Monday, November 12, 2018

தேசிய உற்பத்திகளான தேயிலை, இறப்பர் செய்கையை வளப்படுத்த கம்பனிகள் என்ன பங்களிப்பு செய்யப் போகின்றன?

1975 ஆம் ஆண்டு பெருந்தோட்டங்கள் யாவும் ஆங்கிலேய கம்பனிகளின் பராமரிப்பின் கீழ் இருந்தபோது, பிரித்தானியாவிலிருந்து ஒளிபரப்பாகும் கிரனடா தொலைக்காட்சி தேயிலையை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கும் தேனீரை விரும்பிப் பருகும் நாட்டினருக்கும் அதிர்ச்சி தரும் காட்சிகளையும் தகவல்களையும் அப்பட்டமாக வெளியிட்டு வைத்தது. அந்த விவரணங்களில் தேயிலையை உற்பத்தி செய்யும் தோட்ட மக்களின் வாழ்வியலின் யதார்த்தங்களைப் பார்த்து சர்வதேச நாடுகள் திகைத்துப் போயின. தாம் ருசித்து அருந்தும் தேநீரின் பின்னணியில் எத்தனை ஆயிரம் பேரின் கண்ணீரும் கலந்திருப்பதை அறிந்து கலக்கமும் கவலையும் வெளியாகின.
குறிப்பாக பிரித்தானியா பேதலித்துப் போனது. தமது நாட்டு கம்பனிகளின் பராமரிப்பின் கீழுள்ள தேயிலைத் தோட்ட மக்களின் பஞ்சம், பட்டினி நிறைந்த பரிதாப நிலைமை பாராளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக இது சம்பந்தமான விசாரணை அறிக்கையொன்றை வழங்குமாறு பிரித்தானிய அரசாங்கம் பணித்தது. 1975 களில் அவ்வறிக்கை வெளியிடப்பட்டது.
இதன் பின்னர் உலக அபிவிருத்தி இயக்கம் (WDM) இலங்கை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் குறித்ததான கவனயீர்ப்பு பரப்புரைகளை மேற்கொண்டது. சர்வதேச ரீதியில் இது பலரது அனுதாபத்தைத் தேடித்தந்தது. இதற்கான வேலைத்திட்டமொன்றை இலங்கையில் இயங்கிய தோட்டக் கம்பனிகள் நடைமுறைப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்படியேதும் நடக்கவில்லை. காரணம் 1972களில் ஆரம்பிக்கப்பட்ட தோட்டங்களை அரசுடைமையாக்கும் அரசின் வேலைத்திட்டம் 1975இல் நிறைவடைந்தது. அந்நிய கம்பனிகள் அரசிடம் தேயிலைத் தோட்டங்களைக் கையளித்து விட்டு காலக்கிரமத்தில் வெளியேறின. இச்சுவீகரிப்பு மூலம் பிரித்தானிய கம்பனிகளுக்குச் சொந்தமான தோட்டங்களும் இலங்கையருக்கு சொந்தமான தோட்டங்களும் அரசின் பொறுப்பின் கீழ் வந்தன. எனவே சர்வதேச ரீதியிலான அனுதாப அலையானது அறிக்கையோடு நின்றுபோனது. தோட்ட மக்களின் வாழ்வியலில் மாற்றம் ஏதும் ஏற்படுத்தப்படாமலே அவலம் நீட்சிபெற்றது. இதேவேளை இன ரீதியான புறக்கணிப்பு முயற்சிகள் காரணமாக தோட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளானது.
தேசிய மயமாக்கல் கொள்கையின் அடிப்படையில் தோட்டக்காணிகள் கபளீகரம் செய்யப்பட்டு பெரும்பான்மை இன மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. அத்துடன் நகர விரிவாக்கம், கிராம அபிவிருத்தி திட்டங்களுக்காக பெருந்தோட்டக் காணிகள் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டன. ஆனால் இவ்வாறான நடவடிக்கைகளால் பெருந்தோட்ட மக்கள் எவ்வித நன்மைகளையும் அடையவில்லை. குறிப்பாக, வீட்டு வசதி கூட ஏற்படுத்தித் தரப்படவில்லை. தோட்டக் காணிகள் வகைதொகையின்றி துண்டாடப்பட்டமையால் இதுவரை காலமும் இருந்துவந்த பெருந்தோட்டக் கட்டமைப்பு சிதறுண்டது.
கூட்டாக வாழ்க்கை நடத்தியவர்கள் சிறுசிறு குழுக்களாக பிளவுண்டனர். இதுவே சிறு தேயிலை தோட்ட உற்பத்தியாளர்கள் என்றொரு பிரிவு உருவாகக் காரணமாக அமைந்தது என்பர் ஆய்வாளர்கள். ஆனால் அந்தப் பிரிவில் தப்பித்தவறியேனும் தோட்ட மக்கள் எவருமே உள்வாங்கப்படாமையே சமூக ஆர்வலர்களின் ஆதங்கம். இதேநேரம் எதிர்பார்த்தபடி அரசுடைமையாக்கலின் கீழ் பெருந்தோட்டங்கள் சீர்மையாக பாராமரிக்கப்படவில்லை. உள்ளூர் துரைத்தனங்கள் உரிய முறையில் கரிசனை காட்டாததால் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி அடையலானது.
அந்நியச் செலாவணி ஈட்டலில் முதன்மை நிலையிலிருந்த தேயிலை ஏற்றுமதி படிப்படியாக இரண்டாம் மூன்றாம் நிலைக்குப் பின் தள்ளப்பட்டது. இதனால் 1992 இல் மீண்டும் 449 பெருந்தோட்டங்களை தனியார் கம்பனிகளுக்கு 50 வருட கால குத்தகைக்கு விடும் முடிவுக்கு வந்தது அரசாங்கம். பல் தேசிய வர்த்தக நிறுவனங்களுடன் தொடர்பு கொண்ட இக்கம்பனிகள், பல்வேறு வாக்குறுதிகளை தொழிலாளர்களுக்கு வழங்கி வைத்தன. அதில் முக்கியமான ஒன்றுதான் இதுவரை காலமும் தோட்டத் தொழிலாளர்கள் பெற்றுவந்த சகல சலுகைகளும் வரப்பிரசாதங்களும் தொடர்ந்து வழங்கப்படும் என்பது. ஆனால் பொறுப்பேற்ற சில காலத்துக்குள்ளேயே அந்த வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டன. படிப்படியாக தொழிலாளர்கள் பெற்றுவந்த பல நன்மைகள் நிறுத்தப்பட்டன.
குறிப்பாக, அதுவரை தொழிலாளர்கள் பெற்று வந்த வாழ்க்கைச் செலவுப்புள்ளி கொடுப்பனவு இல்லாமல் ஆக்கப்பட்டது. அதுவே இதுவரை அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக் கொள்வதில் தோட்டத் தொழிளர்களுக்கு பாரிய சங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றது. நாளடைவில் ஆளணி குறைப்பில் தோட்டக் கம்பனிகள் நாட்டம் கொண்டதால் ஆண் தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறையலாயின. தொழிலாளர்கள் வேறு வேலைதேடி தோட்டங்களை விட்டுப் புலம் பெயரச் செய்தது. இன்றைய நிலையில் பெருவாரியான தோட்டங்கள் பெண் தொழிலாளர்களை மட்டுமே கொண்ட தொழிற்துறையாக மாறியிருக்கின்றன. இத்துடன் தோட்ட மக்கள் நலன்புரி சேவைக்காக ஒதுக்கப்பட்டு வந்த நிதியில் பாரிய வெட்டு இடம்பெற்றது. 75 வீதத்தால் குறைக்கப்பட்டது.
இப்படி தோட்ட மக்களின் நலன் குறித்ததான சிரத்தை ஏதுமின்றி இலாபத்தை மட்டுமே இலக்காக கொண்டு இயங்கும் தனியார் கம்பனிகள் வாக்களித்தபடி தேயிலைத் துறையைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து நழுவிக் கொள்கின்றன. முக்கியமாக மீள்பயிர்ச் செய்கைய முற்றாக கைவிட்டு விட்டன. இதனால் தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகின்றது. இதற்கான மாற்றீடாக அறிமுகப்படுத்தி வரும் செம்பனை என்று கூறப்படும் முள்ளுத்தேங்காய் பயிர்ச்செய்கை போன்றவை தேயிலைத் துறையின் எதிர்காலம் குறித்ததான அச்சத்தை ஏற்படுத்தவே செய்கின்றது.
இதே சமயம் கொழும்பில் அமைந்துள்ள கம்பனிகளின் தலைமைச் செயலகத்தை பராமரிக்கவென தோட்ட மக்களின் உழைப்பிலிருந்து பெருந்தொகையான பணம் செலவு செய்யப்பட்டு வருகின்றது. இது மட்டுமின்றி பெருந்தோட்ட மக்களின் வியர்வையின் விளைச்சல் கிரிக்கெட் போட்டிகளின் ஊக்குவிப்புகளுக்காக விரயமாக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவிர கம்பனிகள் தேயிலை, இறப்பர் மூலம் கிடைக்கும் இலாபத்தை கொண்டு பிற நிறுவனங்களோடு பங்குச் சந்தை பங்காளர்களாகுவதோடு இதனால் நட்டம் ஏதும் ஏற்படும் பட்சத்தில் அதை தேயிலை உற்பத்தி மீதான நட்டக் கணக்கில் காட்டும் தந்திரத்தைக் கடைப்பிடிப்பதாக சுட்டிக் காட்டப்படுகின்றது. தாம் குத்தகைக்கு எடுத்த காணிகளை வெளியாருக்கு உப குத்தகைக்கு விட்டு இலாபம் தேடப்படுகின்றது. இதேவேளை பெறுமதி வாய்ந்த மரங்கள் தறிக்கப்பட்டு காசாக்கப்படுகின்றன. தோட்ட தொழிற்சாலைகள் பல மூடப்பட்டு அவைகளிலிருந்த இயந்திரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இவைகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றி எவருக்குமே தெரியாது.
தோட்ட அதிகாரிகளுக்கென நிர்மாணிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ பங்களாக்கள் பல இன்று சுற்றுலா விடுதிகளாக பணம் தேடித் தருகின்றன. தோட்டத் தொழிற்றுறையில் எந்தவொரு முதலீடும் செய்யாமல் இலாபம் அடைந்து வரும் தோட்டக் கம்பனிகளுக்கு அரசாங்கத் தரப்பிலிருந்து மானியமும் வழங்கப்படும் விடயம் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. இவ்வாறு பல்வேறு வழிகளிலும் தேயிலைத் துறையை மையப்படுத்தி ஆதாயத்தை அள்ளிக் குவிக்கும் தோட்ட நிர்வாகங்கள், அப்பாவி தோட்ட மக்கள் விவசாயம் செய்வதற்கோ, சின்னதாக வீடுகளை அமைத்துக் கொள்ளவோ நிலத்தைப் பயன்படுத்தினால் அவர்கள் மீது வழக்கினை பதிவு செய்து தண்டிக்க முற்படுகின்றது. தற்போது இவ்வாறாக தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ்பெறும் வகையில் தோட்ட நிர்வாகங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட உள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தினகரன் வாரமஞ்சரிக்கு தெரிவித்திருக்கிறார். இது வரவேற்கப் படவேண்டிய விடயம். இதே நேரம் நாட்டில் ஆகக் கூடிய ஆளணி வளம் கொண்ட ஒரு தொழிற்றுறையாக பொருந்தோட்டப் பயிர்ச்செய்கை காணப்படுகின்றது. இத்துறையில் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கான சம்பளம், மேலதிக முகாமைத்துவ செலவுகள், பொறுப்பற்ற நிர்வாகம், ஆடம்பரச் செலவு, காலனித்துவ முறையிலான முகாமைத்துவ முறைமை இன்றுவரை நிலவிவருவதை ஆய்வாளர்கள் பதிவிடுகின்றார்கள்.
இவ்வாறான செயற்பாடுகளால் இன்று பெருந்தோட்ட மக்களுக்கும் தோட்ட நிர்வாகங்களுக்கும் இடையிலான தொடர்பில் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இத்துடன் நியாயமான அடிப்படைச் சம்பளத்துக்கு இணக்கம் காட்ட முன் வராத தோட்டக் கம்பனிகள் மீது மக்களின் அதிருப்தி அதிகரிக்கும் போக்கே காணப்படுகின்றது. இந்நிலைமையை மாற்றியமைக்க மலையக தலைமைகள் இன்று முயற்சி எடுத்து வருவதையும் காணமுடிகின்றது. தொழிலாளர்களும் விழிப்படைந்தவர்களாக தமது தேவைகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் அணிதிரண்டு போராட முன்வருவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. தோட்டக் கம்பனிகள் தோட்டத் தொழிற்றுறையைப் பாதுகாத்து தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்பை காலத்துக்குக் காலம் வழங்கத் தவறுமாயின் தோட்டங்களை மீண்டும் அரசாங்கமே கையேற்க முன் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. ஏனெனில் கம்பனிகளின் மனமாற்றத்தின் பின்னணியில் இந்நாட்டின் ​ேதசிய வருமான மீட்டலின் பங்களிப்பும் இருப்பதை மறந்துவிட முடியாது. தோட்ட மக்களின் வாழ்வியலையும் தோட்டங்களையும் வளப்படுத்த வேண்டிய ஓர் பாரிய சவால் இன்று கம்பனி தரப்பின் முன் காத்திருக்கின்றது. அது அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது தான் தற்போதைய கேள்வி?
நன்றி- தினகரன்

Saturday, November 3, 2018

தோட்டத் தொழிலாளர் சம்பள பேச்சுவார்த்தை தோல்வி

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்திற்கிடையிலான பேச்சுவார்த்தையொன்று நேற்றைய தினம் 02-11-2018 பத்தரமுல்லையிலுள்ள பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் நடைபெற்றது.
மேற்படி பேச்சுவார்த்தையையடுத்து மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் சுரேஷ் வடிவேல், ஊவா மாகாண சபை உறுப்பினரும் இ. தே. தோ. தொழிலாளர் சங்கத்தின் முக்கியஸ்தருமான வி. ருத்ரதீபன் மற்றும் சங்கத்தின் தேசிய இணைப்பாளர் விஜயகுமாரன், கூட்டு தொழிற்சங்கம் சார்பில் இராமநாதன் உட்பட பலரும் இம் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
தோட்டக் கம்பனிகள் மனிதாபிமானமின்றி செயற்படுகின்றன. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் இனி கம்பனிகளுடன் பேசுவது அர்த்தமற்றது. இதற்கிணங்க தீபாவளி வரையே நாம் பொறுத்திருப்போம். தீபாவளியையடுத்து மலையகத்தில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படும்.
தோட்டக் கம்பனிகளுக்கு மானியமாக கோடிக்கணக்கான ரூபாய்களை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு இதுவரை காலமும் வழங்கிவந்துள்ளது. சிறுபான்மை பிரதிநிதியொருவர் அந்த அமைச்சின் இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்றதாலேயே இந்த உண்மை தற்போது அம்பலமாகியுள்ளது.
இனியும் கம்பனிகளுக்கு கட்டுப்படவேண்டிய அவசியம் எமக்குக் கிடையாது. அவர்கள் இர1992 ஆம் ஆண்டு கம்பனிகளுக்கு தோட்டங்களை வழங்கும்போது அவை பெரும் செழிப்பாகக் காணப்பட்டன. அவை தற்போது பராமரிப்பின்றி காடாகியுள்ளன. தோட்டங்களை கம்பனிகளிடமிருந்து மீளப்பெறும் போது அதற்காக தண்டப் பணம் அறவிடப்படவேண்டுமென நான் பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷிடம் தெரிவித்துள்ளேன்.
தோட்டங்களிலுள்ள சுப்ரிண்டன் பங்களாக்கள் சுற்றுலா விடுதியாக வழங்கப்பட்டு அதன் மூலமும் பெரும் இலாபம் ஈட்டப்படுகின்றன.
கடந்தமுறை கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையின் போது ஒன்றரை வருடங்களுக்காக நிலுவைப் பணமாக கிடைக்கவேண்டிய 85,000 ரூபா தோட்ட மக்களுக்கு கிடைக்கவில்லை. இடைக்கால கொடுப்பனவென 1000 ரூபா பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுத்தவர்கள் அதுபற்றிச் சிந்திக்கவில்லை.
கூட்டு ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளது. இனி அவ்வாறானதொரு ஒப்பந்தம் இருந்தால் என்ன இல்லாவிட்டாலென்ன நாம் அரசாங்கத்தின் மூலம் முடிவொன்றைப் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளோம். தீர்வு கிடைக்காவிட்டால் கூட்டு ஒப்பந்தத்தை எடுத்துக்கொண்டு நீதிமன்றம் போக நேரிடும்.
கூட்டு ஒப்பந்தம் மீறப்படும்போது முதலில் அது தொடர்பில் தொழில் ஆணையாளருக்கு தெரிவிக்கவேண்டும். அதன் பின்னரே நீதிமன்றம் செல்ல முடியும். கூட்டு ஒப்பந்தத்திலுள்ள பல்வேறு விடயங்கள் மீறப்பட்டுள்ள நிலையில் ஆணைக்குழுவுக்கு மூன்று முறை முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எந்த இடைக்கால கொடுப்பனவும் இனி எமக்குத் தேவையில்லை. 1000 ரூபா சம்பள உயர்வை எமது மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியாது போனால் அமைச்சர் பதவியைத் துறக்கவும் நான் தயங்கமாட்டேன்.
தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை நாம் நழுவ விடமாட்டோம். தோட்டங்களை முறையாக நடத்த முடியாவிட்டால் தோட்டங்களை மீள அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். அது தொடர்பில் நான் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷிடம் பேசியுள்ளேன். தொழிலாளர்களின் சலுகைகள், உரிமைகள், அவர்களை கௌரவமாக நடத்தவேண்டியது தொடர்பான நியதிகள் கூட்டு ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட வேண்டும்.
கூட்டு ஒப்பந்தத்தை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்குக் காரணம் சம்பள உயர்வுக்கு மேலதிகமாக தொழிலாளர்களின் பல்வேறு சலுகைகள், உரிமைகள் சார்ந்த விடயங்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதால் அவற்றை தொழிலாளர்கள் இழக்கக்கூடாது.
இம்முறை பேச்சுவார்த்தையின் போது இரண்டு தரப்பையும் பார்த்து 925 ரூபா அடிப்படை சம்பளமாக தந்தால் ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருந்தோம். எனினும் அவர்கள் 10 வீதமான சம்பள உயர்வைத் தரத் தீர்மானித்தனர். இனி 925 என்ற பேச்சுக்கே இடமில்லை. 1000 ரூபாவே எமது கோரிக்கை. அது கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.த்தத்தை உறிஞ்சும் அட்டையைவிட மோசமானவர்கள், மனிதாபிமானமற்றவர்கள்.
முதலாளிமார் சம்மேளனத்துடன் இனிஎந்தவிதப் பேச்சுக்கும் இடமில்லை. 1000 ரூபா சம்பளம் பெற்றுத்தராவிட்டால் தீபாவளி முடிந்ததும் மலையகம் தழுவிய மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அமைச்சர் தொண்டமான் தெரிவித்தார்.
முதலாளிமார் சம்மேளனத்தின் மீதான நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எட்டப்படும் எனத் தெரிவித்த அமைச்சர் தமது மக்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்காவிட்டால் அமைச்சர் பதவியை தூக்கியெறியவும் தயார் என்றும் தெரிவித்தார்.
தீபாவளி வரையே பொறுத்திருப்பதாகவும் தீபாவளி முடிந்ததும் அனைத்துத் தரப்பினரையும் இணைத்துக்கொண்டு மலையகத்தில் மாபெரும் போராட்டத்தை நடத்தப்போவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நன்றி- தினகரன்

Saturday, October 20, 2018

வாழ்க்கை செலவூக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும்!

மலையக மக்களின் பார்வையில் சமதர்மம் என்பது எட்டாக்கனி மட்டுமல்ல; கானல் நீரும்கூட!
மலையக மக்களின் உரிமைகளுக்காக ஜே.வி.பி தொடர்ந்து வெளிப்படையாகவே குரல்கொடுத்து வந்திருக்கிறது. அதாவது இதயசுத்தியுடன், ஆனாலும் மலையகப் பிரதேசங்களில் ஜே.வி.பியை ஆதரிக்கும் தமிழர்கள் குறைவு. ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா அல்லது கம்யூனிசம், சமதர்மம் என்பதை இம்மக்கள் தவறாக புரிந்து வைத்திருக்கிறார்களா?
அருமையான கேள்வி! மக்கள் விடுதலை முன்னணியினராகிய நாம் மலையக மக்களின் உரிமைகளுக்காக மட்டுமல்ல, சலுகைகளையும் வழங்க மேண்டுமென குரல் கொடுப்பவர்கள். இருந்தபோதும் மலையக மக்கள் அரசியல் சார்ந்த தொழிற்சங்கங்களை தமது விருப்பத் தெரிவாக எப்போதும் வைத்துக் கொண்டுள்ளனர். அதன் பின்னணியில் இருந்தே அரசியலைத் தெரிவு செய்கின்றனர்.
தமக்கான அரசியல் தெரிவை, கட்சிகளின் கொள்கை அடிப்படையிலும் சமூகத்தை கட்டியெழுப்பும் நாட்டின் பொருளாதார மேம்பாட்டு அடிப்படையிலும் தூர நோக்குடனும் பார்ப்பதில்லை. அது மட்டுமல்ல, வெல்லப்போவது யார் என்று உன்னிப்பாக அவதானித்து அதன் பின் அணிதிரளும் சாமர்த்தியமும் உள்ளது. சமதர்மம் என்பது எட்டாக்கனி மட்டுமல்ல, கானல் நீரும்கூட, அவர்களின் கருத்தியலில்!
தோட்டத் தொழிலாளியின் ஒருநாள் அடிப்படைச் சம்பளம் குறைந்தபட்சம் அரச ஊழியரின் ஒருநாள் சம்பளமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளீர்கள். ஆனால் 19 வருடங்களில் 399 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கியிருக்கக்கூடிய கம்பனிகள் இதற்கெல்லாம் அசரும் என நினைக்கிறீர்களா?
கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் கரிசனை காட்டுகிறார்களோ இல்லையோ, தோட்டத் தொழிலாளர்களின் சந்தாப்பணத்தை பெறும், கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் கரிசனை காட்டுகிறார்களா என்பதுதானே முக்கியம்! ஆனால் அப்படி இல்லை என்பதுதான் முதல் பிரச்சினை. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் ஆழமான கருத்தை முன்வைத்து இதயசுத்தியுடன் செயற்படுவதில்லை. அதுதான் உண்மையும் பிரதான காரணமும் ஆகும், பெருந்தோட்டத்தை தற்போது நிர்வகிக்கும் கம்பனிகள் அனைத்துமே பல்தேசிய கம்பனிகளாகும். அவை இலாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டிருப்பதால் சம்பளத்தை உயர்த்தி வழங்குவதில் பின்வாங்குகிறார்கள்.
கம்பனி எனும் கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி என்ற தொழிற்சங்கங்கள் இடம் கொடுக்காது. உதாரணத்திற்கு 1999 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் ஒரு தொழிலாளியின் அடிப்படை நாட் சம்பளம் 2001 ஆம் ஆண்டு வரைக்கும் 101 ரூபாவாக இருந்தது. 2002 இல் புதிய கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோது 121 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. அதன்படி இருவருட இடைவெளியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 ரூபா மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பார்க்கும்போது தொழிற்சங்கங்களும், கம்பனிகளும் எந்தளவுக்கு தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டுகின்றன என்பதை தோட்டத் தொழிலாளர்கள் புரிந்துகொள்வது அவசியமாகும்.
சம்பளப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் சங்கத் தரப்பு, முதலாளிகளுக்கு பழகிப்போன தரப்பாகிப் போய்விட்டால் ஆணித்தரமாக பேசக்கூடிய நிலையில் அத்தரப்பு இல்லை என்றும் எனவே வேறு சங்கங்களும் சங்கத்தரப்பில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறைந்தபட்சம் சங்கத் தரப்புக்கு ஆலோசனை வழங்கக்கூடிய ஆலோசனை சபை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இது தொடர்பாக தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
உண்மையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுடன் ஏனைய தொழிற்சங்கங்களும் இணைந்து பங்குதாரர்களாக இருக்க வேண்டும், அப்போதுதான் பழைய தொழிற்சங்கங்கள் வளைந்து கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இல்லாவிட்டால் பழைய குருடி கதவை திறவடி என்ற கதைதான். அண்மையில் தனியார் வானொலியொன்றில் நடைபெற்ற கருத்தாடலின்போது என்னுடன் கலந்து கொண்ட தொழில் அமைச்சர் ரவீந்திர சமரவீர என்னிடம் நீங்களும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளுங்கள் என்றார். 75 வீதம் என்ற வரையறை இல்லாதொழிக்கப்பட்டு அனைத்து தொழிற்சங்க தரப்புகளும் கலந்துகொள்ள வேண்டும் என்பதே என்னுடைய கருத்தும்கூட.
கம்பனிகளை பனங்காட்டு நரிகள் என்று வைத்துக்கொண்டால் தொழிலாளர் தரப்பு எப்படியிருக்க வேண்டும்?
கம்பனிகள் பணங்காட்டு நரிகளாயின் கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் குள்ள நரிகள்தான்!
கூட்டு ஒப்பந்தம் என்பது சம்பள உயர்வை மட்டும் பேசும் ஒரு உடன்படிக்கையல்ல. ஆனால் சமீப காலமாக அப்படித்தான் அது பார்க்கப்பட்டு வருகிறது. நீங்கள் எப்படி இதனை அவதானிக்கிறீர்களா?
உண்மையில் சம்பள உயர்வுக்கு மேலதிகமாக தொழிலாளர்களின் நலன்புரி சேவை மற்றும் தொழிலாளர்களின் சலுகை போன்றவற்றில் தொழிற்சங்கங்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டிய ஒன்றாக இருந்தபோதும் தற்போது 75 வீதமான தொழிலாளர்களின் நலன்புரி சேவைகள் வெட்டப்பட்டுள்ளதுடன், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சம்பள உயர்வு என்ற கோட்பாடு மட்டும் பழக்கத்தில் உள்ளது.
இது முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும். தற்போதைய பூகோளமய பொருளாதாரத்துக்குள் சிக்குண்டு இருக்கும் இலங்கை வாழ் தோட்ட மக்கள் பொருளாதார ரீதியாக பாரிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் சேவைக் கட்டண உயர்வு என்பவற்றால் ஏனைய சமூகத்தை விடவும் தோட்டத்து சமூகம் பாரிய நெருக்கடியை எதிர்நோக்குகிறது. அதற்கு தற்காலிக தீர்வாக வாழ்க்கைச் செலவுக்கேற்ப அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
உற்சாகம் பெற்றிருக்கும் மலையக வீடமைப்பு பற்றி...?
வீடுகள் வழங்குவதை பாராட்ட வேண்டும், இதில் உரித்து என்னும் உரிமையும் உள்ளடக்கப்பட வேண்டும். தற்போது ஏனைய சமூகத்துக்கும் வீடுகள் வழங்கும்போது ஏதாவதொரு காணி உரித்து பத்திரம் வழங்கப்படுகிறது. தோட்டத் தொழிலாளர்களுக்கு எந்த உரித்து பத்திரமும் வழங்கப்படுவதில்லை. வீடு வழங்குவது தொழிலாளர்களின் காதில் பூ வைக்கும் ஒரு நிகழ்வாக இருக்கக்கூடாது.
தற்போது வெளிவாரி முறை நடைமுறைக்கு வந்துகொண்டிருக்கிறது. இந்த வெளிவாரிமுறை தொடரும்போது கம்பனிகள் சம்பளம், விடுமுறை, சலுகைகள் என்பனவற்றை வழங்க வேண்டிய அவசியமே இல்லாது போய்விடும் அல்லவா? இந்த மாற்றம் தவிர்க்க முடியாதது என்றால், தொழிற்சங்க அரசியல் கட்டமைப்பும் இல்லாமல் போய்விடும், அப்படித்தானே?
இந்த முறையானது தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சும் ஒரு முறை. இம்முறையால் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடியையும், இழப்பையும் சந்திக்க நேரிடும். ஏன் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி போன்றவற்றையும் கூட. இதனால் தொழிற்சங்கங்கள் பாரிய பின்னடைவை அரசியல் ரீதியாக சந்திக்க நேரிடும்.
இம்முறை தொடர்பாக கம்பனிகளுடன் கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அர்த்தபுஷ்டியான கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டும். அதனுடன் அவர்களுக்கு வழங்கப்படும் காணி சம்பந்தமாக ஒரு உடன்படிக்கைக்கு வருவதோடு அதற்கான காலத்தையும் நிர்ணயிக்க வேண்டும். அது மட்டுமல்ல, முடிவில் அந்த காணிகளை தொழிலாளர்களுக்கே உரிமையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெருந்தோட்டக் குடியிருப்புகள் புதிய கிராமங்களாக மாறுவது பற்றி ஜே.வி.பி.யின் நிலைப்பாடு என்ன?
வரவேற்கத்தக்கது. நான் முன்னர் குறிப்பிட்டதைப்போல் காணி உரித்துடன் அமையப்பெற வேண்டும். ஒப்பீட்டளவில் ஒரு குறுகிய காலப்பகுதியில் தமிழ் முற்போக்கு முன்னணி பெருந்தோட்ட சமூகத்துக்காக பல காரியங்களைச் செய்துள்ளது. எனினும் இ.தொ.கா.வின் செல்வாக்கு அப்படியேதான் இருக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இரண்டையும் வெவ்வேறாக பார்ப்பதும் பிழையானதாகும். ஏனென்றால் மலையக தமிழ்த் தலைமைகள் ஆட்சி பீடத்திலிருக்கும் அரசாங்கத்தில் ஒரு காலையும் மலையகத் தலைமையில் மறு காலையும் வைத்துள்ளன. இதில் யாரும் விதிவிலக்கல்ல. குறிப்பாக 1994 ஆம் ஆண்டு சந்திரிகா அம்மையார் ஆட்சியமைப்பதற்கு அமரர் பெ. சந்திரசேகரன் முட்டுக்கொடுத்தார். அதற்கு முன்னரும் மலையக அரசியல் முதலாளித்துவ அரசியல் தலைவர்கள் மகிந்தவின் அரசில் முற்போக்கு அணி, பிறபோக்கு அணி என அனைத்து தலைவர்களும் அனைவருமே அமைச்சர்கள். எனவே, இவர்களில் யார் மலையக மக்களுக்கு சேவை செய்தவர்கள் என்பதை விட எவர் கட்சி தாவாதவர்கள் என்பதே முக்கியமானது. உதாரணத்துக்கு கடந்த அரசில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், திகாம்பரம், போன்றோரை குறிப்பிடலாம்.
மலையக தமிழ் சமூகத்துக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?
மலையக சமூகம் அரசியல் ரீதியில் அணித்திரள வேண்டும். இது வரைக்கும் இச்சமூகம் அரசியலை முன்னிறுத்தி அணிதிரளவில்லை. சந்தர்ப்பத்துக்கும், பழக்க தோசத்துக்காகவுமே அணிதிரண்டார்கள். அதனால் அனைத்து பக்கமும் தோல்வியுற்றவர்கள் தோட்ட தொழிலாளர்களே, அத்துடன் பொருளாதார ரீதியில் கவனம் செலுத்த வேண்டும். மாறிவரும் உலக பூகோளமய பொருளாதார முறைக்கு தாம் எவ்வாறு முகம் கொடுப்பது என்பதை யோசித்து நீதியான தேசம், நியாயமான சமூகத்தில் அடிமையில்லா மனிதனாக வாழ தம்மை தயார்ப்படுத்திக் கொள்வதோடு தேசிய அரசியல் நீரோட்டத்தில் தம்மை பங்காளியாக்கிக் கொள்ள வேண்டும்.
அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவர் கே. செல்வராஜ் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்
பேட்டி கண்டவர்- பி.வீரசிங்கம்
நன்றி- தினகரன் வாரமஞ்சரி

Wednesday, October 17, 2018

மலையகத்தில் மேலும் மண்சரிவு அபாயம்

நாடு முழுவதும் பெய்து வரும் கடும் மழை சில தினங்களுக்கு தொடரும் அதேநேரம் மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக நுவரெலியா, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை,கண்டி, மாத்தளை பகுதிகளில் தொடர்ந்தும் சுமார்100 முதல் 150 மில்லிமீற்றர் வரை கடும் மழை பெய்யுமென்றும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, மலையகத்தில் மண்சரிவு அபாயம் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் வாழும் மக்கள் இயலுமானவரை அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக இப்பிரதேசத்திற்கூடாக பயணிக்கும் வாகன சாரதிகள் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் அவசர தேவைகளின் நிமித்தம் பிரதேச அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் தொடர்புகளை ஏற்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக மத்திய , ஊவா, வடமத்திய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் 100 மில்லிமீற்றர் வரை கடும் மழை பெய்யுமென்றும் இக்காலப்பகுதியில் மின்னல் தாக்கம் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வயல்வெளிகள், மைதானங்கள்,குளங்கள், நீர் நிலைகள் போன்ற திறந்த வெளிகளில் இருப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் மின்சார உபகரணங்களை கவனமாக கையாளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நன்றி- தினகரன்

இலங்கை தேயிலை குறித்து பிரசார நடவடிக்கை

இலங்கை தேயிலை குறித்து 12 நாடுகளில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை தேயிலை சபை தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில், அடுத்த மாதம் ஆரம்பமாகும் பிரசார நடவடிக்கைகள் ரஷ்யாவிலும் அதனைத் தொடர்ந்து சீனாவிலும் நடைபெறும் என இலங்கை தேயிலை சபையின் தலைவர் லுசிலி விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்திற்காக 350 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tuesday, October 16, 2018

ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொடுத்தே தீருவேன்

கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில், முதலாளிமார் சம்மேளனம் அடிப்படைச் சம்பளத்தை 100 ரூபாவாக உயர்த்த இணக்கம் தெரிவித்துள்ளப்போதிலும், அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பதில் இம்முறை உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ள இ.தொ.காவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், நூறு ரூபாய் அதிகரிப்பைத் தாம் நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்தார்.  
ராஜகிரியவில் நேற்று (15) நடைபெற்ற முதலாளிமார் சம்மேளனத்துடனான கலந்துரயைாடலின் பின்னர், அதில் கலந்து கொண்ட அனைத்துத் தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஆயிரம் ரூபாய் பெற்றுத் தருவதற்குத் தேவையான தொழிற்சங்க நடவடிக்கைகளையும் அரசாங்கத்தின் தரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்” எனத் தெரிவித்தார்.  
சம்பள உயர்வு விடயத்தில் அழுத்தம் கொடுத்தால் மாத்திரமே, முதலாளிமார் சம்மேளனம் இறங்கி வருவார்கள் எனத் தெரிவித்த அவர், முதலாவது பேச்சுவார்த்தையில் 10 சதவீத அதிகரிப்பிலிருந்து தற்போது மூன்றாவது பேச்சுவார்த்தையின்போது 20 சதவீத அதிகரிப்புக்கு முதலாளிமார் சம்மேளனம் வந்திருக்கிறார்கள் என்றும் அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பதுபோல தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் மாத்திரமே, ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் என்கிற ந​ம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார். 
இந்நிலையில்,கொழுந்து பறிக்கும் அளவுக்கேற்ப சம்பளம் வழங்கப்படும் எனும் கோரிக்கையையும் தாம் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த அவர், எனினும் அடிப்படைச் சம்பளத்தை ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். 
மேலதிக கொடுப்பனவுகள் எமக்கு வேண்டாம், அடிப்படைச் சம்பளத்தை ஆயிரமாக்கிவிட்டு பிறகு ஏனையவற்றைப் பேசிக் கொள்ளலாம். ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றோடு சேர்த்து, நாள்சம்பளத்தை 940 ரூபாயாக ​கம்பனிகள் கணக்குக் காட்டுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். 
ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொடுப்பதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார். இதன்போது அடுத்த  கட்டப் பேச்சுவார்த்தை எப்போது என வினவப்பட்டமைக்கு, அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்களோடு கலந்துரையாடித் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்தார். 
இதன்போது கூட்டு ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை செய்துகொள்ளப்பட வேண்டும் என்றோ, நிலுவைச் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றோ தேவைப்பாடுகள் இ.தொ.கவுக்கு இல்லை என நீங்கள் நீதிமன்றில் தெரிவித்திருக்கிறீர்களே என வினப்பட்டமைக்கு, நீதிமன்ற விடயத்தை நீதிமன்றில் பேசுவோம் என அக்கட்சியின் உப தலைவர் சட்டத்தரணி மாரிமுத்து பதிலளித்தார். 

Wednesday, October 10, 2018

தொழிலாளர் சம்பள அதிகரிப்புக்கு அரசாங்கம் உத்தரவிட வேண்டும்

மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கு ஒரு பொறியாக மாறியிருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் எஸ்.அருள்சாமி தெரிவித்தார்.  
சென்ற முறை இந்தக் கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும்போது அரசாங்கத்தின் அமைச்சர்கள் தலையிட்டு இந்தச் சிக்கலைத் தோற்றுவித்திருப்பதாகவும் இதனால், கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல் மேலும் ஈராண்டுகளுக்குத் தொடர்வதற்கு தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கு வழிவகுக்கப்பட்டிருப்பதாகவும் அருள்சாமி தினகரனுக்குத் தெரிவித்தார்.
1992ஆம் ஆண்டிலிருந்து கைச்சாத்திடப்படும் இந்தக் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள அனைத்துச் சரத்துகளும் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பையும் தொழில் உத்தரவாதத்தையும் வழங்கும் வகையில் அமைந்துள்ளபோதிலும், கடந்த    2016ஆம் ஆண்டு ஒக்ேடாபரில் உடன்படிக்ைக கைச்சாத்திடப்பட்டபோது உடன்படிக்ைகயில் இரண்டாவது சரத்தாக, ஏதாவதொரு காரணங்களுக்காக உடன்படிக்ைக கைச்சாத்திடப்படுவது தாமதமாகும் பட்சத்தில், அதே உடன்படிக்ைக அமுலில் இருக்கும் என்ற விடயம் சேர்க்கப்பட்டுள்ளது. இது நிலுவைச் சம்பளம் பெறுவதையும் பேரம்பேசுதலையும் பலவீனப்படுத்தியிருப்பதாக அருள்சாமி சுட்டிக்காட்டினார்.  
ஆகவே, இம்முறை எந்தவிதமான அரசியல் அழுத்தத்திற்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட சங்கங்கள் அடிபணியாதென்றும் அவர் தெரிவித்தார். தொழிலாளர் நலனில் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து செயற்படுவதற்குக் காங்கிரஸ் தயாராக உள்ளதென்றும் அவர் கூறினார்.  
எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தையில் நியாயமான சம்பள அதிகரிப்பை வழங்க கம்பனிகள் மறுத்துவிட்டால், அதனைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு அரசாங்கத்திற்கே உண்டென்று தெரிவித்த அருள்சாமி, இதற்காகத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரது ஆதரவையும் பெற்றுக்ெகாண்டு அடுத்த கட்ட நடவடிக்ைகக்குத் தயாராகவுள்ளதாகவும் கூறினார்.  
வெள்ளிக்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தையின் பெறுபேற்றைப்பொறுத்து வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்த அவர், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின்போது, தொழிலாளர்களுக்கு 1200 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்குமாறு கம்பனிகளுக்கு அரசாங்கம் உத்தரவிட வேண்டுமெனக் கோரவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.  
தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பதாக தலவாக்கலையில் நடைபெற்ற கூட்டமொன்றில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்ததைச் சுட்டிக்காட்டிய அருள்சாமி, இம்முறை ஆயிரம் ரூபாய் அதிகரிப்பை கம்பனிகளாக முன்வந்து வழங்கினால், ஏற்றுக்ெகாண்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதாகவும் இல்லையேல் அரசாங்கத்தைக் கொண்டு 1200 ரூபாய் அதிகரிப்புக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறினார்.  
அவ்வாறு அரசாங்கம் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கம்பனிகளுக்கு உத்தரவிட்டாலும், கூட்டு ஒப்பந்தத்தில் சங்கங்கள் கைச்சாத்திட்டதன் பின்னரே அந்த அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும். ஆகவே, கூட்டு ஒப்பந்தம் இருப்பது தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பானது என்று அருள்சாமி மேலும் குறிப்பிட்டார்.  
தொழிலாளர்களுகுத் தற்போது நாளொன்றுக்கு அடிப்படைச் சம்பளமாக 500 ரூபாய், விலைக்கேற்ற கொடுப்பனவு 30 ரூபாய், உற்பத்தி ஊக்குவிப்பாக 140 ரூபாய், 75 வீதம் பணிக்குச் சென்றால் 60 ரூபாய் என மொத்தம் 730 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், 60 ரூபாயும் 140 ரூபாயும் வழங்காதிருப்பதற்காகத் தோட்ட நிர்வாகங்கள் நேர்மையற்ற விதத்தில் செயற்படுவதாகப் பரவலாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. குறித்த இலக்கு வேலையைப் பூர்த்தி செய்தால் வழங்கப்படும் ஊக்குவிப்புத் தொகையை வழங்காதிருப்பதை நிர்வாகங்கள் உறுதிசெய்துகொள்ளும் அதேவேளை, மாதம் ஒன்றுக்கு 75 வீதம் வேலை வழங்காமல் தவிர்த்து 60 ரூபாயையும் தவிர்த்துவிடுவதில் நிர்வாகங்கள் சாமர்த்தியமாகச் செயற்படுவதாகத் தொழிலாளர்கள் குறைகூறுகிறார்கள். ஆக, 630 ரூபாய் மாத்திரமே நாட்சம்பளமாகக் கிடைக்கிறது.  
எனவேதான், இந்தக் கொடுப்பனவுகளைத் தவிர்த்து மொத்தமாக ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளத்தைக் கோரியிருப்பதாகத் தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ்.இராமநாதன் சுட்டிக்காட்டினார். இந்தக் கோரக்ைகயை நிராகரித்த முதலாளிமார் சம்மேளனம் கடந்த (17/08/2018) பேச்சுவார்த்தையில் ஐம்பது ரூபாய் அதிகரிப்பு வழங்குவதாகவும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது மேலும் 25ரூபாய் வழங்குவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி- தினகரன்

Saturday, October 6, 2018

குட்டக் குட்டக் குனிந்தது போதும் என்ற உரத்த சிந்தனை மலையக சமூகத்தில் எழ வேண்டும்!

மலையகத்தின் வரலாறு இந்தியத் தமிழர்கள் ஈழமண்ணைத் தழுவியபோது ஆரம்பித்ததல்ல; அதற்கும் நூறு ஆண்டுகள் பழை மையானது. உலக காலனித்துவம் தலைவிரித்தாடியபோது கீழைத்தேய நாடுகள் அதற்கு கட்டுண்டு வாழ்ந்த காலமது. 1700 களில் பிரிட்டிஷ் அரசாங்கம் மற்றும் பல்வேறு மேலைத்தேய நாடுகள் ஆபிரிக்க, இந்திய நாடுகளை கைப்பற்றிக் கொண்டு தங்கள் நாடுகளின் பொருளாதார துறையை மேம்படுத்திக் கொண்டன. இக்காலகட்டத்தில் ஆபிரிக்க நாடுகள் காலனித்துவத்தில் விடுதலை பெறவே! பிரிட்டிஷ் மாத்திரம் இந்திய, இலங்கை போன்ற நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு தமது பலத்தை பிரயோகித்தன.
பூர்வீக இந்திய மக்கள் நூல் நூற்பதையும், நிலத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்தையும் நம்பி வாழ்க்கை நடத்தினர். இதனை முதலில் ஊக்குவித்த பிரிட்டிஷ் அரசாங்கம் உற்பத்திகளை உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தது. பிரிட்டிஷ் ஏற்றுமதியை விட இந்திய ஏற்றுமதி உலக சந்தையை ஆக்கிரமிப்பதை பார்த்த பிரிட்டிஷ் அரசு, உடனடியாக சுயதொழில் முறையை ஒடுக்க பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கோரிக்கையொன்றை முன்வைத்தது. இவற்றோடு பிரிட்டிஷாரின் கைத்தொழிலை விரும்பாத மக்களாக இந்தியர்கள் இருந்தமையும் இதற்கு காரணமாகும்.
நிலத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாய முறையை குறைக்க வேண்டி பிரிட்டிஷ் அரசு நிலத்தினை அடிப்படையாக கொண்ட விவசாயம் செய்பவர்களுக்கும், ஏழை மக்களுக்கும் தாக்குப்பிடிக்க முடியாத வரியை அறவிடவே அதிகமானோர் தன் நிலத்தினையும், பூர்வீக விவசாய முறையையும் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
1835- - 1840 கால கட்டங்களை நிலப்பிரபுத்துவ முறையும், ஜாதி அடிப்படையாக வர்ணாச்சிர தர்மமும் இவற்றோடு உணவுப் பஞ்சம் ஏற்பட ஆரம்பித்தது. பிரிட்டிஷார் கொண்டுவந்த வரிவிதிப்பு முறைகள் இதற்கான காரணமாகும். 1770, 1784, 1804, 1937, 1801ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. இந்த பஞ்சத்தில் தஞ்சாவூர் மாவட்டம் நாற்பது இலட்சம் தமிழர்களை இழந்தது. இவற்றுடன் இந்தியாவில் தலைவிரித்தாடிய ஜாதி முறை, தான் விரும்பிய தொழிலை செய்யவும் வழிகொடுக்கவில்லை. இதனை பிரிட்டிஷார் நன்கு பயன்படுத்திக் கொண்டனர்.
இதே காலகட்டத்தில் ஈழத்தில் பொருளாதாரத்துறையை மேம்படுத்தவும், பெருந்தோட்டப் பொருளாதாரத்துறையை வளர்ச்சி செய்யவும் பிரிட்டிஷார் எத்தனித்தனர். பிரிட்டிஷில் உள்ள பணம் படைத்த முதலாளிகள் இலங்கையில் நிலம் மலிவாக கிடைக்கவே அதிகமானோர் இலங்கையில் முதலிடு செய்தனர்.
இதேவேளை இந்திய தமிழ் மக்கள் வறுமையில் வாடியபோது இவர்களுக்கு பல காரணங்களைக் கூறி வெளிநாட்டு வேலை வாய்ப்பை ஊக்குவித்தனர். 150 ரூபாய்க்கு நல்ல நிலம் கிடைத்த காலத்தில் 200 தொடக்கம் 500 ரூபாய் சம்பாதித்து வரலாம் என்றும், நல்ல உணவு. தங்குமிடம் கிடைக்கும் என்றும் இலங்கை சென்றோர் ஜாதி முறையை விரும்பாதவர்களாக இருப்பர் என்றும் பல காரணங்கள் கூறி ஏமாற்றினர் என்பதே உண்மை. உதாரணமாக கூறினால் தேயிலை மரத்திற்கு அடியில் பொன்னும், மாசியும் கிடைப்பதாக கூறினர் என்பதும் வரலாற்று உண்மையாகும். இவ்வாறு இந்தியத் தமிழர்களை கொடித்தடிமைகளாக இலங்கைக்கு கொண்டுவர முயன்றது பிரிட்டிஷ் அரசாங்கம்.
உலக சந்தையில் கோப்பி விலை முன்னிலையில் காணப்பட்டது. எனினும் ஆபிரிக்க நாடுகள் சுதந்திரம் பெற்றுவிடவே கோப்பித் தோட்டங்களில் வேலைச் செய்தோரும் அதைக் கைவிட்டனர்.
ஆனால் பிரிட்டிஷ் அரசு மட்டும் சில நாடுகளை தன் வசம் வைத்திருந்தமையால் கோப்பிப் பயிர்ச் செய்கையை ஊக்குவித்தது. இதற்காக முதன் முறையாக இந்தியாவிலிருந்து 14 இந்தியத் தமிழர்களை வேலைக்கமர்த்தினர். இது கம்பளையில் சிங்கபிட்டிய என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறு 1835- - 1840 ஆண்டுகளுக்கு இடையில் பெருந்தொகையான மக்களை கோப்பித் தோட்டங்களில் இறக்கியது பிரிட்டிஷ் அரசு. இருப்பினும் கோப்பிப் பயிர்ச் செய்கையில் ஏற்பட்ட ஒருவகை நோயின் காரணமாக இப் பயிர்ச் செய்கை ஆரம்பித்த அதே வேகத்தில் மண்ணைக் கௌவியது.
இவ்வாறான காலகட்டத்திலேயே 1867ஆம் ஆண்டு தெல்தோட்டை லூல்கந்துர என்ற இடத்தில் ஜேம்ஸ் டெய்லர் இலங்கையில் தேயிலையை அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்தே ஈழமண்ணுக்கு பல்லாயிரம் மக்களை தோணிகளில் ஆட்டுமந்தைகளாய் கொண்டு வந்து இறக்கினர். 1827ஆம் ஆண்டு 10,000 தொழிலாளர்களும், 1877ஆம் ஆண்டுகளில் 145,000 தொழிலாளர்களும், 1947ஆம் ஆண்டு வரை எட்டு லட்சம் இந்தியத் தமிழ்த் தொழிலாளர்களும் இலங்கை மண்ணை வந்தடைந்தனர். இந்தியாவில் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு தோணிகள் மூலம் இவர்களை கொண்டு வந்தனர். 100 பேர் வரை ஏற்றக் கூடிய தோணிகளில் 500 பேர்வரை ஏற்றி வந்தனர். இவ்வாறு வந்த பலர் தோணிகள் மூழ்கி இறந்தோரும் உளர். ஆதிலெட்சுமி என்ற கப்பல் மூழ்கி 120 பேர் வரை இறந்து போன காலகட்டமும் இதுவே.
தலைமன்னாரில் கொத்தடிமைகளாக வந்திறங்கியவர்கள் மலைகளும், பற்றை வனாந்தரமுமாக இருந்த மலைநாட்டை கால் நடையாக வந்து பெருந்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுபட்டனர். இவ்வாறு கால்நடையாக வந்த மக்களும் கடுங்குளிர் காரணமாகவும், அதிக மழை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாகவும், பாம்பு, அட்டை, பூராண் போன்ற பூச்சி இனங்கள் மற்றும் விலங்குகள் காரணமாகவும் மாண்டுபோயினர். 1867ம் ஆண்டு புறப்பட்ட 639 பேரில் 186 பேர் மட்டுமே மலையகத்தை வந்தடைந்தனர். இவ்வாறு வந்தவர்களே இந்த மண்ணை தேயிலை வளரும் பொன் பூமியாக மாற்றினர்.
இது மட்டுமா? மலையக மக்களை தாக்கிய கொடுமைகள் முடிந்து விட வில்லை. 1948ம் ஆண்டு சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்ட இலங்கையர், 1920ம் ஆண்டு இலங்கையில் உள்ள அனைவருக்கும் வழங்கப்பட்ட வாக்குரிமையைப் பறித்துக் கொண்டனர். இதனால் எட்டு லட்சத்து ஐம்பதாயிரமாக இருந்த மலையக மக்களின் வாக்குரிமையில், 7 லட்சம் பேர் வாக்குரிமையை இழந்தனர். பிரட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 33 சதவீதமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 சதவீதமாக குறைந்தது.
அப்படியும் விட்டுவிடவில்லை. இந்த மலையகத் தமிழர்களை சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் என்றபேரில் மீண்டும் கத்தியை வீசினர். 1964ம் ஆண்டு 8 லட்சத்து 50 ஆயிரமாக இருந்த இந்தியத் தமிழர்களை அரைவாசியாகக் குறைக்கும் ஒப்பந்தமே இது.
வளரவளர கவ்வாத்து செய்யப்படும் தேயிலை மரங்களைப் போல இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களும் அவ்வப்போது கவ்வாத்து பண்ணப்பட்டு வந்துள்ளனர்.
கண்டி, ஹற்றன், நுவரெலியா, பதுளை, மாத்தளை, புஸல்லாவை என்று பல்வேறு பிரதேசங்களில் பரவிக் காணப்படும் பெருந்தோட்ட சமூகம் இன்றைக்கும் பாட்டாளி வர்க்கமாக வாழ்ந்து வருகின்றனர்.
உலகச் சந்தைகளில் அதிக இலாபத்தை ஈட்டித்தரும் இலங்கைத் தேயிலையுடன் சம்பந்தப்பட்ட மக்களின் நிலை மட்டும் மாறாதுள்ளது. எத்தனையோ அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டும் லயன் வீடுகள் மட்டும் இன்னும் மாறாமல் இருப்பது கவலைக்கிடமானதே. இவ்வாறான நிலையை மாற்றி அமைப்பது இந்தியாவின் 4000 வீடமைப்புத் திட்டாமா? இல்லை 1000 ரூபாய் சம்பளமா? எதுவாயினும் இவை மட்டும் மலையகத் தமிழர் வாழ்வை மாற்றியமைக்காது.
இலங்கை நாட்டில் ஏனைய மக்களுடன் ஒப்பிடும் போது வாழ்க்கைத்தரம் குறைந்திருக்கும் இம் மக்களின் நிலையை முழுமையாக மாற்ற வேண்டியது எல்லோரினதும் கடமையாகும்.
இது தனிபட்ட அரசாங்கத்திற்கோ அல்லது தொழிற்சங்கங்களுக்கோ உரியதல்ல. இன்றைய இளைய சமுதாயத்தினரையும் இதுசாரும். எனவே இவ்வாறு மலையக மக்களின் சமூக, பொருளாதார வாழ்வியல் உயர்த்தப்படும்போதே இவர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும் என்பது ஐயமில்லை.
தயா. தினேஸ்குமார்,  கண்டி
நன்றி- தினகரன் வாரமஞ்சரி


Friday, October 5, 2018

தொழிற்சங்க வரலாற்றில் அழிக்க முடியாத பெயர் ஏ. அஸீஸ்

சுதந்திரத்துக்கு முன்னரும் அதற்கு பின்னருமான இலங்கையின் அரசியல் மற்றும் தொழிற்சங்க வரலாற்றினை பின்னோக்கிப் பார்க்கின்ற போது அந்த போராட்ட வரலாற்றுப் பதிவில் ஏ. அஸீஸ் என்ற நாமம் தனித்துவம் மிக்கதாகவே காணப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டுத்துக்காக முதலில் தலைமை ஏற்ற ஒரு தலைவராக போற்றப்படுகின்ற அஸீஸ் இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்த வர்த்தக குடும்பத்தில் பிறந்தவராவார்.
இலங்கை தோட்ட தொழிலாளர் போராட்ட வரலாறு வெறுமனே இங்கு வாழ்ந்த இந்திய தோட்ட தொழிலாளரை மட்டும் வைத்துப் பார்க்க முடியாது. ஏனெனில் இந்த வரலாற்றின் ஆரம்பமே ஒரு சிங்கள தோட்டத் தொழிலாளியின் உயிர்த்தியாகத்துடனேயே ஆரம்பமாகின்றது. அக்கரப்பத்தனையில் பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகத்திற்குப் பலியான ஏப்ரகாம் சிஞ்ஞோ என்ற சிங்கள தோட்டத் தொழிலாளியே தொழிற்சங்க வரலாற்றின் ஆரம்பமெனலாம்.
அந்த மரணம் காரணமாக எழுந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கிய ஏ. அஸீஸ் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அணிதிரட்டி ஏப்ரகாம் சிஞ்ஞோவின் உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று உரிமைப்போராட்டுத்துக்கான ஆரம்பப் புள்ளியை இட்டார்.
1943 ஆம் ஆண்டில் ஒரு நாள் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் பிரதிவாதியாக நிறுத்தப்பட்ட அஸீஸ் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மக்களை தூண்டும் விதத்தில் உரையாற்றியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டார். என்றாலும் நீதிமன்றத்தின் ஜுரி சபை அவர் நிரபராதி என்று தீர்ப்பு வழங்கியது. இந்த ஜுரி சபையின் முடிவை பிரிடிஷ் பிரஜையான நீதிபதி ஏற்றுக்கொண்டு கசப்பான மருந்தை அருந்துவது போன்று அந்த தீர்ப்பை விருப்பமின்றியே வழங்கினார்.
1959 இல் பலாங்கொடையிலுள்ள பிடியாகல தோட்டத்துக்குள் அனுமதியின்றி நுழைந்தார் என்ற குற்றச்சாட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது அஸீஸ் உட்பட ஏனையவர்களை இரண்டு மாதங்களுக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அந்தத் தீர்ப்புக்கு எதிராக அஸீஸ் உயர் நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்தார். அந்த மேல் முறையீடு நிராகரிக்கப்பட்டு அதே தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. அஸீஸ் அதிலும் சேர்ந்து போகவில்லை அந்தத் தீர்ப்புக்கு எதிராக இங்கிலாந்தில் பிரிவுக்கவுன்ஸிலுக்கு மேல் முறையீடு செய்தார். அந்த நீதிமன்றம் அஸீஸுக்கு சார்பாக தீர்ப்பளித்தது. அன்று முதல் எந்த ஒரு தோட்டத்திற்குள்ளும் தொழிற்சங்கங்கள் நுழையக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். இது அஸீஸின் போராட்டக் குணத்தின் மேன்மையை பறைசாற்றி நிற்கின்றது.
இந்தியாவின் மகாத்மா காந்தி பிறந்த போர்ப்பந்தரில் 1912 ஒக்டோபர் மாதம் 06ம் திகதி வர்த்தகர் குலாம் ஹுசையின் ரேமுக்கு மகனாகப் பிறந்தார். சொந்த ஊரில் படித்துப் பட்டம் பெற்ற அஸீஸ் இலங்கையில் தனது தந்தையின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இலங்கை வந்தார். ஆனால், இங்கு வந்த அஸீஸ் வந்த நோக்கத்தை கைவிட்டுவிட்டு பாட்டாளி வர்க்கமான தோட்டத் தொழிலாள மக்களின் வாழ் வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தோட்டத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்துக்கு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். அஸீஸின் ஆங்கிலப் புலமையும் உறுதியான மன நிலைப்பாடும் அன்று ஏகாதிபத்திய ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக காணப்பட்டது. எதற்கும் அஞ்சாத அஸீஸ் அதே பயணத்தை முன்னெடுத்துச் சென்றார்.
1939 இல் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை இந்திய தொழிலாளர் சங்க கூட்டத்தில் உரையாற்றும் வாய்ப்பை பெற்றுக்கொண்டார். அது அவரை மலையக மக்களின் மனங்களை ஈர்த்தெடுத்துக்கொண்டது. அஸீஸுடைய பணி இன, மத, மொழி கடந்த மனித நேயமிக்கதாகவே காணப்பட்டது. அவருடைய ஆற்றல் இலங்கையிலும் இந்தியாவிலும் மட்டுமல்ல ஆசிய, ஆபிரிக்க பிராந்திய மெங்கும் வியாபித்துக் காணப்பட்டது. ஒருதடவை மகாத்மா காந்தியை சந்தித்த அஸீஸ் நீண்ட நேரம் நடந்த வண்ணமே பேசிக்கொண்டிருந்தார். அப்போது மகாத்மா காந்தி அஸீஸ் அவர்களிடம் கேட்டார். இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேருவை தேர்ந்தெடுப்பது நல்லதா என்று கேட்டுள்ளார்.
அதற்கு அஸீஸ் இதனை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இந்தியா எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையை புறந்தள்ளி செயற்பட முடியாது. இதனாலேயே இலங்கையினுடைய அபிப்பிராயத்தையும் எதிர்பார்க்கிறோம் என்று கூறியிருக்கிறார். இதற்குப் பதிலளித்த அஸீஸ் பாரத நாட்டை பொறுத்த வரையில் நேருஜியை விட்டால் சிறந்த ஒருவரை தேர்ந்தெடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
இதனை இங்கு சுட்டிக்காட்டுவதற்கு காரணம் அஸீஸின் அறிவாற்றல் குறித்து மகாத்மா காந்தி எந்த அளவிற்கு புரிந்து வைத்திருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவேயாகும்.
ஏ. அஸீஸ் தனது இறுதிக்காலம் வரை முழுக்க முழுக்க தோட்டத் தொழிலாளர் வர்க்கத்திற்கே தன்னை முழுமையாக தியாகம் செய்தார். சுதந்திர போராட்டம் நடந்த காலகட்டத்தில் இலங்கைக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் அஸீஸ் உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருந்தார். சோல்பரி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையில் எமது நாட்டிற்கு சுதந்திரத்தினை தாருங்கள். எங்கள் பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துக்கொள்வோம். சிங்கள மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது. என்று உறுதிபட தெரிவித்திருந்தார்.
இலங்கை உழைக்கும் வர்க்கத்திற்காக மே தினத்தை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்த வேண்டுமென்று உரத்துக் குரல் எழுப்பிய அஸீஸ் அதில் வெற்றி கண்டார். ஆசிய ஆபிரிக்க ஒத்துழைப்பு இயக்கத்தின் உபதலைவராக 1985 இல் தெரிவு செய்யப்பட்ட அஸீஸ் தனது மரணம் வரையில் அந்தப் பதவியில் நீடித்தார். 1947 மஸ்கெலியா தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சர்வகட்சி மாநாட்டில் தொடர்ச்சியாக பங்கேற்று முன்வைத்த யோசனைகள் இனவாதத்திற்கும் அடிப்படை வாதத்திற்கும் சாட்டை அடி கொடுக்கும் விதத்தில் மனிதாபிமானத்தை உயர்த்திப்பிடித்து பேசினார். இதன் காரணமாக ஜே.ஆர். ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாச ஆகிய ஜனாதிபதிகளின் பாராட்டையும் பெற்றுக்கொண்டார்.
தோட்டத் தொழிலாளர் வர்க்கத்தின் சம்பளம் ஏனைய உழைக்கும் வர்க்கத்தின் சம்பளத்திற்கு சமனாக இருக்க வேண்டும் என்று அஸீஸ் வலியுறுத்தி வந்தார். தோட்ட மக்களின் சுகாதாரம், பாதுகாப்பு, வீடு, கல்வி உட்பட அனைத்து விடயங்களும் ஏனைய மக்களுக்கு உள்ளது போன்று சமனாக இருக்க வேண்டும் என்பதை அரசாங்கத்துக்கு வலியுறுத்தி வந்தார். 1970 முதல் 1977 வரை உள்ள காலப்பகுதியின் சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தில் நியமன எம்.பியாக நியமனம் பெற்றார்.
அஸீஸ் தனது 78வது வயதில் 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 29ம் திகதி காலமானார். அவருக்கு 4 பிள்ளைகள். டாக்டர் லைலா ஹஸ்வானி, டாக்டர் செய்பூன் பட்டேல், ஆகிய இரண்டு புத்திரிகளும் அஷ்ரப் அஸீஸ், அன்வர் அஸீஸ் ஆகிய இரண்டு புத்திரர்களும் உள்ளனர். தந்தை வழியில் சமூக தொழிற்சங்க பணிகளில் அஷ்ரப் அஸீஸ் தன்னை ஈடுபடுத்தி வருகின்றார். இந்தியாவில் பிறந்து இலங்கையில் உழைக்கும் வர்க்கத்திற்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்திய ஏ.அஸீஸின் நாமம் சதா காலமும் நீடித்து நிலைக்கும் என்பது உறுதி.
நன்றி- தினகரன்

Thursday, October 4, 2018

நியாயமான சம்பளம் இன்றேல் மலையகம் தழுவிய போராட்டம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அத்துடன் அன்றைய தினம் நியாயமான சம்பள உயர்வொன்றுக்கு முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவிக்கவில்லை யென்றால் மலையகம் தழுவிய மாபெரும் தொழிலாளர் போராட்டம் இடம்பெறுமென இ.தே.தோ.தொ.சங்கத்தின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான  வடிவேல் சுரேஸ் தெரிவித்தார். சம்பள உயர்வு தொடர்பில் மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதே கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் எதிர்பார்ப்பாகும்.
இந்தநிலையில், நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் மலையக தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினையை அரசியலாக்காமல் அனைத்து தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் இதற்கு பூரண ஆதர வழங்கவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்தும் முதலாளிமார் சம்மேளனமும் தோட்ட கம்பனிகளும் தொழிலாளரை ஏமாற்ற முடியாதெனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கேற்ப சம்பள உயர்வு அதிகரிக்கப்பட வேண்டுமென்றும் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் நேற்றைய தினம் இராஜ கிரியவிலுள்ள இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமையகத்தில் விசேட செய்தியாளர் மாநாடொன்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இம் மாநாட்டில் ஊவா மாகாண சபை உறுப்பினர் ருத்ரதீபன் மேற்படி சங்கத்தின் இணைப்பாளர் விஜயகுமாரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். இங்கு தொடர்ந்தும் விளக்கமளித்த வடிவேல் சுரேஸ் எம்.பி.,
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான தொழிற்சங்க மட்ட பேச்சுவார்த்தைகள் பல இடம்பெற்ற நிலையில் முதலாளிமார் சம்மேளனத்துடன் ஒரு பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. அந்தப் பேச்சுவார்த்தையின்போது 10 வீத சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான சம்மேளனத்தின் தீர்மானம் அறிவிக்கப்பட்ட நிலையில் நாம் அதை ஏற்கவில்லை.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இடம்பெற்ற ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அது கைகூடவில்லை. இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இ.தொ.கா, இ.தே.தோ.தொ.ச, தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியன ஒற்றுமையுடனும் ஒரே நோக்கத்துடனும் செயற்படுகின்றன. இதன்மூலம் 1000 ரூபாவுக்கு மேற்பட்ட சம்பள உயர்வொன்றை பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும்.
இதேவேளை, எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் கூட்டு ஒப்பந்தம் நிறைவுறுவதால் 14 ஆம் திகதி சம்பள உயர்வு தொடர்பில் முடிவொன்று எட்டப்படாதவிடத்து அதற்கு பின்வரும் காலங்களுக்கான நிலுவையையும் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
2020 ஆம் ஆண்டுவரை புதிய கூட்டு ஒப்பந்தம் நடைமுறையிலிருக்கும். எனினும் இந்த இடைப்பட்ட காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதோடு வாழ்க்கைச் செலவு பெருமளவு அதிகரிக்க வாய்ப்புண்டு. இதனைக் கருத்திற்கொண்டே சம்பள உயர்வின் தொகை நிர்ணயிக்கப்படும்.
அதுதொடர்பில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் ஒரு முடிவை எடுத்திருந்தாலும் 14 ஆம் திகதிக்குப்பின்னரே கூட்டாக அந்த முடிவை அறிவிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நன்றி - தினகரன்

Monday, September 24, 2018

வைத்தியசாலையில் ஏற்றப்பட்ட ஊசி மருந்தினால் பார்வையை இழந்த கண் நோயாளர்கள்

அண்மையில் நுவரெலியா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட கண் சிகிச்சை கிளினிக்கில் 55 பேர் சிகிச்சைப் பெற்றுள்ளனர். நோயாளர்களுக்கு ஏற்றப்பட்ட ஊசியினால் நோயாளர்கள் 23 பேருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து நோயாளர்கள் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பார்வைக் குறைபாட்டுக்கு, நீரிழிவு நோய், உயர்குருதி அழுத்தம் உள்ளிட்ட நோய்களும் மிக முக்கிய காரணம் என்பதால், பார்வைக் குறைபாடுகளுக்காக வரும் நோயாளிகளுக்கு, பார்வைக் குறைபாட்டுக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்பாக, நீரிழிவு நோய், உயர்குருதி அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கே முதலில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கமைவாகவே, நோயாளர்களுக்கும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான ஊசி ஏற்றப்பட்டு பின்னர், மேற்படி 23 பேரும் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீடுகளுக்குத் அனுப்பப்பட்ட நோயாளர்கள், பார்வையை முற்றாக இழந்துள்ளதுடன், அவர்களது கண்களிலிருந்து கண்ணீர் வடிய ஆரம்பித்துள்ளதைத் தொடர்ந்து அவர்கள் உறவினர்கள் உதவியுடன் மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்து வைத்தியசாலையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். வைத்தியர்களின் நேரடி கண்காணிப்பில் கடந்த ஒருவார காலமாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து  இவர்களுக்கு ஓரளவு கண்பார்வை திரும்பியுள்ளதாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அநுர ஜயசேகர தெரிவித்துள்ளார். 

கண் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு ஏற்பட்டிருக்கும் உடல் நல குறைபாடு தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன நியூயோர்க்கிலிருந்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்கவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதுகுறித்து சுகாதார பணிப்பாளர்நாயகம் தெரிவிக்கையில் இதுபோன்ற ஊசி வேறு வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்பட்டபோதும் நோயாளர்களுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார். 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர்களின் இன்றைய நிலை என்ன?

தோட்டத் தொழிலாளர்களுக்கு இலங்கை ரூபாயில் சராசரியாக நாளொன்றுக்கு 500 வழங்கப்படுகிறது. இந்தத் தொகை மிகவும் குறைவு என்பதால், தோட்டத் தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதில் பின்தங்கியுள்ளனர்.

இலங்கையின் பொருளாதாரத்தில், தேயிலை, ரப்பர் தொழில் அதிக வலு சேர்த்துள்ளது. அதிகளவிலான அந்நியச்செலாவணியையும் பெற்றுத் தருகிறது.

நிறுவனங்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் இந்த சம்பளத் தொகைத் தீர்மானிக்கப்படுகிறது.

இந்தக் கூட்டு ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்யப்படுகிறது. வரும் அக்டோபர் மாதம் 14ஆம் தேதியன்று, தற்போது நடைமுறையில் உள்ள கூட்டு ஒப்பந்தம் கலாவதியாகிறது. ஒவ்வொரு முறை கூட்டு ஒப்பந்தம் கையெழுத்திடும் காலப்பகுதி வரும் போதும் தோட்டத் தொழிலாளர்கள் நியாயமான சம்பளம் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

மலையக அரசியல் கட்சிகளின் கூட்டணியான தமிழ் முற்போக்கு கூட்டணி இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
யார் இந்த மலையகத் தமிழர்கள்?

1820 - 1840 காலப்பகுதியில் இந்தியாவின் தென்மாநிலத்தில் சாதிக்கொடுமையும், பஞ்சமும் தலைவிரித்தாடியது. பலர் பட்டினியால் செத்து மடிந்தனர். இச்சூழலை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஆங்கிலேயர்கள், அங்குவாழ்ந்த அப்பாவி மக்களை கூலித்தொழிலாளர்களாக கண்டி சீமைக்கு (இலங்கைக்கு) அழைத்துவந்தனர்.

1815ஆம் ஆண்டு கண்டி இராஜ்ஜியத்தை பிரித்தானியர் கைப்பற்றிய பின்னர் மலையகமெங்கும் வெள்ளையர்களின் ஆதிக்கம் கோலோச்சியது. 1820 ஆம் ஆண்டில் கோப்பி பயிர்ச்செய்கை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதைய பேராதனை பூங்கா அமைந்துள்ள பகுதியிலேயே முதன்முதலாக கோப்பி (காஃபி) பயிரிடப்பட்டது. பின்னர் அது கம்பளை வரை விரிவுபடுத்தப்பட்டது.

1867இல் ஒருவகையான நோய்காரணமாக கோப்பி பயிர்செய்கை பெரும் பாதிப்புக்குள்ளானது. இதையடுத்து ஜேம்ஸ் டெய்லர் என்பவரால் நூல் கந்துர எனும் இடத்தில் தேயிலை பயிர்செய்கை ஆரம்பிக்கப்பட்டது. மலையக பிரதேசங்களில் பெருந்தோட்ட வர்த்தக பயிர்ச் செய்கையை (தேயிலை, ரப்பர்) மேற்கொள்ள மனித வளம் கிடைக்காததால், தென் இந்தியாவில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டனர்.
வரும் வழியும், வந்து குடியேறிய பின்னரும் அவர்கள் அதிகமான இன்னல்களை எதிர்கொண்டனர். ஆதிலெட்சுமி என்ற கப்பல் கடலில் மூழ்கியதால் 120 பேர் செத்துமடிந்தனர் என்ற வரலாறும் இருக்கின்றது.

இவ்வாறு வலிசுமந்த பயணம் மேற்கொண்டவர்கள் மலைப்பாங்கான பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டதால் - மலையகத் தமிழர் என்றும், இந்திய வம்சாவளித் தமிழர் என்றும் அடையாளப்படுத்தப்பட்டனர்.

( மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் பெரும்பாலான மலையகத் தமிழர்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட தமிழர்களுடன், தெலுங்கர், மலையாளிகளும் தொழில் நிமித்தம் இங்குவந்தனர்)

காடுமேடாகவும், கல்லுமுல்லாகவும் காட்சியளித்த மலைநாட்டை - தமது கடின உழைப்பால் எழில்கொஞ்சும் பூமியாக மாற்றியதுடன், இலங்கையின் பொருளாதாரத்தையும் தோளில் சுமந்தனர். ஆனாலும், அவர்கள் வசிப்பதற்கு அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையில் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட லயன் அறைகளிலேயே பல தசாப்தங்களை கடந்தனர். இன்றைய 21ஆம் நூற்றாண்டிலும் இந்நிலைமை முழுமையாக மாறவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

நாடற்றவர்களான மலையகத் தமிழர்

1931ஆம் ஆண்டு டொனமூர் சீர்திருத்தம் மூலம் வாக்குரிமை பெற்ற போதும் அது 1947 - 1948 களில் கொண்டுவரப்பட்ட இந்திய - பாகிஸ்தானிய ஒப்பந்தம், சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம், பிரஜாவுரிமைச் சட்டங்களினால் பறிக்கப்பட்டது. இதன்பின்னர் 3 தசாதப்தங்களுக்கு மேலாக நாடற்றவர்களாகவே அவர்கள் வாழ்ந்தனர்.

இலங்கைக்கு சுதந்திரம் வழங்கிவிட்டு வெள்ளையர்கள் வெளியேறிய பின்னர், சிங்களத்தேசிய வாதிகள், மலையகத் தமிழர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இவர்களது நெருக்குதல்களினால் 1948 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி இலங்கைக் குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

இச்சட்டத்தின் படி 1948 ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதிக்கு முன் இலங்கையில் பிறந்திருப்பதுடன் அவருடைய இரண்டு தலைமுறையினரும் இலங்கையில் பிறந்திருந்தால் மட்டுமே இலங்கைக் குடியுரிமைக்கு ஒருவர் உரித்துடையவர் என்று வரையறுக்கப்பட்டது.
மலையகத் தமிழர்களில் பலர் தமக்கு முன் இரண்டு தலைமுறையினர் இலங்கையில் பிறந்திருந்தாலும் கூட அதை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இருக்கவில்லை. இதனால் 7 லட்சம் வரையான மலையகத் தமிழர் நாடற்றவர் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். 1949 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்கள் திருத்தச் சட்டம் இல. 48 இன் மூலம் அவர்களது வாக்குரிமையும் பறிக்கப்பட்டது.

இந்திய அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, ஏற்றப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் பெருமளவு மலையகத் தமிழரை இந்தியாவுக்கு திருப்பியனுப்ப இலங்கை அரசு முயற்சித்தது. அப்போதைய இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும், இலங்கையின் அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கும் இடையே 1964ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி (சிறிமா - சாஸ்திரி) ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்படி 525,000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. இவர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். இந்த ஒப்பந்தத்தால் 150,000 பேர் விடுபட்டுப் போயினர். 1967ஆம் ஆண்டு அமலுக்கு வந்த இந்த ஒப்பந்தத்தால் இந்தியக் குடியுரிமை பெறுவோர், இலங்கை குடியுரிமை பெறுவோர், நாடற்றவர் என மூன்றாக பிரிக்கப்பட்டனர்.

போராட்டமும், அரசியல் அங்கீகாரமும்

கவ்வாத்து வெட்டப்படுவதுபோல் இலங்கையின் வரலாற்றிலிருந்து வெட்டப்பட்டு, வஞ்சிக்கப்பட்ட - தோட்டப் புறங்களில் வாழ்ந்த இந்திய சமுதாயத்தினருக்கு குடியுரிமை, வாக்குரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கு பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

1952ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், 7 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நடத்திய மூன்று மாத சத்தியாக்கிரக போராட்டம் அன்றிருந்த அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்தது. 1958ஆம் குடியுரிமை சட்டத்தின் பிரகாரம் பிரஜாவுரிமை பெற்றவர்களைத் தவிர ஏனைய "நாடற்றவர்களாக" கருதப்பட்ட இந்திய வம்சாவளியினருக்கு குடியுரிமை வழங்கும் விசேஷ சட்டம் 1988 நவம்பர் 9ம் தேதி நிறைவேற்றப்பட்ட சட்ட மூலமாகவே வழங்கப்பட்டது. இதனால் நாற்பது வருடங்களாக அரசியல் இழுபறிகளால் தீர்வு காணாத பெரும் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்தது. இந்திய சமுதாயத்தினர் "நாடற்றவர்" என்ற பதத்தில் இருந்து விடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து 1989 ஏப்ரல் 26ம் தேதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட "வாக்குரிமை வழங்குவதற்கான திருத்தச்சட்டம்" புதிதாக பிரஜாவுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினரை தம்மை வாக்காளர்களாக பதிவு செய்ய கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.

இந்த சட்டத்தின் பிரகாரமே இந்திய சமுதாயத்தினர் - விசேடமாக தோட்டப்புற மக்கள் இன்று வாக்குரிமை பெற்று ஏனைய சமூகத்தோடு அரசியல் நீரோட்டத்தில் சங்கமித்துள்ளனர். இதுவே இம்மக்களின் பிரதிநிதிகள் இன்று பாராளுமன்றத்திலும், மாகாண சபைகளிலும், பிரதேச சபைகளிலும் ஏனைய உள்ளூராட்சி சபைகளிலும் அரசியல் பிரவேசம் செய்ய வழிசமைத்துக்கொடுத்தது.

வாழ்க்கைத் தரத்தில் பின்தங்கிய மலையக சமூகம்

1970கள் வரை இலங்கையின் பொருளாதாரமானது, பெருந்தோட்டப் பொருளாதாரத்திலேயே தங்கி இருந்தது. நேர,காலம் பாராது கடின உழைப்பின்மூலம் இலங்கையின் பொருளாதாரத்துக்கு அவர்கள் உரமூட்டினார்கள். இருந்தும் கைக்கூலிகள் என்ற கண்ணோட்டம் மாறவில்லை. நாட்சம்பளம் பெறும்தொழிலாளர்களாகவே நாட்களை நகர்த்துகின்றனர். கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வீட்டு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டன.

மலையக மக்களின் வாழ்க்கைத் தரம் நாட்டின் ஏனைய பொது மக்களது வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பிடுகையில் கீழ் மட்டத்திலேயே இருந்தது. இந்நிலைமை இன்று முழுமையாக மாறிவிட்டது என பெருமிதம்கொள்ளமுடியாது. ஒரு சில பகுதிகளில் அந்த அவலக்காட்சிகள் அப்படியே தொடரத்தான்செய்கின்றன என்று மலையக மக்கள் சார்பாக குரல்கொடுக்கும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்திய அரசாங்கத்தின் கரிசணை

மலையக மக்களின் நிலையைக் கருத்திக் கொண்டு, வீட்டுத்திட்டமொன்றின் ஊடாக நேசக்கரம் நீட்டியது இந்திய அரசு. அந்தவீட்டுத் திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. மலையக மக்களின் சுகாதாரத்துறை, கல்வித்துறை என்பவற்றை மேம்படுத்துவதிலும் அந்நாட்டு அரசு அக்கறைக் கொண்டுள்ளது.
இதற்காக பல மருத்துவமனைகளை அமைக்க இந்திய அரசாங்கம் நிதியுதவிகளைச் செய்துள்ளதுடன், மலையக மாணவர்களுக்கான புலமைப்பரீசில் உதவிகயையும் வழங்கிவருகின்றது.

மாறிவரும் மலையக சமூகம்

பெரும் போராட்டத்திற்கு மத்தியில் மாறிவரும் மலையக சமூகம் இன்று அனைத்துத் துறைகளிலும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. சட்டத்தரணிகள் முதல் தலைநகரில் பெரும் வர்த்தகர்கள் வரை மலையகத் தமிழ்ச் சமூகத்தில் இருந்து இணைந்து வருகின்றனர். கல்வியிலும் மலையக சமூகம் முன்னேறி வருகின்றது. அண்மைய ஆண்டு புள்ளிவிபரங்களின்படி பல்கலைக்கழக பிரவேசமும் வரவேற்கும் வகையில் அமைந்துள்ளன.
வளர்ந்து வரும் சமூகமாக மலையக சமூகம் பார்க்கப்பட்டாலும், கொழுந்து பறிக்கும், இறப்பர் வெட்டும் தொழிலாளர்கள் தோட்டங்களில் வேலை செய்கின்றனர். இவரகளின் அடிப்படைச் சம்பளம் நாளொன்றுக்கு இலங்கை ரூபாவில் 500ஆகவே இருக்கிறது. வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைந்திருப்பதால் இன்றும் சம்பள உயர்வைக் கோரிய ஆர்ப்பாட்டங்கள் மலையகத்தில் நடந்து வருகின்றன.

நன்றி- பி.பி.சி தமிழ்