மலையக தொழிலாளர்களை அடிமைப்படுத்தும் கூட்டு ஒப்பந்தம் கிழித்தெறியப்பட வேண்டும் என்று மலையக இடதுசாரி முன்னணியின் தலைவர் சுந்தரம் மகேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இன்று உலகிலேயே மிகவும் கீழ் மட்ட நிலையில் வாழ்க்கை தரத்துடன் வாழும் மக்களில் மலையக சமூகம் ஒன்றாக உள்ளது. இம் மக்களின் வழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான எத்தகைய வேலைத்திட்டங்களும் இன்றியே, மலையகத் தலைமைகள் உள்ளன. தமது சுகபோகத்திற்காக தொடர்ந்தும் மக்களை ஏமாற்றியே வருகின்றன.
தற்போது மலையக தொழிலாளர்களுக்கு நாளாந்த கூலியாக ரூபா 500 வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல மட்டங்களில் பேசப்பட்டு வரப்படுகிறது. ஆட்சிக்கு ஆலவட்டம் பிடிக்கும் மலையக தலைவர்களும் இதைப் பற்றி பேசத்தொடங்கி உள்ளனர். இவர்களின் பேச்சை ஒருபோதும் மலையக மக்கள் நம்பமாட்டார்கள். நாளாந்த கூலி ரூபா 500 என்ற விடயத்தில் மலையகத் தலைவர்களும் பங்கு கொண்டால், நிச்சயம் அப்போராட்டம் சாகடிக்கப்படும் என்பது மலையக மக்களுக்கு நிச்சயம் தெரியும். ஏனென்றால் கடந்தகால வரலாறு அத்தகைய பாடத்தையே அவர்களுக்கு புகட்டியுள்ளது.
மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவு உயர்வு தொடர்பாக ஊடகப்போர் நடந்துகொண்டு இருக்கிறது. இந்தப் போரில் உண்மையில் போராட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும் உள்ளனர். போராட்டத்தை தொடரவிடாமல் ஏமாற்ற வேண்டும் என்ற கபட எண்ணத்துடன் செயற்படுபவர்களும் உள்ளனர். அனைத்து மலையக தலைமைகளும் ஒன்றுபட்டு ஓரணியில் நின்று போராடினால் மலையக தொழிலாளர்களின் தினக்கூலியை ரூபா 500 ஆக உயர்த்த முடியும். ஆனால், இவர்கள் ஒரு போதும் ஒன்றுபட மாட்டார்கள். கூட்டு ஒப்பந்தம் என்ற மாய மானை மலையக மக்கள் மறந்து வெகுநாட்கள் ஆகிவிட்டன. உண்மையில் இந்த கூட்டு ஒப்பந்தத்தில் மூன்று மலையக தொழிற்சங்கங்கள் மாத்திரமே பங்கெடுதிருந்தன. ஒட்டுமொத்த மலையகத் தொழிலாளர்களுக்கும் இந்த மூன்று தொழிற்சங்கங்கள்தான் பொறுப்பு என்றால் ஏனைய தொழிற்சங்கங்கள் என்ன செய்கின்றன? இவர்கள் அரங்கில் இருந்து வெளியேறிவிட்டனரா? அல்லது விலைபோய் விட்டனரா?
கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் குறிப்பிட்ட காலவரையான சம்பள உயர்வு கோர முடியாது ஆனால் தேயிலை விலை ஏற்றம் ஏற்பட்டால் அதன் இலாபத்தில் தொழிலாளர்களுக்கு பங்கு வழங்கப்படவேண்டும். ஆனால் இன்று வரை தொழிலாளர்களுக்கு அத்தகைய இலாபம் எதுவும் வழங்கப்படவில்லை. இதுபற்றி தொழிற்சங்க தலைமைகளிடம் கேட்டால் கம்பனிகள் நட்டத்தில் இயங்குவதாக பதில் அளிக்கின்றனர்.
கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் குறிப்பிட்ட காலவரையான சம்பள உயர்வு கோர முடியாது ஆனால் தேயிலை விலை ஏற்றம் ஏற்பட்டால் அதன் இலாபத்தில் தொழிலாளர்களுக்கு பங்கு வழங்கப்படவேண்டும். ஆனால் இன்று வரை தொழிலாளர்களுக்கு அத்தகைய இலாபம் எதுவும் வழங்கப்படவில்லை. இதுபற்றி தொழிற்சங்க தலைமைகளிடம் கேட்டால் கம்பனிகள் நட்டத்தில் இயங்குவதாக பதில் அளிக்கின்றனர்.