Thursday, January 31, 2019

பெருந்தோட்டக் காணிகளை அரசு கையேற்க நடவடிக்கை


கூட்டுக் கமிட்டியை ஒதுக்கிவிட்டு ஒப்பந்தம் செய்ததன் அவசரம் என்ன?

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் ஒரு தரப்பான தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டி, உடன்படிக்கையிலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறாத நிலையில், அதனை ஒதுக்கிவிட்டு அவசர அவசரமாக ஒப்பந்தம் கைச்சாத்திட்டமை மிகத் தவறானதென மக்கள் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
உடன்படிக்கை நகல் வரைவில் குளறுபடிகள் இருப்பதாக தெரிவித்து தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி கைச்சாத்திட வருகை தராதபோது, அதுபற்றி ஆராய்ந்து பார்க்காமல் ஏனைய இரண்டு சங்கங்களும் கைச்சாத்திட் டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தொழிலாளர்களுக்கு நியாயமான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு அந்தக் கமிட்டி முன்வருமாக இருந்தால், பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இ.தம்பையா தினகரனுக்குத் தெரிவித்தார்.
தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக, மீண்டும் 140 ரூபா ஊக்குவிப்புக் கொடுப்பனவைக் கோரி பேச்சுவார்த்தை நடத்தப்படுமாக இருந்தால், அது மீளவும் சம்பள விவகாரத்தை மலினப் படுத்துவதாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார். 140 ரூபாகொடுப்பனவையேனும் பெற்றுக்கொடுக்குமாறு அரசாங்கத்தைக் கோருவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அமைச்சர் பழனி திகாம்பரம் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.
அவர்களுடன் இராமநாதனையும் அழைத்துக்கொண்டு செல்வதற்கும் திட்டமிடப்பட்டிருப்பதாக அறிய வருகிறது. எவ்வாறெனினும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 140 ரூபா கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், அதனை மீண்டும் பெற்றுக் கொடுத்துவிட்டதாக எவரும் திருப்தியடைய முடியாது. அதனைப் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால், அதுவே ஒரு தீர்வாக அமையாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமெனக் குறிப்பிட்ட தம்பையா, சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தை மீளப் புதுப்பிப்பதற்கு வெளிப்படையாக முன்னெடுக் கப்படும் நடவடிக்கைகளுக்குத் தமது சங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் தெரிவித்தார்.
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர் தொழிற்சங்கங்கள் கூடிப் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தெளிவான முடிவுடன் செல்ல வேண்டும் என்றும் இதுபற்றித் தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டியின் செயலாளர் நாயகம் எஸ்.இராமநாதனுடன் கலந்துரையாடி அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாராக இருப்பதாகவும் தம்பையா மேலும் கூறினார்.

Wednesday, January 16, 2019

1,000 ரூபாய் கோரிக்கை நியாயமானதே

பெருந்தொட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபாய் சம்பள உயர்வுக் கோரிக்கை நியாயமானதெனத் தெரிவித்துள்ள மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் மைத்திரி குணரத்ன, சம்பந்தப்பட்டத் தரப்புகள், தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாயைப் பெற்றுக்கொடுத்து, வீழ்ந்திருக்கும் பெருந்தோட்டத் துறையை உயர்த்துவதற்கு முன்வர வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.  
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தச் சம்பளத்தை 1,000 ரூபாயாக அதிகரித்துத் தருமாறு, ​பெருந்தோட்ட நிறுவனங்களிடம் தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் கோரிக்கை நியாயமானதென, மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் மைத்திரி குணரனவை தெரிவித்தார்.  
​மத்திய மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள மைத்திரி குணரத்னத்தை வரவேற்கும் நிகழ்வு, ஹட்டன் - டிக்கோயா நகர சபையில் நேற்று (13) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர்,  
இலங்கையிலிருந்து டுபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையானது, அந்நாட்டில் கலப்படம் செய்யப்பட்டு அங்கிருந்து பல நாடுகளுக்கு அதிக விலையுடன் ஏற்றுமதி செய்யப்படும் வர்த்தகம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.  
200 வருடங்களாக இலங்கையின் பொருளாதாரத்துக்குப் பங்களிப்பு செய்யும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக்கொடுத்து, பாதிப்படைந்துள்ள தேயிலைத் துறையை முன்னேற்றுவதற்கு, மலையகப் பிரதிநிதிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.  
அத்துடன் ஜனாதிபதியால் தனக்கு வழங்கப்பட்ட பதவியில், அரசியல் செய்யாமல், மக்களுக்காக தான் கடமையாற்றவுள்ளதாகத் தெரிவித்த அவர், ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் குப்பைப் பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தார்.
Courtesy- Tamil Mirror 

முதுகெலும்பான மக்களை மறந்தநாடு !

மலையகதமிழ்மக்களின் சமூக பொருளாதார வாழ்வு தொடர்பாக இலங்கையில் எவ்வளவு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன?
ஓன்றரை நூற்றாண்டுகள்; கடந்துவிட்டன . இலங்கையின் பொருளாதார முதுகெலும்பாக இன்றுவரை மலையக தோட்டத்தொழிலாளர்கள்.
1948 இன் பின்னர் அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன?
பிரஜா உரிமை பெறுவதற்கே அரை நூற்றாண்டுகளுக்கு மேல் போராடவேண்டி இருந்தது. சமூக பொருளாதார பாதுகாப்புநிலை என்ன? வீடு, கல்வி, போக்குவரத்து, சுகாதாரம், ஆரோக்கியம் என்பன எந்தளவில் மாற்றம் பெற்றிருக்கின்றன.? நிர்வாக இயந்திரம்-சட்டம் ஒழுங்கு நட்பார்ந்த முறையில் மலையக மக்களை அணுகுகின்றனவா?
அவர்களில் நலன்களுக்கான தொழிற்சங்கங்கள் மலையக மக்கள் தமது நிலத்தில் உறுதியாக கால் பதித்து எழுவதற்கு எவ்வளவு தூரம் பங்களித்திருக்கின்றன? வருடாவருடம் தமது அன்றாட வாழ்வை ஓட்டுவதற்காக அவர்கள் போராடவேண்டி இருக்கிறது.
இன்றைய நாட்களில் 1000 ரூபா சம்பளம் என்பது நியாயமானதும் அடிப்படையானதும். உள்ளக கட்டமைப்பு வாழ்வதற்கான நிபந்தனைகள் குறைவாக உள்ள அவர்களின் வாழ்வில் இது ஜீவாதாரமானது.


அரச ஊழியர்களுக்கு 40000 அடிப்படை ஊதியமாக  இருகக்வேண்டும்  என்று பிரதமர் ரணில் சிலவருடங்களுக்கு முன்பேசியதாக ஞாபகம். ஆனால் மலையக தமிழ்மக்கள் இந்த கணக்கு வழக்குகளில் எப்போதும் வருவதில்லை.
காலனி ஆதிக்ககால லயன் காம்பராக்கள் அதே அலங்கோலத்துடன் அப்படியே தொடர்கின்றன. தொழிலில் வாழ்க்கையில் அதேகெடுபிடிகள் தொடர்கின்றன. இலங்கையின் பிரதானஅரசியல்  மலையக மக்களை புறக்கணித்தே சிந்திக்கிறது.
அவர்களது நிலம்  வீடு கல்வி சுகாதாரம் சுற்றாடல் வேலைவாய்ப்பு ஊதியம் என்பன இரண்டாம் பட்சமானவை என்ற மனோபாவம் மேலோங்கி காணப்படுகிறது.
இலங்கையின் முதுகெலும்பான மக்கள் எந்தநம்பிக்கையையும் பெறாமல் இலங்கையின் சமூக பொருளாதாரமீட்சி என்பது வெற்றுவார்த்தை  ஜாலம் மாத்திரம் அல்ல. அதுவெறும் கனவு.

இலங்கை அரசியல் யாப்பு ஆளும் வர்க்க மனோபாவத்தில் மலையகமக்கள் இரண்டாம் பட்சமானவர்களாகவே காணப்படுகிறர்கள். முதலாளித்துவ  உற்பத்தி உறவு முறைகளின் அடிப்படையில் மாத்திரம் அல்ல.நிலமானிய சமூக மனோபாவமும் தோட்டத்தொழிலாளர்கள் மீது பிரயோகிக்கப்படுகிறது. அந்தவகையில் தலைமுறை தலைமுறையாக மலையகமக்கள் மத்தியிலிருந்து சில அதிர்வலைகள் எழுந்துகொண்டுதான் இருக்கின்றன. இம்முறை சற்று வித்தியாசமாக தகவல் யுகத்தில் இளையதலைமுறை சுயாதீனமாக போராட முற்பட்டிருக்கிறது.
ஆனால் இலங்கையின் ஆளும் வர்க்க அதிகாரபோட்டியில் மலையகமக்களின் நியாயமான சம்பள உயர்வுகோரிக்கை மழுங்கடிக்கப்பட்டது. கண்ணியமான பாதுகாப்பான வாழ்வு மலையக மக்களுக்கு ஸ்தாபிக்கப்படவேண்டும்.
ஆனால் இலங்கையின் பாரம்பரியமான இனக்குரோத வகைப்பட்ட ஆதிக்கஅரசியல் மலையகமக்களை எப்போதும் புறக்கணித்தே வந்திருக்கிறது. துன்பங்களையும் சுமைகளையும் அனுபவிப்பதுஅவர்களின் தலைவிதி அவர்கள் அப்படியேதான் வாழவேண்டும் என்று கருதுகிறது. இங்குஉடைவுஅவசியப்படுகிறது. முதலில் இலங்கையின சக சமூகங்களுடன் அவர்கள் மனிதர்களாக வாழ்வதற்கான நிபந்தனைகள் உருவாக்கப்பட வேண்டும்.காலங்காலமாக இலங்கையின் புறக்கணிக்கப்பட்ட வாழ்வு.
இலங்கையில் இனங்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளிலும் சரி. சமூக நீதிக்கான போராட்டங்களிலும் சரி  பொதுவான தொழிலாளர் உரிமை போராட்டங்களிலும் சரி மலையக மக்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

இன வன்முறைகள் கலவரங்கள் சிறை வன்முறைகளில் மலையக இளைஞர்கள் சமூகம் படுமோசமாகபாதிக்கப்படடிருக்கிறார்கள்.இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்டது.
வடக்கு கிழக்கின் இன சமூக உரிமைபோராட்டங்களில் பெருந்தொகையான மலையக   இளைஞர் யுவதிகள் தமது உயிரை அர்ப்பணித்திருக்கிறார்கள்.
பல பத்தாண்டுகளாக இரண்டும் கெட்டான்களாக அலைக்கழிக்க்கப்பட்டிருக்கிறார்கள். ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தம், ஸ்ரீமா- இந்திரா ஒப்பந்தங்களின் பேரில் அவர்கள் இரண்டு நாடுகளுக்குமிடையே அலைக்கழிக்கப்பட்டார்கள் நாடற்றவர்கள் என்ற ஒருபிரிவினர் இந்த நாட்டில் நீடித்து நிலவினர்
1948 இல் பிரஜாஉரிமைவாக்குரிமை பறிப்பு,
இன வன்முறைகளின்போது இலகுவாகவும் முதலாவதாகவும் இலக்குவைக்கப்படுவது,
மலையக மக்களுடன் பண்ணையார்தனமான அதிகார வர்க்க உறவுமுறை இலங்கையின பிரசைகளாக இருப்பதற்கான ஆவணங்கள் பற்றாக்குறையாக வழங்கப்படுவது . அல்லது அவற்றைபெற்றுக் கொள்வதில் நிலவும் இழுபறி. பெண்கள் குழந்தைகளின் அரோக்கியம்- தரமான கல்வியை-சுத்தமான பாதுகாப்பான சூழலை -நிலத்தை-வீட்டை பெற்றுக் கொள்வதற்கான உரிமை
பெண்கள,குழந்தைகள் சிறுவர்களுக்கான பாதுகாப்;பினை உறுதிப்படுத்துவது.
இலங்கையின் அனைத்து சமூகங்களுக்குமான குறைந்தபட்ச சமத்துவநிலை என்றுபார்த்தால் அவர்கள் வீடு-நிலம-; கல்வி-சுகாதாரம் தொடர்பில் குறைந்தபட்ச நிலையையே அனுபவிக்கிறார்கள். அண்மையில் இலங்கையில் அரசாங்க நெருக்கடி 50 நாட்கள் கடந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் சுதந்திரத்திற்கு பின்னான காலத்திலும் அடிப்படை உரிமைகள் மனிதஉரிமைகள் மீறப்பட்ட நிலையில் மலையக மக்களின் வாழ்வு இயல்பானதென்ற மரத்து போனநிலையே காணப்பட்டது

இலங்கையின் முன்னேற்றம் இலங்கையின் முதுகெலும்பான மக்களின் வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும்.தேயிலை தோட்டங்களில் மாய்பவர்களின் வாழ்நிலைபற்றிய பிரக்ஞை இல்லாத எந்த பொருளாதார அறிவும் இந்தநாட்டின் வளர்ச்சிக்கு எவ்வகையலும்  உதவப்போவதில்லை. மலையகமக்களின் பாரம்பரிய வர்க்க சமூக இன அடையாளம் என்பனவே இலங்கையின் ஆளும் வர்க்கத்திற்கு உறுத்தலாக இருக்கிறது.
இந்த மனநிலையில் மாற்றம் ஏற்படாதவரை இலங்கையின சமூகபொருளாதார அபிவிருத்தி என்பது வெறுங்கனவே.

கடந்த 30, 40 வருடங்களில் வடக்கு-கிழக்கில் இருந்து புலம் பெயர்ந்து சென்றவர்களே அந்தநாடுகளில் ஏற்ற இறக்கங்களுடன் வெற்றிகரமாக தமதுவாழ்வை அமைத்து கொள்ளக் கூடியதாக இருந்தது. தமதுவாழும் நாட்டிற்கானஆவணங்களை பெறமுடிந்திருக்கிறது.
தொழில் முனைந்து முன்னேறுவதற்கான வாய்ப்புக்கள் இடைவெளிகள் கிடைத்திருக்கின்றன. ஒரு 10 லட்சம் பேர் இவ்வாறு. ஆனால் இந்தநாட்டில் ஒன்றரை நூற்றாண்டுகள் கடந்தும் 10 லட்சம் மக்களின் வாழ்வு எவ்வாறிருக்கிறது. அவர்கள் இந்தநாட்டிற்காக உழைத்திருக்கிறார்கள்.

இந்தநாடு பண்பாட்டு கருவூலம் என்று வார்தைக்கு வார்த்தை பாசாங்குப் பெருமிதம் கொள்ளும் அரசியல்வாதிகள் இந்தமக்கள் பற்றிஎத்தகைய மனநிலையை கொண்டுள்ளார்கள் .
வெவ்வேறு இன மத சமூகங்களை சமூகநீதி மறுக்கப்பட்டவர்களை- வர்க்க ரீதியாக வஞ்சிக்கப்பட்டவர்களை நிலமானிய-முதலாளித்துவ மனோபாவம் - தளைகளில் இருந்து விடுவித்து தன்னம்பிகையும் சுதந்திரமுமான வாழ்வுக்கான இடைவெளி கிட்டினால்தான் இந்தநாடு முன்னேற்ற பாதையில் இருப்பதாக உணரமுடியும் கருதமுடியும்.
வருடாவருடம் மலையக தோட்டத்தொழிலாளர்கள் ஊதியஉயர்வுகோரி வீதியில் நிற்கும் அவலநிலை முதலில் நீங்க வேண்டும்.
இலங்கையின் எதிர்காலம் மலையக மக்களின் வாழ்வும் தாழ்வும் சார்ந்தது.

- திருநாவுக்கரசு ஸ்ரீதரன் (தோழர் சுகு)-

நன்றி- தேனீ