Friday, April 10, 2009

மலையக கல்வி வளர்ச்சிக்கு இந்திய அரசு உதவி தொடரும் -இந்திய உதவித் தூதுவர் ஆர்.கே.மிஸ்ரா

இந்திய வம்சாவளி மலையக மாணவர்களது கல்வி வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை இந்திய அரசு தொடர்ந்தும் வழங்கும். ஏன இந்திய உதவித் தூதுவர் ஆர்.கே.மிஸ்ரா தெரிவித்துள்ளார். கண்டி விக்டோரியா மாபேரிதென்ன தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப கணினி மைய ஆசிரியவள நிலையத்தில் கணனி தகவல் தொழில் நுட்பம் தொடர்பான இரண்டு மாத வதிவிட பயிற்சியினை முடித்துக் கொண்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் இன்றைய உலகிற்கு ஏற்ற வகையில் கணனித் துறைக்கு முகம்கொடுக்கக் கூடியவாறு கல்வித்துறையில் கணனி தகவல் தொழில் நுட்பத்தினை வளர்க்கும் நோக்கத்துடனேயே இப் பயிற்சி வழங்கப்படுவதாக தெரிவித்தார்
மலையக பஸ் சேவை இன்று ஆரம்பிக்கப்படும்

வரையறுக்கப்பட்ட அன்னை கோதை முயற்சியாண்மை கம்பனியின் ஊடாக மலையக மக்களுக்கான பயணிகள் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்கும் வைபவம் இன்று கொட்டகலை காங்கிரஸ் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் இடம்பெறுகிறது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய தூதுவர் ஆலோக் பிரசாத் அவர்களும் கலந்து கொள்கிறார். இ.தொ.கா வின் பொதுச் செயலாளரும் இளைஞர் வலுவூட்டல் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமை தாங்குகிறார்.
உரிமைகளை பெற்றுக் கொடுத்தால் மட்டுமே சிறந்த மாகாணம் உருவாக்க முடியும்

தமிழ் மக்களுக்கு உரிமைகளும் வாழ்வாதாரமும் பெற்றுக் கொடுப்பதன் மூலமே மத்திய மாகாணத்தை சிறந்த மகாணமாக உருவாக்க முடியும் என மத்திய மாகாண சபை ஆளுநரின் கொள்கை விளக்கவுரையின் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றழிய மத்திய மாகாணசபை உறுப்பினர் பிரகாஷ் கணேசன் தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூராட்சி சபைகளின் உரிமைகளை நன்மைகளை நுவரெலியா மாவட்ட தமிழர்கள் முழுமையாக பெற வேண்டுமானால் நுவரெலிய அம்பேகமுவ பிரதேச சபைகளுக்குப் பதிலாக மேலும் 10 பிரதேச சபைகள் உருவாக்கப்பட வேண்டும். நுவரெலியா மாவட்டமே அதிக வறுமையான மாவட்டம் என உலக வங்கி அறிக்கையில் வெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இம்மக்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்பட வேண்டும். வருமான சமநிலை பேணப்பட வேண்டும். நீதி கிடைக்க வேண்டும். தமிழர் கூடுதலாக வாழும் பிரதேசங்களில் இரண்டு மொழி அமுலில் இல்லை. இதனால், மொழி உரிமை வழங்கப்பட வேண்டும். கல்வி வளர்ச்சி ஏற்பட தோட்டங்களில் ஆரம்ப கல்வியை ஏற்படுத்துவதுடன், நவீன வசதியுடனான வைத்தியசாலை வேண்டும். இந்த கொள்கை விளக்க உரையில் காணி பற்றிய விளக்கம் போதாது. காணி, பொலிஸ் அதிகாரம் மாகாண சபைக்கு வேண்டும். நாமும் இதில் எங்கள் சமூக பங்கினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். விவசாய உற்பத்திக்கு ஜனாதிபதி எடுத்த நடவடிக்கைகளை பாராட்டுவதுடன், சிறந்த மாகாண சபையாக இங்கு மொழி உரிமை சமத்துவம், சகோதரத்துவம் பேணப்பட்டு சமூக துரோகம் ஒழிக்கப்பட வேண்டும் என்றார்.
மக்களின் நல மேம்பாட்டை அபிவிருத்தி செய்ய யூ.எம்.டி.பி நிறுவனம் வருகை

பெருந்தோட்ட மக்களது நலமேம்பாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கில் வெளிநாட்டிலிருந்து யூ.எம்.டி.பி என்ற பெயரிலான நிறுவனம் இலங்கை வரவிருப்பதாக மத்திய மகாண தமிழ் கல்வி அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந் நிறுவனம் 2010ம் ஆண்டு முதல் 2020 ஆண்டு வரை இலங்கையில் தங்கியிருந்து தோட்டப்புற மக்களது நலமேம்பாட்டிற்காக பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும். குறிப்பாக தோட்டப்புற மக்களது அடிப்படை வசதிகள், குடியிருப்பு அபிவிருத்தி உட்பட பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
பெருந்தோட்ட சமூக அங்கவீனர்களின் நலன் செயற்பாடுகள்

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு உள்ள பல்வேறு சமூக பொருளாதார பிரச்சினைகளில் இச் சமூகத்தில் வாழும் அங்கவீனர்களின் நலனுக்கான செயற்பாடுகள் முற்றாக மறக்கப்பட்டுள்ளன என அமைச்சர் பெ. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் மலையக மக்களின் பிரச்சினைகள், தேவைகள் என்பது வெறுமனே சம்பள உயர்வோடும், அவர்களின் உட்கட்டமைப்பு பிரச்சினைகளோடும்; சம்பந்தப்பட்ட பிரச்சனைகளாக மாத்திரமே அடையாளம் காணப்பட்டு வந்திருக்கின்றன.

இவை அனைத்தையும் விடவும் வெளிக்கொணரப்படாத ஆனால் முக்கியத்துவப்படுத்தக் கூடிய பிரச்சினையாக அங்கவீனர்களின் பிரச்சினை திகழ்கின்றது. அங்கவீனர்களுக்காக சமூக சேவைகள் திணைக்களங்களினால் வழங்கப்படும் நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளும் வழிகளும் இவர்களுக்கு கிடைப்பதில்லை. அதற்கான முயற்சிகளும் எடுக்கப்படுவதில்லை.
இவ்வாறானவர்கள் நாம் வாழும் வரை தமது குடும்பத்திற்கு சுமையானவர்களாக இருந்துவிடக் கூடாது. இதற்காக நாம் விசேட திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்.


இவர்களை அவர்களுக்குரிய துறைகளில் வளர்த்தெடுப்பதோடு அவ்வாறனவர்களுக்கு மனோ திடத்தினை வளர்க்கும் நிகழ்ச்சிகளை உருவாக்கி அவர்களை தன்னம்பிக்கை உள்ளவர்களாக மாற்ற வேண்டும். தனது அமைச்சினூடாக ஊனமுற்றோர் பராமரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கு ஆர்வம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட தோட்ட பகுதிகளின் அபிவிருத்திகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை.

மத்திய மாகாண சபையின் கீழுள்ள அமைச்சுக்கள் மூலமாக நுவரெலியா மாவட்டத்தின் தோட்டப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் கடந்த காலங்களில் முறையாக மேற்கொள்ளப்படாததால் தோட்டப்பகுதி மக்கள் பெரும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் திகாம்பரம் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

குறிப்பாக மத்திய மகாண நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சுக்கு உட்பட்ட நுவரெலியா மாவட்டத்தின் சில பாதைகள் நீண்டகாலமாக செப்பணிடப்படவில்லை.

போடைஸ் - மன்றாசி, பூண்டுலோயா – டன்சினன், டிக்கோயா – சலங்கந்தை, மெரேயா-டெஸ்போர்ட், லிந்துலை-ராணிவத்தை என்பவற்றுக்கான பாதை மிக மோசமான நிலையில் உள்ளது.

மேலும் அட்டன்-எபோட்ஸிலி, அட்டன்-மறே, அட்டன் - எல்ஜின், தலவாக்கலை-கிறேட்வெஸ்டன், தலவாக்கலை-ராணிவத்தை, அட்டன்-டெம்பல்ஸ்டோ, அட்டன்-மேபீல்ட் ஆகிய தோட்டப்புறங்களுக்கான இ.போ.ச பஸ் சேவைகள் இடம்பெறுவதில்லை என்றார்.