Wednesday, October 12, 2016

கறுப்பு கொடி ஏந்தி போராட்டம்

தமக்கு உடனடியாக ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குமாறும் தமக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட  சொந்தங்களுக்கு நன்றி தெரிவித்தும் ஹட்டன் எபோட்சிலி பிரதேச தொழிலாளர்கள் டயர்களை எரித்து கறுப்பு கொடி ஏந்தி இன்றுகாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை இத்தோட்ட தொழிலாளர்கள் அங்கவகிக்கும்  மலையக கட்சிகள் அனைத்துக்கும், மாதாந்தம் சம்பளத்தில் சந்தாபணத்தினை தற்காலிகமாக அறவிட வேண்டாம் என தொழிலாளர்கள் தோட்ட அதிகாரியிடம் கையொப்பமிட்ட கடிதமொன்றினை வழங்கியுள்ளதாக போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
எமக்கு ஆதரவாக போராடும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு நன்றி, உடனடியாக கூட்டு ஒப்பந்தத்தினை இரத்துச் செய்,சந்தாப் பணத்தினை நிறுத்திவிட்டோம், உடனடியாக ஆயிரம் ரூபாவை வழங்கு, போராட்டம் வெடிக்கும்" என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷம் எழுப்பினர்.

1000 ரூபா சம்பள உயர்வுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வுக்கு  ஆதரவு தெரிவித்து, அவிசாவளை தோட்டத் தொழிலாளர் சங்கத்தால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இன்று இடம்பெற்று வருகின்றது.
குறித்த ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் ஆரம்பித்து ஜனாதிபதி செயலத்திற்கு சென்று நிறைவடைய ஏற்பாடகியிருந்த நிலையில் பொலிஸார் வீதியில் தடைகளை போட்டு ஆர்ப்பாட்டத்தை தடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டுள்ள 10 பேரடங்கிய குழுவினர்  கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை கையளிப்பதற்காக ஜனாதிபதி செயலகத்திற்குள் சென்றுள்ளனர்.
ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கும் வரை தாம் வேலைக்கு செல்லப்போவதில்லையெனவும் இப் போராட்டங்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எவ்வித அக்கறையும் செலுத்தவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டுள்ளோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத ஒப்பந்தம் கைச்சாத்திட திட்டம்

தோட்டத் தொழிலாளர்களை தொடர்ந்தும் நவீன அடிமைகளாக வைத்திருக்கும் நோக்கில் தொழிலாளர் சட்டத்துக்கு முரணாக கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவிருப்பதாக மலையக சமூக நடவடிக்கை குழு குற்றஞ்சுமத்தியுள்ளது. இந்த ஒப்பந்தம் எதிர்வரும் 14ஆம் திகதி கைச்சாத்திடப்படலாம் என்றும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
நாளொன்றுக்கு 730 ரூபாவை வழங்குதல், வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரமே வேலை வழங்குதல் மற்றும் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பித்தல் போன்ற ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்களை உள்ளடக்கியதாக இக்கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவிருப்பதாக மலையக சமூக நடவடிக்கை குழுவின் இணைப்பாளர், சட்டத்தரணி இ.தம்பையா தெரிவித்தார்.
தீபாவளியை காரணம்காட்டி தோட்டத் தொழிலாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையை தோட்டக் கம்பனிகளும், தொழிற்சங்கங்களும் முன்னெடுக்கக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மருதானை சி.எஸ்.ஆர் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே சட்டத்தரணி இ.தம்பையா இதனைக் கூறினார். ஐக்கிய சோசலிச கட்சியின் தலைவர் துங்க ஜயசூரிய, மலையக சமூக ஆய்வு மையத்தின் தலைவர் அருட்தந்தை சக்திவேல் உள்ளிட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாளாந்த கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பது என்பது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாத்திரம் முன்வைத்த கோரிக்கையல்ல. கடந்த தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரசாரங்களின் போதும் இதனைக் கூறியிருந்தார். இருந்தபோதும் 1000 ரூபாவை இதுவரை அரசாங்கம் பெற்றுக் கொடுக்கவில்லை என்றார்.
மாறாக நாளொன்றுக்கு 730 ரூபாவை வழங்குவது தொடர்பான கூட்டு ஒப்பந்தமொன்று எதிர்வரும் 14ஆம் திகதி அல்லது அதற்கு முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ கைச்சாத்திடப்படலாம். இந்த ஒப்பந்தமானது தொழிலாளர் சட்டத்துக்கு முரணான வகையில் அமையவுள்ளது. வாரமொன்றுக்கு மூன்று நாட்கள் மாத்திரமே வேலை வழங்குவது, 3 வருடங்களுக்கு ஒருமுறை கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பிப்பது, பாக்கிச் சம்பளத்தை வழங்குவதில்லை ஆகிய விடயங்கள் இம்முறை ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படவிருப்பதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பெருந்தோட்டக் கம்பனிகள் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறுகின்றன. எனினும் அவர்களின் வருடாந்த நிதி அறிக்கையை எடுத்துப் பார்த்தால் அது உண்மை இல்லையென்பது தெளிவாகிறது. தீபாவளி என்பது மலையகவாழ் மக்களுக்கு பரம்பரையாகக் கொண்டாடப்படும் கலாசார நிகழ்வாகும்.
ஒவ்வொரு தடவையும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இரண்டு வாரங்களில் தீபாவளி பண்டிகை வருவது வழமை. இம்முறையும் பண்டிகை முன்பணம் வழங்கப்படாது என தோட்டத் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு கம்பனிகளும், தொழிற்சங்கங்களும் முயற்சிக்கின்றன. நரகாசுரனின் அழிவை தீபாவளியில் கொண்டாடுகிறோம். நரகாசுரன்கள் போன்று செயற்படும் கம்பனிகள் செயற்படுகின்றன என்றும் கூறினார்.
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்ற போராட்டத்தில் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் இருக்கின்றனர். இவ்வாறான நிலையில் போராட்டங்களை காட்டிக் கொடுக்காது தொழிற்சங்கங்களும் செயற்பட வேண்டும். மாறாக தொழிலாளர் சட்டத்தை மீறும் வகையில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமாயின் அதற்கு எதிராக மலையகம் தளுவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். எவ்வாறான போராட்டம் என்பது அப்போது அறிவிக்கப்படும் என்றும் சட்டத்தரணி இ.தம்பையா மேலும் கூறினார்.