Sunday, July 4, 2010

மக்களை மையமாகக் கொண்டே எல்லைகள் மீளமைக்கப்பட வேண்டும்

இலங்கையின் தற்போதைய பொருளாதார, சமூக, அரசியல் சூழ்நிலைகளை எடுத்து நோக்கும் போது அரசியல் துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றமை சுட்டிக்காட்டப்படுகின்றது. அவ்வடிப்படையில் யாப்பு சீர்த்திருத்தம், தேர்தல் முறைமையில் மாற்றம் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள் இலகுவாக மக்களை அணுகக் கூடியதாக இருக்க வேண்டும்.

அரசாங்கம் பிரதேச செயலக, கிராம சேவகர் பிரிவு எல்லை ஆகியவற்றை மீள் நிர்ணயம் செய்தல் அல்லது புதிதாக அமைத்தல் சம்பந்தமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அது தொடர்பாக மக்களின் சிவிலமைப்புகளின் கருத்துக்களை கோரியுள்ளது. உள்ளூரா ட்சி அமைப்பின் எல்லைகளில் மாற்றங்களைக் கொண்டு வருதல் என்பது வெறுமனே புவியியலை மாத்திரம் மையப்படுத்தியதாகக் கொள்ள முடியாது. சிவில், அரசியல், பொருளாதார, கலாசார உரிமைகளை சார்ந்த சகல விடயங்களையும் தீர்மானிப்பதாக அமைந்திருந்திருக்கின்றது

சிறுபான்மை மக்கள் இவ்விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதனடிப்படையில் மனித அபிவிருத்தித் தாபனம் மலையக மக்களை மையமாகக் கொண்டு பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவகர் எல்லைகளை மீளமைத்தல், மீள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக பல்வேறு தரப்பினர் மத்தியில் கலந்துரையாடல் களையும், கள ஆய்வுகளையும் மத்திய, ஊவா, சப்ரகமுவ போன்ற மாகாணங் களில் மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து உயர்மட்ட கலந்துரையாடல் கொழும்பில் நடைபெற்றது.

கலாநிதி ஏ. எஸ். சந்திரபோஸ், பேராசிரியர் எம். எஸ். மூக்கையா, எஸ். விஜேசந்திரன் ஆகியோரின் ஆய்வறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டும், பல்வேறு மட்டங்களிலிருந்து முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் மூலம் தயாரிக்கப்பட்ட முன் மொழிவுகளைக் கொண்டும் நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களுக்கான முன்மொழிவுகள் மனித அபிவிருத்தி தாபனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும் மலையக சிவிலமைப்புகள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள் போன்ற பலர் தமது ஆலோசனைகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு சிறந்த சேவையளிக்கும் நோக்கத்துடனேயே பிரதேச செயலகங்கள், கிராம சேவகர் பிரிவுகள் போன்ற நிர்வாக சேவை அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. எனினும் நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் குறிப்பாக தோட்டப் பகுதிகளிலும் நிர்வாக சேவை முறை மிகவும் பின்னடைவாகவே காணப்படுகின்றன. மலையக மாவட்டங்களைப் பொறுத்தவரையில் வட கிழக்கிற்கப்பால் மிக அதிகமான தமிழ் பேசும் மக்களைக் கொண்டதாகக் காணப்படுவது நுவரெலியா மாவட்டமாகும். ஒப்பீட்டு ரீதியில் நுவரெலியா மாவட்டம் ஏறக் குறையை 7,55,500 பேரை சனத்தொகையாகக் கொண்டிருந்த போதும் அங்கு 5 பிரதேச செயலகங்களே காணப்படுகின்றன. அதேவேளை அம்பகமுவ பிரதேசச் செயலகம் சராசரியாக 130,000 தோட்ட மக்களுக்கு சேவையாற்ற வேண்டியுள்ளதோடு, ஒரு கிராம சேவை அலுவலர் சராசரியாகத் தோட்டப்பகுதியில் ஏறத்தாழ 3500 மக்களுக்கு சேவை செய்ய வேண்டியுள்ளது. இது தேசிய மட்டத்தை விட 5 மடங்கு பெரிதானது. இந்த நிலைமை, பிரதேச செயலகத்தினதும் கிராம சேவை அலுவலரினதும் நிலைமைகளை மட்டுப்பாட்டிற்கு உள்ளாக்குகின்றது. அதேவேளை பயனாளி மக்கள் தங்களுடைய பல்வேறு உரிமை களையும் சலுகைகளையும் இழக்க வேண் டிய நிலைமைக்கு உள்ளாகின்றனர்.

எனவே தான் பல சிவிலமைப்புகள் பிரதேச செயலகங்களில் மக்களுக்கு நியாயமான சேவைகள் சென்றடைய வேண்டும் என வலியுறுத்துகின்றன. இதுவரை காலமும் மலையக அரசியல் தலைமைகளை எடுத்து நோக்கின் அவர்கள் தங்களது அதிகாரத்தின் அல்லது கட்சியின் இருப்பினை கருத்திற் கொண்டே கோரிக்கைகளை முன்வைக்கின்றனரே யொழிய இத்தகயை விடயங்களை மேற்கொள்வதில் அவர்களின் பங்கு மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. மலை யக அரசியற் கட்சிகள் தமது வாக்கு, வங்கியை மையமாகக் கொண்டு தேர்தலுக்கு முன் வழங்கும் விஞ்ஞாபனங்கள் எந்தளவுக்கு நடைமுறைக்கு சாத்தியமாகியுள்ளன. என்பது கேள்விக் குறியே.

பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவகர் பிரிவுகள் ஆகியன பற்றிய எல்லைகள் மீள் நிர்ணயம் செய்தல் என்பது ஒரு புவியியல் சார்ந்த விடயம் மாத்திரமல்ல. அது ஓர் அரசியல் சார்ந்த விடயமாகும். மலையக மக்கள் குறிப்பாக இந்திய வம்சாவளித் தமிழர் கள் ஒன்றில் பரந்துபட்ட அளவில் சிறு சிறு குழுக்களாக வாழ்ந்து வருகின்றனர். அல்லது பிரதான போக்குவரத்து தொடர்பு மையங்களிலிருந்து மிகத் தொலைவில் வாழ்ந்து வருகின்றனர். எனவே தற்போதைய பிரதேச செயலக அமைப்பு முறைகள் அவர்களின் பங்கு பற்றலை அல்லது அவர்களின் அணுகு தலை அல்லது அவர்களின் உரிமை களை நிலைநாட்டிக் கொள்வதிலிருந்து மட்டுப்பாடுடையதாகவே காணப்படுகின்றன.
பல சந்தர்ப்பங்களில் பெருந்தோட்ட மக்கள் பிரதேச சபை அமைவிற்குள் உள்வாங்கப்படாதவர்களாக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. கிராம சேவகர் பிரிவுகளை எடுத்துக் கொண் டால் அண்மைக் காலங்களில் தோட்ட மக்களை உள்ளடக்கிய கிராமப் பிரிவுகள் அமைக்கப்பட்டாலும் கூட இன்று பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன. சில பிரதேச செயலகங்கள் புவியியல், அடிப்படையில் மிகத் தொலைவில் காணப்படுவதும் அதேவேளை அப்பிரதேச செயலகங்களை அணுகுவதற்கான போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டதாகக் காணப்படுவதும் மற்றொரு குறைபாடாகும்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் எல்லைகள் அப்பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களை உள்வாங்குவதிலிருந்து மட்டுப்படுத்தப் பட்டிருக்கின்றமையால் அவற்றை மீள் நிர்ணயம் செய்யப்படுகின்ற தேவை காணப்படுகின்றது. உதாரணமாக நுவரெலியா மாவட்டத்தில் சனத் தொகையை அடிப்படையாகக் கொண்டும், புவியியல் இட அமைவை அடிப்படையாகக் கொண்டும் போக்குவரத்து தொடர்பாடலை மையமாகக் கொண்டும், வரலாற்று ரீதியான வறுமையை அடிப்படையாகக் கொண்டும், மொழி வாரியான பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது. இதேபோல் பதுளை, இரத்தினபுரி, கண்டி உட்பட ஏனைய மாவட்டங்களிலும் மேற்படி விடயங்களைக் கவனத்திற் கொண்டு எல்லைகளை மீள் நிர்ணயம் செய்தல் அவசியமாக இருக்கின்றது.
புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பிரதேச செயலகங்கள்

இவ்வடிப்படையில் மனித அபிவிருத்தி தாபனம் கீழ்வருமாறு நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மலையக பெருந்தோட்ட மக்களையும் தமிழ் பேசுகின்ற மக்களையும் அடிப்படையாக கொண்டு கீழ்வருமாறு 14 புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குமாறு பிரேரணையை முன்வைக்கின்றது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் ஏற்கனவே காணப்படுகின்ற 5 பிரதேச செயலகங்களுடன் புதிதாக அட்டன், நோர்வுட், தலவாக்கலை, நானுஓயா, ராகலை, பூண்டுலோயா, மதுரட்ட போன்ற புதிய 7 பிரதேச செயலகங்கள் பிரேரிக்கப் பட்டுள்ளன.

மும்மொழியப்பட்ட கிராம சேவகர் பிரிவுகள்
அதேபோல் கண்டி மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் பெருந்தோட்ட மக்கள்சார் அல்லது தமிழ் பேசுகின்ற மக்கள் அதிகமாக பன்விலை, புஸ்ஸலாவ, நாவலப்பிட்டி, தெல்தோட்டை, இரங்கலை பிரதேசங்களிலே வாழுகின்றனர். இவ்வடிப்படையில் பெருந்தோட்ட மக்களை மையமாகக் கொண்டு புதிதாக ரங்களை பிரதேசத்தல் 30 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு புதிய பிரதேச செயலகம், ரஜவெலை பிரதேசத்தில் 30 கிராம சேவகர் பிரிவு களை உள்ளடக்கிய ஒரு புதிய பிரதேச செயலகம், புஸ்ஸலாவ பிரதேசத்தில் 30 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு புதிய பிரதேச செயலகம் புதிதாக அமைக்க வேண்டுமென பிரேரணை செய்யப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், மலையக பெருந்தோட்ட மக்கள் பசறை, ஹாலிஎல, அப்புத்தளை போன்ற பிரதேசங்களிலேயே செறிவாக வாழ்கின்றனர். அதேபோல் இப்பிரதேச ங்களில் தமிழ் பேசுகின்ற மக்கள் குவி யப்படுத்தப்பட்டுள்ளமை அவதானிக்கத் தக்கது. அவ்வடிப்படையில் நமுனுகல பிரதேசத்தில் 50 கிராம சேவகர் பிரிவு களை உள்ளடக்கிய ஒரு புதிய பிரதேச செயலகம் அமைக்கப்பட வேண்டியுள் ளது. அத்துடன் ஹல்துமுல்ல பிரதேச செயலகம் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு புதிதாக வெலன்விட்ட என்ற பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டியுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங் கொடை, இம்புல்பே, இறக்குவானை, காவத்தை, நிவித்திகல போன்ற பிரதேச ங்களிலேயே பெருந்தோட்டங்கள் மையப்படுத்தப்பட்டுள்ளன. இப்பிரதேச ங்களில் வாழும் தமிழ் பேசும் மற்றும் கிராமிய பெருந்தோட்ட மக்களின் நலன்கருதி பலாங்கொடை, இபுல்பே ஆகிய பிரதேச செயலகங்களுடன் புதிதாக மாரத்தென்ன என்ற பிரதேச செயலகம் 40 கிராம சேவகர் பிரிவு களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட வேண்டும் என பிரேரிக்கப்பட்டுள்ளது. அதே போல் 38,000 சனத்தொகையையும் 38 கிராம சேவகர் பிரிவுகளையும் மையமாகக் கொண்டு புதிதாக இறக்குவானை என்ற பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டும் என பிரேரி க்கப்பட்டுள்ளது.

மலையக பெருந்தோட்ட மக்கள் வாழும் மாத்தளை, கேகாலை, மொனராகலை, குருநாகல் போன்ற மாவட்டங்களிலும் தோட்ட, கிராமிய மக்கள் பயன் பெறுவதற்கு பிரதேச செயலக எல்லைகளை மீள் நிர்ணயம் செய்யப்பட வேண்டிய தேவை காணப் பட்டாலும் கூட அப்பிரதேசங்களின் சமூக அரசியல் நிலைமைகளையும் புவியியல் நிலைமைகளையும் அடிப் படையாகக் கொண்டு பார்க்கும் போது, அவ்வாறான பிரேரணைகளை முன் வைப்பதில் பல சிக்கல்களும் முரண் பாடுகளும் காணப்படுகின்றன. பிரதேச எனவே இம்மாவட்டங்களில் ஏற்கனவே காணப்படுகின்ற செயலகங்களில் பெருந்தோட்ட மக்களை அல்லது தமிழ் பேசுகின்ற மக்களை மையமாகக் கொண்ட அலகுகள் உருவாக்கப்பட வேண்டிய தேவை காணப்படுவது சுட்டிக்காட்டப்படுகின்றது.

மேற்படி பிரேரணைகள் அடிமட்ட மக்களின் ஆலோசனைகளுடன், மலை யகம் சார்ந்த புத்திஜீவிகள் மனித அபி விருத்தி தாபனம் மற்றும் சிவில், அரசி யல் கட்சிகளினாலும் முன்வைக்கப்படு கின்றன. இப்பிரேரணைகள் நடைமுறைப் படுத்துவதென்பது மலையக அரசியல் சார்ந்தவர்களின் பொறுப்பாக இருப்ப துடன், மலையக பொது மக்கள், சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், புத்தி ஜீவிகள், வர்த்தகர்கள் போன்ற அனைவரி னதும் பொறுப்பாகும். இவ்வடிப்படையில் மேற்படி முன்மொழிவுகள் சம்பந் தமான பல்வேறு மட்டத்திலான கருத் துக்கலங்கள், கருத்துப் பகிர்வுகள் ஆலோசனைகள் ஏற்பாடு செயப்பட வேண்டியதும், அவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டியதும் சகலரினதும் பொறுப்பாக இருப்பதுடன் சம்பந்தப் பட்டவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது மக்களின் பொறுப்பாகும்.
பி. பி. சிவப்பிரகாசம்
மனித அபிவிருத்தி தாபனம்

நன்றி- தினகரன் வாரமஞ்சரி 04-07-2010