“இன்னும் 8 அடி கம்ராலே தான் இருக்காங்க, அதுக்குள்ள தான்
எல்லாருமே வாழ்ந்துட்டு இருக்காங்க. அம்மா, அப்பா, தம்பி, தங்கச்சினு
எல்லாரும் அந்த காம்ராகுள்ள தான் படிக்கனும், சாப்டனும் மத்த எல்லா
வேலைகளையும் செஞ்சிக்கனும். கொஞ்சம் பேர்க்கு கரன்ட் இருக்கு, கொஞ்சம்
பேர்க்கு இல்ல. மழை வந்துச்சினா ஒரு சட்டி பானைய அல்லது வாலிய எடுத்து
வச்சிட்டு தான் தூங்குவம். இங்கு எதுவுமே எங்களுக்கு சொந்தம் இல்ல. வீட்டு
தின்னைய தான்டினா பிள்ளைங்களுக்கு விளையாட கூட இடம் இல்ல. வீட ஒடச்சி
கட்டவோ, வீட்டுக்கு முன்னால இருக்கிற மரத்த வெட்டவோ எதுக்குமே எங்களுக்கு
உரிம இல்ல” – என்று தன்னுடைய ஊர் மக்கள் வாழும் வாழ்க்கை குறித்து
(மலையக மக்களின் வாழ்க்கை) என்னிடம் மனம் வெறுத்த நிலையில்
பேசிக்கொண்டிருந்த தவனேஸ் என்ற இளைஞனின் பேச்சை கேட்டுக் கொண்டே நான் அந்த
மண்டபத்தினுள் நுழைந்தேன்.
மலையகம் என்றாலே அழகுக்கு குறைவில்லை. மலைகளும் மலை சார்ந்த
தோட்டங்களும் எங்கு சென்றாலும் மீண்டும் மீண்டும் அவ்விடத்திற்கு செல்லத்
தோன்றும். ஒவ்வொரு முறையும் நான் வேலைப்பார்க்கும் நிறுவனத்தின்
வேலைத்திட்டத்திற்காக கிராமங்களுக்கும் தோட்டங்களுக்கும் போவது வழக்கம்.
அந்த வகையில் அண்மையில் நயாபான என்ற தோட்டத்திற்கு போக நேர்ந்தது. கம்பளை
நகரிலிருந்து 15 கி.மீ தூரத்தில் இருக்கும் தோட்டமே இது.
கம்பளையில் எனது நண்பனை சந்தித்து நான் போகவிருக்கும் தோட்டம் குறித்து தெரிவித்தேன். “அங்கு போக பஸ் இல்லை”
– உடனே அவன் வாயில் இருந்த பதில் இது. சரி ஆட்டோவுல போவோம் என்று
புறப்பட்டோம். பயணிக்க ஆரம்பித்து ஒரு மணித்தியாலத்தின் பின்னர்தான் அந்தத்
தோட்டத்தை நெருங்கினோம்.
ஒருமாதிரியாக தோட்டத்தைச் சென்றடைந்தோம். அங்கு நண்பரின் உதவியுடன்
வேலைத்திட்டத்திற்காக கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தேன். விரல்விட்டு
எண்ணக்கூடிய அளவில்தான் இளைஞர்கள் வந்திருந்தனர். இடைவிடாமல்
பெய்துகொண்டிருக்கும் மழையினால்தான் வரவில்லை போல. மழை கொஞ்சம் ஓய
ஒவ்வொருவராக வந்துகொண்டிருந்தனர்.
இளைஞர்கள் அனைவரும் வருகை தந்ததன் பின்னர் என்னுடன் வருகை தந்த சக
நண்பர் நாங்கள் வந்ததற்கான காரணத்தை கூறி கலந்துரையாடலை ஆரம்பித்தார்.
தோட்டத் தலைவரும் தபால் உத்தியோகத்தர் ஒருவரும் அமர்ந்திருந்தார்கள்.
நண்பர் வந்த நோக்கத்தை கூறி சிறிது நேரத்திலேயே உங்களுடைய தோட்டத்தில்
காணப்படும் பிரதான பிரச்சினைகள் என்ன என்று கேட்டார். சுமார் 25 இளைஞர்கள்
ஒன்றாக அமர்ந்திருந்த அந்தக் கூட்டத்தில் இருந்து மனோஜ் என்ற இளைஞன்
எழும்பினான். வயது 18 இருக்கும், இம்முறை தான் உயர்தர பரீட்சை
எழுதுகிறானாம். எழுந்த வேகத்திலேயே பேச ஆரம்பித்துவிட்டான், எங்களுடைய
தோட்டத்தில் இருக்கும் பிரதான பிரச்சினையே பஸ்தான் என்று ஆரம்பித்தான்.
“எங்கட தோட்டத்துக்கு சிடிபி பஸ் வந்து 20 வருஷங்களுக்கு மேல
ஆகுது. எங்களுக்கு தெரிஞ்சி இந்த ஊருக்கு சிடிபி பஸ் வந்ததே இல்ல. அப்படியே
பஸ் வந்தாலும் ஒரு நாள், ரெண்டு நாள் மட்டும்தான் வேல செய்யும். இல்லன்னா
வார பஸ் வழியில எங்கையாவது ஒடஞ்சிடும். அங்க இருந்து நாங்க வீல்
புடிச்சிதான் எங்க ஊருக்கு வரனும். ஒரே ஒரு பிரைவட் பஸ் இங்க வேல செய்து.
காலைல 6.30 மணிக்கு ஊர்ல இருந்து இந்த பஸ்ஸ எடுப்பாங்க, அதுவும் சனம்
நெரஞ்சா மட்டும் தான். அப்படியே போனாலும் பாரதெக சந்தி வரைக்கும்தான்
போகும். அதுக்கு மேல பஸ் இல்ல. நுவரெலியா பக்கம் பஸ் வந்தா, அதுலதான்
போகனும். ஒரு நாளைக்கு ரெண்டுதரம் தான் இந்த பஸ்சும் வேல செய்யும். 6.30
மணிக்கு போர இந்த பிரைவட் பஸ்சுலதான் கம்பல கண்டினு எல்லா இடங்களுக்கும்
வேலைக்கு போறவங்க போவாங்க. அந்த பஸ்லயே தான் கம்பள, புஸ்ஸல்லாவைல இருக்க
தமிழ் ஸ்கூலுக்கு போர பிள்ளைங்களும் போகனும். சில நேரங்கள்ல பஸ்
நெரஞ்சிட்டா ஸ்கூல் போர பிள்ளைங்களுக்கு அந்த பஸ்ல போகவே கிடைக்காது, இந்த
நிலைதான் இப்பவரைக்கும் எங்களுக்கு இருக்கிற பிரச்சினை”.
மூச்சுவிடாமல் பேசியவன், கொஞ்சம் நிறுத்தி மீண்டும் ஆரம்பித்தான். பஸ் பிரச்சினையால் நிறைய பாதிக்கப்பட்டவன் போல.
“கம்பல டவுன்ல இருந்து 15 கி.மீ தூரத்துலதான் நாங்க இருக்கம்.
ஸ்கூல் பிள்ளைங்க பஸ்ஸ விட்டுடா வீல்ல தான் போகனும். அப்டியே போரதுனாலும்
300 ரூபா குடுத்து தான் போகனும். எந்தனாலும் வீல்ல போர அளவுக்கு எங்கட
அம்மா அப்பாவுக்கு வருமானம் இல்ல. இதனால ஊர்ல இருக்க பெரியவங்க டிப்போல
போய்ட்டு பஸ் கேட்டாங்க, பலமுறை கேட்டும் கூட, பஸ் இல்ல அல்லது பஸ் டிரைவர்
இல்ல எண்டு சாக்கு போக்கு சொல்லி அனுப்பிடுராங்க. தொடர்ந்து இதுதான்
நடக்குது, நாங்களும் எவ்வளவோ பேசி பார்த்துட்டம், ஒரு முடிவும் இல்ல. இப்போ
மாத்திரம் இல்ல, பல வருடமா தொடர்ந்து இருக்கிற பிரச்சின இது தான்” என்று முடித்தார் அந்த இளைஞன்.
குளிருக்கு பஞ்சம் இல்லாத தோட்டம் போல. மீண்டும் மழை பெய்யத்
தொடங்கியது. கண் முன்னே இருக்கும் இளைஞர்களை தெளிவாக பார்க்க முடியவில்லை.
அந்த அளவுக்கு பணி மூட்டம். மாலை 3.00 மணியே ஆகினாலும் கூட மாலை 6.00 மணியை
போல இருள் சூழ்ந்து கொண்டது.
இவ்வாறு மனோஜ் பேசி முடிக்கும் போதே தபால் உத்தியோகத்தர் சுமார் 28 வயது
மதிக்க தக்க நபர் இன்னும் ஒரு முக்கியமான பிர்ச்சினை இருக்கு என்று பேச
ஆரம்பித்தார்.
“இந்த தோட்டத்துல இருக்க பிரதான பிரச்சினை வேலை இல்லாத பிரச்சினைதான்.
இங்க இருக்குர இளைஞர்களோட அம்மா, அப்பா எல்லாருமே தோட்டத்துல தான் வேலை
செய்றாங்க தொடர்ந்து 22 நாள் வேலை செஞ்ஞா மாத்திரம் தான் 600 ரூபா சம்பளம்
கொடுப்பாங்க. 21 நாள் வேலை செஞ்ஞாலும் கூட 450 ரூபா தான் கிடைக்கும்.
அதுவும் தோட்டத்த பொருத்தவரைல ஒவ்வொரு மாதமும் 22 நாள் வேலை இருக்கும்
என்டு சொல்லவே முடியாது”.
“கடந்த மாதம்தான் நாங்க ரொம்பவே கஷ்டத்த அனுபவிச்ச மாசம். இந்த
அரசியல் வாதிங்க பேச்ச கேட்டு இங்க உள்ளவங்க எல்லாருமே மெதுவா வேலைய
செஞ்சிட்டு போனாங்க. கட்டாயமா சம்பளத்த கூட்டுவாங்க என்ற நம்பிக்கைல. ஆனா,
சம்பளம் கூட்டப்படவும் இல்ல, மெதுவா வேலை செஞ்சவங்க யாருக்குமே கடைசி
வரைக்கும் அந்த மாதத்துக்கான சம்பளமும் கிடைக்கவே இல்ல”.
“எங்கட தோட்டத்துல இருந்து வெளியில டவுனுக்கு வேலைக்கு
போரதுனாலும் பஸ் பிரச்சினைதான். ஒரு நாள் போனா ஒரு நாள் போக கிடைக்காது,
பஸ் இருக்காது. தொழில், வீடு, கல்வி என எல்லா வகையிலும் பிரச்சினைகளுக்கு
முகம் கொடுக்கின்ற தோட்டமே இந்த நயாபான தோட்டம்” என்று கூறி முடித்தார் தபால் உத்தியோகத்தர்.
இவ்வாறு பிரச்சினைகளையும் வினவிக் கொண்டு எங்களுடைய
வேலைத்திட்டத்தினையும் தெளிவுபடுத்திக் கொண்டு எவ்வித எதிர்பார்ப்பையும்
அவர்களுக்கு வழங்காமல் நாங்கள் அவ்விடத்தில் இருந்து விடைபெற்று, அருகில்
இருக்கும் இரு தோடங்களுக்கும் சென்றுவிட்டு மாலை 4.00 மணியளவில் நயாபான
தோட்டம் ஊடாகவே சென்றோம்.
அப்போது நயாபான தோட்டத்திற்குச் செல்லும் பஸ்ஸைக் கண்டேன். அசைந்து
அசைந்து மனித வேகத்தில் நடந்து வந்துகொண்டிருந்தது. அந்த பஸ்ஸில்
அதிகபட்சமாக 25 அல்லது 30 பேர் மாத்திரமே செல்ல முடியும். ஆனால், 60இற்கும்
அதிகமானோர் அடைப்பட்டு, தொங்கிக்கொண்டு செல்வதைக் கண்டேன். அளவுக்கு
அதிகமான சுமையுடன் செல்லும் அந்த பஸ்வண்டியில் மிகவும் சிரமத்துக்கு
மத்தியிலேயே எங்களை தாண்டி சென்றது. இதுதான் இந்த நயாபான தோட்ட மக்களின்
பிரதான பிரச்சினை.
மலையக தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம். நயாபான
மக்கள் விதிவிலக்கல்ல. ‘மாற்றம்’ அரசில் அங்கம் வகித்துள்ள மலையக
அரசியல்வாதிகள் இவற்றையும் தேடிப்பார்ப்பார்களா?
எம். பிரதீபன்