அரசு தீர்மானித்திருக்கும் தேர்தல் முறை மலையகத் தமிழ் சமூகத்தை 30 வருடங்களுக்கு முன்பிருந்த நிலைக்குக் கொண்டு செல்லும்
விகிதாசார தேர்தல் முறையினால் மலையக மக்களின் பிரதிநிதித்துவம் சனத்தொகை அடிப்படையில் அமையாவிட்டாலும் அபூர்வமாக சில பகுதிகளில் மட்டும் ஒருசில அங்கத்துவத்தை பெறக்கூடிய நிலை இதுவரை இருந்தது.
தற்போது தொகுதிகளையும் உள்ளுராட்சிச் சபைகளில் வாட் முறையையும் அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானித்திருக்கின்ற அரசின் ஆலோசனை நடைமுறைக்கு வந்தால் இந்திய வம்சாவளி மக்கள் வாழுகின்ற நாட்டின் எந்தப் பகுதியிலும் எம்மால் பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய முடியாது.
1977 ஆம் ஆண்டு இ.தொ.கா.தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் நுவரெலியா மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்குக் காரணமாக அமைந்தது நுவரெலியா மாவட்டம் மூன்று அங்கத்தவர் தொகுதியாக ஆக்கப்பட்டதேயாகும். அவர் மூன்றாவது எம்.பி யாக தெரிவு செய்யப்பட்டார். விகிதாசாரத் தேர்தல் முறை மூலம் உள்ளூராட்சி சபைகளிலும் மாகாணசபை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் அங்கும் இங்குமாக சில மலையக தமிழர்கள் பிரதிநிதிகளாகத் தெரிவாகக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. இப்போதைய தேர்தல் முறைகளில் அரசு ஏற்படுத்த முனைகின்ற மாற்றம் மலையக மக்களின் பிரதிநிதித்துவத்தையே அடியோடு வேரறுத்து விடும். அது மலையகத் தமிழ் சமூகத்தை 30 வருடங்களுக்கு முன்பிருந்த நிலைக்குக் கொண்டு செல்வதாகவே அமைந்துவிடும்.
எனவே சகல மலையக சக்திகளும் ஒன்றுசேர்ந்து எமது பிரதிநிதித்துவத்துக்கு வரும் ஆபத்துக்கு எதிராக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதில் அவசர தேவை ஏற்பட்டுள்ளதை புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு மலையக மக்கள் முன்னணி தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரன் தலவாக்கலையில் ஹொலீரூட், ட்ரூப் தோட்டங்களில் அமைச்சு நிதி ஒதுக்கீட்டிலான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்துவைத்து உரையாற்றியபோது தெரிவித்தார்.