தேர்தல் சீர்திருத்தம் கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும் அதில் மலையக மக்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னயியின் செயலாளர் நாயகமும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பொதுச் செயலாளருமாகிய ஏ. லோரன்ஸ் 20வது திருத்தம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் 35 வருடங்களின் பின்னர் தேர்தல் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றது. மீண்டும் அவ்வாறு இடம்பெறுவதற்கு பல வருட காலம் எடுக்கலாம். தேர்தல் சீர்திருத்தம் கட்டாயம் தேவையான ஒன்றாகும். அதில் சிறுபான்மை சமூகங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்றார்.
பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான 20வது திருத்தம் நிறைவேற்றப்படலாம். ஐ.தே.க, ஸ்ரீ.ல.சு.க உட்பட அனைத்துக் கட்சிகளும் 35 ஆண்டுகளுக்கும் மேலாக சீர்திருத்தம் தொடர்பான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக இத் திருத்தம் நாட்டுக்கும், மலையக மக்களுக்கும் அவசியமானதொன்றாகும்.
மலையக மக்களின் பிரஜாவுரிமை 1948ம் ஆண்டு பறிக்கப்பட்டு அவர்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டது. அப்போது வாக்காளர் தொகை குறைவாக இருந்த காரணத்தினால் தேர்தல் திருத்தம் அவசியம் இல்லாமல் இருந்தது. இன்று மலையகத்தில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகல் தேர்தல் திருத்தம் அவசியமாகிறது.
இன்று விமர்சனத்துக்குள்ளாகியிருக்கும் 20வது திருத்தம் வெறுமனே தேர்தல் திருத்தமாக பார்க்கப்படக்கூடாது. மலையக மக்களுக்கு தேர்தல் தொகுதி மூலமும், மாகாண மற்றும் உள்ளுராட்சி சபைகளின் மூலமும் உறுப்பினர்களை அதிகரித்துக்கொள்ள கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பமேயாகும். இதனை மலையக மக்கள் புத்திசாதுரியமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
தேர்தல் திருத்தம் தொடர்பாக இ.தொ.கா, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், உட்பட அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாகவும், கூட்டாகவும் முதன்முறையாக தமது முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளன. பெரும்பாலான விடயங்களில் ஒருமித்த கருத்தே காணப்படுகிறது. மலையக அமைப்புக்கள் தமது கட்சி கண்ணேட்டத்தில் கவனத்தில் கொள்ளாமல் அவற்றை நடைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இலங்கையின் தேர்தல் சீர்திருத்தம் இந்த நாட்டில் உள்ள நான்கு பிரதான தேசிய இனங்களின் விகிதாசாரத்துக்கேற்ப அரசியல் பிரதிநிதித்துவத்தையும் தொகுதிகளையும் ஏற்படுத்திக் கொள்வதை தவிர சகலரையும் பிரதிநிதித்துவப்படுத்த வேறுவழியேதும் கிடையாது. இதில் சிங்கள மக்களுக்கு 74 வீதமும், வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு 11 வீதமாக காணப்பட்டாலும் இணக்கம் காணப்பட்டுள்ள 9 வீதமும், முஸ்லிம்களுக்கு 8 வீதமும், மலையக மக்களுக்கு 7 வீதமும் கிடைக்கவுள்ளன. சிறு கட்சிகள் பல கொள்கை ரீதியாக தனித்தனியாக இயங்கி வருகின்றன. அவைகளும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் திருத்தங்கள் உள்வாங்கப்பட வேண்டும். மேலும் இத்திருத்தம் ஐ.தே.க மற்றும் ஸ்ரீ.ல.சு.க ஆகிய கட்சிகளின் நலன் சார்ந்ததாகவும் அமையாமல் அனைவரது அபிலாசைகளுக்கும் இடமளிப்பதாக அமைய வேண்டும் என்றார்.
மலையக மக்களின் இன விகிதாசாரத்துக்கேற்ப உத்தேச கலப்பு முறை தேர்தல் தொகுதிவாரியாகவும், மாவட்ட விகிதாசார அடிப்படையிலும், தேசிய விகிதாசார அடிப்படையிலும் 18 உறுப்பினர்களுக்குக் குறையாத பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் 10 பேர் தேர்தல் தொகுதி அடிப்படையிலும், பல் அங்கத்தவர் தொகுதி அடிப்படையிலும், 08 பேர் மாவட்ட விகிதாசார அடிப்படையிலும் தெரிவாக வேண்டும்..
தறபோதுள்ள தேர்தல் தொகுதிமுறையில் மறாற்றம் செய்யப்பட்டு கட்டாயம் 160 இற்கும் மேல் அதிகரிக்கப்பட வேண்டும். இதற்கு மாறாக 125 ஆக அல்லது 145 ஆக குறைப்பதறன் மூலம் சிறுபான்மை மக்களுக்கு பெரும் பாதிப்பையே ஏற்படுத்துவதாகவும் அமைந்து விடும் தற்போதுள்ள 225 இலிருந்து 255ம் ஆக அதிகரித்தால் சிறுபான்மை இனங்களின் பிரதிநிதித்துவத்தை ஓரளவாவது பேணிக்கொள்ளலாம்.
மலையக மக்களுக்கு முதலில் தொகுதி அடிப்படையில் பிரதிநிதித்துவம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். அடுத்ததாக பல் அங்கத்தவர் தொகுதி அடிப்படையிலும், மாவட்ட விகிதாசாரத்திலும் தேசிய விகிதாசாரத்திலும், இரட்டை வாக்கு முறை ஊடாகவும் மேலும் தேர்தல் விகிதாசாரத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.
தேர்தல் திருத்தம் இன்று நடைமுறைப்படுத்தப்படாவிட்டாலும், புதிய பாராளுமன்றம் உருவாகும்போது நிச்சயம் நடைமுறைப்படுத்தப்படும். இவை அனைத்துக்கும் கட்டாயம் எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். எல்லை மீள் நிர்ணயம் செய்வதற்கு நீண்ட காலம் எடுக்கும். இந்த விடயத்தில் மலையகக் கட்சிகள் விழிப்பாக இருந்து தமது இன விகிதாசாரத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமாகும். என்றார்.