Saturday, December 28, 2013

நீர்த்தேக்கத்தில் மூழ்கிய வழிபாட்டுத் தளங்கள்

மவுசாக்கலை நீர்தேக்கத்தால் மூடப்பட்ட மஸ்கெலியா பழைய நகரைச் சேர்ந்த பௌத்த விகாரை, இந்து கோவில், முஸ்லிம் பள்ளி ஆகியன வெளித்தோன்ற ஆரம்பித்துள்ளன. 

தற்போது மலையக பகுதிகளில் நிலவும் வெயிலுடனான காலநிலை காரணமாக ஆறுகளில் நீர் மட்டம் குறைவடைந்து காணப்படுகின்றது. இதனால் மலையகத்தில் காணப்படும் நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது.

மஸ்கெலியா நகருக்கு அண்மையில் அமைந்துள்ள மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வழிந்தோடும் நிலையில் இருந்து 40 வீதமாக குறைவடைந்துள்ளதாக லக்ஷபான நீர் மின் உற்பத்தி
நிலையத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மவுசாக்கலை நீர்தேக்கத்தில் மூழ்கிய மஸ்கெலிய பழைய நகரத்தில் காணப்பட்ட கதிரேசன் கோயில் முழுமையக வெளித்தோன்றியுள்ளது. அத்துடன், அப்பகுதியிலிருந்த பௌத்த விகாரை மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல் போன்றனவும் வெளித்தோன்றியுள்ளன. 

இந்த காலநிலை தொடர்ந்து நிலவும் பட்சத்தில் இன்னும் ஒரு வார காலத்தில் கோயிலை சென்றடைவதற்கான பாதை முற்றாக பயன்படுத்தக்கூடிய நிலையை அடையும் போது அதிகளவானவர்கள் இந்த கோயிலை தரிசிப்பதற்கு செல்வது வழமை. 

தற்போது சிவனொளிபாதமலை யாத்திரையில் ஈடுபடும் யாத்திரர்களாலும் இந்த பழைய கோயில்  பார்வையிடப்படுவதால் இது ஓர் சுற்றுலா தளமாகவும் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையகத்திலிருந்து அரச நிர்வாக சேவையில் உள்வாங்குவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு – வாமதேவன்

பெருந்தோட்டத் துறையின் அபிவிருத்திக்கென ஒரு அமைச்சு ஆணை கொண்டதாக இருக்கும்போது அந்த அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அந்ததுறைக்கென செலவழிக்கப்படும். பொதுவான அமைச்சுகளின் வரவு செலவு திட்டங்களில், வேலைத்திட்டங்கள் தோட்டப்புற பள்ளிக்கூடங்கள், தோட்ட சுகா தாரம், தோட்ட வீடமைப்பு என குறிப்பிடப் பட்டு நிதி ஒதுக்கப்பட்ட வேண்டும். உதாரண மாக நீர் வழங்கல் வடிக்காலமைப்பு அமைச்சு மற்றும் தேசிய நீர் வழங்கல் சபையில் தோட்டத்துறைக்கான தனியான ஒதுக்கீடுகள் இல்லை. இதனால் அந்த அமைச்சின் நடவடிக்கைகள் தோட்டப்புறங்களை முறையாக போய்ச் சேருவதில்லை.

தோட்டத்துறையின் அபிவிருத்திக்கென ஒரு அமைச்சு இல்லாத நிலையில் ஏனைய தொடர்புடைய அமைச்சுகளின் வரவு செலவு திட்டங்களில், தோட்டத்துறைக்கென்று ஒதுக்கீடுகள் சுட்டிக்காட்டப்படவேண்டும். அப்போதுதான். தோட்டத்துறையின் சமூக அபிவிருத்திக்கு இந்த ஆண்டு இவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என மதிப்பிடமுடியும்.

அமைச்சு ஒன்று இல்லாத நிலையில் பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியம் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் ஆகியன தற்போது கால்நடை அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படு கின்றன. டிரஸ்ட் நிதியமானது, தோட்டத் துறையின் வீடமைப்பு, நீர் சுத்திரிகரிப்பு வசதிகள், சிறுவர் பராமரிப்பு, சுகாதாரம் போன்ற விடயங்களில் அக்கறை செலுத்து கின்றது. தொலை நோக்காக தோட்டங்களில் வாழ்க்கைத் தரத்தினை தொடர்ச்சியாக முன்னேற்றுவதற்காக நிலைபேறான அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை சிறப்பான முறையில் வழங்குவதன் மூலம் தலைமை அபிவிருத்தி தாபனமாக விளங்குகிறது. தோட்ட முகாமைத்துவ தொழிற்சங்கம் அரசாங்கம் ஆகிய முத்தரப் பினரின் பிரதிநிதிகளின் வழிகாட்டலில் நிதிப்பற்றக்குறை காரணமாக மட்டுப்படுத் தப்பட்ட சேவைகளை மேற்கொள்கின்றது.

2005ம் ஆண்டின் மறைந்த அமைச்சர் தொண்டமானின் பெயர் நிலைத்திருக்க வேண்டும் என அரசாங்கம் மற்றும் அமைச்சு, தொண்டமான் குடும்பப் பிரதிநிதிகளின் மேற்பார்வையில் பாராளுமன்ற சட்ட மூலமாக ஞாபகார்த்த மன்றம் நிறுவப்பட்டது. அட் டனில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி நிலை யம், நோர்வூட் நகரில் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம், றம்பொடையில் அமைந்துள்ள கலாசார மண்டபம், என்பவை இம்மன்றத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்தோடு அது பிரஜா சக்தி மற்றும் நவசக்தி என்ற பெயரில் செயற்றிட்டங்களை சில தோட்டங்களில் செயற்படுத்தி வருகின்றது. ஏறக்குறைய ஆண்டொன்றுக்கு 100 மில்லியன் ரூபா கால்நடை அமைச்சிலிருந்து பெறப்பட்டு, இச்செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்து கின்றன.

அத்தோடு பல்வேறு சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் பல்வேறு செயற்றிட்டங்களை செயற்படுத்தி வருகின்றன. அதேபோல உள்ளூர் நிறுவனங்களான பிரிடோ, முன்பள்ளிக்கூட அபிவிருத்தி, கண்டி சமூக அபிவிருத்தி நிலையம், மற்றும் மனித அபிவிருத்தி தாபனம் போன்றவை மனித உரிமைகள், சமூக அணிதிரட்டல் மற்றும் சமூகம் சார்ந்த நிறுவனங்களை வலுவூட்டல் போன்ற செயற்றிட்டங்களை நடைமுறைப் படுத்துகின்றன. இந்த வகையில் பாம் பவுண் டேசன், மொனராகலை மக்கள் அபிவிருத்தி நிலையம் போன்ற பல்வேறு தாபனங்கள், வாழ் வாதார பயிற்சி போன்ற துறைகளில் செயல் படுகின்றன. மலையக அபிவிருத்தி மன்றம் போன்ற சமூகம் சார்ந்த அமைப்புகளும், கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களால் பல்வேறு அபிவிருத்தி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் இன்றும் இந்த மக்கள் ஏனைய இனக்குழுக்களோடு சமத்துவ நிலையில் இருக்கிறார்கள் எனக் கூறமுடியாது. அபிவிருத்தி வரலாற்றில் சுதந்திரத்திற்கு பின்னைய வரலாற்றில் கிட்டத்தட்ட 30-40வருடங்களுக்கு பிந்தியே, உள்நுழைந்த காரணத்தினால், இவர்கள் குறித்து பொதுவான அபிவிருத்தி குறிக்காட்டிகளான வறுமை நிலை, போஷாக்கு, சுகாதார, கல்வி, சிறுவர் பெண்கள், பலவீனமான முதியோர் பாதுகாப்பு என பல்வேறு அம்சங்களை ஒப்பிடுகையில் ஏனைய சமூகத்தோடு இவர்கள் சமத்துவ நிலையில் இல்லை. தேயிலை இரப்பர் தோட்டங்களில் தொழிலாளர்களை பெரும்பான்மையாக கொண்ட இச்சமூகம், நாட்டின் ஏனைய பகுதிக்கு திறனற்ற தொழிலாளர்களை வழங்குகின்ற ஒரு ஒதுக்காகவே காணப்படுகிறது.

உயர்கல்வியைப் பொறுத்தவரை பல்கலைக் கழக அனுமதி ஆண்டொன்றிற்கு 20- 25000 மாக அமைகையில், 5% அல்லது 7 கொண்ட மலையக மக்கள் 200 க்கும் குறைவான எண்ணிக்கையில் 1% வீதத்திற்கு குறைவானவதாவே அமைந்துள்ளது. இலங்கை யில் தங்களுக்கென்ற ஒரு பல்கலைக்கழகம் இல்லை என்று சமூகமாக இருப்பது, இந்த மக்களே. 10 ஆண்டு திட்டத்திலே இது குறித்து ஒரு சாத்தியவள ஆய்வு மேற்கொள்ளப் படவேண்டும் என குறிக்கப்பட்டிருந்தாலும் அந்த நடவடிக்கை இன்னும் முன்னெடுக் கப்படவில்லை.

இங்கு இலவச உயர் கல்விக்கு நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதை அடைந்த இயலுமையின் குறைவு என்றே அல் லது உரிமை மறுப்பு என்ற வகையில் பார்க்க வேண்டும். இந்த மக்களுக்காக பல்கலைக்கழகம் என்ற கோரிக்கையும் ஒரு உரிமை அடிப்படை யில் அணுகப்பட வேண்டும்.
அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரித்த நிலையில், அரச நிர்வாக மட்டத்தில், இம்மக்களின் ஈடுபாடு இல்லாமலிருப்பது கவனத்திற்கும் வேதனைக்குரிய ஒன்றாகும். சில விசேட ஏற்பாடுகளின் அடிப்படையில் அரசாங்கத்துறையில் சேர்க்கப்பட்ட பெருந் தோட்ட சமூக, தொடர்பாடல் வசதிப்படுத்தும் உத்தியோகத்தர் 300 பேரும் தபால் ஊழியர் 300 பேரும் கிராம சேவை உத்தியோகத்தர் 200 பேரும் என்ற எண்ணிக்கை தவிர சாதாரணமாக, பொதுப்பரீட்சை மூலமாக அரசாங்க துறைக்கு உள்வாங்கப்படுவோர் தொகை குறைவாகவே காணப்படுகின்றது. இந்த மக்களைச் சார்ந்த உயர் அரசாங்க உத்தியோகத்தர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே. அமைச்சு செயலாளர்களாக இதுவரை இலங்கை நிர்வாக சேலையில், எத்தனை பேர் என்று தேட வேண்டிய நிலை? திட்டமிடல் சேவையில் மூன்று பேர் வெளிநாட்டு சேவையில் 3 பேர் பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில், இன அடிப்படையில் ஆட் சேர்ப்பு கொள்கை காரணமாக இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

அபிவிருத்தி உரிமைகளை பொறுத்தவரை முக்கியமானதும், அடிப்படையாகவும் அமைந்துள்ளமை வீட்டுரிமையும், நிலவுரிமை யுமாகும். ஏனைய மக்கள் குழுக்களோடு ஒப்பிடுகையில் வீட்டுரிமை நிலவுரிமையற்ற வர்களாக இருப்பவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் அதிகமானோர் இவர்களே. வீட்டுரிமை, என்பது தொழில் செய்யும் வரைக்கும் அனுபவிக்கக்கூடிய ஒன்றே. ஒரு குடும்பத்தில் ஒருவரேனும் தொழில் செய்யும் வரை வீட்டை சொந்தம் கொண்டாடலாம். ஒரு வரும் வேலை செய்யாத போது உரிமை மாற்றக் கூடிய உறுதி இல்லாமையே அடிப்படைப் பிரச் சினையாக காணப்படுகின்றது. வீட்டுக்கடன் பெற்று வீடுகளை கட்டி முடித்தவர்களுக்கும் இன்னும் உறுதிகள் வழங்காமலிருப்பது, ஓர் உரிமைப் பிரச்சினையாக சுட்டிக்காட்டப்படுகின்றது. வீட்டுரிமையோடு இணைந்தவொன்று வீடுகளை ஒட்டி ஒரு சிறிய நிலப்பரப்பு வீட்டுத்தோட்டங் களாக தொழிலாளர்கள் தொடர்ச்சியாக பாவித்து வந்தமையாகும். இத்தகைய நிலைமை உருவாகும்போது தோட்ட மக்களுக்கு கிராம மக்களை போல சமமான நிலையில் உருவாகும்போது தோட்ட மக்களும் கிராம மக்களைப் போல சமமான நிலையில் தங்களது வாழ்வாதாரத்தை பேண முடியும் என்பதே, இந்த கோரிக்கையின் தாற்பரியமாகும்.

2014ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 50,000 வீட்டுத் தொகுதிகள் அமைப்பதற்கான முன்மொழிவு பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. தோட்டப்புற வீடமைப்பில் பெரும்பாலும் தனி வீடுகள் விரும்பப்பட்டன. நெரிசல் மிகுந்த லயத்து வாழ்வு முறையலிருந்து தனி வீடுகளே பெரும்பாலும் மறைந்த சந்திரசேகரன் வீடமைப்பு பிரதி அமைச்சராக இருந்த காலத்திருந்து பின்பற்றப்பட்டு வந்த ஒன்றாகும். பின்னர் கைவிடப்பட்டு மீண்டும் தனி வீடுகளே மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் மாடி வீடுகள் உள்ளடக் கியதான இந்த முன்மொழிவு நில உபயோகம் மற்றும் உரிமைகள் என்பவை குறித்த அடிப் படையில் கவனம் செலுத்த வேண்டிய வொன்றாகும். மலையக மக்களின் அபிவிருத்தி நிலையில் ஏனைய சமூகங்களோடு ஒப்பிடு கையில் சமத்துவமற்ற நிலையில் இருப்பதோடு இந்த சமூகத்திற்குள்ளேயே பல பிராந்திய ரீதியாக வேறுபாடுகள் காணப்படுகின்றன.

மத்திய மாகாணம் அதிலும் நுவரெலியா மாவட்டம் மக்களின் செறிவு அதனூடாக பெறப் படக் கூடிய அரசியல் பிரதி நிதித்துவம் காரண மாக உயர்நிலையில் இருக்கும் அதேவேளை தெற்கு மாகாணத்தில் குறிப்பாக காலி மாவட்டத்தில் வாழ்வோர் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தாழ்நிலையில் உள்ளனர். தெனியாய பகுதியிலிருந்து உயர்தர வகுப்பிற்கு செல்வதென்றால் காவத்தைக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை நிலவுகின்றது.
இந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகள் இன்னும் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. சமத்துவம் எனும் போது உள்ளக சமத்துவமும் முக்கியமானவொன்று. இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் சப்ரகமுவ மாகாணம் விளங்குகின்றது.

பத்தாயிரமாண்டு அபிவிருத்தி குறிக்கோள்கள். 2015ம் ஆண்டில் முடிவடைந்த நிலையில், தோட்ட சமூக அபிவிருத்தி திட்டம் 2009-2015 நிறைவேற்றப்படாமல் மூடிவைக்கப்பட்ட நிலையில், இந்த மக்களின் சமத்துவ அபிவிருத்தி 2015ற்கு பின்னர் எத்தகையதாக இருக்கும் என்று கேள்விக்கு விடை காண வேண்டியுள்ளது.

தோட்டப்புற பாடசாலைகள், தோட்ட சுகாதார, தோட்ட வீடமைப்பு, தோட்டப்புற பாதைகள், தோட்ட நீர் விநியோகம், இப்படி தொடர்புடைய அமைச்சுக்களில் நிதி ஒதுக்குகள் குறித்து ஒரு வெளிப்படைத்தன்மை காணப்பட வேண்டும்.

அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தி முனைப்புகளை முன்னெடுத்து வருகின்றது. இவற்றில் திவிநெகும, மற்றும் கமநெகும போன்றவை அடிக்கடி குறிப்பிடப்படுகின்றன. மாகாண மட்டத்தில் செயற்படுகின்ற அபிவிருத்தி முன்னெடுப்புகளும் எந்தளவிற்கு தோட்டப்புறங்களுக்கு சென்றடைகின்றன என்பவை அறியப்பட வேண்டியவையாகும். இந்த முனைப்புகள் குறித்து மக்கள் பிரநிதிகள், குறித்த இடங்களில் அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த செயற்பாடுகளில் சிவில் சமூகம், சமூகம்சார்ந்த அமைப்புகள், அக்கறை செலுத்த வேண்டும். அது மக்கள் பிரதிநிதிகளுக்கு வலுவூட்டுவதாக அமையும்.
அரசசார்பற்ற நிறுவனங்கள் அரசாங்கம் செய்யும் விடயங்களையே செய்ய முனையாமல், மேலதிகமாக செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். இதில் சமூகத்தினர் தனியார் துறை, சமூகம் சார்ந்த அமைப்புக்கள் தொழிற்சங்கங்கள் என்பவை அபிவிருத்தி சம்பந்தமாக கூடிய அக்கறை செலுத்த வேண்டும். தனியார் துறை எனும் போது பெருந்தோட்ட கம்பனிகள் இன்று நிறுவன சமூக பொறுப்பு கொண்டவையாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றன. இதில் நிச்சயம், அபிவிருத்தி அம்சம் கலந்துள்ளது.

பொருளாதார ரீதியாக தேசிய மட்டத்தில் தேயிலையின் பங்களிப்பு குறைந்து செல்கின்ற வேளை தேசிய உற்பத்தி, அந்நிய செலாவணி சம்பாதிப்பு என்ற வகையில் தேயிலையின் முக்கியத்துவம் குறைந்து செல்கின்றது. தேயிலையின் ஏற்றுமதி விலைகளை தொடர்புபடுத்தியதாக, தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் அமைந்திருப்பதால் குறைவான விலை குறைவான கூலி என்ற வகையில் தோட்டத்தொழிலை மாத்திரம் தமது வாழ்வாதாரத்திற்கு தங்கியிருக்க முடியாத நிலை தோன்றியுள்ளது.

உயர்கல்வி தோட்டத்தொழிலுக்கு மரபுரீதியாக இருந்த வந்த கூலி என்ற இழிவான சமூக அடையாளம் என்பவை காரணமாக கணிசமானோர் க.பொ.த சாதாரண தரத்துடன் வேறு திறனற்ற தொழில்களைத் தேடி தோட்டப்புறத்திலிருந்து அகன்று செல்கின்றனர். தோட்டத்திற்குள்ளே, தோட்டத்தொழிலில் ஈடுபடாது வாழுவோர் எண்ணிக்கை 30 சதவீதமாக அமைந்துள்ளதாக சில கணிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இவர்களை முன்னர் போல, தோட்டங்களிலிருந்து அகற்றிவிட முடியாது. தோட்டக் கம்பனிகளில் தொழிலாளர் பற்றாக்குறை ஒரு அபாயமாக கருதப்படுகின்றது. உழைப்பினை பதிலீடு செய்கின்ற தொழிற்நுட்பங்கள் குறித்து இப்போது அதிகம் அக்கறை செலுத்தப்படுகின்றது. குறைந்த உழைப்பில் உயரிய உற்பத்தியை அடைவதையே கம்பனிகள் இலக்காக கொண்டுள்ளன. இவை தோட்டங்களை சிறுபகுதிகளாக்கி வெளியார்க்கு கையளித்தல் முறைக்கு இட்டுச்செல்லும் நிலை தள்ளப்படுவதை காணக்கூடியதாக உள்ளது.

சமூக ரீதியாக முழுக்கமுழுக்க தொழிலாளர் குடும்பங்களாக இருந்த நிலைமாறி, தொழிலாளர் அல்லாதோரை கொண்ட சமூகமாக, மலையக சமூகம் இன்றி மாறிவருகின்றது. இந்த சமூகநிலை மாற்றம் அதிகரித்து செல்லும் போக்கு அவதானிக்க கூடியதாக உள்ளது. இதுவரை தோட்ட நிர்வாகத்தில் தங்கியிருந்த நிலைமாறி, பிரதேசசபை, போன்ற அரசாங்க நிறுவனங்களில் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் போக்கே எதிர்காலத்தில் காணப்படலாம்.

அந்தவகையில் அரசியல் ஜனநாயக முறைமையில் அதிக ஈடுபாடு காட்டக்கூடிய சூழ்நிலை உருவாகலாம். அதனுடைய பிரதிபலிப்புகள், மாகாண தேசிய மாவட்டங்களில் புதிய அரசியல் தலைமைகள் - கீழிலிருந்து உருவாகக்கூடிய சாத்தியங்கள் நிலவுகின்றன. இந்த போக்கு மக்களின் அபிவிருத்தி தேவைகளை அர்த்தமுள்ள வகையில் வெளிப்படுத்துவதாக அமையும்.
மலையக மக்களை சார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து ஒரு தரவு தளம் இல்லாதிருப்பதாகும். அமைச்சு மட்டத்தில் இப்படியொன்று அமைக்கப்பட வேண்டுமென 10 ஆண்டு திட்டம் நடைமுறைப்படுத்திய போது முன்மொழிவு செய்யப்பட்டது.

நாம், முன்னர் குறிப்பிட்டது போல, பல்வேறு அரச நிறுவனங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகின்றன. இவை பற்றிய தரவுகள், மற்றும் தகவல்கள் ஓரிடத்தில் கிடைப்பதாயில்லை. இது ஒரு அமைச்சு மட்டத்திலே நிறுவப்படுவது பொறுத்தமான ஒன்று.

நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்தவரை கல்வித்துறை சம்பந்தமான சீடா நிறுவனத்தின் ஊடாக தரவுத்தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. மலையகம் முழுவதையும் உள்ளடக்கி, அனைத்து துறைகளுக்குமான கல்வி- சுகாதாரம், வீடமைப்பு, பாதைகள் மற்றும் பல்கலைக்கழகம் செல்வோர், வேலை வாய்ப்பற்றோர் போன்றவிடயங்களுக்கென தரவுக்களம், ஒன்று அவசியமாகும்.

மலையக மக்கள் சமத்துவ அபிவிருத்தியை நோக்கி, எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்? அபிவிருத்தி குறித்து நோபல் பரிசு பெற்ற இந்திய பொருளியல் அறிஞர் அமாத்தய சென் அவர்களின் கூற்றொன்றை இச் சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவது பொருத்தமானது என நினைக்கிறேன். “ஒரு தனிமனிதன் எத்தகைய அளவு உரித்துகளையும், இயலுமைகளையும் கொண்டிருக்கிறானோ அந்த அளவிற்கே அவன் அபிவிருத்தியை அடைந்து கொள்ள முடியும்” என்ற கருத்தை இச்சமூகத்திற்கும் பொருந்திப்பார்க்க முடியும்.

இங்கு சுட்டிக்காட்டப்பட்ட வரலாற்று அனுபவத்திலும் இந்த சமூகம் உரித்துக்களின் தொகுதிகளை ஏனைய சமூகங்களோடு ஒப்பிடுகையில் காலங்கடந்தே பெற்று கொண்டது. இன்னும், இந்த உரித்துக்களின் தொகுதி பெருப்பிக்கப்பட வேண்டும். இதை முழுமையாக அனுபவிக்கவேண்டுமெனில் அதற்கான இயலுமையை இந்த சமூகம் பெற்றிருக்க வேண்டும். இயலுமை குறைவே, இந்த சமூகத்திற்குரிய மிகப்பெரும் பலவீனமாகும். இதுவும் வரலாற்று நிகழ்வுகளின் விளைவுதான். இந்த இயலுமைகளின் அபிவிருத்தி மனிதவள மேம்பாட்டில் தங்கியுள்ளது கல்வி திறன் பயிற்சி என்பவை தான் இவற்றை கொண்டு வர முடியும்.

இத்தகைய சமூக சூழ்நிலையிலே, நேரடியாக நடவடிக்கைகள் அல்லது நேர்கணிய பாரபட்ச ஏற்பாடுகள் இந்திய, மலேசியா போன்ற நாடுகளின் யாப்புகளில் காணப்படுகின்றன. இலங்கையில் இத்தகைய இடைவெளிகள் காணப்பட்டபோது அவற்றை நீக்க நேர்கணிய பாரபட்ச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்கலைக்கழக அனுமதியில் இன மற்றும் பிராந்திய தரப்படுத்தல், இனத்துவ ரீதியான ஆட்சேர்ப்பு என்பன சில உதாரணங்களை குறிப்பிடலாம்.

ஒரே மக்கள், ஒரே நாடு என்ற கோட்பாடு அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டுமெனில் ஒரே மக்கள் என்ற தொகுதிக்குள் அடங்குகின்ற இனக்குழுக்கள் சமத்துவ நிலையை அனுபவிக்க வேண்டும். இங்கு இரண்டு மேற்கோள்களை பொருத்தம் கருதி குறிப்பிடலாம். ஒன்று இந்திய பிரதம நீதிபதி ஏ. என். ரே அவர்களின் கூற்று, சமத்துவம் அற்றவர்களுக்கு, சமத்துவமான சந்தர்ப்பங்களை வழங்குதல் சமத்துவமின்மையை தீவிரப்படுத்தும் என்பதாகும் மற்றது இந்திய யாப்பை உருவாக்கிய அம்பேத்காரின் கூற்று, நாம் அரசியலில சமத்துவம் கொண்டுள்ளோம். ஆனால் சமூக, பொருளாதார வாழ்வில் சமத்துவமின்மையை காண்கின்றோம். கூடிய விரைவில் இம்முரண்பாட்டினை நீக்க வேண்டும். இல்லையெனில் சமத்துவமின்னையால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக உழைத்து கட்டியெழுப்பிய இந்த அரசியல் ஜனநாயக அமைப்பினை உடைத்து எறிவார்கள்.

மலையகத்தின் காந்தி என போற்றப்படும் அமரர் கே. இராஜலிங்கத்தின் 104 ஆவது பிறந்த தினத்தையொட்டி கடந்த 3ஆம் திகதியன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் “மலையக மக்கள் சமத்துவ அபிவிருத்தியை நோக்கி” எனும் தலைப்பில் எம். வாமதேவன் ஆற்றிய பேருரை

தொடரும்…..
நன்றி- தினகரன்