Saturday, July 11, 2009

மூடப்பட்டுவரும் தேயிலை தொழிற்சாலைகள்

மலையக பகுதியில் உள்ள சகல தோட்டங்களும் வெள்ளையர்களின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் போது சகல தேயிலை தோட்டங்களும் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்தது. அப்போது தொழிலாளர்கள் பெரும் பிரச்சினைகளின்றி மாதம் 30 நாட்களும் வேலை செய்து வந்தனர். அக்கால கட்டத்தில் சகல தேயிலை தோட்டங்கள் தோறும் தேயிலை தொழிற் சாலைகள் இருந்தன. அந்தந்த தேயிலை தோட்ட தேயிலை கொழுந்துகளை அதே தோட்ட தொழிற்சாலைகளில் அரைத்து தேயிலையை நல்ல விலைக்கு பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர்.

அக்கா¡லத்தில் தோட்டங்களில் இருந்த தெருக்கள் சுத்தமாக இருந்தன. வைத்திய சாலைகள் பராமரிப்பில் இருந்தன. தோட்ட சுத்திகரிப்பாளர்கள் கடமையில் இருந்தனர். தோட்டப் பளிச்சென இருந்தது.

இவ்வாறான தேயிலை தோட்டங்களையும் இறப்பர் தோட்டங்களையும் அரசாங்கம் பொறுப்பேற்று அரச உடமைகளாக்கியது. அப்போது அரச பெருந்தோட்டயாக்கம், மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை என இரண்டு பிரிவுகளின் கீழ் தோட்டங்கள் இயங்கி வந்தன. தேயிலை தோட்ட பராமரிப்பு ஓரளவுக்கு சிறந்து காணப்பட்டது.

இவ்வாறான கால கட்டத்தில் அரசாங்கம் ஒரு சில தேயிலைத் தோட்டங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்தது. அவ்வாறு இணைக்கப்பட்ட போது அத் தோட்டங்களில் இருந்த தேயிலை தொழிற்சாலைகளை மூடி விட்டனர்.

அவ்வாறு மூடப்பட்ட தேயிலை தொழிற் சாலையில் இருந்த உபகரணங்களை விலை மனு கோரி விற்று விட்டனர்.

பின்னர் தோட்டங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டன. அவ்வாறு குத்தகைக்கு எடுத்த சிலர் தேயிலை கொழுந்தை மட்டும் பறித்து விற்றனர். ஆனால் தேயிலை தோட்டங்களை துப்புரவு செய்யவில்லை. பல தோட்டங்கள் தற்போது காடாகி வருகின்றன. பராமரிப்பில் அக்கறை குறைந்து வருகிறது.

தோட்டங்களில் இருந்த மரங்களை வெட்டி விற்று விட்டனர்.அந்தப் பணத்தில் தொழிலாளர்களுக்கு பங்கு வழங்கவில்லை முழுமையாக கம்பனிகள் சுருட்டி கொண்டன.

மேலும் அக்காலத்தில் மூடப்பட்ட தேயிலை தொழிற்சாலைகளையும் விலை மனு கோரி விற்பனை செய்கின்றனர். அவ்வாறு விற்பனை செய்யும் பணமும் கம்பனிகாரர்கள் சுருட்டி கொள்கின்றனர்.

இவ்வாறாக கிடைக்கப் பெறும் இலாபங்களை தொழிலாளர்களுக்கு ஒரு சதமேனும் வழங்குவது இல்லை. இவ்வாறு தோட்டங்களில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் விற்று தீர்ந்த உடன் தொழிலாளர்களுக்கு என்ன மிஞ்சப் போகிறது? இவ்வாறு விற்பனை செய்வதை அரசாங்கமும் தோட்டத் தொழிற் சங்கங்களும் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்னும் தோட்டங்களில் லயன் அறைகளில் வசிப்போர் உள்ளனர். 8 ஒ 8 காம்பிராக்களில் வசிக்கின்றனர். அதனை நவீன மயப்படுத்த வேண்டும். தற்காலிக கொட்டில் அமைத்து கொண்டும் உள்ளனர். தோட்ட நிர்வாகம் சம்பாதித்து கொண்டு செல்வதை மட்டும் பார்க்காமல், இவர்களுக்கான வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்க முன்வர வேண்டும். சகல வேலைகளையும் அரசாங்கம் செய்து கொடுக்கும் என்ற எதிர்பார்பில் தோட்ட கம்பனிகள் தொழிலாளர் நல விஷயங்களை கண்டு கொள்வதில்லை. இலாபம் தேடுவதிலேயே குறியாக உள்ளன.

தொழிலாளர்களின் சம்பளத்தை கூட்டிக் கொடுக்க கம்பனிகள் இழுத்தடிப்பு செய்கின்றன. கம்பனிகாரர்களினால் தான் இது நடக்கின்றது. கிடைக்கும் இலாபம் எல்லாம் எங்கு போகின்றது?

ஒருசில தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்கினாலும் பல தோட்டங்கள் பாரிய இலாபத்தினை தேடி கொடுக்கின்றன. அதற்குக் காரணம். தோட்டத்தை நிர்வாகம் செய்யும் முகாமையாளரும் தோட்ட தொழிலாளரும் தான் காரணம்.

மஸ்கெலியா பகுதியை எடுத்துக் கொண்டால் சீட்டன் தோட்ட தேயிலை தொழிற்சாலை, புரவுண்லோ தேயிலை தொழிற்சாலை, அப்புகஸ்தனை தேயிலை தொழிற்சாலை, பெரிய நடுதோட்ட தேயிலை தொழிற்சாலை, ராணி தோட்ட தேயிலை தொழிற்சாலை மல்லியப்பு தேயிலை தொழிற்சாலை மினிசிங் லேன் தேயிலை தொழிற்சாலை நல்ல தண்ணி தேயிலை தொழிற்சாலை மடுல்கல தேயிலை தொழிற்சாலை என்பன மூடப்பட்டுள்ளன.
இவற்றில் மல்லியப்பு தேயிலை தொழிற்சாலையை அப்புறப்படுத்தும் வேலை ஆரம்பமாகி விட்டது.இதனால் தோட்ட தொழிலாளர்களுக்கு எந்த நன்மையும் கிடையாது கம்பனிக்காரர்களுக்கே இதில் இலாபம்.

ஏனையவற்றையும் இழந்து விடாமல் காப்பாற்றிக் கொள்ள தொழிலாளர்கள், தொழிற் சங்கங்கள், அரசாங்கம் முன்வர வேண்டும்.
-பெருமாள்-