சமூக அநீதிக்கு உள்ளாக்கப்படும் மலையகத் தமிழ்ப் பெண்கள்
உலகில் பெண்கள் உரிமைகள் பற்றி உரக்கப்பேசப்பட்டு வருகின்றது. மேடைப் பேச்சுகளுக்கும் அறிக்கைகளுக்குமே பெண்கள் உரிமை மட்டுப்படுத்தப்பட்டுள்ளனவா அல்லது நாட்டின் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டுமே அந்த உரிமை வரையறுக்கப்பட்டுள்ளதாஎன்று நமது நாட்டில் உள்ள நிலைமையைக் கவனிக்கும்போது வினவத் தோன்றுகின்றது. சந்தேகம் எழுகின்றது.
நமது நாட்டில் பெண்களின் உரிமைகள்,தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்த மகளிர் விவகார அமைச்சென்ற ஒன்றுள்ளது. அத்துடன், தொழில் திணைக்களத்தில் பெண்கள் தொடர்பாக ஒரு பிரிவும் உள்ளது.
இவற்றை விடவும் அரசசார்பு,அரச சார்பற்ற பல அமைப்புகள் மற்றும் சமூக நல அமைப்புகள் என்றும் பல பெண்கள் உரிமை, தேவை,பாதுகாப்பு என பல் தரப்பட்டவற்றை ஆய்வு செய்து கவனிக்க பல அமைப்புகளும் நமது நாட்டிலுள்ளன. பெண் உரிமைக்காகக் குரலெழுப்பி கூட்டம் போட்டு கலைவிழா நடத்தி விருந்துபசாரம், கேளிக்கைகள் நடத்தும் பெண்கள் அமைப்புகளுக்கும் பஞ்சமில்லை.
இருந்த போதிலும் இந்நாட்டின் உழைக்கும் பெண்களில் குறைந்த சம்பளத்தில் கூடிய வேலைப்பளுவைச் சுமந்து கடினமான வேலைகளில் வெயில், மழையென்று பாராது மலைகளில் ஏறி, இறங்கி வேலை செய்து நாட்டின் பொருளாதாரத்திற்கு அச்சாணியாகச் செயற்படும் மலையகப் பெருந்தோட்டத் தமிழ்ப் பெண் தொழிலாளருக்குச் சட்ட ரீதியாக வரையறை செய்யப்பட்டுள்ள எந்தவொரு உரிமையும் கிட்டுவதில்லை என்பது வெளிப்படையானது. வேதனைக்குரிய இவ்வாறான புறக்கணிப்புத் தொடர்பில் எவரும் கவனம் செலுத்துவதில்லை.
திட்டமிட்ட குடும்பக் கட்டுப்பாடு கடந்த பல தசாப்தங்களாக மலையகப் பெருந்தோட்டப் பெண்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பது மறைக்கக்கூடிய விடயமல்ல. மலையகப் பெருந்தோட்ட ஆண் தொழிலாளர்களும் சிறுதொகைப் பணத்திற்காக் கருத்தடை அறுவை செய்து கொள்வதும் பிரசவித்த பெண்களுக்குப் பிரசவத்தின்போதே கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதும் சர்வ சாதாரணமாக இடம்பெற்று வருகின்றது என்று கூறப்படுகின்றது. ஆய்வின்போது இது நடைமுறையிலிருப்பது உறுதியாகியுள்ளது.
பிரசவித்த தாய்மாரின் விரும்பமறியாமலே கருத்தடை சிகிச்சைக்கு அவர்கள் உட்படுத்தப்பட்டு விடுவதாகவும் கூறப்படுகின்றது. அதாவது அவர்களின் சம்மதம் இன்றியே இது நடைபெறுகின்றது. இதுவொரு உரிமை மீறல் என்பதை அப்பாவித் தொழிலாளரும் புரிந்துகொள்வதில்லை. கருத்தடை செய்வோரும் தாம் செய்வது அடிப்படை மனித உரிமை மீறல் என்பதைப் புரிந்துகொள்வதில்லை. அல்லது திட்டமிட்டு ஆற்றும் செயற்பாடாக மேற்கொள்கின்றனர்.
இது இவ்வாறிருக்க அண்மையில் தோட்டங்களில் தொழில் வழங்குவதற்கு முன் பெண்கள் கருவுற்றிருக்கின்றனரா என்ற பரிசோதனை செய்யப்படுவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. கருவுற்ற பெண்களுக்குத் தோட்டங்களில் வேலை வழங்கப்படமாட்டாது என்பது இதன் வெளிப்பாடு. கருத்தடை செய்வது ஒருபுறமாக நடைபெற்று வருவதுடன் கருத்தரிக்கக்கூடாது என்று கட்டாயப்படுத்தப்படுவது போன்ற நிலையே கருத்தரித்துள்ளனரா? என்று பரிசோதனை செய்து வேலை வழங்கும் செயலாகும். இது உலகிலே எங்குமில்லாத நிலை மட்டுமல்ல, நாகரிக உலகம் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வாகவும் உள்ளது.
இது தொடர்பில் உரிய முறையில் உரிமைக்குரல் எழுப்பாது விட்டால் அடுத்த கட்டமாக திருமணம் செய்தால் வேலை வழங்கப்படமாட்டாது என்றும் கூறப்படலாம்.
கருத்தரித்த பெண்களுக்கு மாதாந்த வைத்திய பரிசோதனை, ஆலோசனை, ஊட்ட உணவு எனப் பல நமது நாட்டில் வழங்கப்பட்டு வருகின்றன. மலையகப் பெருந்தோட்டக் கர்ப்பிணிப் பெண்களுக்கு இவ்வசதிகள் வழங்கப்படுகின்றனவா என்பது பற்றி எவரும் அக்கறை செலுத்துவதில்லை.
இவ்வாறான சுகாதார வசதிகள் உண்டு என்பதை மல்லயகத் தமிழ்த் தொழிலாளரும் அறிந்தவர்களாக இல்லை. இதுவொரு பரிதாப நிலை. நாட்டின் பொருளாதாரத்தின் ஆணிவேராகவுள்ள தொழிலாளர்கள் நாட்டின் தேசிய சுகாதாரக் கட்டமைப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டவர்களாகவேயுள்ளனர். இதுவே நடைமுறையிலுள்ள நிலைமை யதார்த்த நிலை.
இதுமட்டுமல்ல, பல பெருந்தோட்டங்களில் பிரசவிக்கவுள்ள தாய்மார்களை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல உரிய வசதிகள் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாகவுள்ளது. பெருந்தோட்டங்களுக்குச் செல்லும் பாதைகள் செப்பனிடப்படாது குன்றுங் குழியுமாக இருப்பது கூறித் தெரிய வேண்டியதொன்றல்ல. மத்திய மாகாண வீதி அபிவிருத்தியில் பெருந்தோட்ட வீதிகள் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலை அடிக்கடி சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றபோதும் வீதி அபிவிருத்திக்குப் பொறுப்பான எவரும் அக்கறை செலுத்துவதாயில்லை. இதேநிலை, ஊவா,சப்ரகமுவ மாகாண பெருந்தோட்ட வீதிகளுக்கும் பொருந்தும். இந்த நிலையில் கர்ப்பிணித் தாய்மார்களை தோட்டங்களிலிருந்து வைத்தியசாலைகளுக்குக் கூட்டிச் செல்வது ஆபத்துகள் நிறைந்ததாயுள்ளது.
தோட்ட நிர்வாகங்கள் பல சந்தர்ப்பங்களில் வாகன வசதி செய்து கொடுப்பதில்லையென்ற குற்றச்சாட்டுமுள்ளது. தேயிலைக் கொழுந்து,பசளை மூடைகள்,விறகு போன்றவை கொண்டு செல்லல் பயன்படுத்தப்படும் லொறிகளில் கர்ப்பிணித் தாய்மார்கள் வெறுமனே ஏற்றப்பட்டு அனுப்பப்படுவதும் நடைமுறையிலுள்ளது. சீரான பாதைகளிலேயே லொறிகளில் பயணம் செய்வது சிரமமானது. கர்ப்பிணித் தாய்மார்கள் பிரசவ வேதனையில் துடிக்கும்போது அவர்களை பொருட்கள் ஏற்றுவதுபோல் ஏற்றிக்கொண்டு செல்வது நியாயமானதா?மனிதாபிமானதா?. இதைப்பற்றி பொறுப்புடன் சிந்திப்பவர்கள் எத்தனை பேர்?
அண்மையில் இவ்வாறு லொறியில் ஏற்றி அனுப்பப்பட்ட கர்ப்பிணித்தாய் இடைவழியில் பிரசவித்த குழந்தை இறந்த செய்தியும் வெளியாகியது. பிரசவித்த குழந்தையை வீசியெறியும் பண்பாடு பெருகிவரும் நம் நாட்டில் அவ்வாறு வீசியெறிவதால் குழந்தை இறந்தால் அதன் தாய் கொலை செய்த குற்றத்திற்குள்ளாக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுகின்றது.
பிரசவிக்கும் குழந்தை உரிய பாதுகாப்பான வசதிகள் செய்யப்படாமல் இறக்கும் நிலையேற்படும்போது அதுவும் ஒரு கொலையாகவே கொள்ளப்படக்கூடியதாகும். இதை எவரும் கருத்தில் கொள்ளாதிருப்பது கவலைக்குரியது மட்டுமல்ல, கண்டனத்திற்கும் உரியது. எல்லை மீறிய குரூர செயற்பாடாகக் கொள்ளவும் முடியும்.
அண்மைய கணிப்பீட்டின்படி நாட்டின் உணவு இறக்குமதியில் அறுபது வீதம் தேயிலை ஏற்றுமதி மூலம் கிட்டும் வருமானத்திலிருந்தே மேற்கொள்ளப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் உணவு இறக்குமதிக்கு உழைத்து உதவும் தோட்டத் தொழிலாளரின் அவல நிலை மனித உணர்வுள்ளவர்களுக்கு உறுத்தாமல் இருப்பது புதுமையானது பரிதாபகரமானது.
நமது நாட்டில் மகளிர் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புகளுள்ளன. மலையகப் பெருந்தோட்டத் தமிழ்ப் பெண்கள் அரசியலில் ஈடுபட வேண்டுமென்ற கூக்குரலும் எழுப்பப்படுகின்றது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சமவுரிமை என்று குரலிடப்படுகின்றது.
ஆனால், எவருக்கும் மலையகப் பெருந்தோட்டத் தமிழ்ப் பெண் தொழிலாளர்கள் அனுபவித்து வரும் துன்பம் தெரிவதில்லை. புரிவதில்லை.தெரிந்திருந்தும் அவர்களை மனித இனத்தவர்களாகக் கணிக்கும் பகுத்தறிவை மனிதப்பண்பை இழந்து விட்டார்களா? நமது நாட்டில் நிலவிவரும் காட்டுமிராண்டித் தனத்திற்கு மலையகப் பெருந்தோட்டத் தமிழ்ப் பெண் தொழிலாளருக்கு இழைக்கப்படும் பாரபட்சம்,அநீதி ஒரு எடுத்துக்காட்டாகவுள்ளது என்றால் எவரும் வெட்கப்படத் தேவையில்லை. யதார்த்தம் அதுவாகவேயுள்ளது.
மலையகப் பெருந்தோட்டத் தமிழ்ப்பெண் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி மனிதகுலம் வெட்கித் தலைகுனிய வேண்டியதொன்றாகும். இது தொடர்பில் குரல்கொடுத்து நியாயம்பெற முனையாமலிருப்பது மனிதகுலத்திற்கும் உழைக்கும் வர்க்கத்திற்குச் செய்யும் துரோகமாகும். எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம் என்பதுபோல் இன,வர்க்க ரீதியாக சிந்திப்போரின் செயல் அமைந்துள்ளது. கண்டிக்கப்பட வேண்டிய,களையப்பட வேண்டிய இந்த அயோக்கியத்தனமான செயல்களுக்கு முடிவு கட்டுவதற்கு மலையக அரசியல்,தொழிற்சங்க,சமூக,சமய அமைப்புகள் தம்மிடையேயுள்ள தனிப்பட்ட வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு தம்மை நம்பியுள்ள சமூகத்தின் அடிப்படை உரிமைகளைப் பேண வழிகாண வேண்டும். அதுவே இன்றைய தேவை. அவசர, அவசிய தேவை. உரியவர்கள் கவனம் இதில் செலுத்தப்படுமா?
நன்றி- தினக்குரல்