சம்பள உயர்வு கோரிக்கைக்கு கையெழுத்து வேட்டை – ஆர்.எம். கிருஷ்ணசாமி
தோட்டத் தொழிலாளர்களின் தினசரி சம்பளம் 500 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும் என்று கோரி தொழிலாளர்களின் கையெழுத்து பெற்று மகஜரை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நடவடிக்கையில் விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் மேற்கொண்டுள்ளதாக அச் சங்கத்தின் தலைவர் ஆர்.எம். கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இதுவரை ஊவா மாகாணத்தில் 10,000 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் கையெழுத்து பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இம் மாதம் 30ம் திகதியுடன் முடிவடைகிறது. குறிப்பாக அடிப்படை சம்பளமென்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் என்றும் ஒரே துறையில் கடமை புரியும் தொழிலாளர்களுக்கு வௌ;வேறு தொகையான சம்பளம் வழங்கப்படுகிறது. 24 நாட்கள் வேலை செய்தால் அடிப்படை சம்பளம் ரூபா 200, ஊக்குவிப்பு போனஸ் ரூபா 70, நாணயமாற்றுக் கொடுப்பனவு ரூபா 30 என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. ஒரு தொழிலாளிக்கு மாதமொன்றுக்கு ரூபா 6960 சம்பளம் கிடைக்க வேண்டும். எனினும் துரதிஷ்டவசமாக ஒரு தொழிலாளி 23 நாட்கள் வேலை செய்தால் அடிப்படை சம்பளம் 200 ரூபா மாத்திரமே வழங்கப்படுகின்றது. எனவே மாதமொன்றுக்கு ரூபா 4370 மாத்திரமே ஒரு தொழிலாளி பெற்றுக்கொள்கின்றார். ஒரு தொழிலாளி ஒரு நாள் வேலையை இழந்தால் கம்பனிகள் இலாபமாக 2590 ரூபாவை பெறுகின்றன. இது தொழிலாளர்களுக்கு மிகப் பாதகமாக அமைகிறது.அத்துடன் அடிப்படை சம்பளம் 200 ரூபாவுக்கு மட்டுமே. ஊழிய சேமலாபநிதி, போனஸ், மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் இந்த ஒப்பந்தத்திற்கு பின் வாழ்க்கைச் செலவுக்கான கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளன.
எனவே இந்த ஒப்பந்தத்தில் தொழிலாளர் விரோத சரத்துக்கள் நீக்கப்பட வேண்டும். அது மாத்திரமின்றி இன்றை வாழ்க்கை செலவுக்கு ஏற்ப தொழிலாளி ஒருவரின் நாட்சம்பளம் 500 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும். அது அரசாங்கம் தலையிட்டால் மாத்திரமே வெற்றி பெறும் என்றார்.