அரசாங்கம் மலையகத்தவர்களுக்கு வழங்கப்பட்ட மாகாண தமிழ்க் கல்வி அமைச்சினை பறித்து விட்டது
மலையக மக்களுக்கு தனித்தனி வீடுகளை கட்டிக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கடந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் மேடைகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்குறுதியளித்தார். ஆனால் தேர்தல் முடிந்ததும் மத்திய மாகாண தமிழ் கல்விக் அமைச்சு பறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் இரட்டை வேடம் தெட்டத் தெளிவாகியுள்ளது ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கா தெரிவித்துள்ளார்.
பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மலையக மக்களின் வாக்குகளை வெற்றிலைச் சின்னத்திற்கு திசை திருப்பிக்கொண்ட இந்த அரசாங்கம் ஐக்கிய தேசிய கட்சியினால் மலையகத்தவர்களுக்கு வழங்கப்பட்ட மாகாண தமிழ்க் கல்வி அமைச்சினை பறித்து அவர்களை அவமதித்துள்ளது. எனவே மக்கள் இந்த அரசாங்கத்தின் இரட்டை வேடத்தை உணர்ந்து எதிர்வரும் தேர்தல்களில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றார் அவர்
இது தொடர்பாக ரவி கருணாநாயக்கா மேலும் கருத்து தெரிவிக்கையில், மாகாண சபை முறைமையை அறிமுகப்படுத்திய ஐக்கிய தேசிய கட்சி சகல இன மக்களும் பயன் பெறும் வகையில் எவ்வித பாரபட்சமும் இன்றி அதனை செயற்படுத்தியது குறிப்பாக மலையக மக்களின் நலன்களையும் அவர்களின் கோரிக்கைகளையும் செவிமடுத்து மதிப்பளித்தது. அதன் விளைவாகவே தமிழ்க் கல்வி அமைச்சென்ற ஒன்றை உருவாக்கி ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அதனை தமிழர்களுக்கு வழங்கியது.
இவ்வாறு மலையக தமிழர்களை மதித்து அவர்களுக்காக வழங்கப்பட்ட தமிழ்க் கல்வி அமைச்சின் ஊடாக அவர்கள் கணிசமான முன்னேற்றத்தினையும் அடைந்துள்ளார்கள் என்பதை யாவரும் அறிவர். ஆனால் இந்த அரசாங்கம் அந்த அமைச்சினை பறித்து தந்திரோபாயமாக தமது காய் நகர்த்தலை மேற்கொள்கிறது.
மலையக மக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு அமோக ஆதரவளிப்பவர்கள். எனவே அவர்களின் மனோநிலையை நன்கு அறிந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியோரின் தேர்தல் பிரசார மேடைகளில் ஏறி பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார். அதன் மூலமாக மத்திய மாகாண தமிழ் மக்களின் வாக்குகள் வெற்றிலைச் சின்னத்திற்கு திசை திருப்பப்பட்டன.
இவ்வாறு ஜனாதிபதி பல்வேறு வாக்குறுதிகளை வாரி வழங்கியமையினாலேயே இம்முறை மத்திய மாகாணத்தில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட ஒன்பது தமிழ் உறுப்பினர்களுக்கும் மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர்.
தமது நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பிலேயே இம்முறை மலையக மக்கள் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் தமிழ் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு வாக்களித்தனர். ஆனால் அரசாங்கம் வெற்றி பெற்றதும் தமது சுயரூபத்தை காட்டியுள்ளது.
பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுவது இந்த அரசாங்கத்துக்கு புதிதான விடயமல்ல. ஆனாலும் இம்முறை மலையக மக்களை ஏமாற்றுவதற்கு ஒரு புதிய யுக்தியை கையாண்டிருக்கிறது அவ்வளவுதான். எனவே மலையக மக்கள் மீண்டும் இந்த அரசாங்கத்தை நம்பி ஏமாறக்கூடாது.
நாட்டின் தேசிய பிரச்சினை விடயத்தில் இதே விதமான செயற்பாட்டினையே இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. 13ஆம் திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வினை வழங்கத் தயார் என ஜனாதிபதி வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போது 13ஆம் திருத்தத்தில் உள்ள அதிகாரங்களை கூட பறிப்பதற்கே முயற்சிக்கிறது.
இவ்வாறு கபடத்தனமாக செயற்பட்டு வரும் இந்த அரசாங்கம் மலையக மக்களுக்கோ வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கோ எவ்வித நன்மையும் செய்யப்போவதில்லை என தெரிவித்தார்