Thursday, March 10, 2011

மரக்கறி செய்கையாளர்களுக்கு மானிய விலையில் பசளை. விரும்பிய இடத்தில் பெற்றுக்கொள்ள ஏற்பாடு; - ஜனாதிபதி


நாட்டில் வாழும் சகல மரக்கறிச் செய்கையாளர்களுக்கும் மானிய விலையில் பசளை வழங்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளுராட்சி தேர்தல் தொடர்பாக நுவரெலியாவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு பேசும் போது தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் படிவங்களை நிரப்பிக்கொண்டு அங்குமிங்கும் அலையாமல் திறந்த சந்தையில் எந்த இடத்திலும் மரக்கறி செய்கையாளர்கள் மானிய விலையில் பசளையைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்

கமத்தொழிலாளர்களுக்கு 350.00 ரூபா படி தொடர்ந்தும் பசளையை மானியமாகவும், தேயிலை செய்கையாளர்களுக்கும், இறப்பர் செய்கையாளர்களுக்கும் தென்னந் தோட்ட உரிமையாளர்களுக்கும் பசளையை மானியமாகவும் வழங்கும் அதேவேளை மரக்கறிச் செய்கையாளர்களுக்கு விதைகள் தான் மானிய விலைக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அதனால் அவர்களுக்கும் பசளையை மானிய விலையில் பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக குறிப்பிட்டா

மேலும், நாட்டில் பத்து இலட்சம் குடும்பங்களை பொருளாதார அலகுகளாக மேம்படுத்தும் தேசிய வேலைத் திட்டத்தை நாளை 12ம் திகதி முழுநாட்டிலும் ஆரம்பிக்கவிருப்பதாகவும் இத்திட்டம் மூலம் முழு நாடுமே வளம்பெறும் என்றார் வீட்டுத் தோட்டச் செய்கையில் ஈடுபடுமாறு நாம் மக்களை கேட்கின்றோம். அதற்கு முன்னர் நாம் வீட்டுத் தோட்டச் செய்கையை ஆரம்பித்து விட்டோம்.
நாட்டில் 28 இலட்சம் கித்துல் மரங்கள் உள்ளன. அவற்றில் மூன்று சதவீதமான பயன்களே பெறப்படுகின்றன. இதற்கு வெளிநாட்டவர்கள் தயாரித்த சட்டங்கள் தான் தடையாக உள்ளன. அதனால் இம்மரங்கள் மூலம் நூறு சதவீதம் பயன்பெற நடவடிக்கை எடுத்துள்ளோம். இத்திட்டத்தின் கீழ் கித்துல் பாணியும், கித்துல் கருப்பட்டியுமே உற்பத்தி செய்ய இடமளிக்கப்படும் என்றார் ஜனாதிபதி.

உள்ளூராட்சி மன்றங்கள் கிராமங்களின் தேவைகளையும் குறைபாடுகளையும் நிறைவேற்றி வைக்கக் கூடிய நிறுவனங்கள். கிராமங்களில் நிலவுகின்ற குறைகளையும், தேவைகளையும் மாகாண அரசுக்கும், மத்திய அரசுக்கும் கொண்டு செல்லக்கூடிய பொறுப்பும் அவற்றுக்குள்ளது. அதனால் இந்தப் பொறுப்பை ஐ. ம. சு. மு. உறுப்பினர்களாலேயே சரிவரச் செய்ய முடியும்.
பயங்கரவாதத்தினால் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, ஜனாதிபதி அபேட்சகர் காமினி திஸாநாயக்கா, முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி உட்பட ஆயிரக்கணக்கானோரைப் பலி கொடுத்திருக்கின்றோம். கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.

மலையகப் பகுதிகளிலுள்ள சகல தோட்ட ஆஸ்பத்திரிகளையும் அரசாங்கம் பொறுப்பெடுத்து அபிவிருத்தி செய்து வருகின்றது. நுவரெலியா ஆஸ்பத்திரியும் துரிதமாக அபிவிருத்தி செய்யப்படவிருக்கின்றது. முழு நாட்டிலுள்ள சகல கிராமங்களிலும் குறைந்தது ஒரு வீதியாவது கொங்கிரீட் இட்டு செப்பனிடப்பட்டிருக்கின்றது. சுகாதாரத் துறைக்கும் கல்வித் துறைக்கும் நாம் பாரியளவு நிதியை வருடா வருடம் செலவிடுகின்றோம் என்றார்

No comments: