மலையக மக்களின் பார்வையில் சமதர்மம் என்பது எட்டாக்கனி மட்டுமல்ல; கானல் நீரும்கூட!
மலையக மக்களின் உரிமைகளுக்காக ஜே.வி.பி தொடர்ந்து வெளிப்படையாகவே குரல்கொடுத்து வந்திருக்கிறது. அதாவது இதயசுத்தியுடன், ஆனாலும் மலையகப் பிரதேசங்களில் ஜே.வி.பியை ஆதரிக்கும் தமிழர்கள் குறைவு. ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா அல்லது கம்யூனிசம், சமதர்மம் என்பதை இம்மக்கள் தவறாக புரிந்து வைத்திருக்கிறார்களா?
அருமையான கேள்வி! மக்கள் விடுதலை முன்னணியினராகிய நாம் மலையக மக்களின் உரிமைகளுக்காக மட்டுமல்ல, சலுகைகளையும் வழங்க மேண்டுமென குரல் கொடுப்பவர்கள். இருந்தபோதும் மலையக மக்கள் அரசியல் சார்ந்த தொழிற்சங்கங்களை தமது விருப்பத் தெரிவாக எப்போதும் வைத்துக் கொண்டுள்ளனர். அதன் பின்னணியில் இருந்தே அரசியலைத் தெரிவு செய்கின்றனர்.
தமக்கான அரசியல் தெரிவை, கட்சிகளின் கொள்கை அடிப்படையிலும் சமூகத்தை கட்டியெழுப்பும் நாட்டின் பொருளாதார மேம்பாட்டு அடிப்படையிலும் தூர நோக்குடனும் பார்ப்பதில்லை. அது மட்டுமல்ல, வெல்லப்போவது யார் என்று உன்னிப்பாக அவதானித்து அதன் பின் அணிதிரளும் சாமர்த்தியமும் உள்ளது. சமதர்மம் என்பது எட்டாக்கனி மட்டுமல்ல, கானல் நீரும்கூட, அவர்களின் கருத்தியலில்!
தோட்டத் தொழிலாளியின் ஒருநாள் அடிப்படைச் சம்பளம் குறைந்தபட்சம் அரச ஊழியரின் ஒருநாள் சம்பளமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளீர்கள். ஆனால் 19 வருடங்களில் 399 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கியிருக்கக்கூடிய கம்பனிகள் இதற்கெல்லாம் அசரும் என நினைக்கிறீர்களா?
கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் கரிசனை காட்டுகிறார்களோ இல்லையோ, தோட்டத் தொழிலாளர்களின் சந்தாப்பணத்தை பெறும், கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் கரிசனை காட்டுகிறார்களா என்பதுதானே முக்கியம்! ஆனால் அப்படி இல்லை என்பதுதான் முதல் பிரச்சினை. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் ஆழமான கருத்தை முன்வைத்து இதயசுத்தியுடன் செயற்படுவதில்லை. அதுதான் உண்மையும் பிரதான காரணமும் ஆகும், பெருந்தோட்டத்தை தற்போது நிர்வகிக்கும் கம்பனிகள் அனைத்துமே பல்தேசிய கம்பனிகளாகும். அவை இலாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டிருப்பதால் சம்பளத்தை உயர்த்தி வழங்குவதில் பின்வாங்குகிறார்கள்.
கம்பனி எனும் கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி என்ற தொழிற்சங்கங்கள் இடம் கொடுக்காது. உதாரணத்திற்கு 1999 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் ஒரு தொழிலாளியின் அடிப்படை நாட் சம்பளம் 2001 ஆம் ஆண்டு வரைக்கும் 101 ரூபாவாக இருந்தது. 2002 இல் புதிய கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோது 121 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. அதன்படி இருவருட இடைவெளியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 ரூபா மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பார்க்கும்போது தொழிற்சங்கங்களும், கம்பனிகளும் எந்தளவுக்கு தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டுகின்றன என்பதை தோட்டத் தொழிலாளர்கள் புரிந்துகொள்வது அவசியமாகும்.
சம்பளப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் சங்கத் தரப்பு, முதலாளிகளுக்கு பழகிப்போன தரப்பாகிப் போய்விட்டால் ஆணித்தரமாக பேசக்கூடிய நிலையில் அத்தரப்பு இல்லை என்றும் எனவே வேறு சங்கங்களும் சங்கத்தரப்பில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறைந்தபட்சம் சங்கத் தரப்புக்கு ஆலோசனை வழங்கக்கூடிய ஆலோசனை சபை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இது தொடர்பாக தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
உண்மையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுடன் ஏனைய தொழிற்சங்கங்களும் இணைந்து பங்குதாரர்களாக இருக்க வேண்டும், அப்போதுதான் பழைய தொழிற்சங்கங்கள் வளைந்து கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இல்லாவிட்டால் பழைய குருடி கதவை திறவடி என்ற கதைதான். அண்மையில் தனியார் வானொலியொன்றில் நடைபெற்ற கருத்தாடலின்போது என்னுடன் கலந்து கொண்ட தொழில் அமைச்சர் ரவீந்திர சமரவீர என்னிடம் நீங்களும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளுங்கள் என்றார். 75 வீதம் என்ற வரையறை இல்லாதொழிக்கப்பட்டு அனைத்து தொழிற்சங்க தரப்புகளும் கலந்துகொள்ள வேண்டும் என்பதே என்னுடைய கருத்தும்கூட.
கம்பனிகளை பனங்காட்டு நரிகள் என்று வைத்துக்கொண்டால் தொழிலாளர் தரப்பு எப்படியிருக்க வேண்டும்?
கம்பனிகள் பணங்காட்டு நரிகளாயின் கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் குள்ள நரிகள்தான்!
கூட்டு ஒப்பந்தம் என்பது சம்பள உயர்வை மட்டும் பேசும் ஒரு உடன்படிக்கையல்ல. ஆனால் சமீப காலமாக அப்படித்தான் அது பார்க்கப்பட்டு வருகிறது. நீங்கள் எப்படி இதனை அவதானிக்கிறீர்களா?
உண்மையில் சம்பள உயர்வுக்கு மேலதிகமாக தொழிலாளர்களின் நலன்புரி சேவை மற்றும் தொழிலாளர்களின் சலுகை போன்றவற்றில் தொழிற்சங்கங்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டிய ஒன்றாக இருந்தபோதும் தற்போது 75 வீதமான தொழிலாளர்களின் நலன்புரி சேவைகள் வெட்டப்பட்டுள்ளதுடன், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சம்பள உயர்வு என்ற கோட்பாடு மட்டும் பழக்கத்தில் உள்ளது.
இது முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும். தற்போதைய பூகோளமய பொருளாதாரத்துக்குள் சிக்குண்டு இருக்கும் இலங்கை வாழ் தோட்ட மக்கள் பொருளாதார ரீதியாக பாரிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் சேவைக் கட்டண உயர்வு என்பவற்றால் ஏனைய சமூகத்தை விடவும் தோட்டத்து சமூகம் பாரிய நெருக்கடியை எதிர்நோக்குகிறது. அதற்கு தற்காலிக தீர்வாக வாழ்க்கைச் செலவுக்கேற்ப அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
உற்சாகம் பெற்றிருக்கும் மலையக வீடமைப்பு பற்றி...?
வீடுகள் வழங்குவதை பாராட்ட வேண்டும், இதில் உரித்து என்னும் உரிமையும் உள்ளடக்கப்பட வேண்டும். தற்போது ஏனைய சமூகத்துக்கும் வீடுகள் வழங்கும்போது ஏதாவதொரு காணி உரித்து பத்திரம் வழங்கப்படுகிறது. தோட்டத் தொழிலாளர்களுக்கு எந்த உரித்து பத்திரமும் வழங்கப்படுவதில்லை. வீடு வழங்குவது தொழிலாளர்களின் காதில் பூ வைக்கும் ஒரு நிகழ்வாக இருக்கக்கூடாது.
தற்போது வெளிவாரி முறை நடைமுறைக்கு வந்துகொண்டிருக்கிறது. இந்த வெளிவாரிமுறை தொடரும்போது கம்பனிகள் சம்பளம், விடுமுறை, சலுகைகள் என்பனவற்றை வழங்க வேண்டிய அவசியமே இல்லாது போய்விடும் அல்லவா? இந்த மாற்றம் தவிர்க்க முடியாதது என்றால், தொழிற்சங்க அரசியல் கட்டமைப்பும் இல்லாமல் போய்விடும், அப்படித்தானே?
இந்த முறையானது தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சும் ஒரு முறை. இம்முறையால் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடியையும், இழப்பையும் சந்திக்க நேரிடும். ஏன் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி போன்றவற்றையும் கூட. இதனால் தொழிற்சங்கங்கள் பாரிய பின்னடைவை அரசியல் ரீதியாக சந்திக்க நேரிடும்.
இம்முறை தொடர்பாக கம்பனிகளுடன் கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அர்த்தபுஷ்டியான கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டும். அதனுடன் அவர்களுக்கு வழங்கப்படும் காணி சம்பந்தமாக ஒரு உடன்படிக்கைக்கு வருவதோடு அதற்கான காலத்தையும் நிர்ணயிக்க வேண்டும். அது மட்டுமல்ல, முடிவில் அந்த காணிகளை தொழிலாளர்களுக்கே உரிமையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெருந்தோட்டக் குடியிருப்புகள் புதிய கிராமங்களாக மாறுவது பற்றி ஜே.வி.பி.யின் நிலைப்பாடு என்ன?
வரவேற்கத்தக்கது. நான் முன்னர் குறிப்பிட்டதைப்போல் காணி உரித்துடன் அமையப்பெற வேண்டும். ஒப்பீட்டளவில் ஒரு குறுகிய காலப்பகுதியில் தமிழ் முற்போக்கு முன்னணி பெருந்தோட்ட சமூகத்துக்காக பல காரியங்களைச் செய்துள்ளது. எனினும் இ.தொ.கா.வின் செல்வாக்கு அப்படியேதான் இருக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இரண்டையும் வெவ்வேறாக பார்ப்பதும் பிழையானதாகும். ஏனென்றால் மலையக தமிழ்த் தலைமைகள் ஆட்சி பீடத்திலிருக்கும் அரசாங்கத்தில் ஒரு காலையும் மலையகத் தலைமையில் மறு காலையும் வைத்துள்ளன. இதில் யாரும் விதிவிலக்கல்ல. குறிப்பாக 1994 ஆம் ஆண்டு சந்திரிகா அம்மையார் ஆட்சியமைப்பதற்கு அமரர் பெ. சந்திரசேகரன் முட்டுக்கொடுத்தார். அதற்கு முன்னரும் மலையக அரசியல் முதலாளித்துவ அரசியல் தலைவர்கள் மகிந்தவின் அரசில் முற்போக்கு அணி, பிறபோக்கு அணி என அனைத்து தலைவர்களும் அனைவருமே அமைச்சர்கள். எனவே, இவர்களில் யார் மலையக மக்களுக்கு சேவை செய்தவர்கள் என்பதை விட எவர் கட்சி தாவாதவர்கள் என்பதே முக்கியமானது. உதாரணத்துக்கு கடந்த அரசில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், திகாம்பரம், போன்றோரை குறிப்பிடலாம்.
மலையக தமிழ் சமூகத்துக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?
மலையக சமூகம் அரசியல் ரீதியில் அணித்திரள வேண்டும். இது வரைக்கும் இச்சமூகம் அரசியலை முன்னிறுத்தி அணிதிரளவில்லை. சந்தர்ப்பத்துக்கும், பழக்க தோசத்துக்காகவுமே அணிதிரண்டார்கள். அதனால் அனைத்து பக்கமும் தோல்வியுற்றவர்கள் தோட்ட தொழிலாளர்களே, அத்துடன் பொருளாதார ரீதியில் கவனம் செலுத்த வேண்டும். மாறிவரும் உலக பூகோளமய பொருளாதார முறைக்கு தாம் எவ்வாறு முகம் கொடுப்பது என்பதை யோசித்து நீதியான தேசம், நியாயமான சமூகத்தில் அடிமையில்லா மனிதனாக வாழ தம்மை தயார்ப்படுத்திக் கொள்வதோடு தேசிய அரசியல் நீரோட்டத்தில் தம்மை பங்காளியாக்கிக் கொள்ள வேண்டும்.
அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவர் கே. செல்வராஜ் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்
பேட்டி கண்டவர்- பி.வீரசிங்கம்
நன்றி- தினகரன் வாரமஞ்சரி