Tuesday, April 28, 2009

உள்ளுராட்சி சட்ட மூலத்தை மத்திய மாகாணசபை நிராகரிக்க வேண்டும்

மத்திய மாகாணசபையில் எதிர்வரும் மே 5 ஆம் திகதி விவாதிக்கப்படவுள்ள உள்ளுராட்சி விஷேட ஒழுங்குகள் சட்டமூலத்தை மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டுமென மாகாணசபை உறுப்பினர் கனபதி கணகராஜ் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி விஷேட ஒழுங்குகள் சட்டத்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தச் சட்டமூலம் மலையக மக்களின் உள்ளூராட்சி உறுப்பினர் பிரதிநிதித்துவத்தை கீழ் மட்டத்திற்கு கொண்டு வந்துவிடும். தற்போது இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் சிறுபான்மையாக வாழுகின்ற பகுதிகளில் உள்ளூராட்சி சபைகளின் ஊடாக தமது பிரதிநிதித்துவத்தைத் தக்க வைத்துள்ளனர். அத்துடன், மாகாணசபை மற்றும் பாராளுமன்றத்திலும் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்துள்ளனர். மாகாணசபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்து கொள்ள முடியாத பிரதேசங்களில் உள்ளூராட்சி சபைகளின் ஊடாகத் தமது பிரதிநிதித்துவத்தைத் தெரிவு செய்து கொள்கின்றனர்.
இந்த விடயம் குறித்து மலையகத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையில் இந்தச் சட்ட மூலத்தினை மத்திய மாகாணத்தில் நிராகரிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியிடம் கோருவதுடன் ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கின்ற மாகாணசபை உறுப்பினர்களின் ஒத்துழைப்பையும் கோரவுள்ளதாக அவர் தெரிவித்தார்
இலங்கையில் அதிகமான மதுபான விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள நுவரெலியா மாவட்டம்

நுவரெலியா நகரில் வீதிக்கு வீதி மதுபான நிலையங்கள் அமைப்பட்டுள்ளன. ஒரு சிலர் விற்பனை அனுமதிப் பத்திரம் பெற்றும் கடை திறப்பதற்கு இடமில்லாமல் இருக்கின்றனர். கடந்த அரசாங்க காலத்தில் இருந்ததை விட தற்போது மதுபான கடைகள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதுடன், வீதிகள் தோறும் இரண்டு அல்லது ஒன்று என்ற அடிப்படையில் மதுபானக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா பிரதான பஸ்தரிப்பு நிலையத்தில் மதுபான கடைகளும் பிரதான வீதியில் 2 பார்களும், எலிசபெத் வீதியில் ஒரு மதுபான கடையும் லோசன் வீதியில் 3 மதுபான கடைகளும் கண்டி வீதியில் 2 பார்களும் 4 மதுபான கடைகளும் ஒரு பியர் கடையுமாக 15 மதுபான விற்பனை நிலையங்கள் நுவரெலியா நகரிற்குள் இருக்கின்றன. இந்த 15 மதுபான விற்பனை நிலையங்களுடன் கந்தப்பளை வீதியில் ஹாவ-எலியாவில் மதுபான விற்பனை நிலையம் பொரவத்த என்னும் இடத்தில் ஒரு மதுபான விற்பனை நிலையமும் உள்ளன. இவ்விரண்டு மதுபான விற்பனை நிலையங்களும் சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மதுபான விற்பனை நிலையங்கள் இருக்கும் இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் ஆலயங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், முஸ்லீம் பள்ளிவாசல், தொழிற்சாலைகளும் அமைந்திருக்கின்றன. நுவரெலியாவிலிருந்து ரம்பொட புசல்லாவ வரையிலும் பல மதுபான விற்பனை நிலையங்களும் நுவரெலியாவிலிருந்து நானுஓயா லிந்துல தலவாக்கலை வரையும் நுவரெலியாவிலிருந்து வெளிமடை வரையும் நுவரெலியாவிலிருந்து கந்தப்பளை இராகலை வரையிலும் பல மதுபான விற்பனை நிலையங்கள் உள்ளன.
இது இப்படியிருக்கையில், நுவரெலியா மாநகரசபை எல்லைக்குள் உள்ள உல்லாச ஹோட்டல்களிலும் மதுபானம் விற்பனை செய்யப்படுகின்றது. நுவரெலியா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 50 இற்கும் அதிகமான மதுபானம் விற்பனை நிலையங்களும் பார்களும் உட்பட சுமார் 15 இற்கும் அதிகமான உல்லாச ஹோட்டல்களிலும் பார்களும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
தோட்டத்தொழிலாளர்கள் அதிகமாக நடமாடும் இடங்களிலேயே மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்படுகின்றன. இது இவ்வாறிருக்க பெருந்தோட்ட பகுதிகளில் அனுமதியற்ற மினிபார்களும் இயங்குகின்றன. இலங்கையிலே மதுபான விற்பனை நிலையங்கள் அதிகமாக இருப்பது நுவரெலியா மாவட்டத்திலாகும்.
நுவரெலியா மாவட்டத்தை பொறுத்தமட்டில் கல்வி, பொருளாதார தொழில் வாய்ப்பு, வீதிகள், குடியிருப்புகள் போன்றவற்றின் அபிவிருத்தியை விட மதுபான விற்பனை நிலையங்களே அபிவிருத்தியடைந்துள்ளதென்று இம்மாவட்ட பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இடைநிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் ஆரம்பிக்க கோரிக்கை

புசல்லாவை இரட்டைப்பாதை நகரிலிருந்து தொரகல மற்றும் நயபனை பகுதிகளுக்கான பஸ் போக்குவரத்து சேவைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்படுகிறது. இரட்டைப் பாதையிலிருந்து நயபனை மற்றும் தொரகல செல்லும் வழியில் அமைந்துள்ள பாலம் ஒன்று உடைந்து விழுந்ததால் இவ்வீதியில் இடம்பெற்ற இரு பஸ் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன. தற்போது பாலம் புனரமைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் இவ்வீதியினூடான பஸ் போக்குவரத்து சேவையை நடத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் பாதிப்பை தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜோசப்

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு ஆசிரியர்களை அனுமதிக்கும் போது குறித்த பாடத்தில் குறைந்த பட்சம் க.பொ.த. (சா த.) பரீட்சையில் திறமைச் சித்தி அவசியமாகும். ஆனால், அண்மையில் தோட்டப் பகுதிப் பாடசாலைகளுக்கு சாதாரண சித்தியுடன் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு விண்ணப்பிக்க முடியாததால் மாணவர்களே பாதிக்கப்படுவர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் தோட்டப் பகுதிப் பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறையை நீக்கும் முகமாக அண்மையில் 3,300 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சாதாரண சித்தியுடனேயே நியமிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு அனுமதிக்கும் போது குறித்த பாடத்தில் அவ்வாசிரியர்கள் க.பொ.த. (சா த) பரீட்சையில் குறைந்தது திறமைச் சித்திப் பெற்றிருக்க வேண்டுமென வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தோட்டப்புறப் பாடசாலைகளுக்கு சாதாரண தர சித்தியுடைய ஆசிரியர்கள் செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளது. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு மொத்தமாக 4,000; பேர் விண்ணப்பிக்கின்ற நிலையில் 1000 பேரே உள்ளீர்க்கப்படுகின்றனர். இவ்வாறான நிலையில் இந்த ஆசிரியர்கள் பயிற்சியை பெற முடியாததால் மாணவர்களே இதனால் பாதிக்கப்படுவர். எனவே மாணவர்களின் பாதிப்பை தடுப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
நியாயமான சம்பள உயர்வுக்கு தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த செயற்பாடு

அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றினைந்து சிந்தித்து செயற்படுவதன் மூலம் தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க முடியுமென இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் இரா.தங்கவேல் கெட்டபுலா தோட்டத்தில் இடம்பெற்ற தொழிற்சங்க கூட்டத்தில் தெரிவித்தார் கூட்டு ஒப்பந்தத்தை சாடுவதனாலோ விபரிதமான அறிக்கைகளை விடுவதனாலோ மரண சாசனம் என கொச்சைப் படுத்தி கூறுவதாலோ மலையக மக்களுக்கு எந்த விமோசனமும் கிட்டப் போவதில்லை. மாறாக கூட்டு ஒப்பந்தத்தின் கூட்டாளிகளை தம்வசப்படுத்தும் வகையில் தொழிலாளர்களுடைய அபிலாஷைகளையும் தேவைகளையும் கோரிக்கைகளையும் அதற்கான சான்றிதழ்களையும் சம்பந்தப்பட்டவர்களோடு கலந்துரையாடி ஆக்கபூர்வமான பங்களிப்பை அனைத்து தொழிற்சங்கங்களும் கூட்டாக இணைந்து செயற்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தோட்ட முதலாளிகளும் அரசும் ஏற்றுக் கொள்ள அழுத்தம் கொடுப்பதாக அமையும் என்றார். இன்று அவசியம் தேவைப்படுவதெல்லாம் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒரே குரலில் ஒரே அழுத்தத்தில் உரிய கோரிக்கைகளை முன்வைப்பதே ஆகும். இதற்கு தொழிற்சங்க தலைவர்களின் புரிந்துணர்வும் கருத்தொற்றுமையுமே அவசியம்.