காலத்துக்கு ஏற்றவகையில், பெருந்தோட்டத் தொழிற்றுறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். அவ்வாறு மாற்றங்கள் கொண்டுவரப்படும் பட்சத்திலேயே, தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட சேவையாளர்கள் கவனத்தோடும், கரிசனையோடும் தொழில் செய்யக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும்' என்று, பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரும், சடடத்தரணியுமான கா.மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
'எனினும், பெருந்தோட்ட சேவையாளர்களுக்கு அந்த வாய்ப்பு இன்னும் சரியாக அமையவில்லை. அதனை பெற்றுக்கொள்வதற்கான தகுதியை அமைத்துக்கொள்வதற்காக, அத்துறை சார்ந்தவர்கள், ஓரணியின் கீழ் அணித்திரள வேண்டும்' என்றும், அவர் கூறினார்.
பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸின் நிறைவேற்றுக்குழு கூட்டம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான செளிமிய பவனில், நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் கூறிய அவர்,
'இன்று, பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, பயிற்சிகள் பயிற்சியுடனான கூடிய சம்பள அதிகரிப்பு, கௌரவமான தொழில்போக்கும் பதவி உயர்வும் கிடைக்கின்றன. ஆனால், பெருந்தோட்ட சேவையாளர்களுக்கு ஒருவித வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை என்பது அவர்களிடம் இருந்து வரும் குற்றச்சாட்டுகளுக்கூடாக நிரூபணமாகின்றது.
'தோட்ட சேவையாளர் துறையில் புதியவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதில்லை. மாறாக குறைந்த சம்பளத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓய்வுபெற்றவர்களே கடமைக்கு அமர்த்துவதும் அவர்களிடமிருந்து கூடுதலான கடமைகளைப் பெற்றுக்கொள்வதும் இயல்பாகிவிட்டது.
தோட்ட சேவையாளர்கள் ஓய்வுபெறுகின்றபோது, அவர்களுக்குரிய சேவைக் கொடுப்பனவுகளை கொடுத்து முடிப்பதற்கு முன்பதாகவே, அவர்கள் வாழ்ந்த விடுதிகள் மீள கோரப்படுகின்றன. அதனை உரிய நேரத்தில் கொடுக்காவிட்டால, சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதும் சாதாரணமாகி விடுகின்றது. இது இவர்களுக்கு செய்யப்படும் பெரும் அநீதியாகும்.
மேலும், புதிதாக இணைத்துக் கொள்ளப்படுபவர்கள், வெறுமனே நாள் சம்பளத்துக்கே நியமனம் பெறுகின்றார்கள். இது கண்டித்தக்க ஒன்றாகும்.
கூட்டொப்பந்த அடிப்படையில் இவர்களுக்கும் ஏனையவர்களுக்கும் நிரந்தரமான சம்பளம் வழங்கப்படுவதுடன், அனைத்து சலுகைகளும் வழங்கப்பட வேண்டும். தோட்டச் சேவையாளர்களை தோட்ட நிர்வாகங்கள் திடீர் திடீரென இடமாற்றம் செய்கின்றன. இதனை எம்மால் அனுமதிக்க முடியாது. அவர்கள் தொடர்ச்சியாக 5 வருடங்கள் தாம் வதியும் தோட்டத்தில் சேவை செய்தப் பின்னரே, வேறொரு இடத்துக்கு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
ஆகவே, தோட்ட சேவையாளர்கள் தமக்கான உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், அங்கிகரிக்கப்பட்ட சேவையாளர்களாக தொடர்ந்து செயற்பட அனைவரும் காலம் தாழ்த்தாது பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸில் ஒன்றிணைவது அவசியமானது.
பெருந்தோட்ட சேவையாளார் காங்கிரஸ், சக்தி வாய்ந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸூடன் இணைந்த தொழிற்சங்கமாகும். அப்போதுதான், தோட்ட சேவையாளர்களுக்கான உரிய உரிமைகளையும், சலுகைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
இல்லையேல் தொடர்ந்தும் தோட்ட நிர்வாகத்தின் அடக்கு முறைக்கு செவிசாய்க்கும் நிலைமை தோன்றிவிடும்' என்றார்.