Tuesday, June 30, 2009

சேமலாப நிதி இல்லாமல் வேலை செய்யும் தொழிலாளர்கள்

புளத்சிங்கள, தங்கஸ்கந்த தோட்டம் சுமார் 200 ஏக்கரைக் கொண்ட தனியாருக்குச் சொந்தமான ஒரு இறப்பர் தோட்டம். பத்து குடியிருப்புக்களைக் கொண்ட ஒரு லயன் கட்டடமும், பன்னிரெண்டு குடியிருப்புகளைக் கொண்ட ஒரு லயன் கட்டடமுமாக இரண்டு கட்டடங்களே இருக்கின்றன. 24 குடியிருப்புக்கள் மட்டுமே இருந்த போதிலும் அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான குடும்பங்கள் இதில் வசித்து வருகின்றனர்.50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல வருடங்களாக வேலை செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் மாதம் 1500, 2000 என்ற தொகையையே சம்பளமாகப் பெற்று வந்துள்ளனர். சட்டப்படி சம்பளம் வழங்கப்படாது பட்டைசீவி இறப்பர் பால் கொண்டு வருவதைப் பொறுத்து நாளொன்றுக்கு 95 ரூபா என்ற கணக்கு வழங்கப்பட்டுள்ளது. சம்பளம் பெற்றுக் கொண்டவர்களும் கையொப்பம் எதுவும் போடாது பணத்தை மட்டுமே பெற்று வந்துள்ளனர்


2003ம் ஆண்டு முதல் தோட்டம் மூடப்பட்டுள்ளதாகத் தோட்ட உரிமையாளர் அறிவித்ததையடுத்து இங்குள்ள தொழிலாளர்கள் வெளியில் சென்று உழைத்து ஊதியம் தேடி குடும்பம் நடாத்தி வருகின்றனர்.தோட்டம் மூடப்பட்டுள்ளதாக அறிவித்த போதிலும் வெளியிடங்களில் இருந்து ஆட்களைக் கொண்டு வந்து வேலை வாங்கப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.வேலை செய்த காலத்தில் அவர்களுக்கான எவ்வித சலுகைகளும் உரிமைகளும் வழங்கப்படவில்லை.லயன் கட்டிடம் திருத்தி கொடுக்கப்படவில்லை

தோட்டத்தில் தற்பொழுது வேலையில்லாத போதிலும் தொடர்ந்து இதே லயன் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். குடி நீர்வசதி, மலசலகூட வசதி எதுவுமே கிடையாது. இந்த வசதிகள் எதுவுமே அற்ற நிலையிலேயே இன்று வரையில் இங்குள்ள தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். தோட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி அட்டை வழங்கப்படவில்லை. 1982 முதல் 1992 வரையிலான காலப் பகுதியில் ஒரு சிலருக்கு ஊழியர் சேமலாப நிதிக்கான அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஏனையோர் இது தொடர்பாக தோட்ட உரிமையாளரிடம் கேட்ட போது ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதெனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து 2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06ஆந் திகதி இங்குள்ள தொழிலாளர்கள் தாம் அங்கத்துவம் வகித்த தொழிற்சங்கமான இ.தொ. கா. மூலம் களுத்துறை தொழில் நீதிமன்றத்தில் தோட்ட உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர். கஷ்டப்பட்டு உழைத்துத் தேடிய பணத்தை நான்கு வருடகாலமாக நடைபெற்ற வழக்கு தொடர்பாக செலவு செய்த போதிலும் தொழிலாளர்கள் வேலை செய்தமையை உறுதிப்படுத்தும் ஆவணம் எதுவும் கிடையாது எனக் கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதனால் தொழிலாளர்கள் மிகுந்த ஏமாற்றமும், வேதனையும் அடைந்ததுடன், இந்த வழக்கு தொடர்பாக ஈடுபட்ட தொழிற்சங்கப் பிரதிநிதி தோட்ட உரிமையாளர்களுக்கு ஆதரவாக செயற்பட்டு எங்களைக் கஷ்டத்தில் போட்டுவிட்டார் என விரக்தியுடன் தெரிவிக்கின்றனர்.


நேர்மைக்கும், நீதிக்கும் உரிய இடம் கிடைக்கவில்லையென அவர்கள் மேலும் தெரிவித்தனர். இதனையடுத்து இவ்விடயம் தொடர்பாக 2007ம் ஆண்டு ஜனாதிபதி மற்றும் தொழில் ஆணையாளரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும் எதுவித பதிலும் கிடைக்கவில்லையென தெரிவித்தனர்.தோட்டப்பாதை மிக மோசமான நிலையிலேயே உள்ளது. அவசரத் தேவைகளுக்கோ அல்லது திடீர் நோயாளி ஒருவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்வதாயின் சுமார் ஒரு கி.மீ.தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. முச்சக்கரவண்டியில் செல்வதாயின் 150 ரூபா கட்டணமாக அறவிடப்படுகிறது. தபால் சேவை கிடையாது. புளத்சிங்கள தபால் அலுவலகத்துக்குச் சென்று கடிதம் ஏதும் வந்துள்ளதா என அவரவர் விசாரித்துப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. பாடசாலை மாணவர்களும் நடந்தே செல்ல வேண்டியுள்ளனர்.


தனியார் தோட்டம் என்று சொல்லும் பொழுது பெரும்பாலும் அங்கு சட்டம், ஒழுங்கு, நீதி, நியாயம் கடைப்பிடிக்கப்படுவதாகத் தெரியவில்லை. மூடி மறைந்த ஒரு பிரதேசமாகவே இருந்து வருகிறது. இதனால் அங்கு என்ன நடக்கிறது என்பது கூட வெளியில் தெரிவதில்லை. தொழிற்சங்கவாதிகளும் தனியார் தோட்டம் குறித்து பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்வதில்லை.கம்பனித் தோட்டங்களில் வசித்து வரும் தொழிலாளர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளைவிட தனியார் தோட்டங்களில் கெடுபிடிகளும் பிரச்சினைகளும் எண்ணிலடங்கா தவையாகவே இருந்து வருகின்றன.

தொழிலாளர் சார்பாக ஆஜராகி வாதாடி அவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க வேண்டிய தொழிற்சங்கவாதிகள் தோட்ட உரிமையாளரிடம் சந்தோஷம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆதரவாகவே செயற்பட்டு தொழிலாளரை நட்டாற்றில் கைவிட்டு விடுகின்றனர். இது மிகவும் கவலைக்குரியதாகும் என இங்குள்ள தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரைகாலமும் இந்தத் தோட்டத்தில் தொழிலாளரின் நலன் கருதி எந்தவொரு திட்டமோ உதவியோ எவரும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. ஆக மேல் மாகாண சபை உறுப்பினரான கித்சிரி கஹட்டபிட்டிய சுமார் 25 லட்சம் செலவில் மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.


எஸ். சூரியமாலா (53)


இருபத்தைந்து வருடகாலம் கணவனும் நானும் தோட்டத்தில் வேலை செய்தோம். சம்பளம் மட்டுமே கிடைத்தது. வேறு எந்த சலுகையும் கிடைக்கவில்லை. கிடைக்க வேண்டிய ஊழியர் சேமலாப நிதி கிடைக்கவில்லை. வழக்கு தொடர்ந்து எதுவித பிரயோசனமும் இல்லாமல் போய்விட்டது. நாலு வருடங்களாக நடந்த வழக்குக்காக பெரும் பணம் செலவழித்தோம். கடைசியில் தொழிற்சங்கவாதிகள் எங்களை ஏமாற்றி தோட்ட உரிமையாளருக்கு சாதகமாக நடந்து கொண்டனர். இவ்வளவு காலம் தொழிற் சங்கத்தில் இருந்தும் ஒரு பயனுமில்லை. எங்கள் நிலையை கடவுளிடம்தான் சொல்ல வேண்டும் என்றார்.


எஸ். ராஜசிங்கம் (48)

நான் வெளியில் வேலை செய்து நாளொன்றுக்கு 275 ரூபா முதல் 300 ரூபா வரையில் உழைத்து வருகிறேன். தோட்டத்தில் ஏழு வருடகாலம் வேலை செய்த போதிலும் எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை.தனியார் தோட்டங்களில் நடக்கும் அநீதியை யாரும் தட்டிக்கேட்பது கிடையாது.


தமிழ் அரசியல்வாதிகளும், தொழிற்சங்கவாதிகளும் இருந்தும் பயனில்லை. ஒரு கையொப்பத்தைப் பெற்றுக்கொள்ள அவர்களிடம் மூன்று மாதம் அலைய வேண்டியுள்ளது. அவர்களைச் சந்திக்கச் சென்றால் ஐயா குளித்துகொண்டு இருக்கிறார். சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார். அல்லது செய்தி கேட்கிறார், தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படியான பதில்கள் தான் கிடைக்கின்றன என்றார்

இங்கிரிய மூர்த்தி


நன்றி- தினகரன்
சம்பள உயர்வுக்கான கூட்டு ஒப்பந்தத்தை துரிதப்படுத்த வேண்டுகோள்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை நிர்ணயித்து தீர்மானிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியாகி விட்டதால் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான கூட்டு ஒப்பந்தத்தை துரிதப்படுத்த வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர் சந்திரசேகர் தொழில் மற்றும் மனிதவள அமைச்சர் அதாவுட செனவிரத்னவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அக்கடிதத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமையால் தொழிலாளர்கள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு முன்னைய சம்பள அதிகரிப்பின்போதும் அவர்களுக்கு வாழ்வதற்கு போதுமான சம்பள உயர்வு வழங்கப்படாமையினாலும்,அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையினாலும் தோட்டத் தொழிலாளர் நாளுக்கு நாள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
தொழிலாளர்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதை நீங்கள் நன்கு அறிவீர்கள். தோட்டத்தொழிற்துறையைச் சேர்ந்த சுமார் 4 இலட்சம் மக்கள் வாழ்வாதாரப் போராட்டத்துடன் தோட்டங்களில் தொழில்புரிகின்றனர். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 10 இலட்சம் மக்கள் இந்த நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் வழங்குவதாக வாக்குறுதியளித்த நிவாரணம் கூட அம்மக்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. வாழ்க்கைச் செலவு வேகமாக அதிகரித்து வருவதன் காரணமாக அவர்கள் எதிர்கொண்டுவரும் கஷ்டங்களை ஓரளவாவது நிவர்த்திசெய்யும் வகையில் அரசாங்கத்தினதோ, முதலாளிமாரினதோ ஒத்துழைப்பு கிடைக்காது அவர்களது சம்பளத்தை சட்டபூர்வமாக அதிகரித்துக்கொள்ளும் சந்தர்ப்பத்தை தொடர்ந்து பிற்போடுவது தோட்டத்தொழிற்துறைக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல. இவ்விடயத்தில் நம்பிக்கை இழந்திருக்கும் தொழிலாளர்கள் வாழ்வதற்குப்போதுமான சம்பள அதிகரிப்பைப் பெற்றுத் தருமாறு பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தேயிலை, இறப்பர் தொழிற்துறை உற்பத்திகள் குறைந்தன. இதனால், தேசிய வருமானத்துக்கும் பாதிப்பேற்பட்டது. இவ்வாறான நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டியது எம் அனைவரினதும் கடமையாகும். எனவே தான் இதனை நாம் சுட்டிக்காட்டுகிறோம்.
2006 ஆம் ஆண்டு சம்பளத்தை அதிகரித்துக்கொள்வதற்காக மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்காததால் தொழிற்சங்கப் போராட்டம் 3 மாதங்களாகத் தொடர்ந்தன. அத்தொழிற்சங்க போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் 3.300 மில்லியன் நட்டமேற்பட்டதாக முதலாளிமார் தெரிவித்திருந்தனர்.
தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கைக்குப் போதுமான சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமாக இருந்தால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கவேண்டிய தேவை தொழிலாளர்களுக்கு இருக்காது. இச்சந்தர்ப்பத்தில் இதனை கவனத்தில் கொண்டு தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் ஆற்றல் இருக்கும் நிலையிலும் முதலாளிமார் அதனை தள்ளிப்போட்டு வருகின்றனர். தேயிலை வர்த்தகச் சந்தையைப் பொறுத்தவரையில் பெருந்தோட்டத்துறை நல்ல நிலையிலேயே உள்ளது. தேயிலை ஒரு கிலோ 450 ரூபாவாகவும் இறப்பர் ஒரு கிலோ 250ரூபாவாகவும் உயர்ந்த விலையில் இருப்பதனால் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு எதுவித தடையும் இல்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இந்நிலையில், தோட்டத்தொழிலாளர்களை நம்பிக்கை இழக்கச்செய்யாது சுமார் நான்கு இலட்சம் தோட்டத்தொழிலாளிகளுக்கு வாழ்க்கைக்குப்போதுமானளவு சம்பளத்தை கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் அதிகரிக்கும்படி முதலாளிமார் சம்மேளனத்தை அரசாங்கம் வலியுறுத்த வேண்டும். இதற்காக அரசாங்க பிரதிநிதி என்ற வகையிலும் தொழில் தொடர்பு மற்றும் மனிதவள அமைச்சர் என்ற வகையிலும் நீங்கள் துரித தலையீடொன்று செய்ய வேண்டியுள்ளது. இந்தக் கடமையை நிறைவேற்றி வைக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். – நன்றி – தினக்குரல்