Thursday, February 24, 2011

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் ரூ 500 ஆக உயர்த்ப்பட வேண்டும்- மனோ கணேசன்



தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 285 ரூபாய் இன்று வழங்கப்படுகின்றது. இந்த அடிப்படை சம்பளம் மார்ச் மாதம் 30ம் திகதிக்கு பிறகு 500 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும். இதுவே எமது மலையக தமிழ் கூட்டமைப்பின் முதன்மை கோரிக்கையாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் ராகலையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில்; உரையாற்றியபோது தெரிவித்தார்

மேலும் தெரிவிக்கையில் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்று 285 ரூபாய் நாட்சம்பளமாக வழங்கப்படுகின்றது. இந்த தொகை 2009ம் வருடம் கையெழுத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்டதாகும். கடந்த இரண்டு வருடங்களில் விலைவாசி வானளாவ உயர்ந்து விட்டது. அத்தியாவசிய உணவு பொருட்களான மாவு, அரிசி, சீனி, தேங்காய் விலைகள் இரண்டிலிருந்து, மூன்று மடங்குவரை உயர்ந்துவிட்டன. ஆனால் தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளம் இன்னும் 285 ரூபாய்தான். எனவே தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தப்பட்ச அடிப்படை சம்பளமாக 500 ரூபாய் வழங்கப்பட்டேயாக வேண்டும்.

கடந்தமுறை சம்பளம் 405 ரூபாய் என்று சொல்லப்பட்டாலும் அதில் அடிப்படை சம்பளமாக 285 ரூபாவே கிடைத்துவந்தது. மிகுதி 120 ரூபாய் வேலைக்கு சமூகமளிக்கும் நாட்களையும், பறிக்கப்படும் கொழுந்து நிறையையும் சார்ந்த ஊக்குவிப்பு கொடுப்பனவுகளாக வழங்கப்பட்டன. இந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு தொகை நடைமுறை காரணங்களினால் பொரும்பாலான தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை. ஆகவேதான் அடிப்படை சம்பளத்தை 285 ரூபாயிலிருந்து 500 ரூபாவாக உயர்த்துமாறு நாம் கோருகிறோம்.
கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்கள் இன்று மக்கள் முன்னால் வந்து வாக்குகளை கோருவதற்கு முன்னர் சம்பளத்தை உயர்த்தவேண்டும். சம்பள பேச்சுவார்த்தையை கூட்டு ஒப்பந்தம் மார்ச் 30 திகதிக்கு பிறகு காலாவதியான பின்னர்தான் நடத்தவேண்டும் என்பது கட்டாயம் இல்லை. உண்மையில் இந்த பேச்சுவார்த்தைகள் ஜனவரி மாதமே ஆரம்பிக்கப்பட்டு, இன்று முடிவுக்கு வந்திருக்கவேண்டும். தேர்தல் நடக்கும்வரை பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்காமல் காலம் கடத்துவது அரசியல் நோக்கம் கொண்டதாகும். தேர்தலுக்கு பிறகு 25 ரூபாவை உயர்த்திவிட்டு சம்பள உயர்வு வழங்கிவிட்டோம் என்று சொல்லும் நிலைமை ஏற்படக்கூடாது.

பொகவானத் தோட்டத் தொழிலாளர்களின் பணி நிறுத்தம் முடிவு


பொகவந்தலாவை பொகவானத் தோட்டத் தொழிலாளர்கள் கடந்த 19 ஆம் திகதி முதல் மேற்கொண்டு வந்த பணி நிறுத்தப்போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டமையைத் தொடர்ந்து தோட்டத்தொழிலாளர்கள் இன்று 24 ஆம் திகதி முதல் தமது வழமையான தொழிலுக்குச்சென்றனர்.

பொகவான தோட்டத்தில் கடந்த 19 ஆம் திகதி தேயிலை நாற்றுமேடையில் தொழில் புரிகின்ற தொழிலாளி ஒருவரை அந்தத்தோட்டத்தைச்சேர்ந்த உதவித்தோட்ட அதிகாரியும் தோட்ட உத்தியோகஸ்தர் ஒருவரும் சேர்ந்து தாக்கியதைத்தொடர்ந்து குறிப்பிட்டத்தொழிலாளியும் தோட்ட உதவி அதிகாரியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் தோட்டத்தொழிலாளியைத் தாக்கியவர்களைத் தோட்டத்திலிருந்து வெளியேறுமாறுக்கோரி பொகவானத் தோட்டத்தைச்சேர்ந்த சுமார் 700 தொழிலாளர்கள் கடந்த 19 ஆம் திகதி முதல் பணிநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தப்போராட்டம் தொடர்பாக தோட்டத்தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் தோட்ட நிருவாகத்திற்குமிடையில் அட்டன் தொழிற்திணைக்களத்தில் நேற்று 23 ஆம் திகதி மாலை இடம் பெற்ற பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட இணக்கப்பாட்டினைத்தொடர்ந்து தோட்டத்தொழிலாளர்கள் இன்று 24 ஆம் திகதி முதல் மீளவும் தொழிலுக்குச் சென்றுள்ளனர்.


யெல்வடன் தோட்ட குடியிருப்புகளில் வெடிப்பு; 115 பேர் பெரும் பாதிப்பு

பதுளை யெல்வடன் தோட்டத்தில் தோட்டக் குடியிருப்புகளில் ஏற்பட்ட திடீர் வெடிப்புகளையடுத்து 49 குடும்பங்களைச் சேர்ந்த 115 பேர் தமது குடியிருப்புகளை விட்டு வெளியேறி ஹாலி எல கொப்பேகடுவ சிங்கள வித்தியாலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக பதுளை மாவட்டத்தில் பெய்த கடும் மழைகாரணமாக இப் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், நிலம் மற்றும் குடியிருப்புகளில் திடீரென வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதனால் அச்சம் காரணமாக இந்தக் குடியிருப்புகளில் வசித்தவர்கள் ஹாலி எல கொப்பேகடுவ சிங்கள வித்தியாலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.இவர்களை ஹாலி எல பிரதேச செயலாளர் எம்.ஆர்.ரஞ்சித் நேரில் சென்று பார்வையிட்டதுடன், இவர்களுக்கு உலருணவுப் பொருட்களை கிரமமாக வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேவேளை பதுளையில் ஓரளவு மழை ஓய்ந்துள்ள போதிலும் நிலம் மற்றும் குடியிருப்புகளில் வெடிப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது

யுவதியின் மரணம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மூவர் கைது


பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெய்த்திலி தோட்டத்தில் கடந்த திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்ட யுவுதியின் மரணம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து மூன்று சந்தேக நபர்கள் கைது செய்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் மரணமான யுவதியின் தந்தையும் அண்ணனும் மாமானாரும் என தெரிய வருகின்றது. சாந்த கருணாசேன ஷாமிலாகுமாரி (வயது 20) என்ற இந்த யுவதியின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிவதாகவும் மரணமான யுவதி குறித்து பத்தனை பொலிஸில் ஏற்கனவே பல முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்ற இந்த யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

மலையக தமிழ் கூட்டமைபின் அலை இன்று நுவரெலியா மாவட்டத்தில் அடிக்கின்றது- தலவாக்கலையில் மனோ கணேசன்

எமது ஜனநாயக மக்கள் முன்னணியும், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியும் இணைந்து உருவாக்கியுள்ள மலையக தமிழ் கூட்டமைபின் அலை இன்று நுவரெலியா மாவட்டம் முழுக்க எழுச்சியுடன் அடிக்கின்றது. விலைவாசி உயர்வினால் திண்டாடும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எமது கூட்டமைப்பு நம்பிக்கைத்தரும் ஒளி விளக்காய் வழிகாட்டுகின்றதாக தோட்டத் தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்; என தலவாக்கலை மேற் பிரிவு, கட்டுகல, கிலான்மோர் ஆகிய தோட்டங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துகொண்ட மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மலையக தமிழ் கூட்டமைப்பின் இணைத்தலைவர்களான மனோ கணேசன் மற்றும் சதாசிவம் ஆகியோர் கலந்துகொண்ட இக்கூட்டங்களில்; உரையாற்றிய மனோ கணேசன் மேலும் தெரிவிதுள்ளதாவது,

மலையகத்திலே இன்று, ஒரு தரப்பினர் தொழிலாளர்களின் வருமானத்திற்கு தடைவிதித்துள்ள கூட்டு ஒப்பந்தத்திற்கு வழி கோலியுள்ளார்கள். இன்னொரு தரப்பினர் பாராளுமன்றத்திலே வாய்மூடிமௌனிகளாக இருக்கின்றார்கள். இந்நிலையில் தொழிலாளர்களின் நம்பிக்கைத்தரும் கூட்டமைப்பாக நாங்கள் எழுச்சி பெற்று வருகின்றோம்.

இந்நாட்டில் விலைவாசிகள் உயர்கின்றபோது ஏனைய தொழிலாளர்களுக்கு உரமானியம், வாழ்க்கை செலவு புள்ளிமானியம் என்று பல்வேறு மானியங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்நாட்டில் அந்நியச் செலாவணியை பெற்றுத்தரும்; தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத்திரம் எதுவும் வழங்கப்படுவதில்லை. நமது தொழிலாளர்கள் இந்நாட்டின் பிரஜைகள் இல்லையா? நமது மக்கள் மாற்றான்தாய் பிள்ளைகளா? இன்றைய கழுத்தை நெரிக்கும் விலைவாசி உயர்விலே தோட்டத் தொழிலாளர்கள் தாங்கள் பறிக்கும் கொழுந்தையா, புல்லையா அல்லது மண்ணையா சாப்பிடுவது? என்ற கேள்விகள் இன்று மலையக மக்கள் மனங்களிலே எதிரொலிக்கின்றன. ஆனால் இந்த மக்களின் கேள்விகள் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கவில்லை. மலையக மக்களின் பிரதிநிதிகள் நாடாளுமன்ற சபையிலே உரையாடாதது ஏன்? கேள்விகள் எழுப்பாதது ஏன்? பிரேணைகள் கொண்டுவராதது ஏன்? சபை நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டங்கள் செய்யாதது ஏன்? என்ற கேள்விகளை மலையக தோட்டத் தொழிலாளிகள் இன்று எழுப்புகின்றார்கள்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்காக, ஏனைய தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மானியங்களை நமது மக்களுக்கு வாங்கி கொடுப்பதற்காக எமது மலையக தமிழ் கூட்டமைப்பு ஜனநாயக போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்த போராட்டத்தின் ஒரு அம்சமாகவே நாம் இந்த தேர்தலை நோக்குகின்றோம். எங்களது நோக்கத்தின் வெற்றி தேர்தல் வெற்றிக்கு அப்பால் செல்கின்றது. தேர்தலின் போது மலையக மக்கள் தரும் ஆணையை நாம் சம்பள போராட்டத்திற்கு பயன்படுத்துவோம். தேவையற்ற நிபந்தனைகள் அல்லாத அடிப்படை சம்பளத்தை தோட்டத் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான ஆணையை எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலிலே மலையக தோட்டத் தொழிலாளர்கள் தருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.