மலையக இளைஞர் - யுவதிகளும் வடக்கு, கிழக்கு இளைஞர் - யுவதிகளும் ஒன்றிணைந்து, உரிமைகளை வென்றெடுப்பதற்கான சாத்வீக போராட்டத்துக்கு தயாராக வேண்டுமெனவும் அதற்கான ஏற்பாடுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ள வேண்டும் எனவும் மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் நிலவிய யுத்தம் காரணமாக நாம் இணைந்து செயற்பட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. எமது மக்கள் மீது சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்ற நிலை அன்று இருந்ததன் காரணமாக நாங்களும் மிகுந்த பயத்துடன் வாழக்கூடிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகினோம்' என்றார். 'தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது. எனவே, இந்த சூழ்நிலையை நாம் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு மலையக இளைஞர், யுவதிகளையும் வடக்கு, கிழக்கு இளைஞர், யுவதிகளையும் ஒன்றிணைத்து சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுத்து, அதன்மூலம் எமது உரிமைகளைப் பெறுவதற்கு முன்வரவேண்டும்.
மலையக இளைஞர்களுடைய பிரச்சினைகளும் வடக்கு, கிழக்கு இளைஞர் யுவதிகளுடைய பிரச்சினைகளும் வேறுபட்டவை. ஆனாலும், நாம் அனைவரும் இணைந்து ஒற்றுமையாக செயற்பட்டால் அனைத்துவிதமான விடயங்களையும்; வெற்றிகொள்ள முடியும். நாங்கள் தற்போது சமூக ரீதியாக ஒன்றுபட்டு செயற்படுகின்ற நிலைமை உருவாகியுள்ளது. அதனால், வடக்கு - கிழக்கு இளைஞர்களை இணைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்ய வேண்டும்.மலையக இளைஞர்களை ஒன்றிணைக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்' என்றும் அவர் கூறினார். '
மலையகத்தை பொறுத்த வரையில் எமக்கு கல்வி ரீதியாக பல பிரச்சினைகள் உள்ளன. மலையகத்தில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான குறைபாடுகள் நிலவுகின்றன. அவ்வாறான விடயங்களில் வடக்கு, கிழக்கில் இருந்து எமக்கு உதவி செய்ய முடியும். இந்த நாட்டில் நாம் ஒற்றுமையாகவும் புரிந்துணர்வுடனும்; செயற்பட்டால் மாத்திரமே எமது இலக்கை அடைய முடியும். மலையகத்தில் நீண்ட இடைவேளைக்குப் பின்பு தற்போது ஓர் அமைப்பாக அதாவது தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற அமைப்பாக இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.
எதிர்காலத்தில் தமிழ்; தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஏனைய தமிழ் அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய காலம் கனிந்து வருகின்றது. அதனையே மக்களும் எதிர்பார்க்கின்றனர். எனவே, எதிர்கால எமது இளைஞர்கள் ஒற்றுமையாக செயற்படுவதற்காக நாம் இன்று அதற்கான அடித்தளத்தை இடவேண்டும். அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது முழு ஒத்துழைப்பையும் எமக்கு வழங்க வேண்டும்' என அவர் கூறினார்.