தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம்
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வைத் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் வழக்கம் போலவே மலையக அரசியல் தலைமைத்துவங்களிடம் கோஷ்டி மோதல்கள் ஆரம்பித்துவிட்டன. மலையக மக்களின் மேல் தாம் பற்றுக்கொண்டவர்களாகக் காட்டிக்கொள்ள இச்சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் மலையக அரசியல் தலைமைத்துவங்கள் முன்வைக்கும் சம்பள உயர்வு தொடர்பான கோரிக்கைகளும் நிபந்தனைகளும் எச்சரிக்கைகளும் இன்றுவரை அந்த மக்களின் வறுமை நிலையை மாற்றியமைக்கத்தக்க எந்த முடிவையும் பெற்றுக்கொடுக்கவில்லையென்பதே எமது நீண்டகாலக் கவலை. கூட்டு ஒப்பந்தத்தை இந்தத் தலைமைகள் சுயலாப அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதே அன்றிலிருந்து இன்றுவரை நடந்தேறி வருகின்றது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சியின் இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஆகியன ஒரு முகாமாகவும் ஏனைய மலையக தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் இன்னொரு முகாமாகவும் நின்று செயற்படுவதை முதலாளிமார் சம்மேளனம் தமக்கு சாதகமாக்கிக்கொண்டு தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பைத் தீர்மானிக்கின்றது. தற்போது கூட கூட்டு ஒப்பந்தத் திகதி; காலாவதியாகின்ற நிலையில் தோட்டத் தொழிற்சங்கங்களுக்கிடையில் இழுபறிகள், கருத்து மோதல்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன. இந்தவித இணக்கப்பாடற்ற தன்மைக்கு முடிவு காணப்படாத பட்சத்தில் இம்முறையும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்பார்க்கும் சம்பள அதிகரிப்பு வெறும் கானல் நீராகவே போய்விடும்.
கடந்தமுறை செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 290 ரூபாவும் நாட்சம்பளமாக 405 ரூபாவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இம்முறை அடிப்படைச் சம்பளமாக 500 ரூபாவும் மேலதிக ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 250 ரூபாவுமாக மொத்தம் 750 ரூபா வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை பல தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ளன. இதுவிடயம் தொடர்பில் கூட்டு ஒப்பந்தத்தில் இடம்பெறாத தொழிற்சங்கங்கள் இணைந்து செயற்படவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்ற நிலையில் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் நஷ்டக் கணக்கைக் காட்டத் தொடங்கியுள்ளதுடன் தோட்டத் தொழிலாளர்களிடையே வறுமைநிலை குறைந்துள்ளதாகவும் அவர்களின் வாழ்வு வளம் பெற்றுள்ளதாகவும் கூறத் தொடங்கியுள்ளமை கடந்த முறையைப் போலவே இம்முறையும் கூட்டு ஒப்பந்த கைச்சாத்து பெரும் இழுபறியில்தான் முடியப் போகின்றது என்பதை உணர்த்துவதாகவே உள்ளது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்புக் கிடைக்க வேண்டுமென்றால் முதலில் மலையகத் தொழிற்சங்கங்கள் ஒன்றுபட வேண்டும். தமது அரசியல் காழ்ப்புணர்ச்சிகளைக் கைவிட்டு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அடுத்த இரு வருடங்களுக்குத் தீர்மானிக்கப் போகும் இந்த விடயத்திலாவது பரஸ்பரம், புரிந்துணர்வு, விட்டுக் கொடுப்புடன் செயற்பட முன்வரவேண்டும். அதைவிடுத்து வறட்டுக் கௌரவம், பிடிவாதத்துடன் செயற்பட்டால் பாதிக்கப்படப்போவது இரத்தம் சிந்தி உழைக்கும் அப்பாவித் தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமே.
மலையகத் தொழிற்சங்கங்களை உடைத்து அதில் குளிர்காயாது தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைப் பிரச்சினைகளையும் தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினையும் கருத்திற்கொண்டு நியாயமானதொரு சம்பள அதிகரிப்பை வழங்க தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் முன்வரவேண்டும். அத்துடன் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பது போல் செயற்படும் ஒருசிலர் தமது இந்தக் கபடத்தனத்தைக் கைவிட்டு தமது மக்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்க வழிவகைகளைச் செய்யவேண்டும். அத்துடன் தனியார் துறையினரின் சம்பள உயர்வுகள், அவர்களின் தொழில் நடவடிக்கைகள் தொடர்பில் கட்டுப்படுத்தும், அழுத்தம் கொடுக்கும் அதிகாரம் அரசுக்குள்ளது. ஆனால் தமது எதிர்கால அரசியல் நலன்களுக்காக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு பிரச்சினையை அரசியல் கண்ணோட்டத்தில் அணுகாது நியாயமானதொரு தீர்வைப் பெற்றுக்கொடுக்க அரசும் பொறுப்புடன் செயற்பட முன்வரவேண்டும்.
நன்;றி- தினக்குரல்
No comments:
Post a Comment