கடந்த சில நாட்களாக, மலையத்தில் நிலவிவரும் சீரற்ற வானிலை, இன்றும் தொடர்ந்த நிலையில், மலையகத்தின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்று, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கண்டி மாவட்ட உதவிப் பணிப்பாளர் இந்திக்க ரணவீர தெரிவித்தார்.
கண்டி மாவட்டம்
கண்டி மாவட்டத்தில், இன்றுக் காலை வரை பெய்த கடும் மழையால், 278 குடும்பங்களைச் சேர்ந்த 1,243 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களுள் 820 பேர், பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா மாவட்டம்
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில், 337 குடும்பங்களைச் சேர்ந்த 1,336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, நுவரெலியா மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.பி புஷ்பகுமார தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள், முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தங்வைக்கப்பட்டுள்ளனர் என்றும் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம், 68 வீடுகள் பகுதியளவிலும் 4 வீடுகளும் முற்றாகவும் சேதடைந்துள்ளன என்றும், இவர்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தும், நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர் கூறினார்.
இரத்தினபுரி மாவட்டம்
இரத்தினபுரி மாவட்டத்தில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் 6,133 குடும்பங்களைச் சேர்ந்த 24,625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, இரத்தினபுரி மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.
மேற்படி மாவட்டத்தில் எலபாத்த, இரத்தினபுரி, கிரியெல்ல, அயகம, நிவித்திகல, களவான, எஹலியகொடை, குருவிட்ட, காவத்தை, ஓப்பநாயக்க, பெல்மதுளை, பலாங்கொடை, இம்புலபே, கொடக்கவெல ஆகிய 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 189 கிராம சேவர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற வானிலையால், இதுவரை 6 குடியிருப்புகள் முற்றாக சேதமடைந்துள்ளனவெனவும் 139 குடியிருப்புகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளனவெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களில் 1,961 குடும்பங்களைச் சேர்ந்த 7,861 பேர் தத்தமது உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
மேலும் 493 குடும்பங்களைச் சேர்ந்த 1,951 பேர், 38 இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பதுளை மாவட்டம்
அத்தோடு, பதுளை மாவட்டத்தில், இரண்டு மரணங்கள் சம்பவித்துள்ளன என்றும் 63 வீடுகள் தற்போது சேதமடைந்துள்ளன என்றும், பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் ஈ.எல்.எம். உதயகுமார் தெரிவித்தார். அத்தோடு, 51 குடும்பங்களைச் சேர்ந்த 207 பேர், இரண்டு நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, பசறை, ஊவா பரணகம, ஹப்புத்தளை ஆகிய இடங்களில், மேலும் 60 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்றும் மழை தொடர்ந்து பெய்யுமாயின், பதுளையில் பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, மரங்கள், மின்தூண்கள், கற்பாறைகள் போன்றவை, வீதிகளில் விழுந்துள்ளமையால், மலையகத்தின் பல்வேறு வீதிகளுக்கான போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளன. பாரிய பாதை வெடிப்புக்கள், குடியிருப்பு வெடிப்புகள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. அத்தோடு, மழையுடன் சேர்ந்து, மலையத்தில் கடுமையான குளிரான வானிலை காணப்படுவதால். தொழிலாளர்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
மேல் கொத்மலை, காசல்ரீ, மவுஸ்ஸாகலை, லக்ஷபான, கெனியன், விமலசுரேந்திர போன்ற நீர்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளமையால், மேல் கொத்மலை நீர்தேகத்தின் வான்கதவொன்று, நேற்று (23) காலை முதல் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெரீக்கிலோயர் தோட்டத்தில், மண்சரிவு அபாயம் காரணமாக, அங்கிருந்த 33 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். குறித்த பகுதியிலுள்ள இரண்டு குடியிருப்புகள் சேதமடைந்த பின்னரே, குறித்த 33 குடும்பங்களும் வெளியேற்றப்பட்டுள்ளன.
குறித்த தோட்டப் பகுதியில், குடியிருப்பொன்றுக்கு அடிப்பகுதியில் நீர் ஊற்றெடுத்துச் செல்வதாகவும் இது தொடர்பில், தேசிய மண் பரிசோதனை ஆய்வாளர்களால் அப்பகுதி ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.