Wednesday, February 10, 2016

ஒன்றிணைந்த வடக்கு கிழக்கில் அதியுச்ச அதிகார பகிர்வு

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது ஒன்றிணைந்த வடக்கு கிழக்கில் காணி பொலீஸ் அதிகாரம் உள்ளிட்ட அதியுச்ச அதிகார பகிர்வு அவசியம் என கிளிநொச்சியில் சமூக மேம்பாட்டு அமையம் வலிறுத்தியுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. முருகேசு சந்திரகுமார் அவர்களின் தலைமையில் சமூக மேம்பாட்டு அமையத்தின் உறுப்பினர்களால் அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கான ஆலோசனைகள் இன்று செவ்வாய்கிழமை கிளிநொச்சியில்  புதிய அரசியலமைப்பு யோசணைகள்  பெறும் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.  
புதிய அரசியலமைப்பானது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமக்களுடையதும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்புடன் எல்லாவகையான பாகுபாடுகளுக்கும் எதிரான உச்சப் பாதுகாப்பை வழங்கும் பொறிமுறைகளைக் கொண்டதாக அமைய வேண்டும்.
இன, மொழி, மத, சாதியக் கட்டமைப்பு, பால்நிலை பாகுபாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு சுதந்திரம், சமத்துவம், சமூகநீதி, சமூகப்பாதுகாப்பு என்பன ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலமைப்பின் மூலம் உறுதிசெய்யப்பட வேண்டும். சர்வதேச மனித உரிமைச்சட்டங்களின் அனைத்து சரத்துக்களும் அரசியலமைப்பில் உள்வாங்கப்படுவதன் ஊடாக ஒவ்வொரு தனிமனிதனுடையதும் சமூக, பொருளாதார, அரசியல், கலாசார உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.
உள்வாங்கப்படும் அடிப்படை மனித உரிமைகள் பல்லினத்தன்மை கொண்ட நாடு எனும் அடிப்படையில் நடைமுறையைக் கொண்டிருப்பதற்கான பொறிமுறைகளும், புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தத்தில் உள்ளடங்கியிருத்தல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
தேசிய இனங்கள்
மொழி, சமயம், பண்பாட்டு மானிடவியல் அடையாளங்களுடனான சமூகங்களின் தனித்துவம் அங்கீகரிக்கப்பட்டு அவ் அடையாளங்களுடனான தேசிய சமூகங்களாக அரசியலமைப்பில் உறுதிசெய்யப்பட வேண்டும்.
01.சிங்களவர்
02.தமிழர்
03.முஸ்லீம்கள்
04.மலையகத்தமிழர்
05.மலே இனத்தவர்
06.பறங்கியர்
ஒவ்வொரு தேசிய சமூகங்களும் அவற்றின் விசேட தன்மைகளையும், அடையாளங்களையும் அரசியலமைப்பு அங்கீகரித்து உத்தரவாதப்படுத்த வேண்டும். இதன்மூலமே வேற்றுமையில் ஒற்றுமை எனும் கோட்பாட்டின் அடிப்படையில் பல்லினத்தன்மை அங்கீகரிக்கப்பட்டு நீடித்த சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் எட்ட முடியும்.
எண்ணிக்கையிலான சிறுபான்மைத்  தேசிய இனங்களின் சமத்துவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு தேசிய இனங்களின் சபை (ர்ழரளந ழக யேவழையெடவைநைள) இனப்பிரிவுகளின் சம எண்ணிக்கையிலான சபை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இது பாராளுமன்றுக்கு வெளியாகவும் ஆனால் சமமான அந்தஸ்தை கொண்டதாகவும் அமைதல் வேண்டும்.
தேசிய இனங்களின் சபையானது தேசிய இனம் ஒன்றின் மொழி உரிமை, பொருளாதாரம், பண்பாட்டு விழுமியங்களின் பாதுகாப்பு என்பவற்றின் மீது நிகழ்த்தப்படும் சட்டவாக்கம், அழுத்தம் என்பவற்றை தடுத்து நிறுத்துவதற்கான அதிகாரத்தைக் கொண்டிருப்பதோடு பொருத்தமான சட்டவாக்கங்களையும் முன்வைக்க வேண்டும்.
நீதித்துறைக் கட்டமைப்பில் உச்சநீதிமன்றத்தில் இனத்துவ விவகாரங்களுக்கான பிரிவு ஒன்றும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரிவு ஒன்றும் தனித்துவமாகச் செயற்படக்கூடிய ஏற்பாடுகள் அரசியல் உரிமை மூலம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.
அரச கரும மொழிகள்
அரச கரும மொழிகளாக சிங்களம், தமிழ் என்பனவும் இணைப்பு மொழியாக ஆங்கிலமும் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ள போதும் நடைமுறையில் அது இதுவரை அமுலாக்கம் பெறவில்லை என்பது பகிரங்கமான உண்மையாகும். எனவே, இலங்கையின் ஆள்புலத்தில் வாழும் அனைத்து தேசிய இனங்களும் தமது தாய் மொழியில் நிர்வாகக்கருமங்களை ஆற்றக்கூடிய பொறிமுறை வலுப்படுத்தப்பட வேண்டும்.
இதன் அடிப்படையில் அரச கருமமொழிகள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டு மத்திய, மாகாண, மாவட்ட, பிரதேச மட்டங்களில் நிர்வாக நீதிமன்ற மொழியாக தாய்மொழி பயன்படுத்தப்படுதல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
கல்விச் செயற்பாட்டில் காணப்படும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் அமுலாக்கப்பட்டுள்ள மும்மொழித்திறன் தேர்வை முன்னுதாரணமாகக் கொண்டு க.பொ.த சாதாரண தரம் வரை  கலைத்திட்டத்தில் மும்மொழிக் கற்கை அரசியலமைப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
தேர்தல் முறை
இலங்கையின் சமாதான சகவாழ்வு உறுதிசெய்யும் முறையிலான சீர்திருத்தங்களை ஏற்பாடு செய்யவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுதிவாரியான பிரதிநிதித்துவத்திற்கு மேலதிகமாக எண்ணிக்கையிலான சிறுபான்மை தேசிய இனங்களின் பிரதிநிதித்துவம், சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவம் போன்ற கலப்பு முறைப் பிரதிநிதித்துவம் மூலமே ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படும். எனவே, அரசியலமைப்பின் ஊடாக இவை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
மகளீர் பிரதிநிதித்துவத்துக்கான பால்நிலைச் சமத்துவத்தின் முன் நிபந்தனையாக உள்ளூராட்சிச் சபைகளில் மகளீருக்கான ஒதுக்கீடு மூன்றில் ஒன்றாகவும், மாகாணசபைகளில் ஐந்தில் ஒன்றாகவும், பாராளுமன்றில் ஆறில் ஒன்றாகவும் மகளீர் பிரதிநிதித்துவ ஒதுக்கீடு அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக மூன்றில் ஒரு பங்கு உள்ளூராட்சி சபைகளின் தலைமைப்பொறுப்பை பெண்கள் வகிக்கக்கூடிய அடிப்படையில் அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
எண்ணிக்கையிலான சிறுபான்மை தேசிய இனங்களின் பிரதிநிதித்துவ எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமே அன்றி குறைக்கப்படலாகாது.

அதிகாரப்பகிர்வு
வடக்குக் கிழக்கு இணைந்ததான பிராந்திய சபை அரசியலமைப்பு மூலம் உறுதிசெய்யப்படல் வேண்டும். இச்சபைக்குள் காணப்படும் எண்ணிக்கையிலான சிறுபான்மைத் தேசிய இனங்களின் சிறப்புரிமைகள் மற்றும் பாதுகாப்பு உறுதிசெய்யப்படல் வேண்டும்.
அதிகாரப்பகிர்வு தொடர்பான விடயங்கள் அரசியலமைப்பில் தெளிவான வியாக்கியானம் உடையவையாக அமைதல் வேண்டும். மயக்கமான கருத்துக்கள், தப்பான மொழிமாற்றத்திற்கான சந்தர்ப்பங்கள் கொண்டவையாக இவ்விடயங்கள் அமையக்கூடாது.
மாகாணசபையின் நிறைவேற்று அதிகாரம் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாணசபையின் காலங்களில் மாகாணசபையின் முதலமைச்சருக்கு உரியதாகவே வரையறை செய்யப்பட வேண்டும்.
மாகாணசபைகள் முதலமைச்சர் நிதியம், அவசரகால நிதியம், இடர் முகாமைத்துவ நிதியம், மாகாண அபிவிருத்தி நிதியம் என்பவற்றை மாகாணசபைகள் ஸ்தாபிப்பதற்கும், செயற்படுத்துவதற்குமான அதிகாரம் அரசியலமைப்பின் மூலம் உறுதிசெய்யப்பட வேண்டும்.
மாகாணசபைக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட விடயங்களில் மத்திய அரசின் ஆலோசனை தவிர்ந்த நேரடித்தலையீடுகள் இடம்பெறாது இருப்பதை அரசியலமைப்புத் திருத்தம் உறுதிசெய்தல் வேண்டும்.
மாகாணசபையின் ஆட்புலத்திற்கு உட்பட்ட மத்திய அரசின் விடயங்களை நடைமுறைப்படுத்துதலில் குறித்த மாகாண முதலமைச்சரின் ஆலோசனைகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதையும் அரசியலமைப்புச் சீர்திருத்தம் உள்வாங்க வேண்டும்.
இதேபோன்று உள்ளூராட்சிச் சபைகளின் கையாள்கைக்கு ஒதுக்கப்பட்ட விடயங்களில் மத்திய அரசு மற்றும் மாகாண அரசுகளின் நேரடித்தலையீடு தவிர்க்கப்படுதல் அரசியலமைப்புச்; சீர்திருத்தத்தில் உறுதிசெய்யப்பட வேண்டும்.
மத்திய அரசுக்கும் மாகாண அரசுகளுக்கு இடையேயும், மாகாண அரசுகளுக்கும் உள்ளூராட்சி அமைப்புகளுக்கு இடையேயும் ஏற்படும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான அதிகாரப்பகிர்வு ஆணைக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.
இது சுயாதீனமானதும், சட்ட வலுவுடைய நிறுவனமாகவும் செயற்படுவதை அரசியலமைப்புச் சீர்திருத்தம் உறுதிசெய்ய வேண்டும்.
மலையக மக்களின் சிறப்புரிமை (கிளிநொச்சி மாவட்டம் சார்பானது)
கிளிநொச்சி மேற்கில் 16 கிராமசேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேசம், ஆனைவிழுந்தான், ஜெயபுரம் கிராம அலுவலர் பிரிவுகள் மற்றும் கிளிநொச்சி கிழக்கில் உழவனூர், புதிய புன்னைநீராவி, தருமபுரம், கல்மடுநகர், மாயவனூர், இயக்கச்சியில் கொற்றாண்டார்குளம், லுஆஊயு குடியிருப்பு ஆகிய மேற்படி பிரதேசங்களில் மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்து மாவட்டத்தின் சனத்தொகையில் ஏறக்குறைய 45 வீதமான மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் தனித்துவமான சமூக, பொருளாதார, கலாசார கட்டமைப்பைக் கொண்டு இருக்கின்றனர். எனினும் இவர்கள் பரந்துபட்ட ஏனைய தமிழ் மக்களின் இனத்துவ அடையாளங்களுடன் வாழ்கின்ற போதும் இவர்களுக்கான தனித்துவம் மிக்க அடிப்படை பிரச்சினைகளும், தேவைகளும் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார நிலைமைகள், குடியிருக்கும் பிரதேசங்களின் அபிவிருத்தி என்பவற்றில் முன்னுரிமை பெறவேண்டிய அளவு நலிவுற்றவர்களாக காணப்படுகின்றனர்.
எனவே இவர்கள் இலங்கையில் வாழும் மலையகத் தமிழர் என்கின்ற தேசிய இனத்துவ அடையாளங்களுக்குள் உள்வாங்கப்படுவதுடன் இவர்களுடைய நலன்களுக்கும் முன்னுரிமை பெறப்படும் வாய்ப்பு உள்ளதால் இந்த தனித்துவமான தேசிய அடையாளத்தை மலையக மக்களுடன் இணைந்து பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை அமையப்போகும் புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்க வேண்டும் என கோருகின்றோம்.
அத்துடன் இவர்களுக்கான அரசியல், சமூக, பொருளாதார அந்தஸ்தையும் பிரதிநிதித்துவத்திற்கான இடத்தையும் வழங்குவதற்கு இடமளிக்கப்பட வேண்டும்.
வளப்பகிர்வு
எமது நாட்டின் வளங்களான கனிமவளங்கள், ஆளனிவளங்கள், நீர்நிலைகள், நீர்வளங்கள், நிலவளங்கள், வனவளங்கள் போன்றவை தேவைக்கேற்ப வளப்பகிர்வுகளைப் பங்கிடுவதற்கு தேவையின் அடிப்படையில் ஒரு பொதுக்கொள்கை வகுக்கவேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது. இதனைப்பெறுவது அல்லது பயன்படுத்துவது ஒவ்வொருவருடைய அடிப்படை உரிமையாகும். அடிப்படை உரிமையை மீறாத வகையில் ஒவ்வொரு சமூகத்திற்கும் நியாயம் கிடைக்கத்தக்க வகையில் பங்கீடு செய்வதை புதிய அரசியலமைப்பு உறுதி செய்யவேண்டும்.
விவசாயப் பொருளாதார நாடான எமது நாட்டின் விவசாயிகளினுடைய அடிப்படை உரிமைகள் அரசியல் சாதனத்தின் ஊடாக பாதுகாக்கப்பட வேண்டும். தேவை கூடிய பிரதேசங்கள் அல்லது அபிவிருத்தியில் பின்தங்கிய பிரதேசங்கள், அபிவிருத்தி செய்வதற்கு விசேட ஏற்பாடுகள் ஊடாக அபிவிருத்தி செய்து சமச்சீராக எல்லாப் பிரதேசங்களும் எல்லா வளங்களும் உடைய பிரதேசங்களாக மாற்றி எல்லா மக்களுடைய அடிப்படை உரிமைகளையும் புதிய அரசியலமைப்பு பாதுகாக்க வேண்டும்.
அரசியலமைப்பில் சொல்லப்பட்ட விடயங்கள் அனைத்தும் முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதிசெய்வதற்கு அல்லது நடைமுறைப்படுத்துவதற்கு ஓர் விசேட ஆணைக்குழு அமைக்க வேண்டும் என்பதையும் அரசியலமைப்பு உறுதிசெய்ய வேண்டும்.

பொதுச்சேவைகள்.
எமது நாட்டின் புதிதாக அரச சேவைகளுக்குள் உள்வாங்கப்படுபவர்கள் அனைவரும் தேசிய மொழிகளான சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் க.பொ.த சாதாரண சித்தியை வலியுறுத்துவதன் மூலம் தேசிய பொதுச்சேவைகள் வினைத்திறனுள்ளதாக அமைவதையும், நல்லிணக்கத்தையும் உறுதிசெய்வதாக புதிய அரசியலமைப்பு அமையவேண்டும்.

பொதுமக்களின் பாதுகாப்பு
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாட்டின் இன விகிதாசாரத்திற்கு அமைய வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படல் வேண்டும்.
பொலிஸ் நியமனங்களின் போதும் இன விகிதாசாரங்கள் பேணப்படல் வேண்டும். அவ்வாறே இராணுவம் கடற்படை விமானப்படை போன்றவற்றின் ஆட்சேர்ப்பு அல்லது நியமனங்களின் போது நாட்டின் இன விகிதாசாரத்திற்கு அமைய நியமனங்கள் செய்வதன் மூலம் நல்லிணக்கத்தையும், பொதுமக்கள் பாதுகாப்பையும் உறுதிசெய்யக்கூடிய அரசியலமைப்புத் திருத்தத்தை வேண்டுகிறோம்.
உழைப்பாளர்களையும், உற்பத்தியாளர்களையும் பாதிக்காதவாறும் பாதுகாப்பானதாகவும் அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறாத வகையிலும் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றம் செய்வதை அரசியல் சாதனத்தின் ஊடாக உறுதி செய்தல் வேண்டும்.
பாரிய அபிவிருத்திகளின் போதும் பொருளாதார கொள்கைகளைச் சீரமைக்கும் போதும் அதுதொடர்பான சமூகங்களின் பிராந்திய ரீதியாக கருத்துக்கணிப்பு பெற்று மேற்கொள்வதை உறுதிசெய்யும் பொறிமுறையை ஏற்படுத்தி அடிப்படை உரிமைகளைப் பேணுவதனூடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.

திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தருக்கான விண்ணப்ப முடிவுத்திகதி 19 வரை

திவி­நெ­கும அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­த­ருக்­கான விண்­ணப்ப முடிவு திகதி இம்­மாதம் 19 ஆம் திகதி வரை நீடிக்­கப்­பட்­டுள்­ளது. அதே­வேளை வய­தெல்­லையும் 30 இல் இருந்து 35 வரை உயர்த்­தப்­பட்­டுள்­ளது. எனவே விண்­ணப்­பிக்க தவ­றி­ய­வர்­களும் வய­தெல்லை பிரச்­சி­னைக்­கு­ரி­ய­வர்­களும் இவ்­வாய்ப்பை தவ­றாது பயன்­ப­டுத்­திக்­கொள்­ளு­மாறு ஐக்­கிய தேசிய முன்னணியின் பதுளை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் உப­த­லை­வ­ரு­மா­கிய அ. அர­விந்­த­குமார் தெரி­வித்­துள்ளார்.
அவர் மேலும் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது, சுமார் 7000 திவி­நெ­கும அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர் நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­ட­வி­ருக்கும் இவ்­வே­ளையில் மலை­ய­கத்தில் படித்த இளைஞர், யுவ­தி­களை அதி­க­ளவில் உள்­வாங்­கப்­பட வேண்­டு­மென்ற இலக்­கோடு தமிழ் முற்­போக்கு கூட்­டணி செயற்­பட்டு வரு­கின்­றது. எமது கூட்­ட­ணியின் தலை­வரும், அமைச்­ச­ரு­மா­கிய மனோ­க­ணேசன் இவ்­வி­டயம் தொடர்­பாக அமைச்­ச­ர­வை­யிலும் அதிக அழுத்­தத்தை பிர­யோ­கிக்­க­வுள்ளார். தற்­போது இந்­நாட்டில் சுமார் 19 இலட்சம் பேர் சமுர்த்தி நிவா­ர­ணத்தின் பய­னா­ளி­க­ளாக உள்­ளனர்.
ஆனால் துர­திஷ்­ட­வ­ச­மாக மிக­வ­றுமை கோட்­டிற்கு கீழுள்ள மலை­யக மக்­களோ இதில் மூவா­யி­ரத்­திற்கும் குறை­வா­ன­வர்­க­ளா­கவே பய­னா­ளி­க­ளா­க­வுள்­ளனர். எனவே திவி­நெ­கும அபி­வி­ருத்தி உத்­தி­யே­ா­கத்­தர்கள் எம்­ச­மூ­கத்­தி­லி­ருந்து அதி­க­ளவில் நிய­மனம் பெரும் பட்­சத்தில் சமுர்த்தி நிவா­ர­ணத்தை பெறு­ப­வர்­களின் எண்­ணிக்­கை­யையும் உணர்த்­து­வ­தற்கு இந்­நி­ய­மனம் ஏது­வாக அமையும். கீழ் கண்ட தக­மை­களை உடை­ய­வர்கள் தவ­றாது விண்­ணப்­பிக்க வேண்டும்.
க.பொ.த சாதா­ர­ண­தர பரீட்­சையில் தமிழ், கணிதம் அடங்­க­லாக நான்கு பாடங்­களில் திறமைச் சித்­தி­யுடன் ஒரே தட­வையில் ஆறு பாடங்­களில் சித்­தி­ய­டைந்­தி­ருத்தல் வேண்டும். க.பொ.த உயர்­தர பரீட்­சையில் 1 பாடத்­தி­லா­வது சித்­தி­ய­டைந்­தி­ருத்தல் வேண்டும். வய­தெல்லை:- விண்­ணப்­பங்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­படும் இறுதித் திக­திக்கு 18 வய­துக்கு குறை­யா­மலும் 30 வய­துக்கு மேற்­ப­டா­மலும் இருத்தல் வேண்டும். பரீட்சைக் கட்­டணம் :- ரூபா 500/– (திவி­நெ­கும சமுர்த்தி வங்­கியில் செலுத்­தலாம்)
மேற்­படி பத­விக்கு விண்­ணப்­பிக்கும் விண்­ணப்­ப­தா­ரர்கள் பூர­ணப்­ப­டுத்­தப்­பட்ட விண்­ணப்­ப­ப்ப­டி­வங்­களை பதி­வாளர் ஸ்ரீ ஜெய­வர்­தன விஷ்வ வித்­தி­யா­ல­யம், கங்­கொ­ட­வி­ல, நுகே­கொட என்ற விலா­சத்­திற்கு அனுப்­புதல் வேண்டும்.
விண்­ணப்பம் அனுப்­பப்­படும் கடி­த­வு­றையின் இட­து­பக்க மேல் மூலையில் திவி­நெ­கும அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர் சேவைக்கு ஆட்சேர்ப்­ப­தற்­கான திறந்த போட்டிப் பரீட்சை 2016 என தெளிவாக குறிப்­பிட்டு 19.02.2016ஆம் திக­தி­யன்றோ அல்­லது அதற்கு முன்­ப­தா­கவோ கிடைக்­கக்­கூ­டி­ய­வாறு பதி­வுத்­த­பாலில் அனுப்பி வைக்­கப்­படல் வேண்டும்.
விண்­ணப்­பப்­ப­டி­வங்­களை மலை­யக மக்கள் முன்­னணி மற்றும் மலை­யக தொழி­லாளர் முன்­ன­ணியின் அட்டன் தலைமைக் காரி­யா­லயம் உள்­ளிட்ட அனைத்து பிராந்­திய மாவட்ட காரி­யா­ல­யங்­க­ளிலும் மலை­யக மக்கள் முன்­ன­ணியின் அனைத்து உள்­ளூராட்சி சபை­களின் முன்னாள் உறுப்­பி­னர்­கள், அமைப்­பா­ளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் ஆகியோர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இது தொடர்பான மேலதிக தகவல்கள் எமது அனைத்து காரியாலயங்கள் மற்றும் பிரதேச அமைப்பாளர்களிடமிருந்தும், 051-4920300, 051-4020302, 051-2222793, 052-2223052, 055-2229838, 055-4928206, 055-2231526 ஆகிய தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளவும் முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.