங்களுக்கான வாய்ப்பினை அதிகரிக்கின்றது.
  • அவர்களது தலைமைத்துவம் குறைந்த தரத்திலேயே காணப்படும்.
  • பாதிக்கப்பட்ட மனநிலை உள்ளவர்களாகவும் சமூகத்தின் மீது வெறுப்புணர்வுள்ளவர்களாகவும் வளர்கிறார்கள்.
  • பல சிறுவர் தொழிலாளர்கள் சமூக விரோதிகளாவும், குற்றவாளிகளாகவும் ஆகிவிடுகின்றனர்.

(தொடரும்...)