வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளுங்கள்
ஒவ்வொரு ஆண்டு ஜூன் முதலாம் திகதி தொடக்கம் வாக்காளர் இடாப்புக்களை மீளாய்வு செய்யும் பணிகள் கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.
கிராம சேவகர் மூலம் விநியோகிக்கப்படும் விண்ணப்பப் படிவங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கிராம சேவகரிடம் ஒப்படைக்க வேண்டும். நாடு முழுவதிலும் இவ்வாறான நடைமுறைகளே பின்பற்றப்படுகிறது.
தேர்தல் காலம் வந்தால்தான் நம்மில் பலர் தமது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாமை –குறித்து குறை கூறுவோரும் இருக்கிறார்கள். குறிப்பாக பெருந்தோட்டங்களில் வாழும் பெரும்பாலானோர் வாக்காளர் இடாப்பில் தமது பெயர் விபரங்களைப் பதிவு செய்து கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை.
வாக்காளர் பட்டியலில் தமது பெயர்களைப் பதிவு செய்து கொள்வதன் மூலம் தேர்தலில் வாக்களிப்பதைத் தவிர வேறு அரச, நிர்வாக ரீதியில் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் பற்றிய தெளிவில்லாதவர்களாகவே இன்னமும் இருக்கிறார்கள். தமது பெயர்களை பதிவு செய்யாமல் வாக்களிப்பதற்கு வாக்குச் சீட்டு கிடைக்கவில்லை. வாக்களிப்பு நிலையம் வரை சென்று கடமையில் இருக்கும் உத்தியோகத்தர்களால் திருப்பியனுப்பப்படுகின்றனர்.
தற்போது கிடைத்துள்ள இச்சந்தர்ப்பத்தை பெருந்தோட்ட வாக்காளர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முதல் வேலையாக வாக்காளர் பட்டியலில் தமது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலமே உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுகிறது. உங்களது பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ள ஒரு வேலைவாய்ப்பை பெற்றுக் கொள்ள, அரச நிர்வாகத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இந்த வாக்குரிமை மிகவும் அவசியமான தொன்றாகும். உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் தான் தேர்தல் காலங்களில் உங்களைத் தேடி ஐயாமார் வருவார்கள். நீங்களும் மதிப்புக்குரியவர்களாக தேர்தல் காலங்களில் மட்டும் இருப்பீர்கள்.
தேர்தல் காலங்களில் அரசியல் வாதிகள் தோட்டப் பகுதிகளுக்கு வருவார்கள். வழமையாக கொடுக்கும் வாக்குறுதிகளை கொடுத்து வாக்குகளை பெறுவார்கள். தேர்தல் முடிந்தவுடன் எல்லாம் முடிந்துவிடும். அதன்பின் இம்மாதிரியான சமூக சேவைகள் செய்வதற்கு அரசியல்வாதிகள் நேரடியாக வந்து உங்களுக்கு சேவை செய்வதில்லை. செய்தால் பாராட்ட வேண்டும் அப்படி நடப்பது குறைவு.
1988 ஆம் ஆண்டுக்கு முன் பெருந்தோட்டப் பகுதிக்கு தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் படையெடுப்பது குறைவாக காணப்பட்டது. மலையக மக்களிடம் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தமையே அதற்கான காரணமாகும். தோட்டத் தொழிலாளர்களுக்கும் நன்கு தெரியும்.
1977 ஆம் ஆண்டு தனியொரு மனிதனாக மலையக மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த மறைந்த இ. தொ. கா. தலைவரும் அமைச்சருமான சௌமிய மூர்த்தி தொண்டமான் எடுத்த நடவடிக்கை காரணமாக 1988 ஆம் ஆண்டு முதல் இலங்கையிலுள்ள மலையக மக்களுக்கு முதல் இலங்கையிலுள்ள மலையக மக்களுக்கு வாக்களிப்பதற்குத் தகுதியை பெற்றுக் கொடுத்தார். இதன் மூலம் பிரதேச சபை, நகர சபை, மாகாண சபை, நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு மலையக மக்கள் செல்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்கு வாக்குரிமை அவசியம். கிடைத்த வாக்குரிமையை மக்கள் தொடர்ந்து பாதுகாப்பது மக்களின் கடமையாகும்.
படித்த இளைஞர், யுவதிகள் பெருந்தோட்டப் பகுதியில் இருக்கிறார்கள். ஏன் ஒவ்வொரு தோட்டத்திலும் ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். இதேபோன்று தோட்டங்களில் தொழிற்சங்க தோட்ட கமிட்டிகள் இயங்குகிறது. மற்றும் பல மன்றங்கள், மகளிர் இயக்கங்கள் இருக்கின்றன.
இவர்கள் நினைத்தால் இதனை வெற்றிக் கொள்ள முடியும். ஒவ்வொரு தோட்டத்திலும் ஒருநாள் சிரமதானப் பணியைப் போல நினைத்து குடியிருப்புக்களுக்குச் சென்று வாக்காளர் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க முடியும். இதன் மூலம் ஒவ்வொரு தோட்டத்திலும் மக்களின் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
தேசிய அடையாள அட்டை வாக்களிப்பதற்கு அவசியம் தேவை. விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள இடத்தில் தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தை கட்டாயம் குறிப்பிட வேண்டும். வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்வதினால் பல நன்மைகள் உண்டு.
அவையாவன வாக்களிப்பது தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு வதிவிடத்தினை உறுதிப்படுத்துவது விடயத்திலும் தொழில் சம்பந்தமான வேலைவாய்ப்பு பெறுவதிலும் இன்றைய சூழ்நிலையில் இருப்பிடத்தை உறுதிப்படுத்தி நன்சான்றிதழ் பெறுவதற்கும், பிள்ளைகளை பாடசாலைக்கு; சேர்ப்பதற்கும் முக்கியமாகும். ஆகவே, வாக்காளர் இடாப்பை பெயர்களை பதிவு செய்வதில் உள்ள நன்மைகளாகும் என்பதால் வாக்காளர் இது விடயத்தில் அலட்சியப்படுத்தாமல் உரிய கால எல்லைக்குள் குறிப்பிட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உடனடியாக உங்கள் பகுதி கிராம சேவகரிடம் கையளிக்க வேண்டும்.
குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் சில மக்கள் எல்லாமே நமது கைக்கு வந்து சேர வேண்டும் என்ற மனப்போக்கில் இல்லாமல் தாங்கள் இந்த விசயத்தில் கவனம் செலுத்தி முடிந்தளவு தோட்டங்களில் படித்த இளைஞர்,யுவதிகளிடம் மற்றும் விசயம் தெரிந்தவர்களிடம் சென்று விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய் வதற்கு முயற்சி செய்ய வேண்டும். இது சம்பளப் பிரச்சினை இல்லை. தொழிற்சங்கங்கள் பேச்சு வார்த்தை நடத்தி பெற்றுக் கொடுப்பதற்கு இது உங்கள் அரசியல் உரிமை பிரச்சினை. இதில் நீங்கள் தான் கூடிய அக்கறை செலுத்த வேண்டும். இதனை ஒவ்வொருவரும் தெரிந்து செயல்பட வேண்டும்.
டி.வி. குமார்