Sunday, April 18, 2010

கம்பனிகளின் வருகையின் பின்னர் தொழில் ரீதியாக நசுக்கப்படும், சலுகைகளை இழந்து வரும் தோட்டத் தொழிலாளர்கள்

மலையகத்தில் குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் அநேகமானோர் தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்து வருவதை நாம் அறிகின்றோம் இவர்களில் ஆண், பெண் உட்பட பெரும்பாலானவர்கள் தேயிலைத் தோட்டங்களில் தொழில் செய்து தமது வாழ்க்கையை கொண்டு செல்வதே உண்மையான நிகழ்வாகும். இதில் இளைஞர் யுவதிகள் என்ற விதி விலக்கல்ல.
அநேகமாக தேயிலைத் தோட்டத தொழிலைத் தேர்ந்தெடுப்பதற்கு பல காரணங்களை முன்னெடுக்கலாம். இதில் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதையும் சில வரப்பிரசாதங்களுக்கு அடிமையாக விடுவதையும் கூறலாம் வரப்பிரசாதம் என்று இவர்கள் நினைப்பது தம் இருப்பிடத்துக்கான கூலி அறவிடப்படுவதில்லை என்பதையே. மேலும் நகரங்களில் பணம் செலுத்தி பெறுகின்ற குடிநீர், காற்று போன்றவற்றை இலவசமாக பெற்றுக்கொள்ளும் நிலை தோட்டப்புறங்களில் அதிகமாக உள்ளது. அதுவும் மரக்கறி தோட்டங்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்றவற்றுக்கு வசதி உள்ளமையேயாகும்.
இது ஒருபுறமிருக்க இவர்கள் சுரண்டப்படும் விதங்களை அறியாதவர்களாகவே வாழ்ந்து வருகின்றார்கள் என்பது வேதனைக்குரிய விடயமாகும். இவர்கள் தொழில் ரீதுpயாக நசுக்கப்படுவது எவ்வாறு என்று நோக்குவோமானால் ஒரு தொழிலாளி வேலைத் தளங்களில் இருந்து வீடு திரும்பும் நேரம் மிகவும் தாமதகமாகவே இருக்கின்றமையை சுட்டிக்காட்டலாம்.
குறிப்பாக பெண் தொழிலாளர்கள் வேலை நேரம் அதிகரிப்பால் நசுக்கப்படுவது அநேகமான தோட்டங்களில் காணப்படுகின்றதொன்றாகும். மலையில் வேலை பார்க்கும் கங்காணிமார்கள் அன்றைய கால பெரிய கங்காணிமார்களை விட ஆதிக்கம் செலுத்துக்கின்றார்கள் என பல பெண் தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் குற்றம் கூறச் செய்கின்றார்கள் இதுவும் ஓர் ஆண் ஆதிக்கம் என்றே பலர் சொல்லி வேதனைப்படுகின்றனர்.
இன்று தேயிலைத் தோட்டங்களில் அநேகமாக இளம் யுவதிகள் வேலை செய்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. சில தோட்டங்களில் கங்காணிமார்கள் இளம் பெண்கள் என்றுகூட பார்க்காமல் தங்களை மலையில் வாய் கூசாமல் பேசுகிறார்கள். சிலர் தகாத வார்த்தைப் பிரயோகங்ககளை உபயோகிப்பதாக தோட்டப்புற பெண் தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கொழுந்து நிறுவையிலும் தங்கள் பாதிப்புக்களை அவர்கள் மறுக்கவில்லை. தற்போது சில தோட்டங்களில் உள்ள கொழுந்து நிறுக்கும் தராசுகள் பழைமை வாய்ந்தவையாகவும் உடைந்த, துருப்பிடித்த நிலையிலும் இருக்கின்றமையால் சரியான நிறுவையினை காட்டுவதில்லை என்றும் பெண் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பெண் தொழிலாளர்கள் தற்போது வேதன அதிகரிப்பின் பின்னர் ஒரு நாள் பேருக்கு(சம்பளத்துக்கு) சில தோட்டங்களில் 18 கிலோ கொழுந்து எடுத்தல் (தோட்டத்துக்கு தோட்டம் இது வேறுபடும்) வேண்டும். என நிர்வாகம் கண்டிக்கின்றது. இது போன்ற நேரங்களில் பெண் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இது இவ்வாறிருக்க தோட்டப் பகுதியிலுள்ள இன்றுள்ள பெண்கள் தொழிலாளர்கள் தேயிலை தொழிற்சாலைகளில் அதிகபட்சம் வேலை செய்வதை காணக்கூடியதாக உள்ளது. இவர்கள் தேயிலை தொழிற்சாலைகளில் இரவு நேர கடமைகளிலும் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட சில தோட்டங்களில் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு வேலை செய்யும் போது பாதுகாப்பு கவசங்கள் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை. இதனால் ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு உள்ளாவதாகவும் சில பெண்கள் தெரிவிக்கின்றனர்.
இது இவ்வாறிருக்க பெருந்தோட்டத்துறையில் வாழும் தொழிலாளர்கள் சுகாதார ரீதியாக அதிகமாக பாதிப்புக்குள்ளாகி வருவதையும் காணக்கூடியதாக உள்ளது. தோட்டங்களை அரசு நடத்தி வந்தபோது தோட்ட வைத்தியசாலைகள் காணப்பட்டன. மருந்தக, தாதி, (நுஆயு) தோட்ட வைத்தியர்கள் போன்றோர் அநேகமான தோட்டங்களில் பிரசவ வார்ட் போன்ற காணக்கூடியதாக இருந்தமையும் சுகாதாரம் சீராக இருந்தமையும் குறிப்பிடுவதோடு வாரம் ஒரு முறையாவது தோட்டக் குடியிருப்புக்களுக்கு சேமநல அதிகாரி தோட்ட வைத்தியர் ஆகியோர் சென்று சுகாதாரம் சம்பந்தமாக கலந்துரையாடி வைத்தியம் பார்த்த காலமும் தோட்டங்களில் இருந்து வந்தது.
அது மட்டுமல்லாமல் சகல தோட்டக் குடியிருப்புக்களின் வடிகான் மற்றும் குடியிருப்பினை சுத்தம் செய்வதற்காக லயன் சுத்திகரிப்பாளர் ஒருவரும் கடமையில் இருந்து வந்ததும் குறிப்பிட வேண்டும். தற்போது தனியார் கம்பனிகளின் வருகையின் பின்னர் இவை படிப்படியாக குறைவடைய ஆரம்பித்து விட்டன. தோட்டப் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள் இயங்குவது குறைவு பல தோட்டங்களுக்கு ஒரு வைத்திய அதிகாரியொருவர், தாதி ஒருவர் என மிகவும் குறைவாகவே காணப்படுகின்றனர். சில தோட்டங்களில் மருந்தகம், வைத்தியசாலைகள் மூடப்பட்ட நிலையில் காணக்கூடியதாக இருப்பது வேதனையாகத்தான் இருக்கின்றது.
தற்போது வைத்திய அதிகாரி, தாதிமார், சேமநல அதிகாரி போன்றோர் தோடடக் குடியிருப்புக்களுக்கு விஜயம் செய்து நோயாளிகளை பார்வையிடுவது அடியோடு இல்லாமல் போயுள்ளது. அன்றிருந்த லயன் சுத்திகரிப்பாளர்கள் எந்த தோட்டத்திலும் இல்லை என்பதைத்தான் கூற வேண்டும். இப்படி கம்பனி வருகையின் பின்னர் பெருந்தோட்டத்துறை தொழிலாளிகளின் சலுகை படிப்படியாக குறைந்து வருகின்றது. அத்தோடு தொழிலாளர்களின் சந்தாவிற்கு அக்கறை காட்டும் தொழி;ற்சங்கங்களின் வருகை அதிகரித்துக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு அதிகரித்து வரும் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தொழிலாளர்கள் நலனிலும் சற்று அக்கறை காட்டு இதுவரை கிடைத்து வந்த சலுகையாவது குறையாமல் இருக்க வேண்டி தொழிலாளர்கள் கேட்கின்றனர்.
சுகாதார அமைப்புக்கள் தோட்டப் புறங்களில் சுகாதார நலன்களில் அக்கறை காட்ட வேண்டும். சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்குகளும் நடத்தி தோட்டத்துறை தொழிலாளர்களின் உரிமைகளிலும் அக்கறை செலுத்த முன் வர வேண்டுமென பெருந்தோட்ட கடமையில் உள்ள தொழிலாளர்கள் கேட்கின்றனர்.
ராஜ்குமார்