இலங்கையில் பெருந் தோட்ட மக்களின் போஷாக்கு மற்றும் காணி உரிமையை வலியுறுத்தி உலக உணவு தினமாகிய இன்று நுவரெலியா மாவட்டத்திலுள்ள தலவாக்கல்ல நகரில் பெருந்தோட்ட சமூக காணி உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் கவன ஈர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது.
பெருந்தோட்ட மக்களுக்கு இரசாயனமற்ற உணவு மற்றும் போஷக்கு உணவு தொடர்பாக விழிப்புணர்வு தொடர்பான பிரச்சாரமும் இந்த போராட்டத்தின் போது முன்னெடுக்கப்பட்டது.
பெருந்தோட்ட மக்களுக்கு போதிய வருமானம் இன்மையே அவர்களின் வறுமைக்கு பிரதான காரணம் என பெருந் தோட்ட சமூக காணி உரிமைக்கான இயக்கம் கூறுகின்றது.
''இந்த வறுமை காரணமாகவே போஷாக்கு உணவை பெற முடியாத நிலையில் அவர்கள் காணப்படுகின்றார்கள். '' என்கின்றார் அந்த அமைப்பின் பிரதான செயற்பாட்டாளரான எஸ். டி கணேசலிங்கம்நு வரெலியா மாவட்டத்திலே மந்த போஷனையுடைய கூடுதலான சிறார்கள் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.
பெருந்தோட்ட மக்களுக்கு பயிர் நிலங்கள் இல்லாத காரணத்தினால் இரசாயனமற்ற உணவை அவர்களால் உற்பத்தி செய்ய முடியாதிருப்பதாகவும் கூறும் அவர், பெருந்தோட்ட மக்களுக்கு இரசாயனமற்ற மற்றும் போஷாக்கு கொண்ட உணவு கிடைப்பதற்கான சிறப்பு திட்மொன்றை அரசு முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றார்.
பெற்றோர்களை பொறுத்தவரை தங்கள் பிள்ளைகளுக்கு போஷாக்கு உணவு வழங்க வேண்டும் என ஆர்வம் கொண்டவர்களாக காணப்படுகின்றார்கள் . ஆனால் அதற்கு அவர்களின் வருமானம் பிரதான தடையாக காணப்படுகின்றது.