Thursday, October 20, 2016

2015 ஏப்ரல் முதல் ரூ. 730 வேண்டும்

தோட்டத் ​தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பாக ஏற்படுத்திக்கொண்ட கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை, கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வர வேண்டும் என்று, அகில இலங்கை தோட்டத் தொழலாளர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.   
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தச் சம்பளத்தை, ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க வேண்டுமென்று, அத்தொழிலாளர்களினால் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இருப்பினும், தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் தோட்டத் தொழிற்சங்கங்களும் இணைந்து, 730 ரூபாய்க்கான நாட்சம்பளத்துக்கு கைச்சாத்திட்டன. இது, தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பை, மிதித்து நசுக்குவதற்கான ஒப்பந்தமாகவேய கருதப்படுகின்றது என, மேற்படி சம்மேளனத்தின் தலைவர் ஏ.பிரேமரத்தின கூறினார்.   
“மேற்படி கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளமையால், , 730 ரூபாயைப் பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில், தோட்டத் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த சம்பள அதிகரிப்பு இடம்பெற வேண்டும். 2015 ஏப்ரல் முதல், 2016 ஒக்டோபர் வரையான 19 மாதங்களுக்குரிய நிலுவைச் சம்பளம், தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். அதனைப் பெற்றுக்கொடுக்க தவறும் பட்சத்தில், அது குறித்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.