மலையக மக்களின் தீர்க்கமான தேசிய இனத்துவ அடையாளத்திற்கான தேவை குறித்த சில குறிப்புகள்
தோட்டத் தொழிலாளர் சமூகத்தை மையமாகக் கொண்ட மலையக மக்களின் தேசிய இனத்துவ அடையாளம் குறித்து மீண்டும் பல கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் அம்மக்களை நோக்கி அனுதாப அணுகுமுறையில் முன்மொழியப்படுபவையாகும். தமிழர்கள் என்றும் இலங்கையர் என்ற வகையிலான வேர் கழன்ற அடையாளங்களாகவே இவை உள்ளன. ஆனால் இதற்கு மாறாக இலங்கையின் கூட்டு மொத்த சட்ட மற்றும் ஆவண ரீதியிலான தேசிய இனவாரியான அடையாள பகுப்புக்களுக்கிடையே தமது உறுதியான இருப்பும் அடையாளமும் என்ன என்பது குறித்த தெளிவு மலையக மக்களிடையே இருப்பது இன்று அவசியமாகிறது.
01. சட்ட ஆவண ரீதியில் இலங்கை தமிழருக்கான வரைவிலக்கணமும், மலையக மக்களில் ஒரு பிரிவினர் இலங்கை தமிழர் என அடையாளப்படுத்தப்படுவதற்கான சமூக உளவியல் காரணிகளும்
02. நாம் இந்திய வம்சாவளி தமிழரா? மலையக மக்களா? 21ம் நூற்றாண்டில் நமது தீர்க்கமான தேசிய இனத்தவ அடையாளம் என்ன?
சட்ட ஆவண வரைவிலக்கணமும் இலங்கை தமிழராக அடையாளப்படுத்தும் சமூக உளவியல் தாக்கங்களும்
1823ஆம் ஆண்டு கண்டியை அடுத்து சின்னப்பட்டியில் குடியேற்றப்பட்;ட தென்னிந்திய கிராமியக் குடும்பங்களின் இருப்பை ஒரு வரலாற்றின் தொடக்க எல்லையாகக் கொண்டால் இலங்கையில் மலையக மக்களின் வரலாறு மூன்று நூற்றாண்டுகளை தொட்டு நிற்கிளது. இவ்வளவு நீண்ட பாரம்பரியம் கொண்ட மக்கள் தமது தேசிய இனத்துவ அடையாளம் குறித்து நிச்சயமற்று இருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. நிவர்த்திக்கப்பட வேண்டியதுமாகும்.
1901ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முதல் சனத்தொகை கணக்கொடுப்பிலேயே (யேவழையெட ஊநளெரள) பிரதான தேசிய இனங்கள் வரையறுக்கப்படுகின்றன. அவை சிங்களம், இலங்கைத்தமிழர், இந்தியத்தமிழர், இந்திய சோனகர், இலங்கை சோனகர் என்பவையாகும். சுமகால 2011ம் ஆண்டு கணக்கெடுப்பு பின்வரும் பிரிவுகளை உள்வாங்குகிறது. அவை சிங்களவர், இலங்கைத் தமிழர் இந்திய வம்சாவளித்தமிழர், முஸ்லீம்கள், பறங்கியர், மலே கொழும்பு செட்ச ஏனையோர் என்பவையாகும்.
2001ஆம் ஆண்டு மற்றும் 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்புக்களில் கவனிக்க வேண்டிய பிரதான அம்சம் கணிசமான இந்திய வம்சாவளித்தமிழர், இலங்கைத் தமிழர் என்ற பிரிவிற்குள் பதிவாகி உள்ளமையாகும். இதன் காரணமாக ஒரு கட்டத்தில் 12 சதவீதமாக இருந்த இம் மக்கள் இன்று இலங்கையின் மொத்த சனத்தொகையில் 4.2 வீதம் என்ற மட்டத்துக்கு இறங்கி வந்துள்ளார்கள்.
இனத்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் தேசிய வளப்பகிர்வு உட்பட பல முக்கிய வாழ்வியல் அரசியல் அம்சங்கள் தீர்மானிக்கப்படுகின்ற ஒரு நாட்டில் இனத்துவ விகிதாசாரத்திலான பாரிய வீழ்;ச்சி பல பாரதூரமான எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். மேலும் இந்த பாதிப்பு சர்வதேச மட்டத்திலும் நீடிக்கும். ஐக்கிய நாடுகள் சபையின் இணை அமைப்பாகிய ருNர்ஊசு அடையாளப்படுத்தியுள்ள 2050ம் ஆண்டளவில் உலகில் தமது இனத்துவ இருப்பினை இழக்கும் இனங்களின் பட்டியலில் இந்திய வம்சாவளி சமூகமும் இடம்பெறுகின்றது.
1981ஆம் ஆண்டில் கணக்கெடுப்பில் 8,18.700 ஆக இருந்த இந்திய வம்சாவளி மக்கள் 2011ஆம் ஆண்டில் (30 வருடங்களின் பின்னர்) 8,32.300 ஆகவே பெருகியுள்ளர். 30வருடங்களில் 13,600 பேரே பிறந்துள்ளனர் என்றால் ஆச்சரியம்தான். இதற்கு என்ன காரணம்? இலங்கை தமிழர் என்று தம்மை பெரும்பாலானவர்கள் பதிவு செய்து கொண்டமையாகும். - (கதிர் குறிஞ்சி, வீரகேசரி வார வெளியீடு 24-3-2013)
இப்படியே போனால் அடுத்த 2021ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் இந்திய வம்சாவளித் தமிழர் என்ற ஒதுக்கீட்டு வரையறையின் கீழும், இந்த இனத்திலும் எவருமே புதிதாக பிறந்திருக்கமாட்டார்கள் என்ற நிலையையே நிதர்சனம் கொள்ளவேண்டியிருக்கும்.
இவ்வாறு சனத்தொகை விகிதாசாரக் குறைப்பினால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் குறித்து ஒரு பட்டியலே இடலாம். அவற்றுள் மிக முக்கியமானவை எனக் கருதத்தக்கவை:
இன விகிதாசார அடிப்படையில் வழங்கப்படும் வேலைவாய்ப்புகள் சுருங்குதல்.(எதிர்காலத்தில் இதனை நடைமுறைப்படுத்த மலையக தமிழ் தலைமைகளின் அழுத்தம் அவசியம்)
இன விகிதாசார அடிப்படையிலான அரச அபிவிருத்தி, வள உள்ளீடுகளில் பாரிய வெட்டு விழுதல்.
இதே அடிப்படையிலான பல்கலைக்கழகங்களில் மருத்துவ, பொருளியல், சட்டம், கலையியல் போன்ற துறைகளுக்கான அனுமதி மட்டம் குறைக்கப்படல். (இக்குறைபாட்டைத் தீர்க்க மலையக தமிழ் தலைமைகளின் அழுத்தம் அவசியம்)
உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வெகுவாக பலவீனப்படல்.
சர்வதேச மட்டத்தில் மலையக மக்களின் இருப்பும் முக்கியத்துவமும் கிரமமாக சயனித்து போகுதல்.
ஒட்டுமொத்தத்தில் சுய தேசிய இன அடையாள மறுப்பு போக்கு இம்மக்களின் இளம் தலைமுறையினர் மீதும், எதிர்கால சந்ததியினர் மீதும் பாரதூரமான பாதிப்புக்களுக்கே வழிவகுக்கும்.
மலையக மக்கள் தம்மை இலங்கைத் தமிழர் என ஆவண மற்றும் அமைப்பு ரீதியாக அடையாளப்படுத்தலாமா என்ற கேள்விக்கு முதலில், இலங்கைத் தமிழர் என்ற வரைவிலக்கணத்திற்குள் உள்வாங்கப்படக்கூடியவர்கள் யார்? அதற்கான தகுதிகள் எவை? அத்தகைய தகுதிகள் இந்திய வம்சாவளி தமிழர் என்ற பிரிவினருக்கு உண்டா? ஆகிய கேள்விகளுக்கு விடையளிக்கப்பட வேண்டும்.
‘இலங்கைத் தமிழர்’ என்று சட்டஆவண ரீதியாக அடையாளப்படுத்த பின்வரும் தகைமைகள் இன்றியமையாதன ஆகின்றன:
1. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களை பூர்வீகமாகவும் பிறப்பிடமாகவும் கொண்டவர்களையும் அவர்களது பரம்பரையினரும் இவர்கள் சமகாலத்தில் வடகிழக்கிலோ, இலங்கையின் ஏனைய பகுதிகளிலோ அல்லது வெளிநாடுகளிலோ நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ குடியிருப்பவர்களாகவும் இருக்கக்கூடும்.
2. வட பிராந்தியத்தை பிறப்பிடமாக அல்லது பூர்வீகமாகக் கொண்டவர்கள் இருப்பின் அவர்கள் சிவில் விவகாரங்களை பொறுத்தவரை தேசவழமை சட்டம் மற்றும் நடைமுறையின் கீழ் வருபவர்களாக இருப்பர்.
3. கிழக்குப் பிராந்தியத்தை பிறப்பிடமாக அல்லது பூர்வீகமாக கொண்டவர்களாக இருப்பின் சிவில் விவகாரங்களைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் மரபுவழிச்சட்டம் அல்லது முக்குவர் சட்டம் மற்றும் நடைமுறைகளின் கீழ் வருபவர்களாக இருப்பர். மேற்குறித்த பிராந்திய அடையாளங்கள் மற்றும் சிவில் விவகாரங்களுக்கான பிரத்தியேக சட்ட அம்சங்களோடு மேலும் நடைமுறை பிரயோககங்கள் . இவை எவற்றிலும் இந்திய வம்சாவளித்தமிழர் எவரும் உள்வாங்கப்படமாட்டார்கள்.
எனவே வெறுமனே உணர்வு பூர்வமாகவும் சொந்த விருப்புக்களை சார்ந்தும் இலங்கைத் தமிழர்என தம்மை அர்த்தப்படுத்துவதும் அடையாளப்படுத்துவதும்
எனவே வெறுமனே உணர்வுபூர்வமாகவும் சொந்த விருப்புகளைச் சார்ந்தும் இலங்கைத் தமிழர் என தம்மை அர்த்தப்படுத்துவதும் அடையாளப்படுத்துவதும் எந்த விதத்திலும் ஏற்புடைய ஒன்றல்ல. இது இலங்கையில் பிறிதொரு தனித்துவமான தேசிய இனத்தின் அடையாளத்தோடு தம்மை வலிந்து இணைத்துக் கொள்வதற்கு ஒப்பானது என்பதோடு பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட ஒரு அணுகுமுறையுமாகும். இனி, மேற்குறித்த யதார்த்தங்களின் பின்னணியில் மலையக மக் ளின் ஒரு பகுதியினர் தம்மை இலங்கை தமிழர் என அடையாளப்படுத்தி ஆவணங்களிலும் அவ்வாறு பதிவு செய்வதற்கான சமூகஉளவியல் காரணங்கள் குறித்து நோக்குவதும் பயனுள்ளதாக இருக்கும். யதார்த்தரீதியாகவும், துரதிஷ்டவசமாக இலங்கைத் தமிழர் என கூறுவோரில் கணிசமானவர்களைப் பொறுத்தவரையில் இதற்கு பகைப்புலமாக இருப்பது நாம் இலங்கையர் என்ற தேசிய உணர்வோ அல்லது எல்லை தாண்டிய நாம் அனைவரும் தமிழர்கள் என்ற பரந்த இன பற்றுதலோ அல்ல. மாறாக பின்வரும் போக்குகளே முன்னிலை வகிப்பதை காணலாம்.
1. 1980க்களை அடுத்து மலையக மக்களின் சமூக அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உருக்கொள்ள ஆரம்பிக்கின்றன. இதில் குறிப்பிடத்தக்க விடயம், தொழிலாளரை தவிர்த்து உருவாகியிருந்த பல சமூக கூறுகள் ஒரு மத்தியதர வர்க்கமாக கால்கோள் கொள்வதாகும். இதைச் சேர்ந்தவர்கள் கல்வி ரீதியாகவும், உத்தியோகம் மற்றும் பல்துறை ரீதியாகவும் மேல்நோக்கிய நகர்வினை (upward mobility) எட்ட ஆரம்பித்தனர். ஆனால் இந்த முன்னேற்றத்தோடு ஒரு எதிர்வினை விளைவும் தொற்றிக் கொண்டது. தோட்டப்புற, விசேடமாக தோட்ட தொழிலாளர் குடும்பப் பின்னணியைக் கொண்டவர்களைப் பொறுத்தவரை மேல் நோக்கிய நகர்வு அவர்கள் தாங்கள் சார்ந்திருந்த குடும்ப, சமூக சூழலில் இருந்தும் அந்நியப்படுத்தும் (Alienation) போக்கிற்கான உந்து சக்தியாக அமைந்து விட்டது. இதனை விட்டகலல் என்று கூறலாம். இவ்வாறு தமது சொந்த சமூக இனசூழலிலிருந்து அந்நிய மாணவர்களுக்கு வசதியான புகலிடமாக இலங்கைத் தமிழர் என்ற அடையாளம் அமையவே செய்தது.
2. தலைமுறை தலைமுறையாக ஒரு உள்நோக்கிய வாழ்க்கை நெறிக்கு ( inward looking life ) நிர்ப்பந்திக்கப்பட்டிருந்த சமூக இறுக்கத்தில் 1980களை அடுத்து உடைப்புகள் ஏற்படுவதை காணலாம். வெளியிலிருந்து வந்த புதிய தொடர்புகளையும் பொறுப்புக்களையும் தரிசித்து கொண்டவர்களில் பலரின் மத்தியில் கூடவே தாங்கள் இதுவரை சார்ந்திருந்த குடும்ப - சமூக சூழல் குறித்த தாழ் உணர்ச்சி உருவாவதை அவர்கள் நடத்தை முறைமைகளில் (Behaviuor trends) காணக்கூடியதாக இருந்தது. உள்ளார்ந்த தாழ்வு மனப்பான்மை ஒருவரை, தான் இதுமட்டிலும் மூலமாக சார்ந்திருந்த குடும்ப - சமூக - இன ரீதியான பின் புலத்தை மறைக்க அல்லது அதற்கு புது வடிவம் கொடுக்க ஏதுவாகின்றது. ஒரு கட்டத்தில் இத்தகைய மனப்பாங்கிற்கு உள்ளானவர்கள் தம்மை கொழும்பு தமிழர் என்றும் கண்டித் தமிழர் என்றும் அடையாளப்படுத்த ஆரம்பித்தனர். இந்தப் போக்கு 1983ம் ஆண்டின் இன வன்செயலில் தாக்கத்தோடு மறைய ஆரம்பித்தாலும் இம் மனோபாவமும் தொடரவே செய்ததுடன் இத்தகைய பிரிவினரும் இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்திற்குள் தஞ்சமடைவதைக் காணலாம்.
03. மூன்றாவது பிரதான காரணி மலையக தோட்டப்புற சார்ந்தவர்களுக்கான சமூக அரசியல் தளங்களிலான காத்திர பூர்வமான முன்மாதிரிகள் (Role model) இல்லாமையாகும். முக்கியமாக வடக்கு கிழக்கு யுத்தம் அதன் விளைவாக மலையக மக்கள் விசேடமாக இளைஞர் யுவதிகள் மோசமான அடக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டமை ஆகிய யதார்த்த நிலைமைகள் மலையகத்திற்கு வெளியிலான சமூக அரசியல் முன்மாதிரி நபர்கள் நோக்கிய ஈர்ப்பினை இவர்களுக்கு மத்தியில் ஏற்படுத்தின. தாங்கள் முகம் கொடுத்த இக்கட்டான நிலைமைகளில் நிதர்சனம் கண்ட ஸ்தாபிக்கப்பட்ட மலையக தலைமைகளின் கையாலாகாத தன்மை வெளிவாரி முன் மாதிரிகள் குறித்த ஈர்ப்பு என்பனவும் இலங்கை தமிழர் என்ற அடையாளத் தேடலுக்கான உந்து சக்தியாக அமைந்தது எனலாம்.
மேற்குறித்த பின்னணிகளோடு தற்போது உருவாகியுள்ள வேறுபட்ட சமூகம்- அரசியல் யதார்த்தங்களையும் நாம் கவனத்தில் கொள்வது அவசியமாகும்.
இலங்கையின் கடந்தகால அனுபவங்களையும், பெரும்பான்மையினரின் அரசியல்- மத தலைமைத்துவ போக்குகளையும் கவனத்தில் கொள்கின்றபோது மலையக மக்கள் முக்கியமான சட்ட ஆவண ரீதியில் தமது தேசிய இனத்துவ அடையாளத்தை இழப்பதானது சிறுபான்மையினர் என்ற ரீதியில் எதிர்காலத்தில் பெரும்பான்மை இனத்திற்கு அடிபணியும் நிலைக்கும் சேவகம் புரியும் சமூகமாக மாறும் நிலைக்கும் நிர்ப்பந்தித்து விடும்.
மலையகத் தமிழர் தமது தமிழ் உணர்வை பிரதிபலிக்க தமது சொந்த இனத்து அடையாளத்தை இழக்கத் தேவையில்லை. கலை, இலக்கிய மற்றும் ஏளைய அதிகாரபூர்வமான தளங்களில் வடக்கு கிழக்கு இலங்கை தமிழருடன் ஒருமைப்பாட்டை ஆரோக்கியமான வழிகளில் நிலைநிறுத்த முடியும். வட கிழக்கை ஆதார தளமாக கொண்ட இலங்கை தமிழர் ஒப்பீட்டளவில் வேறுபட்ட அரசியல் சமூக போராட்ட அனுபவ பின்னணியை கொண்டவர்களாக தோற்றம் பெற்றுள்ளனர். அவர்களின் எதிர்கால மாறுதல்களுக்கான யாத்திரை பல தரப்பட்ட உள்ளக மற்றும் வெளியார் சக்திகளினால் தீர்மானிக்கப்படுகின்றன. இதில் வளமான ஒரு சமூக இருப்பாக தோற்றம் பெற்றுள்ள புலம் பெயர் தமிழர்களின் தாக்கம் தவிர்க்க முடியாதது.
இத்தகைய பகை புலத்தில் வட - கிழக்கு தமிழ் மக்களின் போராட்டங்கள், துயரங்கள், தேவைகள் இவற்றில் மலையக மக்களை சார்ந்தவர்கள் புரிந்துகொள்வதும் தங்களின் தார்மிக கரிசனங்களை வெளிப்படுத்துவதும் நிச்சயமாக இருக்கவே செய்யும். ஆனால் வட - கிழக்கு மக்களின் தேசிய - இனத்துவ அடையாளமாகிய இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்திற்கும் தம்மைப் புகுத்திக் கொள்வது வட - கிழக்கை சார்ந்த தமிழ் மக்கள் மற்றும் இந்திய வம்சாவளித் தமிழரான மலையக மக்கள் ஆகிய இரு சாரார் இடையேயும் தேவையற்ற சிக்கல்களையும் தர்மசங்கடங்களையும் உருவாக்குவதிலேயே போய் முடியும்.
மேற்குறித்த அம்சங்களில் இவற்றோடு தொடர்புடைய வரலாற்று மற்றும் சமகால பிற காரணிகளையும் தேசிய - சர்வதேசிய யதார்த்தங்களையும் கவனத்தில் கொண்டு நோக்கும் போது இம்மக்களுக்கான ஒரு தீர்க்கமான தேசிய - இன அடையாளம் தேவை என்பது புலனாகின்றது, சட்ட - ஆவண ரீதியாக மாத்திரமின்றி அத்தகைய அடையாளம் சமூக உணர்வு சார்ந்தும் அங்கீகாரம் பெற்ற ஒன்றாக அமைவது அவசியம்.
கூட்டு மொத்தத்தில் இலங்கை இந்திய வம்சாவளித் தமிழர் அல்லது இலங்கை சார் இந்திய வம்சாவளி தமிழர் - ( Sri lanka Tamils of Indian Origin ) என்பது ஆவணங்கள் பொறுத்தும் மற்றும் சட்ட ரீதியான தேவைகளுக்குமான ஒரு அடையாள பிரயோகமாக இருக்கும்.
அதே நேரத்தில் மலையக மக்கள் (மலையகத் தமிழர்) என்பது தேசிய - இன பகைபுலங்களில் தமது மொழி மற்றும் கலாசார பாரம்பரியங்ளை நிலைப்படுத்த ஒரு நிரந்தர பிரயோகமாக தொடர்ந்திருப்பதே பொருத்தமாக அமையும்.
எல். சாந்திகுமார்
நன்றி – வீரகேசரி.