Wednesday, February 16, 2011

மலையகத்தில் 31,000 வீட்டுத்தோட்டங்கள் அமைக்கத் திட்டம்

உலக உணவுப் பற்றாக்குறை எதிர்வரும் ஆண்டில் ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதால் நாடளாவிய ரீதியில் பத்து இலட்சம் வீட்டுத் தோட்டங்களை அமைக்கும் திட்டம் ஒன்றை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு முன்னெடுத்துள்ளது.

இதற்கமைய மலையகத்தில் 31,000; வீட்டுத் தோட்டங்களை 550 இலட்ச ரூபா செலவில் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மலையக அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் அமரநந்தன வீரசிங்க தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் அக்குறணை பிரதேச செயலகப் பிரிவில் 3,500 வீட்டுத் தோட்டங்களும் பூஜாபிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் 6,700 வீட்டுத் தோட்டங்களும், ஹரிஸ்பத்துவ பிரதேச செயலகப்பிரிவில் 8,400 வீட்டுத் தோட்டங்களும், கலகெதர பிரதேச செயலகப்பிரிவில் 5,700 வீட்டுத் தோட்டங்களும், ஹத்தரலியத்த பிரதேச செயலகப் பிரிவில் 6,700 வீட்டுத் தோட்டங்களும் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாத்தளை மாவட்டத்தில் 11 பாடசாலைகள் மண்சரிவு அபாயத்தில்


மாத்தளை மாவட்டத்தில் 11 பாடசாலைகள் உள்ளடங்கிய பிரதேசம் மண் சரிவு அபாயத்தை எதிர் நோக்கியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி மத்திய நிலையத்தின் புவியியல் துறை பிரதான அதிகாரி எம்.சீ.யூ மொரேமட தெரிவித்துள்ளார்.
இதில் மாத்தளை இந்து தேசிய பாடசாலை, மாத்தளை சிறிமாவோ பண்டாரநாயக்க பாடசாலை, புஸ்வெல்ல மகா வித்தியாலயம், கம்மடுவ பாடசாலை, பம்பரகலை பாடசாலை, வெஹிகலை பாடசாலை, வாலவலை பாடசாலை மற்றும் பமுனுவ பாடசாலை ஆகிய பாடசாலைகளே இம் மண் சரிவு அபாயத்தை எதிர்நோக்கி உள்ளன.

நல்லிணக்க ஆணைக்குழு மலையக மக்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமர்வுகள் மற்றும் விசாரணைகள் நுவரெலியா,அட்டன்,பதுளை போன்ற பிரதேசங்களில் நடத்தப்பட வேண்டும். பெருந்தோட்ட மக்கள் பல்வேறு பாகுபாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு இன்றுவரையும் இலங்கை சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்ட நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே ஏனைய பிரதேசங்களில் நடத்தப்பட்டதைப்போன்று மலையக பிரதேசங்களிலும் ஆணைக்குழு அதன் அமர்வுகளை நடத்தினால் இம்மக்களுக்கு தாமாகவே தமது பிரச்சினைகளை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.அதேவேளை இம்மக்களின் பிரச்சினைகளை தெளிவுபடுத்தி அவர்களின் பிரதிநிதித்துவ அமைப்புகளுக்கும் வாய்ப்பாக இருக்குமென்பதுடன் ஆணைக்குழு அரசிடம் தனது பரிந்துரைகளை முன்வைக்கும்போது மலையக மக்களின் பிரச்சினைகளையும் இணைத்துக் கொள்வதற்கு வாய்ப்பாக அமையும் என மனித அபிவிருத்தி தாபன தலைவர் பி.பி.சிவப்பிரகாசம் இந்த ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

பசறையில் 8 தோட்டங்களில் 3,603 பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை

பசறை பிரதேசத்தில் 8 தோட்டங்களில் 3,603 பேர் தேசிய அடையாள அட்டையின்றி உள்ளனர்.இவர்களில் சுமார் 400 பேர் மாத்திரம் கடந்த வருடம் நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது தற்காலிக அடையாள அட்டை பெற்றுள்ளனர்.ஏனையவர்கள் போதியளவு தெளிவின்மையால் வெறுமனே வாக்களிக்காமல் இருந்துள்ளனர்.இது குறித்து பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும் கவனம் செலுத்தவில்லை.இதன் காரணமாக இவர்கள் வாக்களிக்கவில்லை. இதை கவனத்தில் கொண்டு இவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொடுக்கும் பொருட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி கிராம சேவகர் ஊடாக தேசிய அடையாள அட்டையின்றி இருப்பவர்களின் விபரம் திரட்டப்பட்டுள்ளவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொடுக்க அப் பிரதேச தமிழ் அரசியல்வாதிகள் முன்வர வேண்டும்.