Wednesday, March 16, 2016

குளவி தாக்குதல்: 11 பேர் மருத்துவமனையில்

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 11 பேர் ஹல்துமுல்லை, தியத்தலாவை அரசினர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹல்துமுல்லை பகுதியின் இதல்கஸ்ஹின்ன தோட்டத்தில், தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர். இச்சம்பவம் 16.03.2016 காலை இடம்பெற்றுள்ளது.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் மூன்று பேர் பெண்களாகவும் எட்டுப் பேர் ஆண்களாகவுமுள்ளனர். இவர்களில் இரு பெண்களும், ஒரு ஆணுமாக மூன்று பேர் தியத்தலாவை அரசினர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தலவாக்கலையில் லொறி விபத்து – வீடு சேதம்

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகி தோட்ட குடியிருப்புக்கு சொந்தமான ஒரு வீட்டில் லொறி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லோகி தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் 15.03.2016 அன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்குள்ளான லொறி வீதியில் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதன் பின் அதன் சாரதி அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்று வருவதற்கு முன்னர் வாகனத்தின் நடத்துனர் ஒருவரால் வாகனத்தை செலுத்த முற்படுகையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்தினால் குறித்த வீடு முற்றாக சேதமாகியுள்ளது. எனினும் இதன்போது எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை.

460 ரூபா சம்பளத்தில் குடும்பத்தை நடத்துவதா?

பெருந்தோட்ட இந்திய வம்சாவளித் தமிழ் மக்களை ஒரு தனித்தேசிய இனமாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அம்மக்களை அவ்வாறு தனித்தேசிய இனமாகப் பிரகடனப்படுத்திவிட்டால் அவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தீர்த்துவிடுமா? அவர்களுக்கு ஏற்படுத்தப்படும் புறக்கணிப்புக்கள் முடிவுக்கு வந்து விடுமா? இது பற்றிச் சிந்திக்கவேண்டும். முதலில் அம்மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும்.
இந்நாட்டில் பொருளாதாரத்தை கணிசமான அளவில் கட்டிக்காக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நாட்டின் ஏனைய சமூகங்கள் அனுபவிக்கும் அடிப்படை உரிமைகள் பலவற்றை அனுபவிக்க வழியின்றி அல்லலுறுகின்றன. அண்மையில் இது தொடர்பாகப் பாராளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற எதிர்க் கட்சிப் பிரதம கொரடாவுமான அனுரகுமார திசாநாயக்க ஒத்திவைப்பு பிரேரணை கொண்டு வந்தார். வரவேற்கத்தக்க சம்பவமாக அது வரலாற்றில் பதியப்படவேண்டியதாகும்.
தலைகுனிந்து தொழில் செய்யும் பெருந்தோட்டத் தமிழ்த் தொழிலாளர்கள் இந்நாடு தலை நிமிர்ந்து நிற்க உழைக்கின்றார்கள் என்றார் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதி ஜி. ஸ்ரீநேசன், தோட்டத் தொழிலாளர்கள் அனுபவிக்கும் துன்பங்களைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் பட்டியலிட்டு உரையாற்றியுள்ளனர். இதுவரை தோட்டத் தொழிலாளர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் பாராளுமன்றத்தில் இவ்வாறு தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டதாகப் பதிவேதுமில்லை.
நாட்டிலேயே குறைந்த நாட்கூலிக்கு தொழில் செய்யும் அவர்களது வருமானம் ஏனைய தரப்பினர் பெறும் வருமானத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானது. வேலை செய்யும் நாட்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்படுகின்றது.
கிடைக்கும் அந்த சொற்ப சம்பளத்தை வைத்து நாட்டில் நிலவும் பொருளாதார நிலையில் எவ்வாறு வாழமுடியும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாளொன்றுக்கு நானூற்று அறுபது ரூபா என்ற சம்பள வரையறைக்கு மட்டுப்படுத்தப்பட்ட அவர்களின் சம்பளம் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்கக்கூடிய அளவு உயர்த்தப்படவேண்டியுள்ளது.
கூட்டு ஒப்பந்தம் மூலம் பெருந்தோட்டத் தொழிலாளரின் சம்பளம் மீளாய்வு செய்யப்படுவது வழக்கமாக இருந்தபோதிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறவேண்டிய சம்பள மீளாய்வு ஒரு ஆண்டு கடந்துவிட்ட நிலையிலும் கவனத்தில் கொள்ளப்படாது கிடப்பில் போடப்பட்டுள்ளது. உரிய தொழிற்சங்கங்களோ, முதலாளிமார் சம்மேளனமோ, தொழில் திணைக்களமோ அக்கறை செலுத்துவதாகத் தெரியவில்லை. ஏன் இந்தப்பாரா முகம்?
பெருந்தோட்டங்களில் வசிக்கும் தமிழ்த் தொழிலாளர்களுக்கு வருமானப் பற்றாக்குறையால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுகின்றமை தெரியவந்துள்ளது. போசாக்கின்மையால் வளர்ந்தவர்களும், வளரும் இளம் பிள்ளைகளும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாட்டிலே சமத்துவக் கல்வி, சகலருக்கும் உயர்ந்த, உரிய கல்வி, பதினான்கு வயது வரை கட்டாயக் கல்வி என்ற கொள்கை நடைமுறையிலே கொள்கையாக இருந்த போதிலும் அது தோட்டப்பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
சிறுவர்களை வேலைக்கமர்த்தும் வயதெல்லைச் சட்டம் நாட்டில் அமுலிலிருந்தபோதும் தோட்டப் பகுதி சிறு பிள்ளைகள் தொழில் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டவர்களாயுள்ளனர். பெற்றோரின் வருமானப் பற்றாக்குறையால் கல்வி கற்க வேண்டிய வயதிலுள்ள பிள்ளைகளை வீட்டு வேலைக்காக அனுப்பும் பெற்றோர் பெருமளவு தோட்டப் பகுதிகளிலுள்ளனர்.
மருத்துவமனைகளோ, பாடசாலைகளோ, நூல் நிலையங்களோ, ஏனைய பொழுதுபோக்கு வசதிகளோ அமைத்துக் கொடுப்பதில் காட்டப்படாத அக்கறை மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் மதுபான விற்பனை நிலையங்களை உருவாக்குவதில் காட்டப்பட்டுள்ளது. மதுபானக் கடைகள் பல்கிப் பெருகியுள்ள பகுதிகளாக மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளுள்ளன. இதனால் அம்மக்களில் அதிகமானவர்கள் மதுவுக்கு அடிமைப்பட்டவர்களாகவேயுள்ளனர்.
சிசு மரணவீதமும் அதேபோல் வாழ்வின் வயதெல்லை குறைந்ததுமாக மலையகப் பெருந்தோட்டப் பகுதி விளங்குகின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு வழங்கப்படும் சுகாதார வசதிகள் இவர்களுக்கும் உரியபடி வழங்கப்படுமானால் இந்நிலையிலிருந்து மீளமுடியும், மீட்கமுடியும்.
குடியிருப்பு பெரும் பிரச்சினையாயுள்ளது. லயன் அறைகள் என்று சொல்லப்படும் தோட்ட வரிசை வீடுகளிலேயே அவர்கள் பெரும்பாலும் வாழ்கின்றனர். தனி வீட்டுத் திட்டம் வருகின்றது. வரப்போகின்றது என்று கூறப்படுகின்றது. அது எப்போத அனைத்துத் தோட்ட மக்களுக்கும் கிடைக்குமென்று காலவரையறை எதுவும் இல்லாத நிலையும் காணப்படுகின்றது.
உணவு, கல்வி, தொழில், வருமானம், குடியிருப்பு, சுகாதாரம், குடிநீர், போக்குவரத்து, மின்சாரம்,காணி பாதுகாப்பு என்பவற்றில் பல்வேறு குறைபாடுகளுடன் வாழும் பெருந்தோட்ட தமிழ்த் தொழிலாளரின் பிரச்சினைகள் உரிய முறையில் ஆராய்ந்து அணுகப்பட்டு தீர்வுகள் காணப்பட்டால் மட்டுமே அம்மக்கள் நிம்மதியாக வளமான வாழ்வு வாழ வழியேற்படும்.
தொழிற்சங்கம், அரசியல் என்று அம்மக்களைப் பிளவுபடுத்துவதை விட அம்மக்களது அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக்கொடுக்க ஒன்றுபட்டு உழைப்பதே மனிதாபிமானமாகவும், நாகரிகமாகவும் அமையும். ஆகவே இன்றைய முதல்தேவை முக்கிய தேவை.
நன்றி- தினகரன்

மலையகத்தின் அபிவிருத்திக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதி

இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்காக் 43.7 யூரோ மில்லியன் மதிப்பிலான நிதியுதவியையும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்க முன்வந்துள்ள் ஐரோப்பிய ஒன்றியம் மலையக பிரதேசங்களின் கிராம அபிவிருத்திக்காக 30 மில்லியன் நிதியுதவியை வழங்கவும் முன்வந்துள்ளது. 

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கொழும்பிலுள்ள நிதியமைச்சில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான ஆணையாளர் நெவென் மிமிகா ஆகியோரின் தலைமையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடலில் மலையக பெருந்தோட்ட மக்கள் பெருவாரியாக வாழும் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களின் கிராம அபிவிருத்திக்காக 30 யூரோ மில்லியன் பெறுமதியான நிதியுதவிக்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கையின் வர்த்தக நடவடிக்கைகளுக்கான செயல்திட்டத்திற்காக 8 யூரோ மில்லியன் நிதியும் தேசிய குடிநீர் மற்றும் நீர்வடிகாலமைப்பு சபைக்காக 5.7 யூரோ மில்லியன் மதிப்பிலான தொழில்நுட்ப உதவியை வழங்கவும் ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி வரிச்சலுகையும் விரைவில் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

ஏற்றுமதிப்பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வரிச்சலுகை கிடைப்பதற்கான ஜிஎஸ்பி நடைமுறை, இலங்கையின் மனித உரிமை விவகாரங்களை காரணம் காட்டி, 2010-ம் ஆண்டில் ரத்துசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தம் குறித்து உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான ஆணையாளர் நெவென் மிமிகா இலங்கையில் நிலையான அமைதிக்கும் முன்னேற்றத்துக்கும் முக்கிய முன்நிபந்தனையாக இருக்கின்ற நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம் காட்டுகின்ற அக்கறைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான சிறந்த தருணம் இன்று ஏற்பட்டிருக்கின்றது என்றார்.