Monday, August 31, 2009

தொழிலாளர் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி

தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள உயர்வு தொடர்பாக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்குமிடையே 31-09-2009 ஆம் திகதி கொட்டக்கலையில் இடம் பெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேற்கொள்ளவுள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக 01-10-2009 காலை 10.00 மணிக்குக் கொட்டகலை காங்கிரஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப் பேச்சுவார்த்தையில் இ.தொ.கா. பொதுச்செயலாளரும் இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூகப்பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் இ.தொ.கா. தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம், பிரதியமைச்சர் எஸ்.ஜெகதீஸ்வரன், இ.தொ.கா.வின் தேசிய அமைப்பாளர் ஆர்.யோகராஜன், இலங்கைத்தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் ஊவா,மாகாணசபை உறுப்பினருமான கே.வேலாயுதம், பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் இராமநாதன் மற்றும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தில் இ.தொ.கா.வின் உயர்பீட உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள், மாவட்டத் தலைவர்கள், தோட்டக் கமிட்டித் தலைவர்கள், மாதர் சங்கத் தலைவிகள் ஆகியோர் உட்படப் பலர் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுமியை வேலைக்கமர்த்திய வீட்டு உரிமையாளருக்கு விளக்கமறியல்

மஸ்கெலியாவைச் சேர்ந்த மதுரைவீரன் ஜீவராணி (13) சிறுமியை வேவைலக்கமர்த்தியிருந்த பௌத்தாலோக்க மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட வர்த்தகர் ஒருவர் சட்ட விரோதமான முறையில் வேலைக்கமர்த்தியிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையையடுத்து கொழும்பு மேலதிக நீதவான் வீட்டு உரிமையாளரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மதுரைவீரன் ஜீவராணி மற்றும் லெட்சுமன் சுமதி ஆகிய இரு சிறுமிகளும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 15 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள கழிவு நீர்க்கால்வாயில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
தொண்டமானின் தொழிற்சங்க போராட்டங்கள்

பெரும்பான்மை சமூகத்தினராலும்,அரசுகளாலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டுவந்த உரிமைகளை வென்றெடுப்பதில் போராட்ட வீரனாகவும், செயல்திறன் மிக்க தலைவனாகவும் விளங்கிய அமரர் சௌ. தொண்டமானின் போராட்டங்கள்

• 1946ம் ஆண்டு வெற்றிலையூர், உருளவள்ளி போராட்டம்.
• 1947களில் பிரஜாவுரிமை வாக்குரிமை பறிக்கப்பட்டதன் விளைவாக சுழற்சி முறையிலான போராட்டங்கள்.
• 1952-53 களில் சம்பள போராட்டம்
• 1960-62 களில் அவிசாவளை பென்றி தோட்டம் மற்றும் டில்லரி தோட்டங்களில் தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்பட்டதன் விளைவாக எழுந்த போராட்டங்கள்.
• உடப்புசல்லாவ, டெல்ஹவுஸ் ஆகியவற்றின் வாழைமரப் போராட்டம். • பதுளை, கந்தஹென தோட்டத்தில் போராட்டம்
• எட்டியாந்தோட்ட அலகொல்ல தோட்ட கண்ணாடி வளையல் போராட்டம்.
• பசறை டெம்பேரிய போராட்டம்
• 1972 இல் தோட்டத் தொழிலாளர்களின் வேலை நேரப் போராட்டம்.
• 1984 இல் ஆண், பெண் சம சம்பளத்திற்கான போராட்டம்
• வட்டக்கொட, மடக்கும்பர போராட்டம்
• தலவாக்கொல்லை ஹொலிரூட் போராட்டம்
• பூண்டுலோயா, டன்சினன் போராட்டம்
• 1977 இல் சிவனு லட்சுமணன் போராட்டம்
• கலஹா இரும்புக்கொல்லை தோட்டப் போராட்டம்.
• உடப்புசல்லாவ டெல்மார் போராட்டம்
• சாஞ்சிமலை போராட்டம்
• நாவலப்பிட்டி மொண்டிகிறிஸ்டோப் போராட்டம்
• மாத்தளை முத்துசாமிப் போராட்டம்

மேற்படி போராட்டங்கள் அமரர் சௌ. தொண்டமான் காலத்தில் நிகழந்தமை குறிப்பிடத்தக்கது
நன்றி- வீரகேசரி

Sunday, August 30, 2009

தேயிலையில் கலப்படம் செய்வதைத் தடுப்பதற்கு நடவடிக்கை - தி.மு.ஜயரட்ன

இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையில் கலப்படம் செய்வதைத் தடுப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் டி.எம். ஜயரத்ன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தரம் குறைந்த தேயிலை உற்பத்தியால் சர்வதேச சந்தையில் இலங்கை தேயிலையின் தரத்துக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஏற்றுமதி செய்யப்படுகின்ற தேயிலையில் தரம் குறைந்த தேயிலையை கலப்பதால் சந்தைவாய்ப்பில் தடை ஏற்படுகிறது என்றும் அதனால் தரம் குறைந்த தேயிலை உற்பத்தி தொடர்பான முறையான திட்டம் ஒன்றை வெளியிட வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் அனுமதிப் பத்திரம் பெற்ற 275 தரம் குறைந்த தேயிலை உற்பத்தியாளர்கள் உள்ளனர். இதேவேளை தரம் குறைந்த தேயிலை உற்பத்தியாளர்களுக்கு புதிதாக அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும் அனுமதிப்பத்திரம் இன்றி தரம்குறைந்த தேயிலை உற்பத்தியில் ஈடுபடுகின்றவர்களை சுற்றிவளைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தோட்ட சேவையாளர்களுக்கு காணி கிடைக்குமா?

பெருந்தோட்ட சேவையாளர்கள் நீண்ட காலங்களாக பணியாற்றிவிட்டு ஓய்வுபெற்ற பின்னர் அவர்கள் தமக்கென ஒரு வீட்டை அமைத்துக் கொள்வதற்கு தேவையான காணியை பெற்றுக்கொடுக்க ஆவண செய்யுமாறு இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத் தலைவர் பி. இராமசிவம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
பெருந்தோட்ட சேவையாளர்கள் தோட்டங்களில் பணிபுரியும் காலப்பகுதியில் வசிக்கும் வீடுகளை ஓய்வுபெற்றுச் செல்லும்போது தோட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட்டு ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பபிக்கை நிதியம், சேவைக்காலப் பணம் என மிஞ்சும் பணத்தைப் பெற்றுக்கொண்டு அத்தோட்டத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படுகிறது.
அவர்கள் பணிபுரிந்த காலப்பகுதியில் பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையில் தமது நிரந்தரக் குடியிருப்பு, பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் எதுவும் இருப்பதில்லை. ஓய்வுபெற்றுச் செல்லும் காலம் நெருங்கும் போதுதான் சொந்த வீடு, காணி, இருப்பு பற்றிய சுய சிந்தனை எழுகிறது. தோட்டத்திலிருந்து வெளியேறிச் செல்வோரில் சிலர் தமது வாழ்க்கையை சிறப்பாக கொண்டு செல்லும் அதேவேளை பெரும்பாலானோர் வாடகை வீடுகளில் இறுதிக்காலத்தை கழிக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தோட்ட சேவையாளர்களுக்கென சிறு துண்டு காணியை ஒதுக்கித் தருமாறு இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் அரசாங்கங்களிடமும், தோட்டக் கம்பனிகளிடமும் விடுக்கும் கோரிக்கைகளுக்கு சாதகமான பதில்கள் கிடைத்தாலும், இறுதியில் அவை வெற்றியளிக்காத நிலையே தொடர்கிறது.
இவ்விடயம் தொடர்பாக இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவர், பொதுச் செயலாளர் நாத் அமரசிங்க உட்பட அச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் பெருந்தோட்டத் தொழில் அமைச்சர் டி எம். ஜயரட்னவின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். சங்கத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து தேவையான நடவடிடக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்தார். எனினும் இந்நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்த போதிலும் இதுவரை காணி வழங்கப்படாமல் இருக்கிறது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை நேடியாக சந்தித்து கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை, வழங்குமாறும் ஜனாதிபதி இவ்விடயத்தில் தலையிட்டு மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் தோட்ட சேவையாளர்களுக்கு காணிகளைப் பெற்றுக்கொடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாவலப்பிட்டி
டி.வி. குமார்
சம்பளப் பேச்சுவார்த்தை தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையுமா?

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது. தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாக ஒவ்வொரு தொழிற்சங்கமும் ஒரு தொகையை நிர்ணயித்து அறிக்கை விடுகின்றன. தற்போதைய சூழ்நிலையில் நாளொன்றுக்கு 500 ரூபாவாக இருந்தால் மாத்திரமே தற்போதைய வாழ்க்கை செலவை சமாளிக்க முடியும் என்பதை தொழிற்சங்கங்களும் உணர்ந்துள்ளன. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இ.தொ.கா, இ.தே.தோ.தொ.சங்கம் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியனவும் முதலாளிமார் சம்மேளனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 500 ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தன. எனினும் பன்னிரண்டரை வீத சம்பள உயர்வை மாத்திரமே வழங்க முடியும் என்று முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து இடை நிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் ஆகஸ்ட் 31ம் திகதி இடம்பெறவுள்ளது. இப் பேச்சுவார்த்தையில் முதலாளிமார் சம்மேளனம் சம்பள உயர்வை வழங்க முடியாததற்கான காரணங்களை முன் வைக்கும் என்பது நிச்சயம். இப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டு நியாயமாக நடந்து கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இத் தொழிற்சங்கங்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் தொழிலாளர்கள் பற்றி சிந்தித்து முடிவெடுக்க வேண்டியது அவசியமாகும்.

Sunday, August 16, 2009

தொழில் அந்தஸ்து இல்லாத நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கவனிக்குமா தொழிற்சங்கங்கள்?

தோட்டத் தொழிலாளர்களின் வரலாறு 200 வருடங்களைத் தாண்டி விட்டது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில் துறையானது, ஆங்கிலேயர் ஆரம்பித்த கோப்பி தேயிலைத் தொழிலோடு ஆரம்பிக்கின்றது. இந்தத் துறையே இன்று வரையும் இலங்கையின் பொருளாதாரத்தை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கின்றது.
இத்தேயிலைத் தொழிலானது உயர் நிலத் தேயிலை, மத்திய நிலத் தேயிலை, தாழ்நிலத் தேயிலை எனப் பயிர் செய்யப்பட்டு வருகின்றன. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி 2008 ஆம் ஆண்டு மொத்த நிலப்பரப்பு 2,22,000 ஹெக்டேயராகக் காணப்பட்டாலும் 193,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிர் செய்யப்பட்டது. இதில் 320 மில்லியன் கிலோ கிராம் ஏற்றுமதி செய்யப்பட்டதுடன் 137,600 மில்லியன் ரூபா ஏற்றுமதி பெறுமானமாக கணிக்கப்பட்டது.
குறிப்பாக உயர் நிலத் தேயிலை பயிர் செய்யும் பிரதேசங்களிலேயே பெருந்தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழ்கின்றனர். 2008 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் கணிப்பீட்டின்படி உயர்நிலத் தேயிலை 61,773,000 கி.கி. உம் மத்திய நிலத் தேயிலை 42,718,000 கி.கி. தாழ்நிலத் தேயிலை 161,981 கி.கி. உம் கொழுந்து ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.
இத்தேயிலைக்கு கிடைத்த மொத்த விலையாக பின்வருமாறு காணப்பட்டது. உயர் நிலத் தேயிலை 269.01 மத்திய நிலத் தேயிலை 260.68 தாழ்நிலத் தேயிலை 325.64 என (ரூபா) விலை கிடைத்தது. எல்லா வகைத் தேயிலைக்கும் 301.63 ரூபா விலை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட் இத்தொழிலாளர்கள் இன்று வரையும், இவர்கள் செய்யும் தேயிலை உற்பத்தி தொழில் நிலை அந்தஸ்து அற்றவர்களாக (கிடைக்காதவர்களாக) தொழில் செய்து வருகின்றார்கள் என்பது வேதனைக்குரிய விடயமாகும்.
உலகத்திலேயே இந்த தேயிலைத் தொழில் அல்லது பெருந்தோட்டத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் மட்டுமே தொழில் அந்தஸ்து அற்றவர்களாக உழைக்கின்றார்கள். இவர்களுக்கான உடை இல்லை. பாதுகாப்பு இல்லை. (குறிப்பாக மருந்து தெளித்தல், உரம் போடுதல், தொழிற்சாலை வேலைகள்).
இம்மக்கள் ஆரோக்கியமாகவும், தொழில் நிலையில் அந்தஸ்து பெற்றவர்களாகவும் இருந்தால் மட்டுமே, குறிப்பிட்ட தொழில் துறையின் உற்பத்தி கூடும். தொழில் துறை வளர்ச்சியடையும், உற்பத்தி அதிகரித்து வருமானம் கூடும் என்பது கவனிக்கப்படல் வேண்டும்.
இதுவரை காலமும் இத்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப வழங்கப்படவில்லை. அத்துடன் இவர்கள் சார்ந்திருக்கும் தொழிற் சங்கங்களும் இவற்றைப் பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை என்பது கவலையான விடயம். வெறுமனே உழைப்பை மட்டுமே பெற்றுக் கொள்ள எத்தனிக்கும் கம்பனி நிருவாகங்கள், இவர்களின் சம்பள உயர்வு, காப்புறுதி, தொழில் பாதுகாப்பு, உடல் ஆரோக்கியம் போன்றவற்றில் கவனம் செலுத்துவது மிகவும் குறைவு. கிட்டத்தட்ட மூன்று இலட்சத்திற்கு மேல் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளனர். (இறப்பர், தென்னை, தேயிலை) இவர்களுக்கென பல்வேறு தொழிற்சங்கங்கள் உள்ளன. இந்த தொழிற்சங்கங்களுக்கான சந்தா பணம் மட்டும் மாதம், மாதம் சம்பளத்தில் கழிக்கப்படுகின்றது. சில தோட்டங்களில் சில தொழிற்சங்கங்கள் 50 வருடத்திற்கு மேலும் அங்கத்தவர்களை கொண்டு செயற்படுகின்றது.
அன்று தொடக்கம் இன்று வரையும் பல கட்சிகளுக்கு சந்தாப் பணம் செலுத்துகின்றார்கள். ஆனால் கோயில் மணி, விளையாட்டு உபகரணங்கள் தவிர சில தோட்டங்களுக்கு இன்னும் உருப்படியாக எதையேனும் செய்யவில்லை என்பதே மக்களின் ஆதங்கம்.
தேர்தல் காலங்களில் கூட ஏனைய கட்சி அங்கத்தவர்களை தூற்றுவதும் அவர்களின் பிழைகளைச் சுட்டிக்காட்டுவதும் குண்டர்களை ஏவி விட்டு சக தொழிலாளர்களையே தாக்குவதும், கட்சிக்குள்ளேயே பல்வேறு வெட்டுக் கொத்துக்களும் குளறுபடிகளும் இருப்பதை இன்று மக்கள் தெளிவாக புரிந்து கொண்டார்கள்.
இந்த அரசியல் வாதிகளிடம் மக்கள் எதிர்பார்ப்பது எல்லாம் இம்மக்களின் வாழ்வியல் விடிவுக்கு ஏதாவது பொருத்தமானதாக செய்ய வேண்டும் என்பதே ஆகும்.
தொழிற்சங்கத்தை நடத்துபவர்கள் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசங்களிலாவது எதையாவது சிறப்பாக மக்கள் நலன் கருதி செய்ய வேண்டும். இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் இருக்கும் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் போல் இங்கும் வரவேண்டும்.
கொட்டகலை
இரா. சிவமணம்
யுவதிகளின் சடலங்கள் தோண்டி எடுப்பு: செப்டெம்பர் 11 இல் விசாரணை

கொழும்பில் பௌத்தாலோக மாவத்த கருவாத்தோட்டம் கழிவு வாய்க்கால் ஒன்றில் மரணமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட மஸ்கெலியா சென். அன்றூ தோட்ட யுவதிகள் இருவரின் சடலங்கள் நேற்று (27) தோண்டியெடுக்கப்பட்டன.


கொழும்பு நீதவான் மன்றின் நீதவானின் உத்தரவுக்கமைய ஹட்டன் நீதவான் மன்றின் நீதவான் சந்துன் விதான முன்னிலையில் சுமதி, ஜீவராணி ஆகியோரின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு மேலதிகப் பிரேதப் பரிசோதனைக்காகக் கண்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. சடலத்தைத் தோண்டியெடுத்தபோது கொழும்பு கறுவாத்தோட்டப் பொலிஸாருடன் மஸ்கெலியா, நல்லதண்ணி, நோர்வூட், ஹட்டன் பொலிஸ் நிலை உத்தியோகத்தர்களும் வந்திருந்தனர்.யுவதிகள் மரணம் தொடர்பான வழக்கில் இலவசமாக ஆஜராகும் சட்டத்தரணிகள் கு. தம்பையா, கைலாசமூர்த்தி உள்ளிட்டோரும், நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் பிரதிநிதிகளும் வருகை தந்திருந்தனர். பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 500 பேரும் வந்திருந்தனர்.


சடலங்கள் இன்று (28) மேலதிகப் பரிசோதனை நிறைவடைந்ததும் மீண்டும் மஸ்கெலியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. எதிர்வரும் செப்டம்பர் 11 ஆம் திகதி விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமிகளின் மரணத்துக்கு எதிராக நியாயம் கோரி ஆர்ப்பாட்டம்

கொழும்பு அதி உயர் பாதுகாப்புவலயமான பௌத்தாலோக மாவத்தை கழிவு வாய்க்கால் பகுதியில் மரணமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட மஸ்கெலியா, லக்ஷ்பான பகுதியைச் சேர்ந்த சிறுமிகள் சுமதி, ஜீவராணி ஆகியோர் மரணத்துக்கு எதிராக மஸ்கெலியா நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது. சிறுவர் தொழிலாளர்கள் ஊக்குவிப்புக்கு எதிராகவும், மரணமடைந்த சிறுமிகளுக்கு நியாயம் கோரியும் இடம் பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகள், மனிதவள அபிவிருத்தி தாபனம், பிரிடோ நிறுவனம்,மொள்லார் நிறுவனம், ஹாய்ஸ் நிறுவனம், சிப்ட்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும், செங்கொடி சங்க உறுப்பினர்களும், அப் பிரதேசங்களை சேர்ந்த தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
சிறுவர் தொழிலாளர் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும், பெருந்தோட்ட மாணவர்களை தலைநகர கூலிகளாக்கும் நடவடிக்கைகளும்,அதன் முகவர்களுக்கு எதிராகவும் ஏற்படுத்தப்பட்ட பதாகைகளும் கோஷங்களும் எதிர்ப்பின் வெளிப்பாடுகளாக காணப்பட்டன.ஏற்பாட்டு நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசப்பட்டாலும் குரல் கொடுக்க தலைவர்களுக்கும் மக்கள் நன்றி சொல்லி இவ்வாறான நடவடிக்கைகள் “சிறுவர் தொழிலாளர்” அதிலும் குறிப்பாக மலையக சிறுவர்களை கிள்ளுகீரைகளாக நினைத்து தொழில் கொள்ளும் முதலாளி வர்க்கத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் தலைநகரில் தொழில் செய்வோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மலையக இளைஞர் யுவதிகள் மலையகத்திலே தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் தலைவர்களை மக்கள் கேட்டுக் கொண்டனர்.
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை!

மேல் கொத்மலை திட்டத்தால் பாடசாலை கட்டிடத்ததை இழந்துள்ள தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கான மாற்றுக் கட்டிடம் பல்வேறு குறைபாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளதாக பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரும், பழைய மாணவர்களும், பெற்றோர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.
தலவாக்கலை தமிழ் வித்தியாலயம் கடந்த 30 வருடங்களாக கைவிடப்பட்ட தேயிலை தொழிற்சாலை ஒன்றிலேயே இயங்கி வந்தது. இப்பாடசாலை கட்டிடம் மேல் கொத்மலைத் திட்டத்தின் விளைவாக அப்புறப்படுத்தப்படவுள்ளதால் புதிய கட்டிடம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 13ம் திகதி முதல் புதிய கட்டிடத்தில் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் மேல் கொத்மலைத் திட்டத்தின் மூலம் புதிய பாடசாலை அமைப்பது தொடர்பில் வழங்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளதாகவும், மேலும் பல குறைபாடுகள் காணப்படுவதாகவும் பாடசாலை அபிவிருத்திச் சங்க நிருவாகத்தினர் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
அதிகாரிகளால் வழங்கப்பட்ட அளவில் புதிய பாடசாலை அமைக்கப்படவில்லை. வகுப்பறைகள் சுமார் 20 மாணவர்கள் மாத்திரம் கற்கக்கூடிய வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. பாடசாலை கட்டிடத்தைச் சூழ பற்றைக்காடுகள் காணப்படுகின்றன. கட்டிடத்தின் உட்புறத்தில் நீர் வழந்தோடும் முறை ஏற்படுத்தப்படவில்லை. பாதுகாப்பு மதில்களும், ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கான மலசல கூடங்கள், மாணவர் தொகைக்கேற்ப மலசலகூடங்கள் முறையாக அமைக்கப்படவில்லை. பாடசாலை வளாகத்தினுள் பொது பாதை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாரிய ஆலமரத்துக்கு அருகில் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. பாடசாலைக்கான புதிய விளையாட்டு மைதானம் உறுதிப்படுத்தப்படவில்லை. இவை போன்று பல்வேறு குறைபாடுகளுடனேளே பொறுப்பேற்றுள்ளது என மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 28ம் திfகி பாடசாலைக்கு விஜயம் செய்த மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மேல் கொத்மலை திட்ட அதிகாரிகள் நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதேவேளை அமைச்சரின் வருகையைத் தொடர்ந்து புதிய பாடசாலை அமைப்புத் தொடர்பான முக்கிய ஆவணங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்த பிறகே தலைவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய கட்டிடத்தினை அப்புறப்படுத்துவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தலைவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் அபிவிருத்திச் சங்கத்தினர் பெற்றோர், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீதரன்
தினக்குரல்
வீட்டு வேலை தொழிலாளர்களை சட்ட ரீதியாக அங்கீகரிப்பதற்கான கலந்துரையாடல்

இலங்கை தோட்டத் தொழிலாளர் செங்கொடி சங்கம், செங்கொடி பெண்கள் இயக்கத்தின் தலைமையில் வீட்டு வேலை தொழிலாளர்களை சட்ட ரீதியாக அங்கீகரிக்கச் செய்வதற்கான கலந்துரையாடலொன்றை அண்மையில் கொழும்பு ஜானகி ஹோட்டலில் நடத்தியது. இக் கலந்துரையாடலுக்கு பிரதி தொழில் ஆணையாளர் உபாலி விஜயவீரவும், பெண்கள் மற்றும் குழந்தை தொழிலாளர் பிரிவின் செயலாளர் பர்ல்வீரசிங்ஹ உட்பட பல்வேறு தொழிற்சங்க தலைவர்களும் கலந்து கொண்டனர்.
செங்கொடி சங்கத்தின் பொதுச் செயலாளர் ஓ.ஏ இராமையாவின் வரவேற்புடன் கூட்டம் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து பெண்கள் குழந்தை தொழிலாளர் பிரிவு செயலாளர் கருத்துத் தெரிவிக்கையில் இன்று இலங்கையில் வீட்டு வேலை தொழிலாளர்களில் குழந்தைகளின் அளவு குறைந்திருப்பதை எண்ணி மகிழ்ச்சியடையும் அதேநேரம் எமது தொழிலாள பெண்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியுள்ளது. எனவே எமது இக் கலந்துரையாடல் அதற்கு நல்லதொரு வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செங்கொடி சங்கத்தின் தலைவரும், செங்கொடி பெண்கள் இயக்கத்தின் தலைவருமான மேனகா கந்தசாமி இலங்கையில் வீட்டு வேலை தொழிலாளர்கள் இன்று முகம் கொடுத்து வரும் பிரச்சினைகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து வீட்டு வேலை தொழிலாளர்களை சட்ட ரீதியாக அங்கீகரிக்க, அவர்களது உரிமைகளை வென்றெடுக்க எவ்வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஏனைய தொழிற்சங்க தலைவர்களிடம் அபிப்பிராயங்கள் அறியப்பட்டன.
இதனையடுத்து தொழில் ஆணையாளர் கருத்துத் தெரிவிக்கையில் வீட்டு வேலை தொழிலாளர்களின் இப் பிரச்சினைகள் தொடர்பாக தாம் கவனம் செலுத்தி வருவதாகவும், இவர்களை சட்ட ரீதியாக அங்கீகரிப்பதற்கு வீட்டு வேலை தொழிலாளர்களை பதிவு செய்தல் தொடர்பாகவும், வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் நிர்ணயிப்பது தொடர்பாகவும் தாம் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த செயற்பாடுகளை செயற்படுத்த தொழிற்சங்கத் தலைவர்களை உள்ளடக்கிய ஒரு குழு நியமிக்கப்பட்டது. அக் குழுவில் சட்ட ஆலோசகராக பீ. நவரத்ன, மேனகா கந்தசாமி, D.W சுபசிங்ஹ, M.R. ரசூடின் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

Saturday, August 15, 2009

வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணியில் டிரஸ்ட் நிறுவனம்

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி பொறுப்பு 1992ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாடு, வீடமைப்பு, அபிவிருத்தி, தோட்ட உட்கட்டமைப்பு, சிறுவர் பராமரிப்பு, சுகாதார நலன்கள், முதியோர் பராமரிப்பு, சுயதொழில் ஊக்குவிப்பு உட்பட பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
கொழும்பை பிரதான அலுவலகமாகவும் கண்டி, பதுளை, இரத்தினபுரி, காலி, ஹட்டன், நுவரெலியா, கேகாலை ஆகிய மாவட்டங்களில் பிராந்திய அலுவலகங்களையும் கொண்டும் இயங்கி வருகிறது.
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூகப் பொருளாதார அமைச்சு, பிரதான தொழிற்சங்கங்கள், தோட்டக் கம்பனிகள் ஆகியன ஒன்றிணைந்து தொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
தோட்டத் துறையை அபிவிருத்தி செய்யும் அதேவேளையில் புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்கள் தொடர்ந்து கற்பதற்கான உதவிகளைச் செய்து வருவதுடன் க.பொ.த. சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சையில் சித்தியடையும் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவியளித்து அவர்களை ஊக்குவித்து வருகிறது.
பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி பொறுப்பின் வருடாந்த பொதுக் கூட்டமும் விருது வழங்கும வைபவமும் அண்மையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதன் தலைவர் ஆர். யோகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்திராணி சுகததாச பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் சிறந்த முகாமைத்துவம், சிறந்த தேயிலைத் தொழிற்சாலை, தொழிலாளருக்கான சிறந்த வீடமைப்பு, சிறந்த குழந்தை நலன் அபிவிருத்தி நிலையம், சிறந்த சுகாதார பராமரிப்பு நிலையம், சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளில் சிறந்த முறையில் பங்களிப்பைச் செய்த தோட்ட முகாமையாளர், சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவான தொழிலாளர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
p. வீரசிங்கம்

நன்றி- தினகரன்
பெண்களின் தலைமைத்துவம் மலையகத்திற்கு வேண்டும்

எந்த ஒரு பெண்ணுக்கும் வீட்டிலேயே முதலாவது தலைமைத்துவம் கொடுக்க வேண்டும். இவர்களுக்கு ஒரு சில வீடுகளில் தலைமைத்துவத்தைக் கொடுப்பதற்கு எவரும் ஊக்குவிப்பது மிகவும் அரிதாக காணப்படுகிறது. ஒரு குடும்பத்தில் கணவன் இறந்த பிறகுதான் பெண்களுக்கு தலைமைத்துவம் கொடுக்கப்படுகின்றது. இதன் பின் மனைவிக்கு பெருமளவு பொறுப்பு சுமத்தப்படுகின்றது. அதாவது கணவன் இருக்கும் போதே தலைமைத்துவம் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
வீட்டில் நடக்கும் சின்னச் சின்ன விடயங்களைக் கூட பெண்களுடன் கலந்துரையாட வேண்டும். பிறந்தநாள், பூப்புனித நீராட்டு விழா, திருமணம், திருவிழா, கொண்டாட்டங்கள் பெருநாட்கள் இவையாற்றிலும் பெண்களின் பங்களிப்பு இருக்க வேண்டும்.சகல தீர்மானங்களிலும் இவர்களின் பங்களிப்பும் விருப்பமும் இருக்க வேண்டும். உதாரணமாக உடைகள் எடுப்பதில் கூட இவர்களின் விருப்பம் அறியப்பட வேண்டும். குறிப்பாக தோட்டத்தில் நடைபெறும் திருவிழா, மரண வீடு, பெருநாட்கள் (விழாக்கள்) சிரமதானம், பெற்றோர் கூட்டம், அரசியல் கூட்டங்கள், முன்பள்ளிக்கூடங்கள், மற்றும் தோட்ட மட்டத்தில் நடைபெறும் சகல நிகழ்ச்சிகளிலும் பெண்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். இதனுடாக சமூகத்தில் பெண்களின் வளர்ச்சியை அதிகரிக்க முடியும். ஆனால் இந்நிலைமை மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது.
மலையகப் பகுதியில் பெண்கள் அதிகமாகப் படிக்காவிட்டாலும் அவர்களிடத்தில் அதிகமான திறமைகள் உள்ளன.உதாரணமாக இவர்களால் செய்யப்படும் திண்பண்டங்களைச் சுட்டிக்காட்டலாம் (முறுக்கு, வடை, உருண்டை, அதிர்சம், கொக்கிஸ்), ஆனால் இன்று பெரும்பாலான கற்ற பெண்களுக்கு இவ்விடயங்களைச் செய்ய முடியுமா? என்பது கேள்விக்குறியே?
இவர்களிடம் திட்டம் இடும் பண்பு மிக அதிகமாகக் காணப்படுகின்றது. வீட்டுத் தோட்டம் போடுதல், வீட்டின் குடும்ப நிர்வாகம், பிள்ளைப் பராமரிப்பு, பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள், ஏனைய குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் கவனிக்கக் கூடிய திறமையும் பொறுப்பும் இப்பெண்களுக்கு இருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.
குறிப்பாக ஒரு விடயத்தை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இப்படி ஒரு தாய் கூறுகின்றார். எனது கணவன் மதுவிற்கு அடிமையானவர். எனக்கு நான்கு பிள்ளைகள், கணவர் சிறந்த கல்வியாளர், நல்ல சமூக சேவையாளர், பொது நலவாதி, எழுத்தாளர், கலைஞர் இவ்வாறு சகல திறமைகள் இருந்தும் இவரால் எனது குடும்பத்திற்கு எந்த ஒரு பிரயோசனமும் இல்லை. ஆனால் படிப்பறிவு இல்லாத என்னால் (கைநாட்டு) என்னுடைய 4 பிள்ளைகளையும் எனது திறமையால் படிக்க வைத்து இன்று சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். நான் பென்சன் எடுத்தும் இன்றும் வேலை செய்கின்றேன்.
4 பிள்ளைகளும் இப்படி சுறுகின்றனர். எங்கள் தந்தையினால் எங்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை. (தந்தை தற்போது இல்லை) எல்லாம் படிக்காத எங்க அம்மாதான். அவரை நாங்கள் எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வோம். இவ்வாறான எத்தனை தாய்மார்கள் மலையகத்தில் உள்ளனர்.
இவ்வாறான தாய்மார்களை மலையகச் சமூகம் கௌரவித்துப் பாராட்ட வேண்டும். இவர்களை உதாரண புருஷர்களாகக் கொள்ள வேண்டும். இன்று உலகத்தில் பால்நிலை சமத்துவம் பற்றி தினமும் கதைக்கப்படுகின்றது. ஆனால் எத்தனைப் பெண்களுக்கு இந்தப் பால்நிலை சமத்துவம் கிடைத்துள்ளது. ஒரு சில விடயங்களை செய்யும் போது பால் நிலைச் சமத்துவம் பற்றிக் கதைக்க வேண்டும். உதாரணம், திருமணம் செய்யும் போதே இதனைக் கதைக்க வேண்டும்.
ஆண்களும் (கணவன்) வீட்டு வேலைகளை சமமாக பகிர்ந்து செய்ய வேண்டும். தேநீர் தயாரித்தல், வீட்டு பராமரிப்பு, விருந்தினர் உபசரிப்பு, பிள்ளை பராமரிப்பு, உடைகள் கழுவுதல், உணவு சமைத்தல், வீட்டு பொறுப்புகள் போன்றவற்றில் ஆண்களும் ஈடுபட வேண்டும். ஆனால் மேற்கூறிய விடயங்களை முழுமையாகச் செய்யும் ஆண்களை பெண்கள் சமூகம் மதிப்பது இல்லை. ஏன் ஆண்கள் கூட இவ்வாறானவர்களை (PONTS) என அழைப்பதும் உண்டு.
எனவே பெண்கள், சமூகத்தில் தலைமைத்துவத்தை ஏற்கும் போதே சிறந்த ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும். அதாவது குழந்தைப் பேறு, குழந்தை வளர்ப்பு, பிள்ளைகளின் போசணை, பிள்ளைகளின் கல்வி, குடும்பத்திட்டமிடல், பெண் அடிமை, பெண் விடுதலை, பெண்ணியம், பால்நிலை சமத்துவம், பெண் கல்வி, பெண் துஷ்பிரயோகம், பாலியல் வன்முறைகள், இன்னும் எதிர்காலத்தில் சாதிக்க வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கின்றன. இதற்கு மலையகத்தில் இருக்கும் பெண்களின் சமூகம் கல்வி கற்க வேண்டும். கல்விதான் இதற்கான முதலீடு. என்று கல்வி கற்கத் தொடங்குகின்றோமோ அன்றே ஒரு சமூகம் விழித்துக் கொள்கின்றது.
கொட்டகலை சிவமணம்
ஆகஸ்ட் 15 கறைபடிந்த நாள்

-த.மனோகரன்-
வரலாற்றில் சில சம்பவங்களும் அவை இடம்பெற்ற தினங்களும் பதிவு செய்யப்படுகின்றன. அந்த வகையிலே 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இலங்கை வரலாற்றிலே கறைபடிந்த நிகழ்வின் ஒருபக்கமாக இடம்பெற்றுள்ளது. ஆம். 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இரத்தினபுரி மாவட்டத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட திட்டமிடப்பட்ட தமிழருக்கு எதிராக நடத்தப்பட்ட இன வெறிப் பயங்கரவாதம் நிகழ்ந்த,ஆரம்பித்து வைக்கப்பட்ட நாளாக அமைகின்றது.
இத் தினத்திற்கு முன்பும் அதாவது 1958 ஆம் ஆண்டிலும் இம் மாவட்டத்தில் இனவெறிப் பயங்கரவாதம் நிகழ்ந்த போதிலும் 1981 ஆம் ஆண்டு நிகழ்ந்த நிகழ்வுகள் இம் மாவட்டத் தமிழர்களது வாழ்வையே ஆட்டங்காணச் செய்து விட்டது. அதுவே மறுக்க, மறைக்க, மறக்க முடியாத உண்மை வரலாற்று நிகழ்வு.
பருவப் பெயர்ச்சிக் காற்று காலத்திற்குக் காலம் வடகிழக்குத் திசையிலிருந்தும், தென்மேற்குத் திசையிலிருந்தும் வீசுவது போல தமிழ்மக்களுக்கெதிரான வன்முறையும் வழமையான நிகழ்வாகி விட்டதால் எவரும் அது தொடர்பில் அலட்டிக் கொள்வதில்லை.
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பலாங்கொடை, இறக்குவானை, நிவித்திகலை, கலவானை, பெல்மதுளை, இரத்தினபுரி, எஹலியகொட, கொலன்ன ஆகிய எட்டுத் தேர்தல் தொகுதிகளுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட முறையில் 1981 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இன வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு தமிழர்களது சொத்துகள் அழிக்கப்பட்டன, எரியூட்டப்பட்டன, கொள்ளையிடப்பட்டன, பாடசாலைகளிலும் தேவாலயங்களிலும் தமிழர்கள் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர்.
ஆண்டுகள் இருபத்தெட்டைக்கடந்து இன்று இருபத்தொன்பதில் புகும் போதும் அன்றைய நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்களின் மனதுகளில் இன்றும் அன்றைய நிகழ்வின் வடுக்கள் மறையவில்லை. வேதனைகள் நீங்கவில்லை.
வயோதிபர்கள், கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தைகள், நோயாளிகள், பாலூட்டும் தாய்மார்கள் இவ்வாறு சகல தரத்தினரும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் அகதிகளாக்கப்பட்டனர், அவலத்திற்குள்ளாக்கப்பட்டனர். புத்தபெருமான் அவதரித்த இரண்டாயிரத்து ஐந்நூற்று ஐம்பதாம் ஆண்டு 1981 ஆம் ஆண்டு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதே ஆண்டு தமிழ் மக்கள் இனவெறிக் கொடுமைக்கும் உள்ளாக்கப்பட்டனர். எனவே இரத்தினபுரி மாவட்ட இனவெறிப் பயங்கரவாதம் நிகழ்வுகளை பகவான் புத்தரின் அவதார நினைவு ஆண்டுடன் இணைக்கும் போது வரலாற்றில் புத்தரின் போதனை எந்தளவுக்கு கைக்கொள்ளப்படுகின்றது,(பட்டது) என்பது பதிலாகின்றது.
அமைதியாக இருந்த இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழருக்கெதிரான வன்முறையைத் தூண்டிவிட்டது யார் என்பதற்கு எவரும் இதுவரை திட்டவட்டமான பதில் கூறவில்லை. அன்றைய அரசாங்கம் இஸ்மாயில் ஆணைக்குழு என்று ஒன்றை அமைப்பதாகக் கூறியதுடன், விடயத்தைக் கைவிட்டு விட்டது.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் “சன்டேசில்,மண்டேகில்” என்று அன்று இரத்தினபுரி மாவட்ட இனக் கலவரத்தை மட்டிட்டுச் சொன்னார். அதாவது 14 ஆம் திகதி போயா தினத்தில் புத்த பெருமானின் போதனைகளைக் கேட்க பௌத்த விகாரைகளில் கூடி தர்மோபதேசம் பெற்றவர்கள் பலர். மறுநாள் கொலை, கொள்ளை, அழிப்பு,எரிப்பு என்று பல்வேறு செயல்களில் மூர்க்கத்தனமாக ஈடுபட்டனர். இந்த நிலையைக் கண்ட அமரர் தொண்டமான் அன்றைய நிகழ்வுகளை மேற்கண்டவாறு மதிப்பிட்டு வெளிப்படுத்தினார்.
அன்று அதாவது 1981 இல் இரத்தினபுரி மாவட்டத்தில் எந்தவொரு பிரச்சினையும் இருக்கவில்லை. தமிழ் மக்கள் செல்வாக்காக இருப்பதைப் பொறுக்கமாட்டாத இனவெறிப் பயங்கரவாதிகள் திட்டமிட்டு ஒரேநாளில் தமிழர்களை அகதிகளாக்கினர் ஆட்சி இயந்திரமும் கைகட்டி, வாய்பொத்தி ஏன் வாழ்த்தியும் பார்த்திருந்த அவலம் கூட வரலாற்றுப் பதிவாகும்.
இரத்தினபுரி மாவட்டத்தில் பிறந்து, வளர்ந்து, படித்து,வாழ்ந்தவர்கள் உடைமைகளை இழந்து இருப்பிடங்களை இழந்து அகதிகளாக வெளியேறி வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மட்டுமல்ல, கடல்கடந்து இந்தியாவுக்கும் சென்றனர். இதுபற்றி இன்றுவரை எவரும் அலட்டிக் கொள்ளவில்லை.
பாதிக்கப்பட்ட இரத்தினபுரி மாவட்ட தமிழர்கள் மனவேதனையுடன் இறந்தவர்கள் பலர். அவதி வாழ்வு வாழ்பவர்கள் இன்றும் பலர் உள்ளனர். தமிழர்கள் அவதிப்பட்டு இடம்பெயர அவர்களது சொத்துகளைக் கொள்ளையடிப்பதிலும் குறைந்த விலையில் வாங்குவதிலும் கவனம் செலுத்தும் பலர் அன்றும் இருந்தனர். இன்றும் அவ்வாறு எதிர்பார்த்துள்ளோரும் அநேகர் உள்ளனர்.
இச்சம்பவம் நடைபெற்ற அடுத்தடுத்த மாதங்களில் இரத்தினபுரி மாவட்டத்தில் வானொலி, தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு உத்தரவுப் பத்திரம் இல்லாதவர்களுக்கு நடமாடும் சேவை மூலம் புதிதாக உத்தரவுப் பத்திரம் வழங்கப்பட்டதும் ஒரு வரலாற்றுப் பதிவாகும். கொள்ளைக்கு வெள்ளையடிக்கப்பட்டது. புத்தபகவானின் போதனைகளில் ஒன்றான கொள்ளையடித்தல் தவிர்க்கப்பட வேண்டும் என்பது சட்டத்தின் மூலம் மீறப்பட்டது. புத்தரின் போதனை அவமானப்படுத்தப்பட்டது.
இலங்கையில் தமிழர்களின் உள்ளக இடப்பெயர்வுகளில் 1981 இல் ஏற்பட்ட நிகழ்வுகளும் பதியப்பட வேண்டியவை. இன்று இவை மறக்கப்பட்டு விட்டாலும் வரலாறு அதாவது நிகழ்ந்த உண்மை வரலாறு மாற்றப்பட முடியாதது.
இன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப் போட்டிபோட்டுக் கூச்சலிடும் காலம் கடந்த இருபத்தொன்பது ஆண்டுகளுக்கு முன் இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்களுக்கு நிகழ்ந்த அதர்ம நிகழ்வுகளுக்கு இதுவரை எந்தவொரு சரியான பரிகாரமும் காணப்படவில்லை. இயற்கையின் தீர்ப்பு எதிர்காலத்தில் என்ன நிர்ணயம் செய்யுமோ தெரியவில்லை.
இதில் படுபாதகமான நிகழ்வு, கொடுமை என்னவெனில், இந்தியரான இந்துவான புத்த பிரானின் தர்மோபதேசம் கேட்டவர்கள் மறுநாள் இந்திய வம்சாவளி மக்களான இந்துக்களான தோட்டத் தொழிலாளர்களையும் கூட அகதியாக்கிய அவமானமாகும். இவற்றுக்கெல்லாம் காலம்தான் பதில் கூற வேண்டும்.
எவ்வாறாயினும் தமிழர்களுக்கு எதிரான இழிவான செயற்பாடுகளுக்கு எதிராகத் தமிழ் மக்களுக்குப் பல்வேறு உதவிகளையும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியும் ஆறுதல் தந்தும் செயற்பட்ட சிங்கள மக்களது நல்லுணர்வையும் போற்ற, மதிக்க மறக்கக் கூடாது.
நன்றி- தினக்குரல்
மலையக பெண்கள் இருவரின் சடலங்கள் கண்டெடுப்பு

கொழும்பின் அதியுயர் பாதுகாப்பு வலயமான பௌத்தலோக மாவத்தையிலுள்ள கழிவு வாய்க்கால் ஒன்றிலிருந்து இரு மலையக பெண்களின் சடலங்களை பொலிசார் கண்டெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் அப்பகுதி வீடொன்றில் வேலை செய்த பெண்களுடையதாக இருக்கலாம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.லக்ஷபான மற்றும் மஸ்கெலிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சுமதி (17) மற்றும் ஜீவராணி (16) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Thursday, August 13, 2009

மலையக பெண்களுக்கும் சம உரிமை அவசியம்

மலையகத்தில் இன்று பெண்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் பெருந்தோட்டப் பெண்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முதல் படி அவர்களுக்கு சமூக அந்தஸ்த்தை பெற்றுக் கொடுப்பதே. மக்கள் தொகையின் அரைவாசி ஏன் அதற்கும் மேலாக பெண்கள் குறித்து தொட்டப்ப பகுதிகளில் அதிகம் பேசப்படாமைக்கு காரணம் அவர்களுக்கு சமூக அந்தஸ்து இல்லாமையே என்ற உண்மை பலருக்கு புரிவதில்லை. ஒரு சமூகத்துக்கு சமூக அந்தஸ்த்து கிடைத்து விட்டால் அவர்களை சகல விடயங்களிலும் கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் என்ற நிலை உருவாகிவிடும். பெருந்தோட்ட மக்களுக்கு பிரஜா உரிமையும், வாக்குரிமையும் இல்லாத போது அவர்கள் எவராலும் கணக்கில் எடுக்கப்படவில்லை.இவைகள் கிடைத்தவுடன் அவர்களின் முக்கியத்துவம் அதிகரித்து வந்தது. இதன் மூலமும் அவர்களுக்கு சமூக அந்தஸ்து கிடைத்தது.
தற்போது பெருந்தோட்டப் பெண்களை எடுத்துக் கொண்டால் பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் பெண்கள், பெருந்தோட்டங்களை வதிவிடமாக கொண்டு வெளியிடங்களில் வேலை செய்யும் பெண்கள், ஆடைத் தொழிற்சாலை, கடைகள், போன்ற வேறு துறைகளில் வேலை செய்யும் பெண்கள் என பல வகைப்படுத்தலாம். பெருந்தோட்டப் பெண்கள் பல தொழில்களை செய்யும் போதும், அவர்கள் குடும்ப சுமைகளை ஏற்று பொருளாதார ரீதியிலும் அதனை சரி செய்து குடும்பத்திற்கு முதுகெலும்பாகவும் இருந்தாலும் அவர்களுக்கு சமூக அந்தஸ்து கிடைத்தாக வேண்டும். வெளியிடங்களில் வேலை செய்யும் பெண்கள் இந்தளவிற்கு பங்களிப்பு செய்யாவிட்டாலும் அவர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. இந்த இரு தரப்பினருக்கும் நியாயமாகவே கிடைக்க வேண்டிய அந்தஸ்து கிடைக்காமல் இருப்பதற்கு பெண்கள் உரிமைகள், சமூக அந்தஸ்து போன்ற விடயங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாமையே.
பெண்களுக்கான சம்பளம் அவர்களுக்கே வழங்கப்பட்டாலும் இன்னும் பல தோட்டங்களில் நம்பளத்தை பெற்றுக் கொள்வதற்கு விடுமுறை வழங்கப்படாததால் பெண்களாலும் அதனை பெற்றுக்கொள்ள முடிவதில்லை. பெண்கள் மீது வேலைத் தளங்களில் பாலியல் ரீதியான நேரடியானதும், மறைமுகமானதும் வன்முறைகள். இதனை நாம் அதிகமான தோட்டங்களில் காண்கிறோம். பெண்கள் பெருந்தோட்டப் பகுதிகளில் கீழ்மட்ட அதிகார அமைப்புக்களுக்கு நியமிக்கப்படுவதும் அவசியம். பொதுவாக கோயில் பரிபாலன சபை, பாடசாலை அபிவிருத்தி சபைகள், பெருந்தோட்ட மின்சார கூட்டுறவு, மரண உதவி போன்ற பல அமைப்புக்களுக்கு ஆண்களை போலவே பெண்களுக்கும் சம உரிமை கிடைப்பது பாராட்டக் கூடியவிடயமாக இருந்தாலும் மேலும் முக்கியமான வியடங்களில் சம உரிமை வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.
கூட்டு ஒப்பந்தம் பற்றி தொழிற்சங்கங்கள் கூடி ஆராய முடிவு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அது இன்னமும் புதுப்பிக்கப்படாமல் உள்ளது தொடர்பாக அடுத்த வாரமளவில் தொழிற்சங்கங்கள் கூடி ஆராயுவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடனான கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்து அதில் கைச்சாத்திடும் சங்கங்கள் சம்மேளனத்துடன் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன. அதன்போது தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை ஐநூறு ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென சங்கங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன. எனினும், இதனை நிராகரித்த முதலாளிமார் சம்மேளனம், நாளொன்றுக்கு 200 ரூபாவை வழங்க முடியுமெனத் தெரிவித்துவிட்டது. இது குறித்து தொழிற் சங்கங்கள் மீண்டும் அடுத்த வாரம் கூடி ஆராய்ந்து சம்மேளனத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படுமென்று காங்கிரஸ் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

Wednesday, August 12, 2009

தமிழ் வேட்பாளர்களிடம் ஒற்றுமையின்மையே தோல்விக்கு காரணம்

பதுளை மாவட்டத்தில் 22 வீதமான வாக்காளர்கள் தமிழ் சிறுபான்மையினர் எனவும், வேட்பாளர்களுக்கு இடையில் வாக்குகள் பிரிந்து சென்றதனால் சரியான பிரதிநிதித்துவம் கிடைக்கப் பெறவில்லை என பிரதி அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.உரிய அடையாள அட்டைகள் இல்லாத காரணத்தினால் அதிக எண்ணிக்கையிலான தோட்டப்புற தமிழ் வாக்காளர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என ஐ.தே.க மாகாணசபை உறுப்பினர் வேலாயுதம் தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள தோட்ட நிர்வாகம் உரிய உதவிகளை வழங்கவில்லை. கூட்டணியில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஊவா மாகாணசபைத் தேர்தலில் 5 தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட போதிலும், இந்த தடவை அந்த எண்ணிக்கை மூன்றாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான தமிழ் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்ட காரணத்தினால் வாக்குகள் பிரிந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Tuesday, August 11, 2009

ஊவா மாகாணசபைத் தேர்தலில 30 வீதமானோர் வாக்களிக்கவில்லை.

இம் முறை இடம்பெற்ற ஊவா மாகாணசபைத் தேர்தலில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானோர்(30 வீதம்) வாக்களிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் 8,75,456 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த போதும் 6,13,133 பேரே வாக்களித்துள்ளனர். கூடுதலாக பதுளை மாவட்டத்திலேயே 1,68,199 பேர் வாக்களிக்கவில்லை. இதில் பெரும்பாலானோருக்கு அடையாள அட்டை இல்லாத தோட்டத் தொழிலாளர்களே அடங்குகின்றனர்.
இலங்கையை அடையாளப்படுத்திய மலையக மாணவன்.

கடந்த ஜூலை 10ம் திகதி தொடக்கம் 22ம் திகதி வரை ஜேர்மனியின் பேர்மன் நகரில் இடம்பெற்ற 50வது சர்வதேச ஒலிம்பியாட் கணிதப் போட்டியில் மத்திய மாகாணத்தின் மத்திய கல்லூரி ஹைலன்ட்ஸ் மாணவரான லோகேஸ்வரன் லஜனுகன் உலக நாடுகளின் தர வரிசையில் 50 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆரம்பத்தில் இலங்கை 88வது ஸ்தானத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
1959ம் ஆண்டு தொடக்கம் இடம்பெற்று வரும் ஒலிம்பியாட் சர்வதெச கணிதப் போட்டிகளில் இலங்கை முதன் முதலாக பங்கேற்ற ஆண்டு 1955ம் ஆண்டு ஆகும். 20 வயதுக்குட்பட்டவர்கள் பங்குகொள்ளும் இப் போட்டியில் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் தலா 06 பேர் மட்டுமே பங்கு கொள்ள முடியும். இம் முறை 104 நாடுகளிலிருந்து 565 பேர் பங்குபற்றினர். இலங்கை சார்பாக பங்கு கொண்ட 06 பேரில் கொழும்பு லோகேஸ்வரன் லஜனுகன் மற்றும் கொழும்பு றோயல் கல்லூரி மாணவன் புத்திமா கம்லத் ஆகியோர் வெங்கலப் பதங்கங்களை பெற்றனர் ஏனைய மூவர் கௌரவ சான்றிதழை பெற்றனர்.
1996ம் ஆண்டு ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரி மாணவர்கள் இப் போட்களில் முதன் முறையாக பங்கு கொண்டனர்.
இம் முறை வெண்கலப்பதக்கம் வென்ற மாணவன் லஜனுகன் மொரட்டுவ பல்கலைகழகத்தில் பொறியிய் பீட மாணவராவார். கடந்த வாரம் இவருக்கு ஹட்டனில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Monday, August 10, 2009

நீங்கள் தொழிற்சங்க பற்று கொண்டிருக்கலாம் உங்கள் மீது சங்கம் பற்று வைத்திருக்கிறதா என்பதே முக்கியம்

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கோப்பித் தோட்டத் தொழிலுக்காக வரவழைக்கப்பட்டு 200 வருடங்கள் கடந்த நிலையிலும் தொழிலாளர்களின் வாழ்க்கையில் இன்றுவரையும் அடிப்படை பிரச்சினைகள் கூட முழுமையாகத் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மலையகப் பிரதேசத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகளை பின்வருமாறு சுட்டிக்காட்டலாம். அடிப்படைச் சம்பளப் பிரச்சினை, சொந்த நிலம் இல்லாமை, லயத்து வாழ்க்கை முறை, அடிப்படைச் சுகாதாரப் பிரச்சினை, உட்கட்டமைப்பு வசதிகள் பற்றாக்குறை, போசாக்குப் பிரச்சினை, சிறுவர் துஷ்பிரயோகம், வேலையில்லாப் பிரச்சினை, அறிவு வறுமை, அரசியல் ரீதியான விழிப்புணர்வு இன்மை, மாணவர்களின் இடை விலகல்கள், பாடசாலையின் பௌதீக வளங்கள் போதாமை, தொழில் பிரச்சினை, கசிப்பு பாவனை அதிகரிப்பு, அடிப்படை உரிமை, மீறல்கள், நிவாரணங்கள் கிடைக்காமை, தேயிலைத் தோட்டங்கள் குறைவடைதல், தொழில் பாதுகாப்பு இன்மை, போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளோடு இச்சமூகம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்பது வேதனைக்குரிய விடயமாகும்.
மேற்கூறிய பிரச்சினைகளுக்கு எல்லாம் அடிப்படை மூல காரணம் ஒன்றுதான். இம்மக்களுக்கு கல்வி அறிவு போதாமையினால் இம்மக்கள் அரசியல் ரீதியாக விழிப்புணர்வை பெற்றுக் கொள்ளாத நிலையே ஒரு முக்கிய காரணம் ஆகும்.
இம்மக்களுக்கு தேவையான விடயங்களை அரசாங்கத்திடம் இருந்தும், தோட்டக் கம்பனிகளிடம் இருந்தும் எவ்வாறு பெற்றுக் கொள்வது என்ற வழிகாட்டல் ஆலோசனை இவர்களுக்கு போதியளவு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மக்கள் ஒரு அடிமைச் சமூகமாக தொடர்ந்து நோக்கப்பட்டு வந்ததும், இவர்களுக்கு சலுகைகள், கல்வி வாய்ப்புகள் என்பவற்றைப் பெற்றுக் கொடுத்தால் மலையகத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு, பாதிப்பு ஏற்பட்டு விடும் என்ற ஐயப்பாட்டாலும் அநேக விடயங்களில் காலம் காலமாக இம்மக்களின் பிரச்சினைகளை ஒரு சமூகப் பிரச்சினையாக யாரும் முன்னெடுக்க முயற்சிக்க வில்லை. அவ்வாறு சிலர் முயற்சி செய்த போதும் அதனை பல்வேறு வடிவில் மழுங்கடிக்கச் செய்த வரலாறும் உண்டு.
பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும், சிந்திக்க வேண்டும் 4 பரம்பரையாக 10கீ8 பரப்பு லயக் காம்பிராவில் எவ்வித விமோசனமும் இன்றி வாழும் இவர்களுக்கு அரசியல் ரீதியான வழிகாட்டல் ஆலோசனை செய்வது யார்? தனக்கு கிடைத்த வாக்குரிமையை சரிவர பயன்படுத்த வேண்டுமா? வேண்டாமா? என தீர்மானிப்பது வாக்குரிமையை பெற்ற மக்களே என்பது இவர்களுக்கு புரிந்தும் புரியாதுள்ளார்கள் என்பது வேதனைக்குரிய விடயமாகும்.
எமது சமூகம் என்றைக்கு அரசியல் ரீதியாக தூர நோக்கோடு சிந்திக்கிறோமோ அன்றுதான் எமக்கு விமோசனம் கிடைக்கும். அரசியல் மூலமே மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும்.
இந்த மிலேனியம் யுகத்திலும் சராயத்திற்கும், சோற்று பார்சலுக்கும், அற்ப சொற்ப சலுகைகளுக்கும், பணத்திற்கும் விலை போகக் கூடாது. அப்படி விலை போனால் இச்சமுகம் இன்னும் படுபாதாளத்திற்குச் செல்லம் என்பது போகப் போகத் தெரியும்.
நாம் எந்த தொழிற்சங்கத்தில் இருக்கின்றோம் என்பது முக்கியமல்ல. அந்த தொழிற்சங்கத்தின் மூலம் எமது சமுகத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது பற்றி சிந்திக்க வேண்டும். தொழிற் சங்கங்கள் கூறும் அனைத்து விடயங்களும் சரியாக இருக்கும் என்று கூறமுடியாது. அதே வேளை பிழையாகவும் இருக்காது. அதனால் சிரியான விடயங்களை தெளிவாகப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

சிவமணம்...
அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு மலையக மக்கள் பூரண ஆணை- வடிவேல் சுரேஷ்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடுகளுக்கு மலையகம் வாழ் பெருந்தோட்ட மக்கள், ஊவா மாகாண சபைத் தேர்தலில் அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள் என்று சுகாதார பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
ஜனாதிபதி பதவிக்கு வந்த குறுகிய காலத்தில் மலையகத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அவற்றையெல்லாம் அங்கீகரித்து மலையகத் தோட்டப்புற மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்துள்ளார்கள் என்றார்.
தோட்டப்புற வைத்தியசாலைகள் புனரமைப்பு, தாதியர் நியமனம் உள்ளிட்ட பணிகளை மேம்படுத்த 225 மில்லியன் ரூபா நிதியினைப் பெற்றுக் கொடுத்து மலையகத்தில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க ஜனாதிபதி உதவி புரிந்தார். எனவே, இந்தத் தேர்தலில் ஊவா மாகாண தோட்டப் பகுதி மக்கள் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்த ஒன்றிணைந்துள்ளார்கள் எனக் குறிப்பிட்டார்

Thursday, August 6, 2009

தொழிலாளர்களை வெளியேற உத்தரவு

மாத்தளை வேவல்மட, காலேகொலுவ, மவுசாகல ஆகிய தோட்டப் பிரிவுகளில் வசித்து வரும் தொழிலாளர்களை இம் மாதம் 11ம் திகதிக்கு முன்னர் அவர்களின் குடியிருப்புக்களில் இருந்து வெளியேறுமாறு தோட்ட உரிமையாளர்களால் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் வேவல்மட தோட்டத்துக்கு மட்டும் நோட்டீஸ் மூலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேற்படி மூன்று தோட்டங்களும் 1985ம் ஆண்டு தனியாருக்கு விற்கப்பட்டது. இதில் வேவல்மட தோட்டத்தில் இருந்த தேயிலை தொழிற்சாலையும் கடந்த வருடம் உடைக்கப்பட்டு விட்டது. மவுசாகல தோட்டத்தில் இருந்த தொழிற்சலை கடந்த 20 வருடங்களுக்கு முன்பே உடைக்கப்பட்டு விட்டது. இம் மூன்று தோட்டங்களையும் சேர்ந்த தொழிலாளர் குடும்பங்கள் பலவந்தமாக தனியார் காணிகளில் குடியேறியுள்ளதாகவும் தற்போது அவர்கள் அங்கிருந்து வெளியேறுமாறும் தோட்ட நிர்வாகத்தால் கேட்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இத் தோட்டக் காணியில் குடியிருப்புக்களை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். தனியாருக்கு விற்கப்பட்டதால் இத் தோட்டத் தொழிலாளர்கள் பற்றி எந்தவொரு அரசியல் கட்சியோ, தொழிற்சங்கமோ அக்கறை கொள்ளவில்லை. ஆரம்பத்தில் இத் தோட்டப்பிரிவு தொழிலாளர்கள் ஐ.தே.க, மற்றும் இ.தொ.கா ஆகிய கட்சிகளின் அங்கத்தினராக இருந்துள்ளனர். இத் தொழிலாளர்களின் நிலை குறித்து எவரும் அக்கறை கொள்ளாத நிலையில் இவர்களின் எதிர்காலம் குறித்து அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரஜா உரிமை சான்றிதழ் அவசியம்

1988ம் ஆண்டில் 39ம் இலக்க சட்டத்தின் கீழ் இந்திய வம்சாவளியினருக்கு பிரஜாவுரிமை வழங்கப்பட்டு வருகிறது. எனவே எமது மலையக மக்கள் எந்தளவுக்கு பிரஜாவுரிமைச் சான்றிதழை பெற்றுள்ளனர் என்பது தெரியாமலே உள்ளது. முழு மலையகத்திலும் குறிப்பிட்ட சிலர்தான் பிராஜாவுரிமைச் சான்றிதழ் வைத்துள்ளனர். அநேகமானோர் இந்தச் சான்றிதழை பெற்றுக்கொள்வதற்கு எவ்விதமான அக்கறையும் கொள்வதில்லை என்பது தெரியவருகிறது. எமது மக்கள் வாக்களிக்கும் உரிமை இருந்தால் போதும் என்ற அசமந்த போக்கில் உள்ளனர். வாக்களிக்கும் உரிமை வேறு. பிரஜாவுரிமை என்பது வேறு என்பதை தெளிவாகப் புரிந்துக் கொள்வது அவசியமாகும். இந்த நாட்டில் நாமும் அங்கீகரிக்கப்பட்ட பிரஜையாக வாழ வேண்டுமாயின் நமது மக்கள் அனைவருமே பிரஜாவுரிமைச் சான்றிதழை பெற்றுக் கொள்வது அவசியமாகும். ஆத்தோடு இதன் சிறப்பையும் பெறுமதியையும் உணர்தல் முக்கியமானதாகும்.
எனவே தோட்டங்கள் தோறும் பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வது சம்பந்தமாக நடமாடும் சேவைகளை ஏற்படுத்த எமது மலையகத் தலைவர்கள் முன்வருவது காலத்தின் கட்டாயமாகும். எமது மக்களும் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்ள ஆர்வத்தோடு முன்வர வேண்டும். அதுபோல் அநேகமானோருக்கு பிரஜாவுரிமைச் சான்றிதழை பெற்றுக்கொள்வது எவ்வாறு என்பது தெரியாமல் இருக்கலாம். அப்படியெனில் ஒரு தொழிற்சங்கத்தினூடாகவோ அல்லது மலையக நலன்புரி அமைப்புக்களினூடாகவோ இவற்றைப் பெற்றுக்கொள்வது மாத்திரமின்றி தனிப்பட்ட முறையிலும் பெற்றுக்கொள்ளலாம். இந்திய வம்சாவளியினர் ஆட்களை பதிவு செய்யும் திணகை;களத் தோடு தொடர்பு கொண்டு இதற்கான விண்ணப்ப படிவங்களை பெற்று தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்வதன்; மூலம் பிரஜாவுரிமை சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே எமது மலையக மக்கள் ஏனோதானோ என்று தொடர்ந்தும் இருக்காமல் அடுத்து வரும் எமது பரம்பரையினரை உரிமையோடு வாழ்வதற்கான உருப்படியான ஒன்றையாவது செய்து வைக்க முன்வர வேண்டும். அப்படியில்லாமல் கிணற்றுத் தவளையைப் போல் வாழ்ந்து மடிந்தால் போதும் என்ற குறுகிய மனப்பான்மையுடன் இருந்துவிடக் கூடாது. ஆகவே இன்றே ஆரம்பியுங்கள். நல்ல பலன் கிடைக்கும்

ஆர். ராமசுந்தரம்
காவத்தை

Wednesday, August 5, 2009

சேவையாற்றக் கூடியவர்களுக்கே வாக்களிக்க வேண்டும்

தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கப் பேதங்களை மறந்து தொழிலாளர்களுக்கு சேவையாற்றக் கூடியவர்களுக்கு வாக்களிப்பதன் மூலமே அவர்களது அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமென இலங்கைத் தோட்டத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் செயலாளர் எஸ்.சிவசுந்தரம் ரி.வி.சென்னனை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார். அரசுடன் இணைந்து தொழிலாளர்களிடம் வாக்கு கேட்கும் தொழிற்சங்கங்கள் அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடம் கலந்துரையாடி தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பள உயர்வினைப் பெற்றுக் கொடுத்து விட்டு வாக்குக் கேட்டிருக்க வேண்டும். ஒப்பந்த காலம் காலாவதியாகிப் பல மாதங்கள் ஆகியும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்திக் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறுபவர்கள் ஒன்றை நினைக்க வேண்டும். தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை, சம்பளம் 13 வீதத்தால் உயர்கின்ற போது வாழ்க்கைச் செலவும் உயர்கின்றது. அன்று பருப்பு 45 ரூபாவாக இருந்தபோது இன்று விலை 220 ரூபாவாக உயர்ந்துள்ளது. 12 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட அரிசி 70 ரூபாவாக உயர்ந்துள்ளது. அதேபோல் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளது. கூட்டு ஒப்பந்தப்படி தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. தொழிலாளர்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.