நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை குறைக்க சதி: மனோ
தற்சமயம் நுவரெலியா மாவட்டத்தின் ஏழு பாராளுமன்ற உறுபினர்களில் ஐவர் தமிழர்களாக இருக்கிறார்கள். இந்த நிலைமையை மாற்றி நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு மாற்று வழியில் சதித் திட்டம் தீட்டப்படுகின்றது. இது தொடர்பில் நுவரெலியா மாவட்ட தமிழ் மக்களும் மலையகக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்.
ஆளுமையுடன் செயற்பட்டு வரும் ஆபத்துகளை தடுத்து நிறுத்தாவிட்டால் எதிர்காலத்தில் வாய்மூடி மௌனிகளாக இருப்பதற்கு கூட நமது மலையக அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்றத்தில் இடமிருக்கப் போவதில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ஒரு காலத்தில் யாழ். மாவட்டத்தில் பன்னிரண்டாக இருந்த ஒட்டுமொத்த பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இன்று ஆறாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு வாக்காளர் தொகையில் ஏற்பட்ட குறைவு காரணமாக காட்டப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் இழப்பாகும்.
தற்போது நுவரெலியா மாவட்டத்தில் மாற்று வழிகளின் மூலமாக தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு திட்டம் தீட்டப்படுவதாக நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. தகுதியுள்ள தமிழர்களை வாக்காளர்களாக பதிவு செய்வதில் குளறுபடிகளை ஏற்படுத்தி தமிழ் வாக்காளர் தொகை அதிகரிக்கப்படாமல் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அத்துடன் நுவரெலியா மாவட்டத்தை தளமாகக் கொண்டு மலையகம் முழுக்க தமிழர்கள் செறிவாக வாழும் பகுதிகளில் திட்டமிட்டு பெரும்பான்மையினரை குடியேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழர்கள் செறிவாக வாழ்வதை தடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரக்கூடிய புதிய தேர்தல் முறையின் கீழ் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை நுவரெலியா மாவட்டத்திலிருந்து தெரிவு செய்வதில் பெரும் நெருக்கடி ஏற்படும்.
அரசாங்கத்திற்குள்ளே அமைச்சர்களாகவும் ஆதரவு அணியினராகவும் செயல்படும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மலையக அரசியல் கட்சிகளுக்கும் இது தொடர்பிலே பாரிய பொறுப்புகள் இருக்கின்றன. ஆனால் நமது மலையக தமிழ்ப் பிரதிநிதிகள் மலையகத்தில் தமிழ் சமூகம் எதிர்நோக்கும் ஆபத்துகளை உணர்ந்திருக்கின்றார்களா என்பது புரியவில்லை. வாயைத் திறந்து பேசினால் ஜனாதிபதி கோபித்துக் கொள்வார் என்பதற்காக நமது மலையகப் பிரதிநிதிகள் வாய்களை திறப்பதில்லை.
அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதன் மூலமாக நமது இனம் நன்மை பெற வேண்டும். ஆனால் ஆதரவையும் வழங்கிவிட்டு நமக்கெதிராக நிகழ்த்தப்படும் அநீதிகளையும் கண்டு வாய்மூடி மௌனிகளாக இருப்பதில் அர்த்தமில்லை. அøதவிட எதிரணியில் அமர்ந்து உண்மைகளை துணிச்சலுடன் எடுத்துக் கூறுவது சாலச் சிறந்ததாகும். ஆளுமையுடனும் செயற்பட்டு வரும் ஆபத்துகளை தடுத்து நிறுத்தாவிட்டால் எதிர்காலத்தில் வாய்மூடி மௌனிகளாக இருப்பதற்கு கூட நமது மலையக அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்றத்தில் இடமிருக்கப் போவதில்லை.
No comments:
Post a Comment